உல்லாசத் திருமணம்

மொராக்கோவில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் தன் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகள், அநிதிகள், திமைகள் ஆகியவை குறித்துக் கட்டற்ற சுதந்திரத்துடன் விவாதிக்கப் பொருத்தமான புனைவுக்களமான உல்லாசத் திருமணம் என்னும் இப்புதினத்தைப் படைத்திருக்கிறார்.

மூன்று தலைமுறையினை உள்ளடக்கியுள்ள இப்புதினத்தில், ஏறக்குறைய எழுபது ஆண்டு கால மொராக்கோ வரலாற்றை நடுநிலை பிறழாமல் அழகியலோடு விவரிக்கமுனையும் தஹர் பென் ஜெலூனின் சுயவாழ்க்கையும் இந்தப் புதினத்தின் காலகட்டத்தோடு பொருந்தி விடுகிறது.

இப்புதினத்தைத் தன் மகன் அமினுக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதோடு மட்டுமின்றி கரிம் என்னும் பாத்திரத்தின் வடிவில் வாசகர்கள் அவனைக் காண வழி செய்கிறார் ஜெலூன். இயற்கையின் சோதனையால் நிரந்தர மழலைத் தன்மையுடன் விளங்கும் கரிமுக்கு இக்கதையினை இயக்கும் பெரும் பங்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

விடாமல் தொடரும் சமூகத் திமைகள் மிதான தன் அறிச்சிற்றத்தைத் தணித்துக்கொள்ளும் வடிகாலாக அமையும் இப்புதினம் வெள்ளை இருள் மிது வெளிச்சம் பாய்ச்சுகிறது.

300.00

உல்லாசத் திருமணம் புத்தகம் பற்றிய சுருக்கம்.

வெள்ளை இருள் விளக்கும் சித்திரம்

தன் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகள், அநீதிகள், தீமைகள் ஆகியவை குறித்துக் கட்டற்ற சுதந்திரத்துடன் விவாதிக்கப் பொருத்தமான புனைவுக்களமாக உல்லாசத்திருமணம் என்னும் இப்புதினத்தைப் படைத்திருக்கிறார் பிரஞ்சு எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன். மொராக்கோவில் பிறந்த தஹர் பென் ஜெலூன், நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுவதைப் போல், “இது முழுமையான புனைவுதான். எனினும் துரதிஷ்டவசமாக இதில் எதுவும் பொய்யாகச் சொல்லப்படவில்லை”. அதாவது தன்னைச் சுற்றி நிகழும் அவலங்களை, ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பழக்கவழக்கங்களை வெவ்வேறு கோணத்தில் காட்டும் கண்ணாடியாக இப்புதினத்தை அவர் பயன்படுத்தியுள்ளார். மூன்று தலைமுறையினை உள்ளடக்கியுள்ள இப்புதினத்தில், ஏறக்குறைய எழுபது ஆண்டு கால மொராக்கோ வரலாற்றை நடுநிலை பிறழாமல் அழகியலோடு விவரிக்கமுனைகிறார் ஆசிரியர்.  தஹர் பென் ஜெலூனின் சுயவாழ்க்கையும் இந்தப் புதினத்தின் காலகட்டத்தோடு பொருந்திவிடுகிறது. மேலும் இதை ஒரு சுயபுனைவு புதினம் என்றும் சொல்லலாம்.

“ஒரு காலத்தில்…” எனத் தொடங்கும் இக்கதையினைக் கூறும் பொறுப்பைக் கோஹா என்னும் கதைசொல்லி ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு விலகி நிற்கிறார். இந்த உத்தி மூலம் எல்லையற்ற படைப்புச் சுதந்திரத்தைத் தனக்குத் தானே வழங்கிக்கொள்கிறார். பெர்சிய, அரேபிய, ஆப்பிரிக்க நாட்டுப்புற இலக்கியத்தில் இதே பெயரிலும் சற்றே மாறிய பெயரிலும் இடம்பெறும் இக்கதைசொல்லி, பன்முகத் திறன்களையுடையவராக வலம் வருபவர்.

மொராக்கோவின் ஃபேஸ் நகர வணிகனான அமீர், தொழில் நிமித்தமாக மனைவியைப் பிரிந்து வெளியூர் செல்லும்போது, தன் இச்சைகளைத் தணித்துக் கொள்ளத் தன் மதம் அனுமதித்திருந்த உல்லாசத் திருமணம் செய்துகொள்கிறான்.

செனெகல் நாட்டின் அழகிய கருப்பு நிற நபூ என்னும் அப்பெண் மீதான காதல் கதையாகத் இப்புதினம் தொடங்குகிறது. அவளைத் தன் சொந்த நாடான மொராக்கோவுக்கு அழைத்துவந்து முறைப்படி இரண்டாவது மனைவியாக்கிய பின் குடும்பத்தில் நிகழும் சச்சரவுகள், வெள்ளை நிற முதல்மனைவி தனக்குள்ள உரிமையினை நிலைநாட்ட பயன்படுத்தும் பல்வேறு அடக்குமுறைகள், அதனை எதிர்கொள்ளும் நபூவின் சகிப்புத்தன்மை என ஒரு குடும்பச் சிக்கலாகப் புறத்தில் தெரிந்தபோதிலும், கதைசொல்லியின் உண்மையான இலக்கு வேறு என்பது விரைவிலேயே விளங்கிவிடுகிறது. அந்நாட்டில் நங்கூரமிட்டு, பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறவேற்றுமையினை விளக்கவே இக்கதைப்பின்னல் என்பதும் வாசகர்களுக்குத் தெளிவாகிறது.

“குதிரையைக் கண்டுபிடித்ததற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் வெள்ளைக்காரர்கள் கருப்பர்களை வாகனமாகப் பயன்படுத்தியிருப்பார்கள். மற்றவர்களை இழிவுபடுத்துவதையே மனிதன் எப்பொழுதும் விரும்புகிறான். அதிலும் குறிப்பாக ஏழைகளை, கருப்பு நிறமுடையவர்களை, எவ்விதப் பாதுகாப்பும் இல்லாதவர்களை அவமானப்படுத்த விரும்புகிறான். அது அப்படித்தான். அடிமைத்தனம் என்னும் பயங்கரம் சில நாடுகளில் இன்னும் தொடர்கிறது. அதிகாரப்பூர்வமாக இல்லாமல் வேறு வடிவத்தில் இருக்கிறது. மொராக்கோவாசிகள் தங்களை ஆப்பிரிக்கர்களாகக் கருதாமல் இருக்கக் காரணம் அவர்களுக்கு இருப்பது வெள்ளைத்தோல்”. எனும் கருப்பின மக்களின் அச்சம் கலந்த கேலி, நிறவேற்றுமை விளைவிக்கும் தீங்குகளைப் பறைசாற்றுகிறது.

இப்புதினத்தைத் தன் மகன் அமீனுக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதோடு மட்டுமின்றி கரீம் என்னும் பாத்திரத்தின் வடிவில் வாசகர்கள் அவனைக் காணவழி செய்கிறார் ஜெலூன். இயற்கையின் சோதனையால் நிரந்தர மழலைத் தன்மையுடன் விளங்கும் கரீமுக்கு இக்கதையினை இயக்கும் பெரும் பங்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். உளவியலில் உயர்கல்வி பெற்ற ஜெலூனுக்கு அத்துறையிலுள்ள தேர்ந்த பயிற்சியினையும் இப்புதினத்தில் உணரமுடிகிறது.

மொத்தத்தில், வெள்ளை இருள் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கும் ஜெலூன், விடாமல் தொடரும் சமூகத் தீமைகள் மீது தன் மக்கள் வைக்க விரும்பும் விமர்சனங்களுக்கு வாய்ப்பாகவும் தனக்கு இருக்கும் அறச்சீற்றத்தைத் தணித்துக்கொள்ளும் வடிகாலாகவும் இப்புதினத்தை அமைத்திருக்கிறார்.

அட்டை வகை

காகித அட்டை

பதிப்பு

முதற் பதிப்பு

பக்கங்கள்

260

மொழிபெயர்ப்பாளர்

Author

சு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்

Publisher

தடாகம் பதிப்பகம்