நாவல் : நீரூற்று இயந்திர பொறியாளன்...

பாகம் நான்கு : சரளாவை சுற்றி ...


அஜயன்பாலா [ஓவியம் - மருது ]

"பொழுது போகாத சமயங்களில் ஆர்குட் பக்கம் செல்ல அங்கு அறிமுகமானான் சிங்கப்பூர் சிவா...."
இன்னும் சில நிமிடங்களில் சரளாவை சுற்றி பட்டாம்பூச்சிகள் சுற்ற போகிறது .சிவா எப்படி இருபான் அவன் வாசனை என்ன ? பேசும் போது கர்ச்சிப்பால் உதட்டை மூடி பேசுவானா? புகைப்படத்தில் பார்த்த கன்னத்து குழி, சிரிக்காத போதும் தெரியுமா? அவள்மனம் பலகேள்விகளில் சிக்கி படபடத்துக்கொண்டிருந்தது. பத்து மணிக்கு வரச்சொல்லியிருந்தான் மணி 9.45 தான் ஆகிறது சீக்கிரம் வந்துவிட்டோமோ எனறு கூட தோன்றியது. அவளுக்கு பதட்டமாக இருந்தது ஒவ்வொருமுறையும் அவள் தன் புதிய உறவுகளின் துவக்க நிமிடங்களில் அடைந்த மனப்பதட்டத்தையே இப்போதும் உணர்ந்தாள்.

சட்டென வியர்த்தது.கர்ச்சிப்பல் வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டாள். அந்த சிறிய நாகரீக உணவு விடுதியில் இதற்கு முன் அவள் வந்ததில்லை.
இதுதான் முதல்முறை அருகிலிருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். அவளுக்கு உள்ளுக்குள் சின்ன் அதிர்வு. ஆர்குட்டில் தான் பதிவு செய்திருக்கும் தன் புகைப்படத்திற்கும் இதற்கும் தான் எத்தனை வித்தியாசம்.அது ஜி. ராம்பிராசாத்தை காதலிக்கும் காலத்தில் மகாபலிபுரகடற்கரையில் வைத்து அவனால் எடுக்கப்பட்ட புகைப்படம் . .அந்த புகைப்படம் எடுத்து இப்போது மூன்று வருடங்கள் ஆகிவிட்டது நந்து பிறந்த பிறகுதான் முகம் தளர்ச்சியடைந்து முகத்துசதைகள் தொங்க ஆரம்பித்துவிட்டது. இப்படியான் உருவத்தை சுதாகர் பார்த்தால் அதிர்ச்சியடைந்து தன் மேல் விருப்பமில்லை என கூறிவிட்டாள் என்ன செய்வது ? எல்லாம் ஒருநிமிடம்தான். பின் சட்டென பதட்டம் விலகியவளாக அமைதியானாள். இப்போது அவளிடம் எந்த பிசகும் இல்லை. நேற்று பார்த்த ஒரு விளம்பர படத்தின் நாயகியை போல எதுநடந்தாலும் ஒரு பேண்டா குடித்துமனசை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான் என சொல்லி சமதானமாகிக்கொண்டாள்.

சரளாவுக்கு காதல் தோல்வி ஒன்றும் புதிதல்லவே ஊரில் ப்ளஸ் டு படித்த போதுதான் அவளுக்குள் முதல் காதல் முளைத்தது. அப்பாவிடம் கணக்கு ட்யூஷன் படிக்க வந்த சக வகுப்பு மாணவர்களில் பஞ்சாட்சரத்திடம் அவளுக்கு ஒருகாதல்.பள்ளி சத்துணவு ஆயாவின் மகன்.ஏதோ ஒருமுறை ராணிமுத்து நாவல் படிக்கிரபோதுதான் அதில் வந்தார் போல் ஒரு ஏழை பையனை காதலிப்பது என முடிவு செய்திருந்தாள் பஞ்சாட்சரம் அவள் கனவை நனவாக்கினான். அப்பா இல்லாத வீட்டில் வேறுயாருமற்ற ஒரு சனிக்கிழமை மாலை பொழுதில் மொட்டை மாடியில் வைத்து அவனுக்கு இண்டகரல் கால்குலஸ் சொல்லி கொடுத்தபோது முழங்கை மயிர்க்கால்கள் சிலிர்க்க காதல் கிளர்ந்தது.ஒரு வருடத்தில் பள்ளி முழுக்க தெரியவந்து கடைசியில் பரீட்சை ரிசல்ட்கள் வந்தவுடன் பஞ்சாட்சரத்தின் அம்மா மகனோடு பெண்கேட்டு வீட்டுபடியேறியபோது அந்த காதல் முறிந்தது. அவளது அப்பா விறகுக்கட்டையால் அடித்த அடியை பர்த்த்து பயந்த அம்மாதான் சென்னையில் தங்கை வீட்டில் சென்று கல்லூரிக்கு படிக்கவைத்தாள். அதன்பிறகு இரண்டாவதாக சென்னையில் மூர்த்தி. பைனான்ஸ் கம்பெனிகளில் கடன்தவணை திரும்ப செலுத்தாத இருசக்கரவாகனங்களை அதன் பூட்டை உடைத்து கம்பெனிக்கு எடுத்துவரும் வேலை செய்தவன். அவள் இறங்கும் ஏறும் பேருந்துநிலையங்களில் டூவீலரில் காத்திருந்து துரத்தி வந்து எப்படியோ கவர்ந்து கொண்டவன். ஒரு விடுமுறை நாளில் அவனோடு துணிந்து அவன் தங்கியிருந்த அறைக்கு முதல் முறையாக சென்று -

அவன் முத்தம் கொடுக்க அருகில் வந்த சமயத்தில் சட்டென அவன் மீது ஒரு வெறுப்பு தோன்ற அவசர அவசரமாக அங்கிருந்து கைபையை தூக்கிக்கொண்டு ஓடிவந்தவள்.அந்த சம்பவத்துக்கு பிறகு எதனாலோ அவளுக்கு அவனை பிடிக்காமல் போய்விட்ட்து. ஆண்கள் மேலேயே வெறுப்பு வந்துவிட்டது . பிறகு படித்து முடித்து ஊருக்கு போக மனமில்லாமல் ஏதாவது சாதிக்கவேண்டும் என வெறிவந்து கொஞ்ச நாள் கராத்தே கிளாஸ், உதவும் கரங்கள் என்றெல்லாம் அலைந்து பின் கடைசியாக யாராவது ஓரளவு தகுதியுள்ளவன் கிடைத்தால் காதலிக்கலம் என அவ்ள்காத்திருந்தபோதுதான் கவிதை எழுதுபவனாக அறிமுகமானான் ஜி.ராம்பிரசாத்.

எல்லாவிதத்திலும் பொருத்தமானவனாகத்தான் இருந்தான் ஜி.ரம்பிரசாத்.அதனால்தன் ஆறே மாத்த்தில் திருமணத்துக்கு நச்சரித்து அப்பாஅம்மா யாரும் இல்லாமல் வெறும் சித்திமட்டுமே துணையிருக்க திருமணம் செய்துகொண்டாள்.ராம்பிரசாத் எல்லாவிதத்திலும் அவளுக்கு முழுதிருப்தியை தந்தான் அதனால்தான் நந்து பிறக்கும் வரையில் அவ்ளும், சமைப்பது துணிதுவைப்பது,கணவன் எழுதும் கதைகளை சமயம் கிடைக்கும் போது வாசித்து கருத்து சொல்வது,என வாசுகியாக வாழ்ந்தாள் வெளியில் அவன் பெயர் மெல்ல மெல்ல உயர்ந்து அதனால் அவனுக்குள் கொஞ்சம் தலைக்கனமும் சேரத்துவங்கியது. அப்போதுதான் அவ்ளும் கொஞ்சம் மாறலானாள். அதுவும்குறிப்பாகா யாராவது அவன் கதையை புகழ்ந்து போனில் பேசினாள் போதும் ஏதோ அதிர்ஷ்டத்தில் அவனது மனைவியாகிவிட்டதை போல அவனது அலட்சியம் வெளிப்படும்.அதை அவ்வப்போது வெளிப்படுத்தும் விதமாக ஒரு எழுத்தாளனின் மனைவியாவேன் என சிறுவயதில் எப்போதாவது கனவு கண்டிருக்கிறாயா என்பது போலவெல்லாம் கேள்விகளை கேட்பான்..

ஆனால் எப்போது அவளுக்கும் தீவிர இலக்கியத்தின் மீதான் வாசிப்பு, வரத்துவங்கியதோ அப்போதே அவளும் கொஞ்சம் மாறதுவங்கினாள்..அதற்கு முன் வெறுமனே எப்போதாவது பொழுது போகாத சமயங்களில் கவிதை புத்தகங்களை மட்டுமே புரட்டிபார்த்தவள் கணவனின் கதைகளை படிவம் எடுத்துகொடுக்க ஆரம்பித்ததிலிருந்து இலக்கியவாசனை அவளது நாசிக்குள் நுழைந்து விட்டது,சில வரிகளை அவளாகவே திருத்தி எழுத அப்படி எழுதப்பட்ட வரிகளை பாராட்டி கதை வெளியானதும் வாசகன் ஒருவன் கடிதம் எழுதப்போக அதிலிருந்து துவங்கியது சரளாவின் இலக்கிய ரயில்.உண்மையில் அந்த கடித்த்தை எழுதியவனே ராம் பிராசாத் தான்.மனைவிக்கு அல்ப்ப சந்தோஷம் கிடைக்கட்டும் என்ற நம்பிக்கையில் அவன் செய்த அந்த விபரீத விளையாட்டு பிற்பாடு அவன் வாழ்க்கைக்கே வேட்டு வைக்கபோகிறது என்பதை அவன் அறிந்திருக்க வில்லை.

கடிதம் வந்த சில நாளில் பிரசாத்துக்கு கிடைக்கும் பாராடுக்களைபார்த்து ஏன் நாமும் அது போல் பலரும் பாராட்டும் மனுஷியாக மாறக்கூடாது என்ற ஆசை அவளுக்குள் முளைவிட்டது. அதன்பிறகுதான் அவளுக்குள் தான் ஒரு எழுத்தாளனுக்கு வீட்டுவேலைசெய்யும் அழகு இயந்திரம் என்பதை உணரமுடிந்தது . தவிர்க்கவே முடியாமல் இவளுக்குள் மெல்ல அடங்கிகிடந்த பழைய சரளா வீறு கொண்டு எழுந்தாள்.தினமும் மனதுக்குள் கராத்தே உடையில் ஹா ஹூ என கூறியபடி ஓடுகளை உடைத்தாள்..

கொஞ்சம் கொஞ்சமாக ராம்பிரசாத்தின் மீதான கவர்ச்சியும் ஈர்ப்பும் அவளைவிட்டு விலக துவங்கியது. முழுமையாக விலகியது. இதனிடையே அவளுக்கும் ராம்பிரசத்தின் நண்பர்களுகும் இடையில் தொலைபேசி வழி நட்புகள் தோன்றியபிறகுதான் அவளது உடலில் இறந்த செல்களெல்லாம் உயிர்பெற துவங்கின. அவர்களோடு அவளுக்கு எதுவும் ரகசிய உறவுகள் இல்லை என்றாலும் அவளுக்கு அது மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்தது.ஜி. ராம்பிரசாத் எனும் அந்த ஊரறிந்த எழுத்தாள்ன் வீட்டில் தனக்கு தரும் அவமரியாதைகள் குறித்து அவனது நண்பனும் கவிஞனுமான நல்ல நிலவனிடம் கூறியபோது அவன்தான் ஒரு ஐடியா தந்தான். கோணங்கியை அறிமுகப்படுத்தி உப்புகத்தியில் மறையும் சிறுத்தை தொகுப்பையும் தந்தான். எப்போதெல்லாம் அவன் திமிர் அதிகமாக வெளிப்படுகிறதோ அப்போதெல்லாம் கோணங்க்கியின் அந்த புத்தகத்தை எடுத்து வைத்துக்கொள்ளும் படி கூறினான் .காரணம் ஜி.ராம்பிரசாத் இவனிடம் கோணங்கி எனக்கு வேண்டாத எழுத்தாளர் ஏன் என்றால் அவரது கதைகள் எனக்கு புரியவில்லை என்றான்.இதை சொல்லும் போது அவனது குரலில் தெரிந்த ஒரு தோல்வி தான் இப்படி ஒரு ஆலோசனையை அவளுக்கு வழங்க வைத்தது. அன்று முதல் .அதுபோலவே அவளும் கணவன் திமிராக சட்டையை கழட்டும் தருணங்களில் கோணங்கியின் புத்தகத்தை எடுத்து பிரித்து படிக்க செய்யதுவங்குவாள். அவ்வப்போது கடைக்கண்னால் கணவன் பதட்டமாவதை பார்த்து அக மகிழ்ந்தாள். நல்ல நிலவனுக்கும் நன்றி கூறினாள்.

ஏன் இந்த புத்தகத்தை வாசிக்கிற வேற எதுவுமே கிடைக்கலயா ? டயம் வேஸ்ட், இப்பநீ இந்த புரியாத கதை படிச்சு என்ன சாதிக்க போற, இப்படியான் கேள்விகள் அம்புகளாக அவள் முதுகில் பாயும். அதிலிருந்தே அவ்ளை கூட்டங்களுக்கு உடன் அழைத்து செல்வதை நிறுத்தினான். இதனிடையே நல்ல நிலவனும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு தனது பரிசோதனையின் விளைவுகளை குறித்து கேட்டு தெரிந்துகொண்டு அவ்ளுக்கு மேலும் சில ஆலோசனைகளை வழங்கினான்.சந்தர்ப்பம் கிடைத்தபோது .. இருவரும் ஒருமுறை தனியாக சந்தித்துபேசினர். ஒரு முறை அவ்ள் எழுதிய கவிதைகள் சிலவற்றையும் கையோடு வாங்கி சென்றவன் அதில் தன் கைவண்ணத்தை காட்டி மெருகேற்றி அடுத்து சிலநாட்களிலேயே அதனை ஒரு இதழிலும் பிரசுரிக்க வைக்க உண்மையில் அதிலிருந்துதான் மனைவி மேல் ஜி ராம்பிரசாத்துக்கு வெறுப்பு வரத்துவங்கியது. இரண்டுபக்கமும் வெறுப்பு தீவிரமாக வளர வளர ஒருநாள் சரளா கோபத்தில் சட்டென புறப்பட்டு குழந்தையோடு சித்திவீட்டிற்கு வந்து விட்டாள் அவனும் கூப்பிடவில்லை. அதன் பிறகு இவளும் போகவில்லை.

சித்தி வீட்டில் அவ்ளுக்கு எந்த பரச்னையும் இல்லை துவக்க காலத்தில் வழியில் என்றாவது புது காதலனுடன் அவள் செல்கிறபோது வழியில் அவனை தனியாக சந்தித்து அன்று அவன் ரத்த கண்ணீர் வடிப்பதாக கற்பனை செய்து பார்ப்பாள் கடசி வரை அவளுக்கு புது காதலன் கிடைக்கவே இல்லை. இதனிடையே அவ்வப்போது கவிதைகளும் எழுதினாள் நல்ல நிலவன் வெட்டிவிட்ட காரியத்தை செய்ததோடு தன் பணி முடிந்துவிட்டது என நினைத்துவிட்டான் போல அதன்ன்பிறகு அவ்ளை பார்க்க வரவில்லை. ஒருநாள் இதுகுறித்து அவனிடம் அவள் கேட்க போக என்ன இருந்தாலும் ராம் பிரசாத் நல்லவன் அவனை விட்டு வந்தது தவறு என அபாண்டமாக தத்துவம் பேச் ஆரம்பித்தான். வேலைக்கு அப்ளிகேஷன் போட்ட இடங்களிலும் தகுதியான் வேலை கிடைக்கவில்லை. ரிசப்ஷனிஸ்ட் .டி,டிபி ஆபரேட்டர் போன்ற வேலைகளே அவளுக்கு கிடைத்தது .வேறு வழியெ இல்லாத காரணத்தால் ஸ்பென்சர் பிளாசாவில் கலை பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் பில் போடும் வேலையில் சேர்ந்தால்.பொழுது போகாத சமயங்களில் ஆர்குட் பக்கம் செல்ல அங்கு அறிமுகமானான் சிங்கப்பூர் சிவா

தொடர் குறுந்தகவல் பரிமாற்றங்களுக்கு பின் இருவருக்குள்ளும் இதய்ங்கள் துடிக்க துவங்கியது நான்கே நாளில் அடுத்த வாரம் சென்னை வருவதாக சொன்னான்.அதன்பிறகு எங்கு சந்திக்கலாம் என பல இடம் யோசித்து பின் அவன் தான் இந்த இடத்தை தேர்வு செய்தான் முதலில் அவளுக்கு ஒரு தயக்கம் இது போன்ற இடங்களுக்கு அவள் வந்ததில்லை இரண்டாவது ஜி.ராம்பிராசத் இப்போது இந்த பக்கம் தான் குடிவந்திருப்பதக தகவல்.சட்டென துணிந்துதன் ஒத்துக்கொண்டாள் காத்திருந்தாள் .

உண்மையில் அந்த சிங்கப்பூர் சிவா என்று ஆர்குட்டில் கலக்கிய மனோகர் கோடம்பக்கம் ட்ரஸ்ட்புரத்தை சேர்ந்தவன் அப்படி ஒன்றும் மோசமான ஆள் இல்லை இது போல ஆர்குட்டில் வசப்படும் பெண்களை வசதிப்பட்ட இடங்களுக்கு வரவழைத்து தனக்கு தோதாக இருந்தாள் காரில் ஏற்றிக்கொண்டு சென்னையில் காந்திசிலை கிண்டி சிறுவர் பூங்கா, பெசண்ட் நகர் கடற்கரை என சுற்றிக்காட்டிவிட்டு வீட்டில் கொண்டுவிட்டுவிட்டு நண்பனிடம் காரை கொடுத்துவிட்டு ப்ளைட்டுக்கு பறக்கவெணும் என அவசரமாக புறப்படுவான் .

சரளா உள்ளே வந்த சில நிமிடத்திலேயே மூட் அவுட்டாகி அவன் வெளியேறிவிட்டான்
ஆனால் அது தெரியாத சரளா இப்பவும் சிங்கப்புர் செண்ட் மணக்க சிவாவை எதிர்நோக்கி காத்துகிடந்தாள்


மணி பத்தைரை ஆகிவிட்டது நொந்து நூலாகி காபிக்கு காசு கொடுத்து விட்டு வெளியேவந்த போதுதான் அதிர்ச்சியூட்டும் விதமாக ஜி.ராம்பிரசாத் எதிரில்வந்து கொண்டிருந்தான்.

(தொடரும்...)
அஜயன்பாலா - எழுத்தாளர்.
தற்போது நடிகராகவும் இயக்குனராகவும் பரிணமித்துவரும் அஜயன்பாலா அடிப்படையில் ஒரு சிறுகதை எழுத்தாளர். 2002ல் தி வீக் வார இதழ் இவரை அந்த் ஆண்டின் சிறந்த வளரும் எழுத்தாளராக தேர்ந்தெடுத்து கவுரவித்த்து.

"நீரூற்று இயந்திர பொறியாளன்" இவரது முதல் நாவல்.




இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5