" துணியால் மூடப்பட்ட பொம்மைகள் நிறைந்த கூடையை தலையில் சுமந்தபடி ஒரு பெண் எதிர்பட்டாள்."
குறுக்கும் நெடுக்குமான நீண்ட சாலைகளின் வழி அவன் நடந்து கொண்டிருந்தான். அவனது பிரச்னையெல்லாம்
ஒரு கோப்பை தேநீர்தான். ஒரு தேநீர் கடைக்காக இந்த நகரத்தில் இத்தனை சிரமப்படவேண்டியிருக்கும்
என அவன் எதிர்பார்க்கவில்லை.விடுதி காவலாளி கதவை திறந்து விடுகிற சமயத்தில் இரண்டு
முறை இருமிய போதே அதில் ஒரு சேதி இருப்பதை அவன் உணர்ந்திருந்தாலும் இப்போதுதான் அதன்
மர்மம் அவனுக்கு பிடிபட்டது. ஏறக்குறைய இரண்டு மணி நேரமாகி விட்டது விடுதியிலிருந்து
அவன் புறப்பட்டு.பலவீதிகளை அவன் கடந்து விட்டான்.சிறிய சந்துகள், விரிந்த சாலைகள்,
கோபுரம் உயர்ந்த தேர்நிலை கொண்ட வீதிகள். ஆனால் இதுவரை ஒரு தேநீர் கடையும் அவனுக்கு
கிடைக்கவில்லை.
தொலைவில் எங்கோ கோவிலில் “கொக்கு பறக்கும் அந்த குளக்கரையில்” பாடல்
ஒலித்துக்கொண்டிருந்தது.
முன்பின் அறிமுகமில்லாத ஒரு நகரத்தில் மெல்ல விடிந்து கொண்டிருக்கும் காலை பொழுதை ரசித்தபடி
அவன் நடந்து கொண்டிருந்தான். முதலிரவுக்குக்கு பின் மறுநாள் காலையில் அசதியுடன் உறங்கிக்கொண்டிருக்கும்
புதுப்பெண்ணை போலிருந்தது அந்த நகரம். நேற்று இரவு ஏதோ பெரிய திருவிழாவோ அல்லது வேறு
ஏதேனும் வைபவமோ நடந்திருக்க வேண்டும். அவன் இன்று காலை கருக்கலில்தான் இந்த ஊருக்கு
வந்து சேர்ந்தான். சேர்ந்த கையோடு இப்படியாக நடக்க துவங்கிவிட்டான். வாசலில் சாணி தெளித்துக்கொண்டிருந்த
மூக்குத்தி அணிந்த ஒரு பெண் ஒரு நிமிடம் தெருவில் கடந்து செல்லும் இவனையே பார்த்தபடி
நின்று கொண்டிருந்தாள். அவளது கணவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவசரமாக எங்கேயோ புறப்பட்டுக்கொண்டிருந்தான்
.கையில் எவர் சில்வர் தூக்கு. சைக்கிள் மணியை அடித்த படி அவன் இவனை முழுவதுமாக கடந்து
சென்றதும் இவன் தயக்கத்துடன் அந்த வீட்டை திரும்பி பார்த்தான். அந்த பெண் இப்போதும்
அவனையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.அவள் எதற்க்காக தன்னை இப்படி உற்று பார்க்க
வேண்டும். அவன் தன்னை தானே ஒரு முறை பார்த்தான். எந்த வித்தியாசமும் இல்லாத சாதரண ஒரு
ஆண். உடையிலும் கூட விசேஷமில்லை. இத்தனை அதிகாலையில் அவள் ஏன் அப்படி பார்க்கவேண்டும்.
இத்தனைக்கும் அவளது கணவன் அருகில் இருக்கும் போதே. சட்டென அந்த சதைப்பற்று மிகுந்த
அவளது இடைபகுதி மீண்டும் வந்து தொந்தரவு செய்ய துவங்க அதனை அலட்சியபடுத்தியவனாக நடந்து
கொண்டிருந்தான்.
முழுவதுமாக இப்போது காலை விடிந்துவிட்டிருந்தது. வீடுகளின் கூரைகளுக்கு மேலே பச்சையாய்
காற்றில் அசைந்து கொண்டிருக்கும் மரங்கள் தென்படதுவங்கின. மணியோசையுடன் பசுக்கூட்டம்
ஒன்று அவன் முன் எதிர்பட்டது. அவை தரையில் இட்டபடி நகரும் சாணங்களை ஒரு சிறுமியும்
அவளது தம்பியை போலிருந்த சிறுவன் ஒருவனும் கையில் கூடையுடன் ஓடி ஓடி சென்று சேகரித்த
படி இருந்தனர். தலைப்பாகை அணிந்து கையில் நீள குச்சி பிடித்த ஒரு வயோதிகன் அவற்றின்
முதுகில் அடித்து வினோத சபதங்களை எழுப்பியபடி பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவற்றிற்கு வழி விட்டபடி ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்த இவன் அவை முழுவதுமாக கடந்தபின்
மீண்டும் தன் வழியில் நடக்க துவங்கினான். புழுதி படர்ந்த அந்த சாலையின் காலை பொழுது
முன்னை காட்டிலும் இப்போது மேலும் சுறுசுறுப்பாகியிருந்தது. தன்னை கடந்து செல்லும்
பல விதமான மக்களை வேடிக்கை பார்த்தபடி அவன் நடந்து கொண்டிருந்தான். இன்னமும் ஒரு தேநீர்கடை
அவன் முன் எதிர்படவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தாலும் அதில் ஏதோ ஒரு வினோத விளையாட்டு
இருப்பதை ஊகித்தபடி தனக்குதானே புன்னகைத்தவாறு நடந்தான்.
இப்போது அவனது இடப்பக்கம் ஒரு குறுகலான சந்து. அந்த சந்தின் மறுமுனையில் மற்றொரு பெரிய
வீதி இருப்பது தெரிந்த உடன் அதில் நுழைந்தான். மூத்திர வாடை அதிகமாக இருந்தது. துணியால்
மூடப்பட்ட பொம்மைகள் நிறைந்த கூடையை தலையில் சுமந்தபடி ஒரு பெண் எதிர்பட்டாள். அவளுக்கு
பின்னாள் இடுப்பில் குழந்தையை சுமந்தபடி அவளது கணவனை போலிருந்த ஆண். இருவருக்கும் பின்னால்
ஒரு சிறுவன். மூவரும் அந்த சந்தில் அவசரமாக வந்து கொண்டிருந்தனர். இவன் அவர்கள் கடக்க
சற்று ஒதுங்கி வழி விட்டு சுவரோடு ஒட்டி நின்றான். பின் அவர்கள் கடந்து இவன் வந்த தெருவில்
முழுவதுமாக கலக்கும் வரை அவர்களையே பார்த்தபடி நின்றவன் பின் சந்தின் மறுமுனை இருந்த
தெருவினில் இவனும் கலந்தான்.
சற்று அகலமாக இருந்தது அந்த தெரு. எந்த பக்கம் திரும்புவதென தெரியாமல் சட்டென இடப்பக்கமே
திரும்பி நடந்தான். ஆட்கள் நடமாட்டம் துவங்கியிருந்தது. சில வீடுகளின் மாடிகளில் வண்ண
வண்ண புடவைகளை பெண்கள் காலை பொழுதில் உலர்த்திக்கொண்டிருந்தனர். சிறு வியாபாரிகள் சிலர்
தள்ளு வண்டிகளை வீடுகளின் முன் நிறுத்தியிருக்க அதனை சுற்றிபெண்கள் சிலர் கூடி எதையோ
பேசிக்கொண்டிருந்தனர். ஓரிடத்தில் சிறுவர்கள் குச்சி விளையாடிக்கொண்டிருந்தனர்.பலரும்
தங்களது கைகளில் இருந்த குச்சிகளால் தரையிலிருந்த குச்சி ஒன்றை தள்ளி விட்டு அடுத்த
நொடி ஓடிச்சென்று தங்களது குச்சிகளை ஏதாவது கல்லில் வைத்துக்கொண்டனர். கீழே விழுந்து
கிடக்கும் குச்சிக்கு சொந்தக்காரன் அதனை துரத்தி ஓடி வருவான் அப்போது கல்லில் குச்சி
வைக்காத ஆளை அவன் தொட்டு விட்டால் அவன் தோல்வி அடைந்தவனாக கருதப்படுவான். சிறுவயதில்
த்னக்கு பழக்கமான அந்த விளையாட்டை வேடிக்கை பார்த்த படி அவன் நடந்து கொண்டிருந்தான்.
அவன் முதுகுக்கு பின்னால் அவர்கள் கூட்டமாக கத்துவதும் பின் ஒருவருக்கு ஒருவர் சண்டை
போட்டுக்கொள்வதையும் கேட்க முடிந்தது.
தனது அனுபவத்தில் இதுவரை பார்த்திராத ஊராகத்தான் அது இருந்தது. இதனாலாயே அவன் தனது
சவாலை மேலும் நீட்டித்தபடியே நடந்து கொண்டிருக்கிறான். தான் தவறான பாதையில் வந்து விட்டோமா
என்ற ஒரு எண்ணம் அவனை தடுமாற வைத்தது. ஆனாலும் ஒரு தேநீர் கடையை தேடி புதிய நகரத்தின்
காலை பொழுதொன்றில் வினோதமான வீதிகளின் வழி கடந்து செல்வது கூட ஒரு கவிதை எழுதும் மனநிலையினை
தருவதாக அவன் அறிந்து கொண்டான். ஐயா,தேநீர் கடை எங்கே இருக்கிறது? யாரிடமாவாது கேட்கலாமா
என யோசித்த்வன் பின் ஒரு எந்த முஸ்தீபும் இல்லாமல் தன்னை எதிர்கொள்ளப்போகும் அந்த தேநீர்
கடையை கண்டு பிடிக்கும் ஆவலுடன் நடந்து கொண்டிருந்தான். சட்டை பையிலிருந்து சிறிய நீல
நிற மணி பர்ஸை எடுத்து தான் தங்கியிருக்கும் விடுதியின் முகவரி அட்டை இருக்கிறதா என
சரி பார்த்தான்.
சற்று மேடாக உயர்ந்த அந்த சாலையின் வீடுகள் பாரம்பரியத்துடன் காம்பவுண்ட் சுவர்களுடன்
காணப்பட்டன. கிரில் கம்பிகளுக்கு அப்பால் பழைய ஸ்கூட்டரோ அல்லது மோட்டார் பைக்குகளோ
சைக்கிள்களுடன் காணப்பட்டன. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னமும் ஒரு தேநீர் கடையை
கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அவனுக்கு இன்னொரு எண்ணமும் பளிச்சிட்டது.
தான் எழுதவிருக்கும் நாவலின் முதல் பகுதியை இப்படியாகவே துவங்கலாமே. அவனுக்குள் அந்த
எண்ணம் தோன்றியதும் ஒருவித உற்சாகம் பீறிட்டுகிளம்பியது.
ஒருவன் தேநீர் கடையை தேடிக்கொண்டே இருக்கிறான். வீதிகள் வெவ்வேறாக அவன் முன் விரிந்த
படி இருக்கின்றன.கணிணியின் சாத்தியங்களை போல அவன்முன் வெவ்வேறான துணை வழிகளில் விரியும்
வழிகளினூடே பயணிக்கிறான். அவன் தேடிக்கொண்டிருக்கும் தேநீர்கடையை இறுதி வரை அவனால்
கண்டடையவே முடியவில்லை.
சடசடவென அவனுக்குள் வரிகள் ஓடத்துவங்கின. இப்போது அவன் முன் வெகுநேரமாக தேடிய கடைகள்
ஒன்றிரண்டு எதிர்ப்பட்டன. ஆனால் இப்போது மனம் வேறு ஒரு மனநிலையில் இருந்ததால் கடையை
உதாசினப்படுத்தியவாறு நடந்து கொண்டிருந்தான். தான் எழுதவிருக்கும் நாவல் சிறப்பான வடிவத்தை
அடைந்து விடும் என்ற நம்பிக்கை இப்போது அவனுக்குள் புதிய இசை ஒன்றை சுழலவிட்டது.
சந்திர குணசேகரனுக்கு தொலைபேசியில் இந்த தகவலை எப்படியாவது சொல்லவேண்டும். அவன் சொன்ன
ஒரு தகவல்தான் இந்த ஊருக்கு அவனை திடுமென பயணிக்க வைத்தது. சந்திர குணசேகரன் தலைநகரில்
ஒரு பரபரப்பான புலனாய்வு பத்திரிக்கையில் பணிபுரிபவன்.பத்திரிக்கை மற்றும் இலக்கிய
உலகில் அவன் பெயர் பிரசித்தம். நண்பர்கள் மூலம் அறிமுகமான சந்திரகுணசேகரன் எழுதாத அல்லது
எழுத வாய்ப்பு கிடைக்காத ஒரு படைப்பாளி என்பதை முதல் சந்திப்பிலேயே புரிந்துகொண்டன்.
அதன் பிறகு நகரின் புதிய ஆங்கிலபடங்களுக்கு சனிக்கிழமை இரவுகளில் இருவரும் ஒன்றாக போகும்
பழக்கம் ஏற்பட்டது. அன்று இரவு சந்திர குணசேகரன் இவனுடனேயே அறையில் தங்குவான். பேச்சு
இரவுமுடிந்து கருக்கலில் ஒன்றாக சென்று முதல் ஆளாக தேநீர் கடைகளுக்கு செல்வது வரை நீளும்.
காம்யூவின் அந்நியன் நாவலில் வரும் மெர்சோ போல என்னை உணர்கிறேன் என அடிக்கடி கூறுவான்.
இந்த குரலை அடுத்த சனிக்கிழமை இரவுதான் கேட்க முடியும். இப்படி ஒவ்வொரு சனிக்கிழமை
மட்டும் அவன் மெர்சோவாகி இவனை இம்சிப்பது தொடர்ந்தாலும் இவனுக்கு அதுவும் பிடிக்கவே
செய்திருந்தது. உண்மையில் சந்திர குணசேகரன் ஒரு படைப்பாளிதான்.ஆனாலும் என்ன செய்வது
அவனது குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து அவன் சனிக்கிழமை மட்டும் மெர்சோவாகவேண்டியிருக்கிறது.
இப்படியான ஒரு சனிக்கிழமை இரவில்தான் சந்திரகுணசேகரன் இவனது முந்தைய நாவலின் தோல்விகளை
குறித்து விலாவரியாக பேசிக்கொண்டிருந்தான். கதாபத்திரங்கள் தான் நாவலை உயர்த்தும் உங்களிடம்
அந்த நாவலில் இருப்பதெல்லாம் சம்பவங்கள்தான் அதனால்தான் படுத்துவிட்டது என்றான்.மேலும்
அந்த நாவல் முழுக்க ஒரே ஒரு ஐடியாவின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.எவ்வளவுகெவ்வளவு
ஒரு நாவல் வாசகனுக்கு பலவிதமான அனுபவகதவுகளை திறக்கிறதோ அதுவே சிறந்த நாவலாக உருப்பெற
முடியும் எனக்கூறினான். இப்படி பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென இரண்டுவருடங்களுக்கு
முன் என் பத்திரிக்கை வாழ்வில் ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத அனுபவம் அதை சொல்கிறேன் அதை
வைத்து நீங்கள் நாவல் எழுதினால் அது இன்றைக்கு இருக்கும் எல்லா கோட்பாடுகளுக்கும் இசைவுடையதாக
இருக்கும் என்றான். அவன் முகத்தில் அதுவரை இல்லாத ஒரு பரவசம். சட்டென ஜன்னல் வழியாக
வந்த ஒரு ஒளிஅவனுள் புகுந்துவிட்டது போல ஆளே மாறிவிட்டிருந்தான்.
(தொடரும்...)