தமிழின் நேரடி ஜென் கவிதைகள்

நரன்

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்


சுவரும் இல்லாமல்
ஆணியும் இல்லாமல்
பிடிமானமும் இல்லாமல்
தொங்குகிறது கண்ணாடி
நீ சிரிக்கிறாய்
உன் எதிரில் இருப்பவனும்
சிரிக்கிறான்.

********

ஒயின் அருந்திய
கோப்பையின் அடியில்
எஞ்சி இருக்கும்
நூற்றண்டுக்கு முந்திய்
திராட்சை கொடியின்
சிறு பகுதி

*************.

கிளையை பிடித்து
தொங்காதே.
கிட்டத்தட்ட 127 ஆண்டுகள்
பழையது இந்த மரம் .
ஆனால்
அதன் இலைகள் அப்படி இல்லை.

***********

குட்டி தவளைகள்
குட்டி பூச்சியை உன்கிறது.
குட்டியான வாயால்
குட்டியான சப்தங்களை எழுப்புகின்றது -தம்
குட்டியான கால்களால்
குட்டியான உயரத்தை
குட்டியான நீளத்தை தாவுகின்றன .
பெரிய தவளைகளும் அப்படியே
யாவற்றிலும் பெரிய ....

********

அவன் சிலநேரம்
காற்றில்
அப்படியும்
இப்படியுமாய்
வாளை வீசும்போது
அம்மரத்திலிருந்து
ஓரிரு இலைகள்
உதிர்கின்றன.

*****

எதிர்பார்த்தல்
எதுவுமின்றி
நூறாண்டுக்கு பின்வருபவர்களுக்கும்
உபயோகமாய்
வாழத் தீர்மானித்தேன் .
நூறாண்டுக்கும் முன்
யாரோ
புதைத்து வைத்த
ஒயின் பீப்பாயை
மண்ணிலிருந்து
தோண்டி எடுக்கும் போது .

*****

பச்சைநிற வயற்பரப்பிலிருந்து
பச்சைநிற துண்டு வயற்பரப்புகள்
ஆகாசம் நோக்கி பறக்கின்றன
வசந்த காலத்தின்
ஆயிரமாயிரம் வெட்டுக்கிளிகள் .

*****

கொஞ்சம் அரிசியையும்
கட்டு சுள்ளியையும்
கொடுத்து உதவினான் .
திரும்ப ஒரு புன்னகையை
வழங்கினேன் அவனுக்கு .
அது மட்டும் தான்
அது மட்டும் தான்
அளிக்க முடிந்தது என்னால்
அப்போதைக்கு .

*****

ஆறு மாதத்திற்கு பின்
இங்கே வந்திருக்கிறேன்
தியானத்திற்காய் .....
உதிர்ந்த இலைகள்
பொலிவிழந்த மரங்கள்
ஹோ .....
என் தியானம்
எப்படி கழியும் அமைதியுடன் .

*****

வனாந்திரத்தில்
உதிர்ந்த பூக்களை
மிதித்தபடி
மரத்திலிருக்கும் பூக்களை
ரசித்து கொண்டிருக்காதே .
அதன்தன் இயல்பிலிருக்கின்றன
பூக்கள் .

*****

வனத்தில் அமர்ந்து
சிறிது நெருப்பை பற்ற வைத்தேன் .
மரங்கள் அவற்றை
தன் அருகிலிருக்கும் துணைமரங்களுக்கு
கைமாற்றி விட்டு கொண்டிருந்தன .

*****

தொடர்ந்து
இயற்கையை அவதானித்துக்
கொண்டிருந்தேன்....
.........தொடர்ந்து..
வயதாகி விட்டது .
என் மகனிடம் கையளித்துவிட்டு
செல்கிறேன் .
மரங்களும்
தன் பங்கிற்கு
கிளை மரங்களை எழுப்பியிருகின்றன .

*****

என்னோடு
இந்த தியானவிரிப்பின்
மூலையில்
ஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது .
கண்களை மூடி
தியானிக்கத் துவங்கினேன்
தியானம் இப்போது
மூலையிலிருந்து
எறும்புகள் சாரைசாரையாய்
நகர்ந்து கொண்டிருந்தன
தியானத்தின் மேல் .

*****

தியானத்திற்குப்பின்
மூன்று துறவிகளும்
ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .
குளித்து முடித்து வெவ்வேறு
கிணறுகளிலிருந்து வெளியே வந்தனர் .
முதல் துறவி சொன்னார் .
நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .
இரண்டாம் துறவி ........
நான் குளித்த கிணற்றில் நீர் உப்பு கரித்தது.
மூன்றாம் ...........
நான் குளித்த கிணற்றில்
27தவளைகளும் ,
நீர் பாம்பொன்றும் இருந்ததென .
பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று
தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டனர்.


ஜென் கொக்குகள்
------------------------------
பனிப்பிரதேசத்தின்
குளிர்காலை ஏரியில்
முழுக்க நிரம்பியிருக்கின்றன
கொக்குகள் .
உற்று நோக்குங்கள்
ஒரு கொக்குமில்லை .

*****

ஆரஞ்சு நிறம்
குறைவாயிருக்கிறது .
கால்களை நீருக்குள்
அமிழ்த்தியிருக்கும்
கொக்குகளை வரைகிறான்

*****
ஜென் வரிக்குதிரை
----------------------------------
1.இரவையும் ,பகலையும் தன் உடலின் வழியே
ஒரே நேரத்தில் கடந்து செல்கிறது வரிக்குதிரை.

2. பியானோ கட்டைகளின் மேல் ஒரு வரிக்குதிரை
வரிக்குதிரையின் மேல் ஒரு பியானோக்கட்டை

3.நீண்ட புற்களிடை மேயும் வரிக்குதிரை
கருப்பு ,வெள்ளை மற்றுசை ..

4.வரிக்குதிரையின் மேல் அரூப மனிதர்களிருவர்
செஸ் ஆடி கொண்டிருகிறார்கள் .

-நரன்
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5