"அகிலாம்பாளின் குரலில் இருந்த உறுதி சூழலில் இருந்தபதட்டத்த்தை தணித்தது.."
அகிலாம்பாள் தைல பாட்டிலை அவசரமாக கொண்டுவந்து கட்டிலின் மீது கிடக்கும் ம.நா.பெரியசாமியின் நெஞ்சில் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்தாள். குழந்தையை போல பெரியசாமி "இந்த பக்கம்"... "இந்த பக்கம்" என மார்பில் வலி அதிகமாக இருக்கும் இடங்களாக விரலால் காண்பிக்க… அகிலாம்பாள் சூடு பறக்க அழுத்தி தேய்த்தாள்.
காலையிலிருந்தே வலி முணு முணுக்கென்றுதான் இருந்தது .இப்படி புறப்படும்போது பெரிதாக வலிக்குமென அவர் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் வீடு பரபரப்பாகிவிட்டது தோட்டத்தில் மாட்டுக்கு வைக்ககோல் அள்ளி போட்டுக்கொண்டிருந்த செண்பகம், வாசலில் கார் துடைத்துக்கொண்டிருந்த டிரைவர் மாரி, பெரியசாமியின் உதவியாளர் கதிரேசன், மாடியிலிருந்து மகன், மருமகள் அவர்களது மூன்று வயது குழந்தை அனைவரும் கீழே அந்த அறைக்குள் ஓடிவந்து குவிந்துவிட்டனர்.
நீ போயி டாக்டருக்கு ஒரு போன போட்டு வரசொல்லு …
என கதிரேசனைபார்த்து செண்பகம் பதட்டத்துடன் கட்டளையிட்டாள்.
ஒண்ணும் வேணாம் ..சாதாரண வலிதான் ச்சும்மா ... ஊரை கூட்டாம எல்லாரும் கொஞ்ச நேரம் கம்னு கெடங்க .....
அகிலாம்பாளின் குரலில் இருந்த உறுதி சூழலில் இருந்தபதட்டத்த்தை தணித்தது..
தே...செண்பகம் இங்க வா.. பேனை நல்லா வேகமா ஓட விடு … அஞ்சுல வையி.....
செண்பகம் வேகமாய் உள்ளே வந்து சுவிட்ச் போர்டிலிருந்த பெரிய குமிழை திருப்பினாள்.
சட்டென அறையில் வேகமாய் சுழன்றடித்த மின்விசிறி காற்றில் பெரியசாமியின் உடல்குளிர்ந்தது. வியர்வை ஈரத்தில் கட்டிலில் கிடந்த பெரியசாமியின் மொடமொட கதர்சட்டை ஈரமாகியது. கண்களை திறந்து பார்த்தார்.
எழ முயற்சித்தவரை அகிலாம்பாள் கட்டளையிட்டு கொஞ்ச நேரம் படுக்க வைத்தாள்.சட்டையை மட்டும் உடம்பை அப்புறமும் இப்புறமுமாக புரட்டி கழட்டி செண்பகத்திடம் கொடுத்தாள்
பித்தளை சொம்பில் தண்ணியுடன் வந்த மருமகளின் இன்னொரு கையில் இருந்த விசிறியை வாங்கி அகிலாம்பாள் கணவணின் மார்பு முகம் என விசிறி விட்டாள். வாசலில் இருந்த கூட்டம் மெல்ல கலைய துவங்கியது.
பெரியசாமிக்கு மனைவியின் அருகாமை மிகுந்த மன நிறைவை உண்டாக்கியது கட்டிலில் படுத்து கிடந்தவர் தடிச்சியின் இடுப்பை ஆதூரமாக வளைத்தபடி பார்த்தார்.. தன் மனைவிக்கு அன்பாக அவர் சூட்டிய பெயர்தான் இந்த தடிச்சி. தனது கணவனின் கண்கள் குழந்தையை போல பனித்துக் கிடப்பதை பார்த்தவுடன் அகிலாம்பாளுக்கே என்னவோ செய்தது. தலையை தடவினாள்.
”நான் வேணும்னா கதிரேசனை ஆபிசுக்கு அனுப்பிச்சி கூட்டத்தை நாளைக்கு வச்சிக்கலாம்னு கமிஷனருகிட்ட சொல்ல சொல்லிட்றேன்..”
மனைவியிடம் வேண்டாம் என தலையசைத்த பெரியசாமி எழ முயற்சிக்க மீண்டும் அவரது நெஞ்சுமேல் கைவைத்து படுக்க வைத்த அகிலாம்பாள் .
சரிசரி,,,விடு நான் சொல்லலை..கொஞ்சநேரம் காத்தாட படுங்க
அதற்குள் தலைவருக்கு ஹார்ட் அட்டாக் என நகராட்சி மனறத்துக்குள் தகவல் பரவியது. அலுவலகத்துக்குள் அப்போதுதான் ஆட்கள் வந்து அவரவர் இருக்கையை கர்ச்சிப்பால் தட்டிக்கொண்டிருந்த நேரம் ஒருபக்கம் ஏகாம்பரம் தனது சகாக்களுடன் மும்மரமாக துப்பரவு பணியில் ஈடுபட்டு அலுவகத்தையே அல்லோகளபடுத்த, மற்ற அனைவரும் மாலையில் நடக்கவிருக்கும் கூட்டத்தைபற்றியும் அதற்காக ஏகாம்பரம் நடத்தும் அமளி குறித்தும் கிண்டலாக பேசிக்கொண்டிருந்த சமயத்தில்தான் தலைவருக்கு நெஞ்சுவலி வந்த தகவல் வெவ்வேறான விபரீத வடிவங்களில் அலுவலகத்தை எட்டி கதிகலக்க வைத்துவிட்டது. முதல் ஆளாக எஞ்ஜினியர்தான் அவசர அவசரமாக என்ஜினியரை தன் பைக்கில் ஏத்திக்கொண்டு அடுத்த தெருவில் இருக்கும் தலைவரின் வீட்டுக்கு பாய்ந்தார்.
சில நிமிடங்களில் பைக் சைக்கிள் என பல வாகனங்களில் தலைவர் வீட்டுமுன் அனைவரும் வந்து குவிய துவங்கினர். கதிரேசன் அனைவரையும் சமாளித்து வாசலிலேயே நிறுத்திவிட்டான். கடைசியில் கமிஷனரே வந்த பிறகுதான் அவருக்கு மட்டும் ஒரு சல்யூட் அடித்து உள்ளே விட்டான் .
அனைவரும் கதிரேசனிடம் தலைவருக்கு என்ன ஆச்சூ, என்ன ஆச்சு என கேட்டுதுளைத்து எடுத்ததனர். கதிரேசன் அவர்களிடம் விலாவாரியாக விளக்க ஆரம்பித்தான். தலைவர் காலையில் அலுவலகத்துக்கு புறப்படதயாராகி வெளியில் வரும்போது சட்டென யாரும் எதிர்பாராமல் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்துவிட்ட்தாகவும் ...பிறகு சம்பந்தமே இல்லாமல் காலையில் தான் வீட்டிலிருந்து புறப்படும்போது வாசல்படியில் கால் தடுக்கியதை கூறி இன்று ஏதோ நடக்கபோகிறது என்பதை தான் அனுமானித்திருந்ததகவும் நடந்த நிகழ்ச்சிக்கு கூடுதலாக வண்ணம் கலந்து வர்ணிக்க ஆரம்பித்தான்.அவன்பேச பேச சிலர் ஊம் கொட்டியபடி ஆவலாய் கேட்டுக்கொண்டிருந்த்னர்.ஹெட் கிளார்க் கோவிந்தனுக்கு கதிரேசன் தேவையில்லாமல் விஷ்யத்தை நாடகத்தனத்தோடு சித்தரிப்பதாக பட்டது .
சரி.... இப்ப எப்படி இருக்காரு அதை சொல்லுப்பாண்னா நீபாட்டுக்கு உன்கதைய நீட்டிமுழக்கற
கிளர்க் கோவிந்தன் எரிச்சலுடன் கேட்க கதிரேசன் அவனை முறைத்துவிட்டு அதான் முதல்லய தலைவருக்கு ஒண்ணுமில்லன்னு சொன்னன்ல்ல ....
என்னமோ அப்படி பேசற..
கதிரேசன் பொறுமினான்.
சரிசரி வுடு கதிரேச....தலைவரு இன்னைக்கு ஏதோ கூட்டம்னு சொல்லியிருந்தாப்ல்ல ..அதான் அது இருக்குமா .. இருக்காதான்னு தெரிஞ்சா...எங்களுக்கும் நல்லாருக்கும்
இந்த கூட்டத்துக்காகத்தான் நானும் மச்சினிச்சி சீமந்தத்துக்கு கூட காஞ்சீவரத்துக்கு போவாம இங்கயே இருக்கன் .
பத்தாவது வார்டு கவுன்சிலர் ஆறுமுகம் இப்படிக் கேட்டதும் கதிரேசன் ”அண்னாத்த எனக்கு மட்டும் எப்படி தெரியும். அவரே இப்பதான் கண்ணை தெறந்துருக்கார்,அவருகிட்ட போய் நான் இந்தவிவரத்தயெல்லாம் கேக்க முடியுமா?”
ப்பா... எதுக்கு அவசரப்படற ..கமிஷனர்தான் உள்ள போயிருக்காருல்ல வந்ததும் தெரியபோவுது..
இதற்குள் அங்கே கிளார்க் கனகாவும் டைப்பிஸ்ட் ஜானகியும் வர கூட்டத்தில் சிறு சலசலப்பு ..
அப்பா நீங்க ஒண்டிதான் பாக்கி இப்ப நீங்களும் வந்தாச்சா..
கவுன்சிலர் ராஜா அவர்கள் வருவதற்குமுன்பே தலையை ஆட்ட துவங்கினான்.வந்திருக்கும் சூழலின் விவரம் இல்லாமல் இருவரும் அதற்கும் பொத்தி தங்களுக்குள் சிரித்தபடி வெட்கப்பட்டாவாறே ஏதோபேசியபடி உள்ளே காம்பவுண்டுக்குள் நுழைந்தனர்
அன்றுபார்த்து மாலையில் நடக்க இருக்கும் கூட்டத்துக்காக இருவரும் நல்ல சேலையில் கூடுதல் பளிச்சுடன் வந்திருந்தனர்.
வாசலில் கதிரேசன் முன்கூடியிருந்த கூட்டம் இப்போது
மெல்ல கலைந்து இரண்டு பெண்களிடம் திரும்பியது.
என்ஜினியர்தான் கோபப்பட்டார்.
இப்படி எல்லாரும் இங்க வந்துட்டா எப்புடி ? கமிஷ்னர் இப்ப வந்தா கத்தபோறார்
போங்க போங்க ....ஆளாளுக்கு ..இப்படி ஓடியாந்துட்டா எப்படி..ஆபிசுக்கு போய் வேலைய பாருங்க தலைவருக்கு ஒண்ணும் இல்ல...
என்ஜீனியர் சத்தம் போட்ட பிறகுதான் அனைவரும் ஒருவாறாக தத்தமது வாகனங்களை நோக்கி கலைய துவங்கினர்.
அதற்குள் உள்ளேயிருந்து கமிஷ்னர் வருவது தெரிந்தவுடன் கமிஷனர் வர்றார்... கமிஷ்னர் வர்றார்... .முதல்ல இடத்தை காலி பண்ணுங்க என கதிரேசன் அவசரப்படுத்த அடுத்த நொடி அனைவரும் ஆளுக்கொருபக்கமாக தங்களது தலையை மறைக்கவும் அந்த இடத்தை விட்டு புறப்படவும் துவங்கினர். கனகாவும் ஜானகியும் அவசரமாக வாயை பொத்திக்கொண்டு முந்தானையை தலைவழியாக இழுத்து போர்த்தியபடி அவசரமாக வீட்டின் பின்பக்கமாக மாட்டு கொட்ட்கை பக்கம் டிராக்டர் டிரெயிலரின் மறைவில் ஓடி மறந்து கொள்ள...கழனி தொட்டியில் தவிட்டை கலக்க வந்த செண்பகம் வாயை பொத்தி சிரித்துக்கொண்டாள்.ஜானகி அவளிடம் வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும் படி கூறினாள்.
கமிஷ்னர் வெளியில் வருவதை பார்த்ததும் ஓட்டுனர்செல்லதுரை அவசரமாக ஓடிச்சென்று ஜீப்பில் தாவி ஏறிசாவியை முடுக்கி தயாராக இருந்தான்.அகிலாம்பாள் வாசல் வரை வந்து கமிஷ்னரை வழியனூப்பினாள்.அவள் மீண்டும் வீட்டினுள் சென்றதும் என்ஜீனியர் கமிஷ்னரிடம் வந்தார்.
என்ன சார் எப்படி இருக்கார்
பரவாயில்லை...நார்மலாயிட்டார்
அட்டாக்கா சார்
ச்சே சே.. அதல்லாம் இல்ல... லேசான் நெஞ்சு வலி அவ்வளவுதான்.....உங்களுக்கு யார் சார் அட்டாக்னு சொன்னது..
என்ஜீனியர் ஒருநிமிடம் யோசித்து.. ”அப்படித்தான் பேசிக்கிட்டாங்க அத்னாலதான் உங்களுக்கு போன் பண்னினேன்”
கமிஷ்னர் தலையில் அடித்துக்கொள்வதுபோல சைகை செய்துவிட்டு
சரிசரி இப்ப என்ன அதைபத்தி பேசி...ஆபிசுக்குதான.. வண்டியில ஏறுங்க..
எஞ்ஜினியர் திரும்பி தன் இருசக்கர வாகனத்தின் அருகிலிருந்த ஓவர் சீயரிடம் தங்களை பின் தொடருமாறு கூறிவிட்டு அவசரமாக கமிஷனரது ஜீப்பில் முன் பக்க இருக்கையில் ஏறிக்கொள்ள கமிஷ்னர் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
வண்டி மெல்ல காம்பவுண்டை கடந்து இடப்பக்கமாக திரும்பியது.
கமிஷ்னர் இன்ஹேலரை மூக்கில் சொருவி இழுத்தபடி என்ஜீனியரிடம்
ஏன் சார்..அந்த சாவணிமேடு ப்ரிட்ஜ் வேலை எப்பதான் அந்த காண்ட்ராக்டர் முடிப்பானாம் கேட்டீங்களா...
நேத்துகூட போனை போட்டேன் ஏதோ திருப்பதிக்கு குடும்பத்தோட போயிருக்கானாம் வந்தவுடனே பேசறேன்னு சொல்லியிருக்கான் சார்.
அப்பாவே சொன்னன் கேக்கலை ...இன்னைக்கு சாயந்திரம் மீட்டிங்குல கவுன்சிலர் எவன்னா கேள்வியை கேக்க போறான் பாத்துக்குங்க
சரி ..சார் அதல்லாம் சொல்லிக்கலாம் சார்
கோடுபோட்டா மாதிரி எல்லாம் அப்படி நடக்குற வேலையில்ல சார் அது அவனுக்கு காண்ட்ராகட் குடுக்கலன்னு வயித்தெறிச்சல்பட்டா அதுக்கு நாம என்ன பண்ன முடியும்...சார்.நீங்க கண்டுக்காதீங்க எவன்னாகேட்டா நான் பேசிக்கறேன்.
சரி.. அதென்னாவோ பாத்துக்குங்க... இன்னும் ரெண்டுமூணு வருஷம்தான்
நாம் என்னவோ யாரும் நம்மளை பாக்கலைன்னு நெனச்சிக்கிட்ருக்கோம்
அத்தனைபேரும் நம்மளைதான் உத்து கவனிச்சிகிட்ட்ருக்கான்.
முந்தாநேத்துக்குட ஆபிசுக்கு யாரோ ஒருபத்திரிக்கைகாரன் என்னை பாக்கணுன்னு வந்துட்டு போனானாம்
சட்டென என்ஜீனியர் முகம் கறுத்தது.சட்டென திரும்பி செல்லதுரையை பார்க்க செல்லதுரை இது எதுவுமே காதில் வாங்காதவனாக வண்டியை ஓட்டுவதில்தீவிரமாக இருப்பதை போல காட்டிக்கொண்டான்.
என்ஜீனியர் பெச்சை திருப்பும்விதமாக கமிஷ்னரிடம் திரும்பி.
அப்புறம் சாயந்திரம் மீட்டிங் கன்பார்ம் தானசார்..
இருக்குசார்,,என்ன இப்படிகேக்கறிங்க ,கண்டிப்பா தலைவர் அதுல உறுதியா இருக்கார்.அன்னைக்கு சொன்னப்பவே அப்படிஸ்ட்ராங்கா சொன்னவர் இப்பவும் அப்படியேதான் இருக்கார். நான்கூட கேட்டுபாத்தேன் மீட்டிங் கேன்சல்பண்னிடலாமான்னு. பிடிவாதமாக மறுத்துட்டார். எனக்கு ஒண்ணும் இல்ல இன்னும் பத்துநிமிஷத்துலகூட ஆபீஸ் வந்துடுவேன் . அதனால மீட்டிங்கை மட்டும் கேன்சல் பண்ணிடாதீங்கன்னு சொன்னார். ஆபீஸ் ஸ்டாப்ஃப்ஸ், அப்புறம் கவுன்சிலர்ஸ் டெய்லி லேபர்ஸ் எல்லாரும் கண்டிப்பா வரணும்னு சொல்லியிருக்கார்..
இப்ப திடீர்னு ஒரு மீட்டிங் எதுக்கு சார்
தெரியலிய மாணிக்கம் ....இந்த ஆளை புரிஞ்சுக்கவே முடியலை
ஆமாம் சார்.. ரெண்டுநாளா ஆளே ஒரு பேயறைஞ்சாமாதிரிதான் இருக்காரு. பத்திரிக்கையில எதுனா நியூஸ் கியூஸ் வந்துதான்னு தெரியலை.
அவங்க வூட்டுக்காரம்ம என்னாதாங்குதாங்கறாங்க புருஷ்னை ச்செ..நல்ல பொம்பளைப்பா...
எனக்கு ஒரு டவுட் சார்
கமிஷ்னர் இன்ஹேலரை மீண்டும் மூக்கில்வைத்து ஒரு இழுப்பு இழுத்துக்கொண்டு ம்ம்...என்ன டவுட்டு
எல்லாம் இந்தமீட்டிங்பத்திதான்...
என்னா சொல்லு
ஓவர்சீயர்தான் ஒருவிஷ்யம் சொன்னார் அது உண்மையா பொய்யான்னு தெரியலை .
என்ன சொன்னார்
என்ஜீனியர் ஒருமுறை டிரைவரை பார்த்துவிட்டு ..கமிஷ்னரிடம் திரும்பி
தலைவர் இன்னையோட பதவியிலர்ந்து ரிசைன் பண்ணிக்க போறாராம சார்.
அட நீ வேறப்பா அந்த ஆள் மலை முழுங்கி எனக்கு தெரியும் அவரைபத்தி இது.. வேற ஏதோ ஒரு விஷ்யம் .நேத்து ரெண்டுமூணுத்டவை பூங்காவுக்குள்ள இருக்குற தண்ணி பொங்கற மிஷினை ஏன் இத்த்னை நாளா ஏன் ரிப்பேர் பண்ணலைன்னு கேட்டார்.
அதுல என்னாசார் பெரியவிஷ்யம் இருக்கபோவுது...
தெரியலைப்பா...எல்லாம் சாயங்காலம் தெரிஞ்சுடும் எதுக்கு இந்த மீட்டிங்குன்னு நாம எதுக்கு வீணா மண்டைய உடைசிகிட்டு..
அதற்குள் ஜீப் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய வாசலில் துப்புரவு கோஷ்டிகளுடன் நின்றுகொண்டிருந்த ஏகாம்பரம் ஜீப்பைபார்த்ததும் வாசலுக்கு ஓடிவந்தான்,
என்ஜீனியர் மாணிக்கம் முதலில் இறங்கிக்கொண்டார்.தொடர்ந்து இறங்கியவேகத்தில் கமிஷ்னர் த்னக்கு விழுந்த சலாம்களை பொருட்படுத்தாமல் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
ஏகாம்பரம் அவருக்கு முன்பாக அவரது அறைக்குள் ஓடிச்சென்று வாசலில் காத்திருந்தவர்களை அமைதிகாக்க்கும்படி கமிஷ்னர் வருவதாக எச்சரித்துவிட்டு திரைச்சீலைய்யை விலக்கி வழி ஏற்படுத்த கமிஷ்னர் வேகமாக உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தார். பென் சுவிச்சை தட்டிவிட்ட ஏகாம்பரம் மின்னல் வேகத்தில் ப்ளாஸ்க்கை எடுத்துக்கொண்டு இருக்கைமுன் அமர்ந்த கமிஷனரிடம் வந்து நின்றான்.
சார் காபி.. ஸ்ட்ராங்..
ம்ம்ம்..
ஏகாம்பரம் அவசரமாக வெளியில் இறங்கி ஓடினான்.
சற்றுமுன் தலைவர் வீட்டில் பார்த்த பலரும் இப்போது வேகமாக அலுவலகத்திற்குவந்து அவரவர் இருக்கைகளில் அமரதுவங்கியிருந்தனர்....அனைவரது பேச்சும் சாயந்திர மீட்டிங் பற்றியதாகவே இருந்தது.
[ தொடரும் ]