தெரிந்தவன்

      கிராமம், நகரம் இரண்டிலுமே தலித்துக்கள் சாதியத்தின் பேரால்  அநியாயமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் அதிலிருந்து மீண்டெழ தலித்துகளும் இப்போது அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள் என்பதும் நிரூபணம் ஆகிக்கொண்டிருக்கிறது. ‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்கறாங்க?’ என்று எகத்தாளமாகக் கேட்கிறவர்களின் பார்வையில்தான் இவையெல்லாம் அரங்கேறுகின்றன. அவர்களின் கூற்று ஏமாற்று மொழி என்பதைத் ‘தெரிந்தவன்’ விவரிக்கிறான்.

150.00

தெரிந்தவன் :

       இத்தொகுப்பியில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளும் தலித்துக்கள் வெவ்வேறு தளங்களில் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், ஆதிக்கச்சாதிகளுடன் முரண்படுவதும், எதிர்த்து நிற்பதும் என்று கலவையாக விவரித்துக்கொண்டு நிற்கின்றன. யதார்த்தமும் அதுவே. சில ஊர்களில் ஆதிக்கச் சாதியினரின் வன்கொடுமைக்கு இரையாகும் தலித்துகள் சில ஊர்களில் ஆதிக்கச் சாதியினரிடம் மோதிக்கொண்டு நிற்கின்றனர். எத்தனைக் காலங்களுக்குத்தான் அடங்கிக் கிடக்கமுடியும் அவர்களால்? தலித்துக்கள் எழுந்து நிற்கிறார்கள் என்றாலே ஆதிக்கச்சாதிக்காரர்களுக்கு அவமானம்தானே.

பேருந்தில் ஆதிக்கச் சாதிக்காரனின் பக்கத்தில் தலித் உட்கார்வதற்கு இடம் மறுக்கப்படுவதும்… சிறுவயதில் தலித்துக்கு நண்பனாயிருந்தவன் வளர்ந்ததும் எசமானாகித் தலித்தை அவமானப்படுத்துவதும்… ஆதிக்கச்சாதிக்காரித் தரும் பலகாரத்தை வாங்கித் தின்னும் தலித் பெண்ணிடமிருந்து ஆதிக்கச்சாதிகாரி பலகாரங்களை வாங்கிக்கொள்ள மறுப்பதும்… பணக்காரத் தலித்தாயிருந்தும் ஊர்க் கோயிலுக்குள் நுழைவதற்குத் தடைப்போடப்படுவதும்… மாணவன் தலித் என்பதால் அவனை எடுபிடி வேலைகள் செய்ய உத்தரவிட்டு ஆதிக்கச்சாதி ஆசிரியர் தன் சாதி ஆங்காரத்தை வெளிக்காட்டிக்கொள்வதும்… ஆதிக்கச் சாதிக்காரனின் தேநீர் கடையில் சுவரோரம் சாய்ந்திருந்து தேநீர் குடித்ததற்காக ஒரு தலித் முதியவரை இரக்கமின்றி அடித்து உதைப்பதும் – இப்படிப் பல தளங்களில் தலித்துகள் துன்புறுத்தப்படுவதை வேதனையுடன் வெளிச்சப்படுத்துகிறான் ‘தெரிந்தவன்’.

தலித்துகள் பல தளங்களில் ஆதிக்கச் சாதியினரோடு முரண்படவும், முட்டி மோதவும் துவங்கிவிட்டார்கள் என்பதையும் ‘தெரிந்தவன்’ வெளிப்படுத்தத் தவறவில்லை. பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் நின்றதற்காக தன்மேல் வன்மம் கொள்ளும் ஆதிக்கச் சாதியினரால் தான் கொல்லப்படுவதற்குமுன் அவர்களில் சிலரைக் கொன்றுவிட்டு மடிகிறான் தலித். தன் சாதிப் பெண்ணை காதலித்துக் கல்யாணம் செய்துகொண்ட தலித்தை அழித்தொழிக்க அலைந்துகொண்டிருக்கும் ஆதிக்கச் சாதியின் வீட்டில் மற்றொரு பெண்ணும் வேறொரு தலித்துடன் வெளியேறி விடுகிறாள். பொருளாதாரத் தளத்தில் உயர்ந்து நிற்கும் சில தலித்துகளின்மீது பொறாமைக்கொண்டு அவர்களின் உடைமைகளை அழிக்கிறார்கள் ஆதிக்கச் சாதியினர். அவர்களின் அடாவடித்தனத்தை உலகுக்கு அம்பலப்படுத்துகிறான் தலித். சனசந்தடி மிகுந்த கடைவீதியில் ஒற்றை ஒரு மனிதனாய் நின்ற தன்னோடு சண்டைக்கு வந்த நான்கு ஆதிக்கச்சாதிக் கொடியவன்களை ஓடஓட விரட்டியடிக்கிறான் தலித்.

ஆக, கிராமம், நகரம் இரண்டிலுமே தலித்துக்கள் சாதியத்தின் பேரால்  அநியாயமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் அதிலிருந்து மீண்டெழ தலித்துகளும் இப்போது அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள் என்பதும் நிரூபணம் ஆகிக்கொண்டிருக்கிறது. ‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்கறாங்க?’ என்று எகத்தாளமாகக் கேட்கிறவர்களின் பார்வையில்தான் இவையெல்லாம் அரங்கேறுகின்றன. அவர்களின் கூற்று ஏமாற்று மொழி என்பதைத் ‘தெரிந்தவன்’ விவரிக்கிறான்.

அட்டை வகை

காகித அட்டை

பதிப்பு

முதற் பதிப்பு

ஆசிரியர்

அபிமானி

Author

அபிமானி

Publisher

தடாகம் பதிப்பகம்