" எழுந்ததும் அவனுக்குள் எழுந்த உற்சாகத்துக்கு ஒருவகையில் இதுவும் ஒரு காரணம்..."
சனிக்கிழமை காலை விடிந்த போதே சந்திர குணசேகரனுக்கு உற்சாகம் தலைதட்டியது.அவனுக்கு அப்படித்தான்.அன்று மட்டும்தான் பாதிநாள் அவனிடம் முழுமையாக இருக்கிறது .சந்தர்ப்பத்தை பொருத்து தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ மாலையில் ஒரு பீர் குடிப்பான்.அன்று மட்டும் நகரத்தில் நடக்கும் இலக்கிய கூட்டங்களில் அவனை பார்க்கலாம்.கடைசியாய் தேங்கும் உதிரி எழுத்தாளர்கள் கவிஞர்களிடம் எதையாவது வம்பளத்துவிட்டு வீடுதிரும்புவான் அல்லது அவர்களுடனேயே சென்று இரவு முழ்வதும் பேசிக்கொண்டிருந்து விட்டு மறுநாள் விடிவதற்கு முன்பே வீடுவந்து சேருவான்..அதன் பிறகு வாரத்தில் வேறெந்த நாளிலும் அவனை வெளியில் பார்த்துவிட முடியாது.இப்படியாக அவனது வாழ்வின் நெருக்கடிகள் அவனது அகசுதந்திரத்திற்கு முட்டுகட்டைகள் போட்டு வேறு வழிகளில் எங்கும் தப்பித்துவிட முடியாதவனாக சனிக்கிழமை எனும் ஒரே ஒரு ஜன்னலை மட்டும் திறந்து வைத்திருந்தது.பெரும்பாலான சனிக்கிழமைகள் அவனுக்கு ஒரேமாதிரியானவைதான் .ஒன்று இலக்கிய நிகழ்வுகள்,அல்லது நாடக்ம்,திரைப்படம் இவற்றில் ஏதாவது ஒன்று அன்றைய நிகழ்வில் இருக்கும். இவற்றில் எதுவுமே வாய்க்காத சந்தர்ப்பத்தில் பழையகாதலியின் வீடிருக்கும் மைலாப்பூர் முண்டக்கண்னி அம்மன் கோயில் பக்கமாக பைக்கில் சென்று அவள் வீட்டருகே இருக்கும் ஒரு டீக்கடையில் சிறிது நேரம் அமர்ந்து பொழுதைகழித்துவிட்டு அப்படியே கடற்கரைக்கு சென்று இரவு நெடு நேரம் கழித்து வீடு திரும்புவது அவனது வழக்கம் .
இன்று சனிக்கிழமையில் சற்று கூடுதலாக அவன் மகிழ்ச்சியில் இருக்க காரணம் மாலை அவன் பொழுதை கழிக்க திட்டமிட்டிருந்தது ஒரு எழுத்தாளரை. அவனுக்கு சமீபமாக வார்த்தைகளின் மூலம் மனதில் சிறகுகளை பூட்டிய ஒரு எழுத்தாளர் அவர்.மேலும் .அவரது கதைகள் பெரும்பாலும் அவனை பிரதி பலிப்பதாக இருக்கும்.தான் எழுத நினைத்த கதைகளை தான் எழுதியிருந்தால் எவ்விதமான வார்த்தைகளை பயன்படுத்திருப்போமோ அதே மாதிரியான் வார்த்தைகளுடன் அவர் அந்த சிறுகதைகளை எழுதியிருந்ததுதான் அவனது ஈடுபாட்டுக்கு காரணம். சமீபமாகத்தான் அவனுக்கு அவர் பழக்கம்.கனிமொழியின் நூல் வெளியீட்டு விழா ஒன்றின்போது மிகப்பெரிய கூட்டத்தின் நடுவே அவரை சந்தித்து கைகுலுக்கி அளவளாவினான்..
உங்களோட அந்த ரயில் கதை அப்படியே என்னை என் வாழ்க்கையை அப்படியே டிஸ்க்ரைப் பண்றா மாதிரி இருந்தது.
ஏன் எல்லா கதையிலயும் ஒரு டிப்ரஷன்,ஜனுசி படத்துல வர்ற ஹீரோ மாதிரி எப்பவும் ஒரு குழப்பத்துலயே இருக்காங்க,
அப்கோர்ஸ் அந்த மாதிரி நேரேஷன்ஸ்தான் உங்களுக்கு பிரமாதமா வருது,
இப்படி மூன்றேவசனத்தில் எழுத்தாளரை இவன் வரும் வரை வெளியில் காத்திருக்க வைத்தான்.
இவனை விட நான்கு வயதுதான் அவர் மூத்தவர்.தனியாக வசித்து வருபவர்.சிறுகதைகள் எழுதி கொஞ்சம் பேர் வாங்கியிருந்த அவர் தனது முதல் நாவலில் தலைகீழாக கவிழ்ந்திருந்தார்.அன்று நடந்த முதல் சந்திப்புக்கு பின் இடையில் இருவரும் ஐந்தாறு முறை சந்தித்திருந்தார்கள். ஐந்துமுறையும் சனிக்கிழமை என்பதுதான் இதில் விசேஷம்.கடந்த முறை சந்தித்த போது பேச்சு அப்படி இப்படி திரும்பி கடைசியில் இவரது நாவல்பக்கம் வந்தது.சந்திர குணசேகரன் வெளிப்படையாக நாவலின் உள்கட்டமைப்புகள் பற்றி பேசப்போக எழுத்தாளர் படு சுவாரசியமாகிவிட்டார்.அதற்குள் குணசேகரனுக்கு கடைசி பேருந்துக்கு நேரமாகிவிட்டதால் அந்த பேச்சை அன்று பாதியிலேயே நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
கையோடு அடுத்த சனிக்கிழமைக்கு அந்த பேச்சு ஒத்தி வைக்கப்பட்டது. இருவரும் மவுண்ட் ரோட் தியேட்டரில் ஹோட்டல் ருவாண்டா ஆங்கில படம் பார்த்துவிட்டு அப்படியே இரவு திருவல்லிகேணியில் இருக்கும் அவரது அறைக்கு போவதாக ஏற்பாடு.இப்படியாக திட்டமிட்டிருந்த சனிக்கிழமைதான் அன்று அவனுக்கு விடிந்திருந்தது.
காலையில் எழுந்ததும் அவனுக்குள் எழுந்த உற்சாகத்துக்கு ஒருவகையில் இதுவும் ஒரு காரணம்தான் என்றாலும் உணமையில் அத்ற்குபின்னால் இன்னொரு விஷ்யமும் இருந்தது.
அது ஒரு கனவு தொடர்பான விஷ்யம். என்னதான் இலக்கியம் படித்துஅவன் பகுத்தறிவாளனாக இருந்தாலும் அவனது குலதெய்வமான வெட்டுவாக்கேணி அம்மனின் புகைப்படத்தை அவனது கண்கள் சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பத்தில் எல்லாம் ஒரு நிமிடம் ஒருவித்மான மறதி அவனை கடந்து செல்லும் .
அது எதனால் அப்படிநேர்கிறது என அவன் பிற்பாடு பலமுறை அவனுக்குள் கேட்டுக்கொண்டாலும் இது தொடர்ந்து பல்வேறு இடங்கலில் அவனுக்கு நிகழ்ந்திருக்கிறது. ஏதோஆழ்மனநிலை சம்பந்தப்பட்ட விவகாரம் என இவனே சிலசமயங்களில் தனக்கு தானே சமதானம் சொல்லிக்கொண்டாளும் உறக்கத்தினூடே இடையிடையாக வரும் அந்த குரல் அவனை பலசமயம் அலைக்கழித்ததுண்டு..நேற்று இரவும் அந்த குரல் அவனுக்குள் ஒலித்த ஒரு விஷ்யத்தை இன்று அவன் நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் அவனுக்கிருந்தது. உண்மையில் ஒரு நீண்டகனவுக்கு பின் வந்த குரல் அந்த கனவை ஒருநாவல் எழுத்தாள்னிடம் உண்மைசம்பவமாக மற்றி சொல்லுமாறு கட்டளையிட்டிருந்ததுதான் அவனது தன்னை மீறிய உற்சாகத்துக்கு காரணம்.உள்ளார்ந்த ஆன்மீக ரீதியான ஒரு காரியத்தை செய்ய போகும் பதட்டம் அவனிடம் காலையிலிருந்தே அவனை படபடக்க வைத்துக்கொண்டிருந்தது.
எழுந்து வாசலுக்குவந்தவுடனேயே அம்மா வெந்தயம் கலந்த மோர் சொம்பை கையில் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள் அதை வாங்கி மடமடவென குடித்துவிட்டு வாசலில் கிடந்த செய்திதாளை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.மேட்டூரிலிருந்து இன்று காலை வருவதாக சொன்ன சித்தியும் சித்த்ப்பாவும் இதுவரை வரக்காணோம்
யோசனை வந்தவுடன் பாத்ரூமில் அமர்ந்தபடியே கத்தினான்.அம்மாவிடமிருந்து பதில் எதுவும் இல்லை.ரெண்டொரு நிமிடத்தில் வெளியே வந்த போது கோமுதான் சொன்னாள் அவர்கள் வரும் வழியில் அப்படியே விருத்தாசலத்தில் ராஜிமாமனார் வீட்டுக்கு போய் பத்ரிக்கை கொடுத்துவிட்டு மாலைக்குள் வந்துவிடுவதாக கோமுவுக்கு செல்போனில் தகவலை சொல்லியிருக்கிறார்களாம். சந்திரகுணசேகரன் கோமுவிடம் எதையும் நேருக்கு நேராக பேசுவதில்லை.பேசி இரண்டுவருடம் ஆகிவிட்டது.கடைசியாக அவளை மவுண்ட் ரோட்டில் த்லைமை தபால் நிலையம் பக்கமாக யாரோ ஒருவனுடன் நேருக்கு நேராக பைக்கில் சந்தித்ததோடு சரி.இன்றுவரை அவளிடம் அதன் பிறகு எதையுமே நேரடியாக பேசுவதில்லை.அவன் அம்மாவிடம்கூட அதை பற்றி சொல்லவும் இல்லை. இத்தனைக்கும் கோமுவின் இஞ்சினியரிங் காலேஜ் செலவு எல்லாம் இவன் தான்.
அதே போல வீட்டிற்கு வரும் சொந்த பந்தம் யாரோடும் எந்த ஒட்டுதலும் இல்லை.அம்மாகூட அப்படி இப்படி சொல்லி பார்த்தாள் எப்பவும் இப்படியே புத்தகம் அதுஇதுன்னு இருந்தா எப்படிடா ?.நாளைக்கு உனக்கு கல்யாணம் காசி எதாவது பண்ணினா அவங்க முன்னாடிதான் நான் போயி நிக்கணும்.சந்திர குணசேகரன் கேட்டுக்கொள்வான் அவ்வளவுதான்.
அதற்கு பதிலாக அவனுக்கு எதுவும் சொல்ல தெரியாது.அந்நியன் நாவலை பற்றி அவளிடம் பேச முடியாது.
திட்டங்களுடான வாழ்க்கையை அவனது தனிப்பட்ட விஷ்யத்திலாவது தள்ளிவைக்கலாமே என்பதுதான் அத்ற்கு காரணம்.அப்பா இறந்ததிலிருந்து அவ்ன் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் அவனது இலக்கிய உலகை முழுமையாக திருடிக்கொண்டது.அக்காவுக்கு கல்யாணம் நடந்த அன்று இரவு கூட மறுநாளே தனது முதல் கதையை எழுத துவங்கிவிடுவது என நினைத்திருந்தான்.ஆனால் எழுத உட்கார்ந்த போது எதுவோ அவனது கையை இறுக்கமாக பிடித்து போல ஒரு உணர்வு.தன் ஐம்பதாவது வயதில் முதல் புணர்ச்சிக்கு த்யாராகும் ஒரு பெண்ணின் அயர்ச்சி.அத்ன்பிறகு அவன் எழுதுகிற ஆசையிலிருந்து விடுபட்டான்.கடந்த எட்டு வருடத்தில் வழ்யில் ஏதோ பஸ் மோதி நாய் அடிபட்டு கிடப்பது போல தன் ஆளுமையெல்லாம் சிதைந்துவிட்டதாக விலகிநின்று தன்னை உணர்ந்தான்.பத்திரிக்கை அலுவகத்தில் கூட ப்ரூப்ரீடர் பதவியிலிருந்து பலமுறை உதவி ஆசிரியர் பதவிக்கு அவனை எடிட்டர் மாற்ற முயற்சித்த போதும் நாசூக்காக தவிர்த்து விட்டான்.அவ்வப்போது ஆள் இல்லாத குறைக்காக உள்ளூர்,வெளியூர்களுக்கு சென்று செய்தி சேகரித்துவந்தாலும் அடிப்படையில் த்ன்னை ப்ரூப்ரீடராகவே அவ்வலுவலகத்தில் வைத்துக்கொள்வதில் முனைப்புடன் இருந்தான்.தீவிர இலக்கிய பரிச்சயம் கொண்ட பலர் அங்கு வேலை நிமித்தமாகவும் படைப்புகளை தருவதற்காகவும் வரும்போது இவனிடம் தவறாமல் இந்த கேள்வியை கேட்பதுண்டு,ஏன் உதவி ஆசிரியராக மாறவேண்டியதுதானே உங்களுடையதகுதிக்கு இந்த வேலை சரியில்லையே என்பது போல.ஆனால் இந்த பணிதான் ஒரு பாதுகாப்பானது என்பது அவர்கள் யாருக்குமே தெரியாது.
சந்திர குணசேகரன் குளித்து முடித்து இடுப்பில் கட்டிய குற்றால துண்டுடன் சுவற்றில் மாட்டப்படிருந்த கண்ணாடியில் பார்த்தபடி ஈரதலையை சீப்பினால் படியவைத்துக்கொண்டிருந்த போது வெளியில் போயிருந்த அம்மா கையில் பிடித்த வாழைதண்டுடன் வந்தாள்.
சித்தியும் சித்தப்பாவும் விருத்தாசலத்துல இறங்கிட்டாங்க்ளாம்?!....
ஆமாம்பா. ராஜி மாமனார் வூடு அங்கதான இருக்கு அப்படியே பத்த்ரிக்கைவைச்சிட்டு கைஅயோட பஸ்ஸை புடிச்சு வந்துட்றேன்னு சொன்னாங்க இந்நேரம் பஸ்ஸுல கூட ஏறி இருப்பாங்க...
உன்னை பாத்தே பல வருஷம் ஆயிடுச்சி இந்ததடவை எப்படியும் உன்னை பாக்கணும்னு சொன்னாங்க ....
அப்படியா நான் காலைல வந்துட்றேன்..
காலைல அவங்க சீக்கிரம் கெளம்பிடுவாங்கப்பா..
அதுக்கு நான் என்ன பண்றது...
ஏதோ அன்னைக்கு நீ வற்புறுதனனுதான் அவங்ககிட்ட போன்ல பேசனன்...
காலைல வந்துட்றேன்...
அவங்க உனக்கு ஏதோ பொண்ணு பாத்து வச்சிருக்காங்களாம்...
அப்படியே உங்கிட்ட போட்டாவை காட்டிட்டு என்ன ஏதுன்னு கேட்டுட்டு போலாம்னுதாண்டா வர்றாங்க...
நான் தான் உனக்கு பலதடவை சொல்லியிருக்கன்ல்ல ,என்னை கேக்காம எதுவும் செய்யாதன்னு..
மதியம் அலுவலகத்தை விட்டு புறப்படுவது வரை காலையில் அம்மாவுடன் பேசியது தொடர்பான் மன உளைச்சலே அவனுக்கு அதிகமிருந்தது..அதிலிருந்தே ஒருவிதமான மன அசூயை அவனை பேயாக் பிடித்து பின்னால் தள்ளிக்கொண்டிருந்தது.
பைக்கை தான் முன் தீர்மானித்தபடி அந்த எழுத்தாளரின் இருப்பிடமான் திருவல்லிக்கேணியை நோக்கி திருப்பினான்,
வழியில் தென்பட்ட ஒரு டாஸ்மாக்கில் பைக்கை நிறுத்தி உள்ளே சென்றவன் ஒரு கிங் பிஷர் லெஹர் எனக்கூறி
ஒரு ஐநூறு ரூபாய் தாளை நீட்டினான்.
அப்படியே அருகிலிருந்த பாரினுள் நுழைந்தான்
அருகில் தொங்கவிடப்படிருந்த திறப்பானை உபகயோகித்து பாட்டிலை திறந்தான்
நுரை பொங்கியது
பாரில் கூட்டம் அதிகமில்லை
சி.மோகன் எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது
துக்கம் மேலிட்டவனாக பாட்டிலை வாயினுள் கவிழ்த்தினான்
அதுவரை அவனை நெருக்கிக்கொண்டிருந்த துயரம் அனைத்தும் அந்த நொடியில் சட்டென கண்ணீராக வழிந்தது.
சற்று போதை அதிகமாகியதும் நான் ஒரு மெர்சோ என்றான்
சுண்டலை கொண்டுவைத்த சிறுவனிடம் அந்நியனை படித்திருக்கிறாயா எனக்கேட்டான்.
சிறிது நேரம் கழித்து வெ:ளியே வந்தவன் தனக்கு தானே சிரித்தபடி உற்சாகம் மிகுந்தவனாக கையிலிருந்த தொலைபேசியை எடுத்து அந்த எழுத்தாளனின் நம்பரை தட்டினான்,
(தொடரும்...)