Back Cover
Look Inside

சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

எல்லாப் பறவைகளுமே அழகானவை. மனிதகுலத்திற்குப் பலவிதங்களில் நன்மை செளிணிபவை. சிட்டுக்குருவியும் அதில் அடக்கம். எனினும் நமக்குச் சிட்டுக்குருவிகள் ஏனைய பறவைகளைவிட கொஞ்சம் உசத்திதான். சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவை சிட்டுக்குருவிகள். அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும், இரண்டு குருவிகள் சண்டையிடும்போது தங்கள் கால்களைப் பிணைத்துக்கொண்டு படபடவெனச் சிறகடித்துக் கீழே விழுவதையும் கண்டிருப்போம்.

நமது வீட்டில் கூடு கட்டி இருந்தால் குஞ்சுகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு காலையில் நாம் கண் விழித்திருப்போம். இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த

சிட்டுக்குருவி சில பகுதிகளில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில், இருந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து, பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியமாக நகரங்களின்

சில பகுதிகளில். இவை ஏன் குறைந்து போயின என்பதைக் கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். ஓர் உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும்? பல காலமாக, அறிவியல்பூர்வமாகக் கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் எத்தனை இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கையில் குறைந்துபோளிணிவிட்டது என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி தென்படவில்லையெனில், அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது.  நாமாக ஒரு காரணத்தை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது.

 

உலக சிட்டுக்குருவிகள் நாள் கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது. தகவல் சுனாமி வீசும் இந்தக் காலத்தில், சிட்டுக்குருவிகளும் ஓரமாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று சிட்டுக்குருவிகளைக் காப்பாற்றும் விழிப்புணர்வுச் செய்திகளை எல்லோருக்கும் பரப்பிவிட்டுத் திருப்தியடைந்துவிடுகிறோம். ஆனால், சிட்டுக்குருவிகள் நாள் உருவான பூர்வாசிரமக் கதை ரொம்பவே சிக்கலாக இருக்கிறது. அது முன்வைக்கும் கோரிக்கையும் அறிவியலுக்கு எதிரானதாக இருக்கிறது. எப்போதுமே கவனம் பெற வேண்டிய முக்கியமான விஷயங்கள், தேவையற்ற விஷயங்களால் கவனச்சிதறலுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்ற வாதம், சிட்டுக்குருவிகள் நாள் கொண்டாட்டத்தில் உண்மையாகியுள்ளது.

எது அழிவின் விளிம்பில்?

சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வலியுறுத்தும் ‘உலகச் சிட்டுக்குருவிகள் நாள்’ 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டுவருகிறது. உண்மையில் சிட்டுக்குருவிகள் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டனவா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. ஆனால், வேங்கைப் புலிகள் 2,300, யானைகள் 30,000, சிறுத்தைகள் 7,700 உள்ளன. ஆனால், லட்சத்துக்குக் குறையாத சிட்டுக்குருவிகள் இந்தியாவில் இருக்கும் நிலையில்தான் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற குரல் ஆர்ப்பாட்டமாக ஒலிக்கிறது.

அறிவியல்பூர்வமாக எந்த ஓர் உயிரினமும் அழிவின் விளிம்புக்குத் (Endangered) தள்ளப்பட்டுள்ளது என்ற வரையறைக்கும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. நெருக்கடிகள் மிகுந்த சென்னை நகருக்குள் இன்னும் பல இடங்களில் சிட்டுக்குருவிகள் உயிர் பிழைத்திருப்பதே, அவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படவில்லை என்பதற்கு அத்தாட்சி.

திசைதிருப்பல்

சிட்டுக்குருவிகள் மீதான அக்கறை பெருகுவதால் என்ன பிரச்சினை? சுற்றுச்சூழல் கரிசனம் பரவலாவது நல்லதுதானே என்று கேட்கலாம். அங்கேதான் பிரச்சினையே. நாட்டில் இதுவரை கணக்கிடப்படாலும், ஆராயப்படாமலும் கணக்கற்ற உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அவற்றின் மீது மக்கள் அக்கறையும் பெரிதாகத் திரும்பவில்லை. காட்டுயிர்கள், காடுகள் பாதுகாப்பு, ஆராய்ச்சிக்கு அரசும் உரிய நிதியை ஒதுக்குவதில்லை.

இந்தப் பின்னணியில் சிட்டுக்குருவிகள் மீதான அக்கறையை என்பது மேம்போக்கான சுற்றுச்சூழல் கரிசனத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது. நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை. மனிதர்களே நூற்றுக்கணக்கான நோய்கள், நெருக்கடிகளுடன் நகரங்களில் வாழும்போது, சிறு பறவையான சிட்டுக்குருவி மட்டும் எப்படி உயிர்த்திருக்க முடியும்? ஆனால், இயற்கை சீர்குலைக்கப்படாத பகுதிகளில், இயற்கை கொஞ்சமாவது ஒட்டியிருக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இன்னமும் வாழவே செய்கின்றன.

எப்படி வந்தது?

சிட்டுக்குருவிகள் நாளோடு சேர்ந்து, தவறாகப் பிரசாரம் செய்யப்பட்ட இன்னொரு விஷயம்: செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்ற கருத்து. இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் இந்தக் காரணத்தை நிரூபிக்கவில்லை. இந்தக் காரணத்தை பிரபலப்படுத்தியவர் முகமது திலாவர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த இவர், ஒரு பறவை ஆர்வலர். 2010-ம் ஆண்டில் தனது பிறந்தநாளை ‘உலகச் சிட்டுக்குருவிகள் நாள்’ என்ற பெயரில் இவரே பிரபலப்படுத்த ஆரம்பித்தார். அதுதான் இன்றைக்கு நாடெங்கும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

எங்கே வந்து சேர்ந்திருக்கிறோம்?

அழிவின் விளிம்புக்கு உண்மையிலேயே தள்ளப்படாத ஒரு நகர்ப்புறப் பறவையான சிட்டுக்குருவி வேறிடத்துக்கு நகர்ந்தது தொடர்பாக மக்கள், அரசின் கவனம் வலிந்து திருப்பப்படுவதால், மற்ற உயிரினங்கள்-பறவைகள் மீதான கவனம் திசைதிருப்பப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. இதே காரணத்தைச் சொல்லி வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பொருளாதார நிதியுதவிகளும்கூட திசைதிருப்பப்படலாம். இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டியிருக்கிறது.

இந்தியப் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வது, பாதுகாப்பது, பிரபலப்படுத்துவதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த இந்தியாவின் ‘பறவை மனிதர்’ சாலிம் அலியின் பிறந்த நாளை, எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி ஆண்டுதோறும் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், யாரோ ஒரு ஆர்வலரின் பிறந்தநாள், இல்லாத ஒரு காரணத்துக்காக பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. இதுதான் நாம் வந்தடைந்துவிட்ட மோசமான புள்ளி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்”

Editorial Review

https://uyiri.wordpress.com/2012/12/30/forward-for-house-sparrow-book/

மேலைநாடுகளில் ஏற்பட்ட சிட்டுக்குருவியின் வீழ்ச்சியால் இங்கு இந்தியாவில் நாம் பெற்ற படிப்பினை என்ன? நம் நாட்டில் சுமார் 1300 பறவையினங்கள் உள்ளன. அவற்றினைப் பற்றிய நீண்டகால ஆராய்ச்சி, கணக்கெடுப்புப் பணி முதலிய அறிவியல் பூர்வமாக தகவல் சேகரிக்கும் திட்டங்களை வெகுவளவில் ஊக்குவிக்க வேண்டும். அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும். கானமயில் (Great Indian Bustard) என்ற ஒரு பறவையினம் ஒரு காலத்தில் தமிழகத்தில் வெட்டவெளிகளிலும், பரந்த புல்வெளிகளிலும் திரிந்து கொண்டிருந்தன. ஆனால் வேட்டையாடப்பட்டதாலும், மக்கள் தொகை பெருக்கத்தால் அவற்றின் வாழிடம் இல்லாமல் போனதாலும், இன்று அப்படி ஒரு பறவை இங்கு இருந்தது என்பதே பலருக்கு தெரியாமல் போய்விட்டது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த பிணந்திண்ணிக்கழுகுகள் (Vultures) இன்று ஓரிரண்டாகக் குறைந்து, காண்பதற்கு அரிதான ஒன்றாகிவிட்டன. இன்று நம் கண்களுக்கெதிரே சில இடங்களிலிருந்து காணாமல் போன சிட்டுக்குருவியை முன்னுதாரனமாகக் காட்டி, பல இடங்களில் அற்றுப்போய்க்கொண்டிருக்கிற பல அரிய பறவையினங்களை காப்பாற்றும் எண்ணத்தை பொதுமக்களுக்கு ஊட்டவேண்டும்.

புறவுலகின் பால் நாட்டம் ஏற்பட, மனிதனையல்லாத உயிரினங்களின் மேலும், அவை வாழுமிடங்களின் மீதும் கரிசனம் ஏற்பட, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்க, வித்தாக அமைவது பறவைகளைப் பார்ப்பது (Birdwatching) போன்ற செயல்கள். அதுவும் சிறு வயது முதலே இவ்வகையான இயற்கையை ரசித்துப் போற்றும் செயல்களில் ஈடுபடுவது புறவுலககினை மதிக்கும் தலைமுறையினை உருவாக்கும். புறவுலகின் பால் நமக்கு உள்ள ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள சிட்டுக்குருவி போன்ற மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சுற்றித்திரியும் பறவைகளைப் பார்ப்பதிலிருந்து தொடங்கலாம். அவற்றின் எண்ணிக்கை குறையாமலிருக்க செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபடலாம். அதற்கான ஆர்வத்தையும், ஊக்கத்தையும் இந்நூல் நிச்சயமாக ஊட்டும்.