காலையில் இத்தனை தாமதாமாகும் என்பதை ஏகாம்பரம் எதிர்பார்க்கவில்லை ..அவசர அவசரமாக எழுந்துகொண்டான். எழுந்த வேகத்திலேயே அருகில் ஆடைவிலகி படுத்துக்கிடந்த தன் மனைவி ரஞ்சிதத்தை காலால் ஒரு எத்து எத்தினான். பின்னால் தோட்டத்துபக்கமிருந்த சிமண்ட் தொட்டியில் பித்தளை சொம்பு மூலம் தண்ணீரை முகர்ந்து முகத்தை அவசரமாக கழுவினான். நேரமாகிவிட்டது, .இந்நேரம் முனுசாமி அவன் ஆட்களுடன் வந்து காத்திருப்பான் - வழக்கமான நாளாக இருந்தால் பரவாயில்லை. கொஞ்சம் முன் பின் போனால் கூட பரவாயில்லை .நேற்றே நகராட்சிமன்ற தலைவர் வீட்டுக்கு போகும் போது இவனை அருகில் கூப்பிட்டு விவரம் சொல்லியிருந்தார்.
அதுவரை தேய்த்த வேப்பங்குச்சியை சொம்பிலிருந்த நீரை ஊற்றி கழுவி பின் வாயையும் நன்றாக விரல்விட்டு கொப்பளித்தான் .கொடியில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டான் . இதற்குள் ரஞ்சிதமும் கொண்டையை முடிந்துகொண்டு எழுந்துவந்தாள். அவளும் தொட்டியிலிருந்துப் தண்னீரை எடுத்து முகத்தை கழுவிக்கொண்டு ..என்னா.. இம்மாம் அவசரமாங் காட்டியும் ,தொ இரு டீ தண்னி வங்கினு வந்துட்றேன் ..... அதனை சட்டை செய்யாதவனாக ஏகாம்பரம் அவசரமாக உள்ளே ஓடினான். தன் யூனிபார்மான காக்கி சட்டையை மாட்டிக்கொண்டான். கைக்கண்ணாடியுடன் வெளியே வந்தவன் சீப்பால் ரெண்டு முறை அப்படியும் இப்படியுமாக இழுத்துக்கொண்டான் .அதற்குள் கையில் சிவப்பு துண்டை சுருட்டியபடி ரஞ்சிதமும் கணவனின் அருகில் வந்து நின்றாள்.ரஞ்சிதம் கணவனின் அழகை பார்த்தாள்.நாப்பததஞ்சு வயசு ஆள்மாதிரியா ஆட்டம் போடுது .....மனசுக்குள் நேற்று இரவை நினைத்துக்கொண்டாள்.
ஏகாம்பரத்துக்கும் ரஞ்சிதத்துக்கும் இருபத்து இரண்டு வயசு வித்தியாசம், முதல் மனைவி இறந்து இவன் வாயிலும் வயிற்றிலுமாக அடித்துக்கொண்டு அழுத போது. பாவம் இனி ஏகாம்பரம் என்ன பண்ணுவானோ என அங்கலாய்த்தார்கள். அவன் அன்று அழுத அழுகைக்கு எங்கே அவனும் சேர்ந்து நெருப்பில் பாய்ந்துவிடுவானோ என்றுகூட பயந்தார்கள்.ஆனால் ரெண்டே வாரத்தில் வீட்டுமுன்வந்துநின்ற மாட்டுவண்டியிலிருந்து செப்புசிலைபோல ஒரு இருபத்திரண்டு வயது பெண்ணை மணகோலத்தில் இவன் கையைபிடித்து இறக்கியபோது ஊரே வேடிக்கை பார்த்தது.ஏகாம்பரத்தின் புதுபொண்டாட்டியை பார்ப்பதற்காகவே அடுத்ததெரு பெண்கள் இந்ததெரு வழியாக வந்து சென்றனர்.அக்கம் பக்கத்து பெண்கள் அவளோடு பேசுவதை பெருமையான காரியமாக நினைத்தனர். ஊரில் முதல் முறையாக நைட்டி போட்டவளும் அவள் தான்.அவள் எந்த ஊர், ஏகாம்பரம் எப்படி அவள் தாய்தகப்பனை ஏமாத்தினான் என்றெல்லாம் தகவல் தெரிந்துகொள்ள ஊர் அனளாய் பறந்தது. படப்பை என ஊர்பேரைமட்டும் சொன்னாளே தவிர என்ன ஏது என யார்மேலே கேட்டாலும் இரண்டுபேருமே மழுப்பினார்கள்.
ஏகாம்பரத்தின் இறந்துபோன முதல்தாரத்துக்கு ஒருபையன் இருந்தான்.அவன் ஒருதடவை எட்டாவது படிக்கும் போது பரீட்சைக்கு முந்தின நாள் செகண்ட் ஷோ சிவாஜி நடித்த ராஜா படத்துக்கு பக்கத்து வீட்டு டெய்லருடன் போய்வந்தான் என்பதற்காக தெருவில் பொட்டு ஏகாம்பரம் மிதிமிதி யென மிதிக்க ஊரே வேடிக்கை பார்த்தது.ஒருகட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பையன் அப்பாவை தடுக்கும் விதமாக முதுகுபக்கமாக பிடிக்கபோக ஏகாம்பரம் வேட்டி அவிழ்ந்து அம்பலவாணனாக காட்சியளித்தான் . மயிரடர்ந்து சுருங்கிபோய் தொங்கிக்கிடந்த ஏகாம்பரத்தின் ஆண்குறியை ஊரே பார்த்து அதிர்ந்தது. தெருவழியே சென்ற பெண்கள் பதட்டத்துடன் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டனர்.விளையாட்டை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் சத்தம் போட்டு சிரித்தனர்.ஆனால் அப்படியும் மகன் விடவில்லை.விட்டால் எங்கே தன்னை மீண்டும் அடித்துவிடுவாரோ என்ற பயம்.அதற்குள் இரண்டொருவர் ஓடிவந்து மகனை பிரித்து கீழே கிடந்த வேட்டியை எடுத்து ஏகாம்பரத்தின் இடுப்பில் சுற்றிவிட்டனர். அன்று ஓடிப்போனவந்தான். அதன் பிறகு என்ன ஆனானோ இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.
இச்சம்பவத்துக்கு பிறகு தெருபெண்கள் ஐந்தாறுபேர் கூடும்போது நிச்சயம் யாராவது ஒருவள் ஏகாம்பரத்தின் தொங்கிப்போன ஆண்குறியை பற்றி பேச அனைவரும் வயிறுகுலுங்க சிரிக்கதுவங்குவர்.ஜானகி வீட்டில்தான் சபைபெரும்பாலும் கூடும் .ஜானகிக்கு இதுபோன்ற கதைகள் என்றால் மிகுந்த ரசம்.கிட்டதட்ட ரெண்டுமாதம் பையன் காணாமல் போன கவலையே ஏகாம்பரத்தின் மனைவியை வாட்டிவதைத்தது.பிறகு அதுவே நோயாகவும் மாறி இறுதியில் உயிருக்கும் முடிவுரை எழுதியது.கர்பத்தில் இருந்த கட்டிதான் அவளது உயிருக்கு காரணமாக இருந்தாலும் மன அழுத்தம் அவளை சிக்கிரமாக கொண்டுபோனது.
அதன்பிறகு புதுமனைவி வந்தபோது ஜானகிவீட்டில் நடக்கும் சந்திப்புகளில் ஏகாம்பரத்தின் இல்லறவாழ்க்கை தீவிரமாக அலசப்பட்டது.ஜானகி வீட்டில்தான் மாதாமாதாம் அமாவாசை சீட்டு ஏலம் நடக்கும்.அதனால் தெருபெண்கள் அங்கே வாரத்தில் இரண்டுநாளாவது ,மதியநேரங்களில் கூடிவம்பளப்பது தவிர்க்க முடியாதது. மற்றவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கைதான் இதுபோன்ற சந்திப்பில் பிராதான விஷயமாக இருக்கும் ஜானகி ஒருவகையில் இதனை தன் வியாபாரதந்திரமாகவும் பயன்படுத்திவந்தாள்.புதுமனைவிக்கும் ஏகாம்பரத்துக்கும் நடந்த முதலிரவுகாட்சி எப்படி இருந்திருக்கும் என கற்பனையில் ஜானகி ஓரங்கநாடமாகவே நடத்தி காண்பித்து அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்கவைத்தாள்.அந்த நாடகத்தில் ஜானகி ஏகாம்பரமாக மாறி தோளை குறுக்கி பலவீனமாக நடுங்கிக்கொண்டே பாக்கியத்தின் தாடையை பிடித்து கொஞ்சபோன காட்சி பலமுறை பலரது விருப்பத்துக்காக அரங்கேற்றப்பட்டது. நாடகத்தின் உச்சகட்டமாக பாக்கியம் ஜானகியின் தோளை தொட ஜானகி அப்படியே மூர்ச்சையாகி புஸ் புஸ் என மூச்சுவாங்கிக்கொண்டே தரையில்விழுவதுபோல பாவனை செய்தபோது தெருவே அவர்களது சிரிப்பலையால் அதிரும் .
ஏகாம்பரம் அவசர அவசரமாக மாநகராட்சி கட்டிடத்தை நெருங்கிக்கொண்டிருந்தான் வாசலில் ஏற்கனவே முனுசாமியின் ஆட்கள் கையில் துடப்பம் ,வாளி குப்பை கூடைசகிதம் நீல உடைகளில் காத்திருந்தனர்.அவசரமாக சாவியால் இரும்புகேட்டின் பூட்டை திறந்த முனுசாமி இரண்டுகதவையும் கைகளால் பிளக்கும் விதமாக உள்ளே தள்ளினான்.
அங்கிருந்த பூவாத்தாவிடம் ..."முனுசாமி எங்க வர்ல ? "
"வந்துங்கிறான்ப்பா, குயந்தைக்கு டீதன்ணி வங்கிக்கொடுத்துகுனுக்கிறாப்பல .."
பூவாத்தா கண்னில் பொரைவிழுந்து கவர்மண்ட் ஆஸ்பத்திரியில் இலவச ஆபரேஷன் செய்துகொண்டவள் .அதன் காரணமாக அவள் போட்டிருந்த கூலிங்கிளாஸ் அவளது பொக்கைவாய்க்கும் நீல யூனிபார்முக்கும் நரைத்த கலைந்துகிடந்த தலைக்கும் அபரிதமான கவர்ச்சியை கூட்டியிருந்தது.
தோபார் மொத்தம் எத்தனை பேர் ...?
மொத்தம் ஏயு பேர்
இதுயாரு புதுசா இருக்கான்... சின்ன பையனாட்டம் இருக்கான்
நம்ம ராசு பையன்.அவன் மேலுக்கு சரியில்ல அவனுக்கு, அதனாலதான் பையனை அனுப்பிச்சிருக்கான். இன்ஸ்பெக்டர் அய்யா கிட்ட நேத்தே சொல்லிட்டாபடி ...
ஒரு மணிநேரத்தில் அந்த இடமே அல்லோல்களப்பட்டது. வருடத்தில் சுதந்திரதினம் வருஷ பிறப்பு ஆயுத பூஜை தினங்களில்தான் நகராட்சி அலுவலகத்துக்கு இப்படியெல்லாம் யோகமடிக்கும் ஆனால் இந்த விசேஷம் எதுவும் இல்லாத இந்த தினத்தில் எதற்கு சேர்மன் ஐயா இப்படி சுத்தம் செய்ய உத்தரவிட்டிருப்பார் . இந்த கேள்வி நேற்றிலிருந்தே மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தாலும் யாரிடமும் கேட்கவில்லை. கட்டிடத்தின் பின்புறம் மண்டிக்கிடந்த புதர்கள் அனைத்தையும் முதலில் சீராக்கும்படி ஏகாம்பரம் உத்தரவிட்டான். பின் வேகமாக சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் வாசலருகே சென்றான். ஒவ்வொரு ஜன்னலையும் ஒவ்வொரு கதவையும் அவன் திறக்கும் போது உண்டாகும் சத்தம் அந்தபழைய கட்டிடத்தின் சுவர்களெங்கும் எதிரொலித்தன. இருண்டுகிடக்கும் அறைகள் முழுக்க வெளிச்சம் வரத்துவங்கின. அந்த வெளிச்சம் முன்னெப்போதையும் விட இன்று துலக்கமாகவும் உற்சாகத்தோடும் குளிர்ச்சியாகவும் இருப்பதை உணர்ந்தான் .மனது காரணமில்லாமல் ம்கிழ்ச்சியானதை உணர்ந்தான். ஜன்னல்களின் சத்தம் கெட்டு அருகிலிருந்த மரங்களின் உச்சியிலிருந்து பறவைகள் கிறீச்சிட்டபடியே பறக்க துவங்கின. அவற்றுள் சில கட்டிடத்துள்ளும் வந்து அங்குமிங்குமாக ஒலியெழுப்பியபடி பறந்து கொண்டிருந்தன. ஏகாம்பரத்துக்கு தான் செய்யும் வேலையில் மிகவும் பிடித்த காரியமே இந்த காலைநேர கதவு திறப்புதான். இன்று அந்த மகிழ்ச்சியின் அளவு கூடுதலாக இருந்தது. யாரோ கூப்பிடுவது போல தெரிய திரும்பிப்பார்த்தான் ஜன்னலின் வெளிப்பக்கமாக முனுசாமியின் மனைவி புகையிலை மென்ற வாயுடன் அனைவரும் டீ கேட்பதாக சைகை செய்தாள் ...
தே..கடையே இன்னும் தெறக்கல...எல்லாம் இன்ஸ்பெக்டரு அய்யா வந்தாதான் ....இல்லாட்டியும் எங்கிட்ட ஏதுகாசு?
இப்படி அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஆள்நடமாட்டம் காரணமாக புதரிலிருந்து வெளிப்பட்ட நீளமான ராஜநாகம் ஒன்று திறந்துகிடந்த கழிவறை ஜன்னல் வழியாக கட்டிடத்தினுள் புகுந்தது. பின்கழிவறை மரக்கதவின் ஓட்டை வழியாக கமிஷனரின்அலுவலகத்தினுள் நுழைந்து அங்கிருந்த மரபீரோவினுள் பதுங்கிக்கொண்டது. இது தெரியாதவனாக ஏகாம்பரம் கமிஷ்னர் அறைக்குள் நுழைந்தான் . அங்கிருந்த இதர கதவுகளை திறந்தவன் . பீரோவின் அருகே வந்து அருகிலிருந்த ஜன்னலின் கதவை திறக்க முயன்றான் .துருப்பிடித்த கொக்கி சட்டென மசியவில்லை.அவனது பாதத்துக்கும் ,பீரோவின் அடியிலிருந்த பாம்பின் வாலுக்கும் மயிரளவு இடைவெளியே இருந்தது...
தொடரும் ...