தமிழர்கள் தங்களது வாழ்விடத்தை இயற்கையின் கூறுகளாகவே வகுத்துள்ளனர். இது வேறு எந்த
பண்டை நாகரிகங்களிலும் காணக்கிடைக்காத ஒன்றாக உள்ளது.
‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயான்மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ (தொல்:பொரு: 4)
என்று நிலங்களுக்கான பெயர்களைச் சுட்டுகிறார். ஏசுநாதர் பிறப்பிற்கு ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர் ‘சொல்லிய முறையால்’ என்று வழிமொழிகிறார். இதன் வாயிலாக அவருக்கு முன்பே தமிழர்கள் தங்களது நிலப்பகுப்பை முறையாக ஆக்கிக் கொண்டுவிட்டனர் என்பது தெளிவாகிறது.
இன்று மிக முன்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் அறிவியல், சூழலியல் (Environment Science) என்ற ஓர் இயலாகும். இதன் ஒரு பிரிவாக திணையியல் (Ecology) என்ற ஒரு துறை வளர்ந்து
வந்துள்ளது. அது இப்போது ஒரு மெய்யியலாகவும் விரிவாக்கமிடுகிறது.