"வாழ்வை தீர்மானிக்கும் எதிர்பாரா சம்பவங்கள் ஒருவனுக்கு எதன் அடிப்படையில் நிகழ்கிறது என்பது கேள்விக்குறியே. "
வாழ்வின் சிலநியதிகள் விசித்திரமானவை. வாழ்வை தீர்மானிக்கும் எதிர்பாரா சம்பவங்கள் ஒருவனுக்கு எதன் அடிப்படையில் நிகழ்கிறது என்பது கேள்விக்குறியே. லாட்டரியில் பரிசுவிழுந்த ஒருவன் அடுத்த நாளே சாலைவிபத்தில் மரணமடைகிறான். இதன் மூலம் ஒருவனுக்கு என்ன தீர்ப்பை இயற்கை எழுதிவிடமுடியும் . துயரமான வாழ்வின் இந்த கொடூர விளையாட்டு நம்மோடு சதா நேரமும் கைகோர்த்துவருகிறது . தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு புகழ் பெற்ற வசனம் ஒன்று உண்டு. இங்கு நல்லவனுக்கு கிடைக்கும் அதே மரியாதைதான் ஒரு கெட்டவனுக்கும கிடைக்கிறது. ஆனால் இதற்காக நான் கெட்டவனெல்லாம் அழிக்கப்படவேண்டும் அல்லது தண்டனைக்கு ஆட்படவேண்டும் என்று சொல்வதாக அர்த்தமில்லை. இப்படியெல்லாம் நினைக்ககூடிய ஒரு நல்ல மனம் படைத்தவனுக்கு குறைந்தபடசம் வாழ்வின் அவல நிலைக்கு எடுத்து செல்லாமலாவது இருக்கலாம். இப்படியாக மனிதவாழ்க்கை எந்த புள்ளீயிலிருந்து தீர்மானிக்கபடுகிறது அல்லது மனித வாழ்வுக்கும் இயற்கையின் நியதிகளுக்குமிடையிலான விகிதாச்சாரம், என இது போன்ற மர்மங்களின் மீது சந்திர குணசேகரனும் எப்போதும் கவனம் கொண்டிருப்பவன்தான். அதனால்தான் அவன் தன் முன் விரிந்த வாய்ப்புகள் அனைத்தையும் தன் இடது காலால் உதைத்தபடி அலட்சியமாகவே எதிர் விளையாட்டுக்களை விளையாடிவந்தான். சட்டென தன் தோளின் மேல் விழும் ஒருகை நாளைக்கே நம் ஒருகத்தியை வைத்துக்கொண்டு முதுகில் குத்துவதற்கு தயாராக மாறலாம். அல்லது நெரிசல் காரணமாக பைக்கில் செல்லும் ஒரு புதிய தடத்தில் எதிர்பாரா பழைய நண்பனை சந்திக்கலாம் தொடர்ந்து அவனால் எல்லா காலத்துக்குமான ஒரு நன்மையோகூட அடைய நேரிடலாம் என அனைத்து சாத்தியங்களுக்கும் தயாராக தன் முன் பல கதவுகளை விரித்தபடி வாழ்ந்துவந்தான். எதுசரி என கண்டுபிடிப்பதில் நம் உள் மனம் துரிதமாக வேலை செய்யக்கூடியது என்பதை அவன் முழுமையாக நம்பினான்.
இப்படியாக பல த்த்துவகத்திகளை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அவன் வீட்டிற்கும் அலுவலகத்துக்குமாக அலைந்தாலும் கடந்த இருநாட்களாக ஒருவிதகளிப்பு அவனையும் மீறி மெல்ல அவனுள் ஊடுருவி படர்வதை உணர்ந்தான். அது எப்படி எந்த கணத்திலிருந்துதுவங்கியது என்பதை அவனால் துல்லியமாக கண்டறிய முடியவில்லை.
திடீரென் தன் பெயருக்கு கீழே யாரோ சிவப்பு மையால் கோடிழுத்தது போல தன்னை சுற்றிய அனைத்திலும் ஒரு முக்கியத்துவம் தன் மேல் கவிழ்வதை உணர்ந்தான். அவன் வேலை செய்துவந்த மங்களம் பத்திரிக்கையின் முதலாளி அவனை வரவழைத்து தனிப்பட்ட முறையில் பத்திரிக்கையின் வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை கேட்டு பெற்றது அவர் விரைவில் துவங்க இருக்கும் ஒரு மக்ளிர் இதழின் ஆசிரியர் பொறுப்பை அவனிடம் தர முடிவெடுத்திருப்பதாக கூறியதையும் இவனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.அவனால் வழக்கம் போல அந்த வாய்ப்பை உதாசீனப்படுத்தவும் முடியவில்லை.அதுநாள்வரை பொறுப்பிலிருந்த பலர் அவருக்கு இழைத்த துரோகத்தின் கதைகளை மனம் வெதும்பகூறி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக விசுவாசமாக வேலை செய்யும் தகுதி வாய்ந்த ஒருவனுக்கு நான் இதை இச்சமயத்திலாவது செய்வதுதான் முறை என்பதாகவும் கூறினார்.
வேறுசந்தர்ப்பமாக இருந்தால் அவன் நிரகரித்திருப்பான். ஆனால் இனியும் இதனை நிராகரித்தால் தேவையில்லாமல் ஆசிரியரை வெறுப்பேற்றுவதாக ஆகிவிடும் என உணர்ந்திருந்தான் . எப்படியும் சம்பளம் இப்பொது வாங்குவதைவிட குறைந்தது மூன்றுமடங்கு அதிகமாகிவிடும். இனி வீட்டை நல்ல ப்ளாட்டுக்கு மாற்றிவிடலாம் . அம்மாவுக்குதங்கைக்கு நகை வாங்கி போடலாம். சந்திர குணசேகரனுக்குள் மகிழ்ச்சி அலைபொங்கியது. அன்று சனிகிழனம ஏற்கனவே மனதில் படரும் உற்சாகத்தின் வலையை நீட்டிக்க வேண்டி வண்டியை ராயப்பேட்டை பக்கமாக ஓட்டிச்சென்றான். அவன் காதலியின் வீடிருக்கும் திசை அது. அங்கு அவள்வீட்டின் அருகே இருக்கும் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ சாப்பிட்டு மீண்டும் காதலியின் வீட்டுவழியாக திரும்புவது அவனது வழக்கம். இப்போது அவன் வாகனம் அவளது காதலியின் வீடிருக்கும் அந்த திருப்பத்தில் திரும்பிக்கொண்டிருக்கிறது. வீட்டு வாசலில் வழக்கத்துக்கு மாறாக பகல் பொழுதில் தொலைவில் வரலட்சுமி வீட்டுவாசலில் நிற்பது தெரிந்தது. அவனது மனம் களிப்பில் துவண்டது
ஆனால் காலம் அவனுக்கு தரப்போகும் மரணம் எனும் பரிசு இன்னும் ஐந்துமாதத்தில் இதே திருப்பத்தில் மறைந்திருக்கும் ரகசியம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஒரு லாரியின் மீது மோதி அவனுக்கு நிகழப்போகும் மரணம் குறித்த அனைத்துதரவுகளும் என் முன் இப்போதே விரிகிறது. இயற்கையின் நியதி அவனை சுற்றி அப்படியாகத்தான் இயங்கி வந்தது. எதன் காரணமாக இவன் ஐந்தே மாத்த்தில் இறக்க வேண்டும் எனபதற்கான விளக்கம் எதுவும் என்னிடம் இல்லை. மனித வாழ்வு அப்படியாக முரண்பட்டதாக இருப்பதாகவே உணர்கிறேன் ஒரு நல்லியல்புகள் கொண்ட கதாபத்திரத்தை உருவாக்கி காரணமே இல்லாமல் அவனது இறப்பை தீர்மானிப்பதற்காக உண்மையில் என்னையே நான் வெறுக்கிறேன். .ஆனால் பிற்பாடு அவன் திடீரென் இறக்கும் போது செயற்கையாக இருக்ககூடாது என்பதற்காக இப்போதே முன் கூட்டியே சொல்லிவிடுவது நல்லது என்பதற்க்காக இதனை இப்போதே சொல்லி விடுகிறேன்.ஆனால் வாசகனாகிய உங்களுக்கும் படைப்பாளனாகிய எனக்கும் தெரிந்த இந்த விஷ்யம் சந்திர குணசேகரனுக்கு தெரியாது. சந்திர குணசேகரன் மிகுந்த உற்சாகத்துடன் தன் வழக்கமாக செல்லும் காதலியின் வீடிருக்கும் அந்த தெருபக்கமாக இதற்குமுன் ஒரு வார்த்தை கூட பேசியிராத அவளது முகதரிசனத்தை முழுமையாக உள்வாங்கியபடி வழக்கமாக செல்லும் அந்த கடைக்கு பைக்கை திருப்பினான். கடையினுள் நுழையும் போதே ஜி.ராம்பிராசாத்திடமிருந்து அழைப்பு வந்தது.உடனே சந்திக்க விரும்புவதாக அவர் கொடுத்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு அவரோடு உரையாடியபடி தேநீருக்கு சைகை செய்தான்.
ஜிராம் பிராசாத்தின் முகம் இத்த்னை பிராகாசமாக இருந்து சந்திர குணசேகரன் இதற்கு முன் பார்த்ததில்லை.சொற்ப சந்திப்புகள்தான் என்றாலும் ஜி.ராம் பிராத் எப்போதும் ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டவனாக அல்லது நேற்று இரவு முழுக்க அழுதவனைப்போன்ற அழுத்தமான முகபாவனையுடந்தான் காட்சியளிப்பான்.ஆனால் இம்முறை பார்த்த மாத்திரத்திலேயே கை உயர்த்தி சராசரி நகரத்து இளைஞனைப்போல ராம் பிரசாத் நடந்து கொண்டவிதம் சந்திர குணசேகரனுக்கு ஆச்சர்யத்தை தந்தது.
இத்தனை விஷயங்களையும் சந்திர குணசேகரன் பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் யோசித்து முடித்திருந்தான்.
வழக்கமாக வீட்டுக்கு வரச்சொல்லும் ஜி.ராம்பிரசாத் இம்முறை துளசி பார்க பாருக்கு வரச்சொன்னது வேறு சந்திர குணசேகரனுக்கு ஆச்சர்யம்.
கதவை திறந்து ஏ.சி,ஹாலின் இருட்டுக்குள் நுழைந்ததும் அப்போதுதான் சந்திரகுணசேகரனுக்கு இவ்வளவு நேரமாக தான் வெய்யிலில் அலைந்து வந்திருப்பது தெரியவந்தது. மிதமான இருளில் இருவரும் காலியாக இருந்த நாற்காலியொன்றில் தேடிப்பிடித்து அம்ர்ந்தனர்.
என்ன சார் டாஸ் மாக்லயே ஏசி பார் இருக்குமே சார் அங்கயே போயிருக்கலாம எதுக்கு சார் இவ்வளவு காஸ்ட்லியா?
ஜிராம்பிரசாத் அதைபற்றியெல்லாம் காதில் வாங்காமல் இரண்டு லார்ஜ் வோட்காவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டிருந்தார். இப்போதுதான் சந்திர குணசேகரனுக்கு அந்த அறை முழுபார்வைக்கும் புலப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அதிகாரிகளை போன்றிஎஉந்தவர்கள் மட்டும் காணப்பட்டனர் பல இருக்கைக்கள் காலியாகவே இருந்தன..ஜி. ராம் பிரசாத் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் ஆரம்பித்தார்
நீரூற்று இயந்திர பொறியாளனின் ஆசீர்வாதம் முழுமையாக எனக்கு கிடைத்துவிட்டது.புறாக்கள் என் தலைமேல் பறக்க துவங்கிவிட்டன என வோட்கா வருவதற்குமுன்பே சூழலை இரண்டொருவார்த்தையில் மாற்றினார். சந்திர குணசேகரனுக்கு இது புது அனுபவம் அவரது வழக்கமான சுபாவத்திலிருந்து நிரம்ப வெளிவந்திருப்பதை அவனால் பூரணமாக உணர முடிந்தது.
வோட்காவந்ததும் கண்ணாடி குவளையின் மீதிருந்த துண்டாக்கப்பட்ட எலுமிச்சையை எடுத்து விரல்களால் இவனுக்கும் சேர்த்து வோட்காவினுள் பிழிந்து விட்டபடி ”இப்படித்தான் நீரூற்று இயந்திர பொறியாளன் என்வாழ்க்கையின் மீதும் ஒரு எலுமிச்சையை பிழிந்து விட்டான் நான் இப்போது புனிதனாகிவிட்டேன் இரண்டுநட்களுக்குமுன் தான் நாவலின்முதல்பாகத்தை எழுத ஆரம்பித்தேன் .நீரூற்று இயந்திர பொறியாளன் என தலைப்பு போட்டு முதல்வரியை எழுதி முடிப்பதற்குமுன் என தொலைபேசி ஒலித்தது .கையில் எடுத்தேன் விகடனின் பொறுப்பாசிரியர் பேசினார்.வரப்போகும் பொங்கல் இதழிலிருந்து வாழ்க்கையின் விகசிப்புகளை, சந்தித்த அவலதுணுக்குகளை,மறக்க முடியாத முகங்களை பற்றி தொடர் ஒன்று எழுத வேண்டுமென கேட்டுக்கொண்டார். இன்னும் நாள் இருக்கிறது பொறுமையாக நான்குவாரத்துகான கட்டுரைகளை முன்பே எழுதிக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். நானும் சரி என்றேன் .இது ஒன்றும் அத்தனை முக்கியத்துவமில்லாத சம்பவமில்லாததாக உனக்கு தோன்றலாம் ஆனால் கடந்த சிலமாதங்களாக நான் அடைந்துவந்த மன உளைச்சலுக்கு இது நல்ல விடுதலையாக இருந்தது என்பதை உனக்கு நான் சொல்லதேவையில்லை.மேலும் குணசேகர, இதைவிட அதிசயம் மறுநாள் காலை நிகழ்ந்தது. இரவு முழுக்க நான் எழுதியிருந்த நீரூற்று இயந்திர பொறியாளனின் முதலாம் பகுதியை கையில் எடுத்துக்கொண்டு திருத்தி எழுதுவதற்காக வழக்கமாக செல்லும் ஓட்டலுக்கு போயிருந்தேன். அன்று அந்த விடுதிக்கு விடுமுறையாக இருந்தததால் அருகிலிருந்த காபி ஷாப்புக்கு போயிருந்தேன் . உங்களுக்கு தெரியாததல்ல இப்போதும் என் மனைவி சரளா மீது எத்தனை ப்ரியத்துடன் இருக்கிறேன் என்பதை கடந்த சந்திப்பில் அறிந்திருப்பீர்கள்.உண்மையில் அவளை கண்ணால் பார்க்கவாவது வய்ப்பு கிடைக்காதா என இரவில் ஏங்கியிருக்கிறேன். நேற்று காபி ஷாப்பில் வாசலில் அவளை பார்த்துவிட்டேன். என்னைவிட அவளுக்குதான் பதட்டம் பிறகு நாந்தான் அவ்ளை இன்னொரு காபி சாப்பிடும்படி அழைத்தேன் குழந்தை பற்றி எதுவும் கேட்கவில்லை. ஒருநண்பனை போல கவனத்துடன் பேச்சை துவக்கினேன். பிறகுதான் அவளும் சகஜமனாள் அவளுக்கு என்மேல் பெரிய கோபம் எதுவும் இல்லை என தெரியவந்தது. அதன்பிறகு அவ்ள்தான் கையில் இருந்த தாள்களை பார்த்துவிட்டு கேட்டாள். எனது புதிய நாவல் என்று சொன்னேன்.தலைப்பை கேட்டாள் சொன்னதும் அவள் விழிகள் ஆச்சர்யத்தில் மலர்ந்ததை பார்க்க வேண்டுமே அதன்பிறகு சுருக்கமாக நீங்கள் சொன அந்த உண்மை சம்பவத்தை கதையாக மாற்றி சொன்னேன். தன் எதிர்பார்தத்து இப்படி ஒருகதையைத்தான் என மகிழ்ச்சியுடன் சொன்னாள். நேற்று காலையிலேயே இருவரும் அவள் சித்தி வீட்டுகு சென்று பெட்டிபடுக்கையை வீட்டுக்கு கொண்டுவந்து விட்டோம் .குழந்தை கொஞ்சநாள் அங்கேயே இருக்கட்டும் என்றாள். நானும் எதுவும் சொல்லவில்லை. இப்போது சொல்லுங்கள் என்வாழ்வின் மாற்றங்களுக்கும் நீரூற்றுக்கும் தொடர்பிருக்கிறதா இல்லையா?.
இடையிடையே அந்த முழு லார்ஜையும் குடித்தபடி ஆவேசமாக் சொல்லி முடித்தார் ஜி.ராம்பிரசாத். கடந்த இரண்டுநாட்களாக தன்வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் மாற்றத்துக்கும் இதற்கும் ஏதெனும் தொடர்பிருக்குமோ என்றும் சந்திர குணசேகரனுக்கு எண்ண தோன்றியது.
நான் இப்போது உங்களை சந்திக்க வரச்சொன்னது முதலாவது இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள இரண்டாவது நாவலின் இதர தகவல்களை திரட்ட சம்பவம் நடந்த அந்த நகருக்கு செல்ல வேண்டும். அந்த ஊர் குறித்தும் அங்கே நான் சந்திக்க வேண்டிய நபர்களை குறித்தும் எனக்கு வேண்டிய தகவல்களை சொன்னால் இன்னும் இரண்டுநாளில் அது நிமித்தமான என் பயணத்துக்கு உபயோகமாக இருக்கும் என கேட்டார்.
சந்திரகுணசேகரன் அவருக்கு என்ன பதில் சொல்லலாம் என யோசித்தவன் நாளை சொல்லட்டுமா எனக்கு நேரமாகி விட்டது புறப்படுகிறேன் எனக்கூறியபடி எழுந்து கொண்டான். பையை தோள் வழியாக உடம்பின் குறுக்காக மாட்டிக்கொண்டான்.ஜி.ராம்பிரசாத் அவனையே பார்த்தபடி அமர்ந்து கொண்டிருந்தார். சந்திர குணசேகரன் வேகமாக அங்கிருந்து வெளியேறினான். வாசலில் இருந்த பைக்கை உதைத்து ஸ்டார் செய்தான் .இந்த நாவலை அவனிடம் சொன்னது தவறோ அவனுக்குள் முதன் முறையாக அந்த் எண்ணம் துளிர்விட்டது.
(தொடரும்...)