நாவல் : நீரூற்று இயந்திர பொறியாளன்...
பாகம் எட்டு : திருப்பங்களில் லாரியுடன் வேகமாய் வரும் விபரீதங்கள்.

அஜயன்பாலா [ஓவியம் - மருது ]

"...நெடுநாட்களாக தடைபட்டு எழுதவே முடியாமலிருந்த தனது குறை மூழ்வதுமாய் நீங்கியது"


உலகின் நியதிப்படி சில அற்புதங்கள் நிகழ்வது என்பது மனிதனை அவனது தன்னம்பிக்கைகளிலிருந்து முற்றாக குலைத்து அதிசக்திக்கு அவனை நம்புகிறவிதமாக இழுத்துசெல்லக்கூடியதாகத்தான் இருக்கிறது.இயற்கை காலம் தோறும் படைப்பு கலைஞர்களின் மூலமாக மனித பெருவிழிப்பை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மனித கூட்டங்களை காலம் தோறும் மண்ணில் புதைத்தவண்ணம் தன் வெற்றியை நிலைத்துக்கொள்கிறது. இதனால் மனிதன் அற்புதங்களாலும் அதிசக்திகளாலும் வசீகரம் கொண்டுவிடுகிறான். ஜி,ராம் பிரசாத், மட்டுமல்ல சந்திர குணசேகரனும் ஏறக்குறைய எழுத்தாளன் தான். .உலக இயக்கங்களை தன்னிலிருந்து விலகியவர்களாக நிதானித்து அவற்றின் கருணையற்ற நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்டோருக்கு பொது நியாயஸ்தர்களாக இருந்து தர்மத்தை நெறிப்படுத்த வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருப்பவர்கள்தான். . அப்படிப்பட்டவர்கள் இப்படி ஒரு நாவல் தன்னைதத்தானே எழுதிக்கொள்வதாக முழுமையாக நம்புவது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சர்யமான விஷ்யமாக இருக்க முடியும்.ஆனால் அவர்களுக்கு இல்லை. .அன்று பாரிலிருந்துவெளிப்பட்டபோது இருவருமே கிட்டதட்ட அந்த முடிவுக்குதான் வந்திருந்தனர். சந்திர குணசேகரன் தான் இதனை முதலில் சொன்னான்.

”இந்த நாவலின் கதையை அதற்கான உண்மைசம்பவத்தை நானும் உங்களுக்கு சொல்லவில்லை .நீங்களும் இதை எழுதவில்லை. இருவருமே இதனை உருவாக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டோம் .உண்மையில் நாவல் அதுதன்னைத்தானெ எழுதிக்கொண்டது குறிப்பிட்டு சொல்வதென்றால் நீரூற்று இயந்திர பொறியாளன் தன்னைத்தானே வடிவமைத்துக்கொண்டான். நாம் இருவரும் கருவிகளாக மட்டுமே செயல்பட்டிருக்கிறோம் . உண்மையில் இது வேடிக்கைதான். ”சந்திரகுணசேகரன் இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் மனதில் இன்னொருவிஷ்யமும் ஓடியது. நாவலின் கதை தன் கனவில் வந்த வெட்டுவாக்கேணி அம்மன் சொன்னது என்பதை இதுவரை எங்கேயும் ஜி,ராம்பிராசாத்திடம் உளறாமல் இருக்கிறோம் என்பதை கடும் போதையினூடே ஞாபகத்தில் உணர்ந்துகொண்டவாறு அத்னை வெளிக்காட்டாமல் சிரித்துக்கொண்டான். ஜி.ராம்பிராசாத் தீவிரமான மகிழ்ச்சியில் இருந்ததற்கான உண்மையான காரணம் நாவல் உண்டக்கிய நெகிழ்ச்சியன்றி வேறில்லை..இலாவிட்டால் பாரினுள் சற்றுமுன் இருவருக்குமிடையில் நடந்த ஒப்பந்தத்திற்கு முழுமையாக ஒத்துக்கொண்டிருக்கமாட்டான். சந்திர குணசேகரன் நாவலின் மூலக்கதையை தந்தமைக்காக பெரிதாக கோரிக்கை ஒன்றையும் முன்வைக்கவில்லை. நாவலின் இடையீடாக தான் அவ்வப்ப்போது எழுதுவதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. தான் எழுதியவரிகளும் சேர்த்து பிரசுரமாகிறபோது அது தனது மன்நோயை முழுமையாக விரட்டிவிடும் என சந்திர குணசேகரன் கூறியிருந்தான். ஒருவகையில் இது தனக்கு இழப்பு என்றாலும் ஜி.ராம்பிராசாத் அதற்கு ஒத்துக்கொண்டான்.உணமையில் அப்போது ஆசிரியர் என்ற இடத்தில் எங்கே தன் பெயரையும் சேர்த்து போடாசொல்லி விடுவானோ என்றுதான் எதிர்பார்த்தான். அப்படியே கேட்டிருந்தாலும் ஜி.ராம்பிரசாத் அதற்காக விட்டு கொடுத்திருப்பான்.அந்த அளவிற்குதான் த்யாரகவும் இருந்தான் ஆனால் சந்திரகுணசேகரனின் இந்த கோரிக்கையை கேட்டவுடன் உண்மையில் அவனது மனப்ரச்னைக்கு இதுதான் சரியான தீர்வென்றும் தோன்றியது.

இருவரும் சில நிமிடங்கள் நாவலைகுறித்து பேசிவிட்டு பிரிந்தனர். இன்னும் பத்துநாட்களில் தான் சேர்க்கவேண்டியதையும் சேர்த்து மொத்தமாக புதியதாக டி,டி,பி செய்து தந்துவிடுகிறேன் என சந்திர குணசேகரன் வாக்களித்தான்.கிளம்ப எத்தனித்த ஜி.ராம்பிரசத் சட்டென சந்திரகுணசேகரனிடம் திரும்பி இன்னும் நீங்கள் எனக்கு அந்த உண்மை சம்பவம் நிகழ்ந்த இடத்தை சொல்லவில்லை. நான் வரும் ஞாயிறன்று அங்கு சென்று குறைந்தபட்சம் அனைவரையும் விசாரித்தால் நாவலில் சில பகுதிகளை சேர்க்க ஏதுவாக இருக்கும் என கேட்டான் .இப்படி ஒரு இக்கட்டான கேள்வி தன்னை நோக்கி வரும் என்பதை முன் கூட்டி அறிந்த சந்திரகுணசேகரன் ஊரின் பெயரை கையால் எழுதி காண்பித்தான்..

இது நடந்து இரண்டுமாதங்களாகிவிட்டது. இதனிடையே ஒருநாள் ஜி.ராம்பிரசாத் சந்திரகுணசேகரனுக்கு போன் பண்ணியிருந்தான். குறிப்பிட்டிருந்த ஊருக்கு சென்று தெருதெருவாக சுற்றி அலைந்ததாகவும் நீரூற்று இயந்திர பொறியாளன் குறித்து இதுவரை யாரையும் கேட்கவில்லை என்றும் தொலைபேசியில் சந்திர குணசேகரனிடம் கூறினான்..அதன் பிறகு மற்ரொருநாள் போன்செய்து அன்றுகாலை அந்நகரத்தை சுற்றி திரிந்ததையே ஒரு பகுதியாக எழுதியிருப்பதாகவும் நாவலின் முதல்பகுதியில் சேர்க்கவேண்டும் என்றும் உடனடியாக அவனது பகுதிகளை எழுதி முடித்து கொடுக்கும் படியும் போன் செய்திருந்தான்.

ஒருவழியாக சந்திரகுணசேகரன் இவனது பகுதிகளை முழுவதுமாய் எழுதி முடித்தான்.இவனுக்கு இரண்டு ஆச்சர்யம். ஒன்று நெடுநாட்களாக தடைபட்டு எழுதவே முடியாமலிருந்த தனது குறை மூழ்வதுமாய் நீங்கியது . இரண்டாவது நாவலில் தான் எழுதிய பகுதிகள் அனைத்தும் சிறப்பாக வந்திருப்பது. இன்னொன்றாக இரண்டுபேர் சேர்ந்து எழுதிய நாவல் இது என்பதை எந்த கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு நாவல்கட்டமைக்கப்படிருப்பதுவும் இவனுக்கான கூடுதல் ஆச்சர்யம் சந்திரகுணசேகரன் .டி.டி.பி வேலைகள் முழுவதுமாய் முடிந்து ஜி.ராம்பிராசாத்துக்கு போன் செய்யும் போது மனதில் லேசாக ஒரு உறுத்தல் தோன்றியது.இந்த நாவலில் தான் எழுதியிருப்பது எந்த அளவிற்கு சரியாக வந்திருக்கிறது.யாரிடமாவது கொடுத்து அவர்கள் மூலமாக சரிபார்த்துவிட்டு பிறகு ஜி.ரம்பிராத்திடம் தருவது சரியாக இருக்குமோ என யோசித்தான்.காரணம் தான் எழுதியிருப்பது மூலத்தை தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும் என்பதுதான் அவனது எண்ணம்.

யாரிடம் சரிபார்க்க கொடுக்கலாம் என யோசிததபோதுதான் எழுத்தாளர் கோணங்கி சந்திரகுணசேகரனுக்கு ஞாபகம் வந்தார்.ஒருவேளை அவர் இங்கே சென்னையில் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது .கணமும் தாமதியாமல் அவரது எண்ணை தட்டினான்.கோணங்கி கோவில்பட்டியில் இருப்பதாககூறினார்.தனது தம்பியின் நாடக ஒத்திகை நிமித்தமாக நாளைமுதல் வெளியூர் புறப்படுவதகவும் தன்னால் இப்போது வாசிக்க நேரமில்லை என்றும் கூறினார்.உடன் ... நீ அஜயன்பாலாவை பாருடா அவன்கிட்ட கொடு அவன் படிச்சுட்டு எதுனா சொல்வான் என்றார்.

சந்திரகுணசேகரனுக்கு கோணங்கியின் ஆலோசனை ஏற்புடையதாக இருந்தாலும் அதில் ஒரு சிக்கலும் இருந்தது. அஜயன்பாலாவுக்கும்ம் ஜி.ராம்பிராசாத்துக்கும் பெரிய பகை எதுவும் இல்லாவிட்டாலும் இருவரும் ஒத்த நிலையில் மதிப்பிடக்கூடியவர்கள்.ஜி.ராம்பிராசாத்துக்கு இது தெரியவந்தால் ஒருவேளை அது அவருக்கு பிடிக்காமல் போகலாம்.

தான் இப்படி யோசிப்பதே தேவையற்றது நேரடியாக ஜி,ராம்பிராசாத்திடமே கொடுத்துவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்த போதுதான் சரி இதற்காக இல்லாவிட்டாலும் வெறுமனே பேசுவோமே என அஜயன் பாலாவின் எண்ணை தட்டினான்.

இப்படியாகத்தான் அன்று சந்திர குணசேகரன் கையில் கேரிபேக்குடன் என் வீட்டிற்கு வந்தான்.அவன் வாய்வழியாக பிற்பாடு சொன்ன தகவல்களை ஓரளவுக்கு ஆங்காங்கு சில கற்பனைகளுடன் உங்கள் முன் விவரித்துவந்திருக்கிறேன் .நீரூற்று இயந்திர பொறியாளன் எனும் இந்த நாவல் உருவாக்கத்துக்கு பின்பு இப்படி ஒரு கதை இருக்கும் என்பதையும் அதுவே ஒருநாவலுக்கு ஈடான சுவாரசியமான சந்தர்ப்பங்களை கொண்டிருப்பதுவும் ஆச்சர்யமான ஒன்றுதான். இந்த நாவல் என்பெயரில் எப்படி வரலாம் என பலர் யோசிக்கலாம் அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது,என்னை சந்திக்கவந்த சந்திரகுணசேகரன் முதலில் இந்த நாவலை படித்து அபிப்ராயம் கூறுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டான். எனக்கோ அப்போதிருந்த தொடர் வேலைகள் காரணமாக என்னால் படிக்க முடியவில்லை. பிறகு ஒரு சனிக்கிழமை மாலை வீட்டிற்கு தேடி வந்தவன் விலாவாரியாக மேற்சொன்ன சம்பவங்களை விவரித்து கூறினான். அதன் பிறகுதான் நான் இந்த நாவலை முழுவதுமாக படிக்கதுவங்கினேன் ஆச்சர்யம் ஜி.ராம்பிராசாத் எழுதின பகுதிகளைக்காட்டிலும் சந்திரகுணசேகரன் எழுதிய பகுதிகளில் அதீதத்தன்மை சிறப்பாக வடிவம் கொண்டிருந்தது.கற்பனையாக சிலகிளைக்கதைகளை மைய கதைக்கு சேதாரம் கொடுக்காமல் சேர்த்திருந்தவிதம் பாராட்டும் படியாகத்தான் இருந்தது. ஜி.ராம் பிரசாத் வசம் மீண்டும் நாவல் கை வசம் சென்றிருக்கிறது .ஜி,ராம்பிராசாத் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான். இதனை அவன் எதிர்பார்க்கவில்லை போல.என்ன அங்கங்கே ஏதாவது இரண்டொரு வரிகள் கிறுக்கியிருப்பான் என நினைத்தவருக்கு சந்திரகுணசேகரன் இவ்வளவு கச்சிதமான கவித்துவமான் மொழிநடையுடன் பத்தி பத்தியாக எழுதியிருந்தது அதிர்ச்சியை தந்திருந்தது. சில பகுதிகளில் கவித்துவம் கூடிவந்திருப்பதை கண்டு ஜி.ராம்பிரசாத் தாழ்வுமனப்பான்மை கொண்டிருப்பான் போல . அவனே சந்திர குணசேகரனிடம் அவனது பேரையும சேர்த்து இருவர் எழுதியதாகவே வெளியிடலாம் என கூறியிருக்கிறான்.

அப்போதுதான் சந்திரகுணசேகரனுக்கு தன் தவறு செய்துவிட்டோமோ என உறைத்திருக்கிறது. போனில் என்னை அழைத்து என்ன செய்யலாம் என கேட்டபோது இருவரது பெயரும் வேண்டாம் ஆசிரியர் பெயரே இல்லாமல் வெறுமனே பதிப்பகத்தின் பெயரை மட்டும் போட்டு பொதுவாக வெளியிடுவோம் என்றேன்.நான் சொன்னதை அப்படியே சந்திரகுணசேகரன் ஜி.ராம் பிரசாத்திடம் கூறியிருப்பான் போல அப்போதுதான் என்னிடம் நாவல்வந்த கதை தெரியவந்து ஜி.ராம்பிராசாத் சந்திரகுணசேகரனிடம் கடிந்திருக்கிறான். அந்த மன உளைச்சலில் வேகமாக பைக்கில் மைலாப்பூர் முண்டக்கண்னியம்மன் கோவில் வழியாக வ்ழக்காமாக் தன் காதலியின் வீடுவழியாக வந்துகொண்டிருந்த போதுதான் அந்த விபத்து நடந்தது. தெருவின் திருப்பத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக வந்த தண்ணி லாரி மோதி சந்திரகுணசேகரன் எனும் அந்த இளைஞன் அநியாயமாக இறந்து போனான்..

இது நடந்து சிலநாட்கள் கழித்து ஜி.ராம்பிரசாத் சந்திரகுணசேகரனுக்காக ஏற்பாடு செய்திருந்த சிறு அஞ்சலி கூட்டத்திற்கு நான் அழைக்கப்படிருந்தேன் .கூட்டம் முடிந்து வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது ஜி.ராம்பிரசாத் என்னருகே வந்தார்.அன்று இரவு நானும் அவரும் அவரது வீட்டில் நெடுநேரம் உரையாடினோம்.சரளா திரகுணசேகரனை நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள் .எனக்கு காபி கொண்டுவந்து கொடுத்தாள் .புறப்படுவதற்குமுன் ஜி.ராம்பிரசாத் இந்த நாவலின் கடைசி பிரதியை என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார்.

இனி இந்த நாவலை நான் கொண்டுவருவதில் அர்த்தமில்லை.நான் எனது அடுத்த நாவலை எழுத துவங்கிவிட்டேன் .அதனால் நீங்கள் சொன்னது போல யார் பெயரும் இல்லாமல் இப்போது இந்த நாவல் வெளியாவது முழுமையாக இருக்கும் எனக்கூற, நானும் அத்ற்கு ஒத்துக்கொண்டேன்.

ஆகவே நண்பர்களே அடுத்த பகுதியிலிருந்து துவங்க இருக்கும் நீரூற்று இயந்திர பொறியாளன் எனும் நாவலின் படைப்பு மூல ரகசியம் இதுதான்.நான் இத்னை வெளியிட காலச்சுவடு பதிப்பகத்தை அணுகிய போது அவர்கள் இது முறையாக இருக்காது என மறுத்துவிட்டனர்.பிற்பாடு சில நண்பர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில் நடந்த சம்பவங்களை கற்பனையாக கலந்து நாவலின் முதல் பகுதியாக சேர்த்து எழுதியுள்ளேன். இதில் பல இடங்களில் உண்மையை காட்டிலும் என் கற்பனை தூக்கலாகிவிட்டது..அது என்ன என்ன என்பதை வாசகர்கள் அலசி பார்த்து அறிந்து கொள்ளட்டும் ,குறிப்பாக வேண்டுமானால் ஒன்றே ஒன்றைமட்டும் சொல்கிறேன் சந்திரகுணசேகரனுக்கு அம்மா இல்லை.

இனி நான் விடைபெற்ரும் நேரம் வந்து விட்டது. நீரூற்ரு இயந்திர பொறியாளன் நாவலை வாசிக்கும் உங்களுக்கு வாழ்வில் பல நல்ல விஷ்யங்கள் நடைபெற வாய்ப்பிருக்கிறது. புரியவில்லை என்பதாலோ சுவாரசியக்குறைவு என்பதாலோ பாதியில் நிறுத்திவிடவேண்டாம். கவனமாக படிக்கவும். தொடர்ந்து முடியாவிட்டால் வாராவாராம் ஒருபகுதியாவது படிக்கவும்.குறிப்பாக திருமண்ம் ஆகாதவர்கள் படிப்பது சாலச்சிறந்தது. இந்த முன்னுரையை நான் எழுத துவங்கியபின்தான் நெடுநாட்களாய் நான் தேடிவந்த என் கனவு காதலி நிஜத்தில் கிடைத்தாள் .அதுவும் அவளாக வந்தாள். அற்புதம் இதையெல்லாம் என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இனி நீங்களே படித்து அறிந்து கொள்ளுங்கள் .

-------முதல் பாகம் முற்றுபெற்றது ------------------

அடுத்த வாரம்....... நீரூற்று இயந்திர பொறியாளன் .....நாவல் இரண்டாம் பாகம்

அஜயன்பாலா - எழுத்தாளர்.
தற்போது நடிகராகவும் இயக்குனராகவும் பரிணமித்துவரும் அஜயன்பாலா அடிப்படையில் ஒரு சிறுகதை எழுத்தாளர். 2002ல் தி வீக் வார இதழ் இவரை அந்த் ஆண்டின் சிறந்த வளரும் எழுத்தாளராக தேர்ந்தெடுத்து கவுரவித்த்து.

"நீரூற்று இயந்திர பொறியாளன்" இவரது முதல் நாவல்.




இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5