வானத்தை வாடகைக்கு எடுப்போம்.

கற்பனை : உத்தம புத்திரன்

"ரேஷன்கார்டு ஒவ்வொன்னுக்கும் அஞ்சு கிலோ அரிசியும், ரெண்டு கிலோ யூரியாவும் இலவசம். "
"உலகமகா உத்தமரே" , "வருங்கால வங்கக்கடலே", "இந்தியாவைத் தூக்கி நிறுத்தும் தூணே" என்று அமைச்சர் மு.க. அழகிரியை வாழ்த்தி மதுரை முழுக்க போஸ்டர், பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. அழகிரி அவரது அலுவலகத்தில் மனைவி, மகன், மகள், மருமகன், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள்என குவிந்து கிடக்க பந்தாவாக அமர்ந்திருக்கிறார்.

அழகிரி : (பிரமுகரிடம்) ஏம்பா... திடீர்னு உரம், ரசாயன அமைச்சர் பதவி கொடுத்துப்புட்டாங்க.. உரம் தெரியும் அதென்ன ரசாயனம்.???

பிரமுகர்1 : தெரியலையே தலைவா ஒரு வேளை பூச்சி மருந்தா இருக்குமா...?

பிரமுகர் 2 : இல்லைன்னா சாராயத்துல கலக்குற சல்பேட்டா சமாச்சாரமா இருக்குமோ...?

அழகிரி : தெரியலையே... பிரதமருக்கே போன் போட்டு கேக்கலாமா...?

கயல்விழி : வேணாம்பா... உங்களக்கு ஒண்ணும் தெரியாத விஷயம் டெல்லிக்கு தெரிஞ்சும் போயிரும்.

அழகிரி மனைவி : இதுக்குத்தான் தெரிஞ்ச துறையா வாங்கலுங்கறது தயாநிதி ஜவுளித்துறை வாங்கிட்டாரு பட்டுப்புடவையா குவியும். நீங்க ஜுவல்லரி அமைச்சர் பதவி கேட்டிருக்கலாம் பவுனு பனிரெண்டாயிரத்துக்கு விற்குது.

பிரமுகர் 2 : ஆமா... தலைவா ரசாயணம் உடம்புக்கு ஒத்துக்காது. உரம் பாத்தாரே ஜுரம் வரும்னு பேற துறை கேளுங்க.

அழகிரி : வேணாம்... இது அப்பா வாங்கிக் கொடுத்தது. விஷயம் இல்லாமலா இருக்கும்.

துரை அழகிரி : அப்பா... ஒரு உரத்துக்கு என் பெயர் வைங்க...

அழகிரி : அப்படி பேர் வைக்கலாமா...?

பிரமுகர் 2 : தப்பே இல்லை, உங்க மகன் ஆசைப்படறார் துரை யூரியா, துரை உரம் பேர் நல்லாத்தானே இருக்கு.

அழகிரி : அப்படி பேர் வெச்சிகிட்டா பெருமையான விஷயமா...? அப்ப உரம் ரொம்ப பவர்ஃபுல் பதவிதானே...?

பிரமுகர் 1 : பின்ன.. உங்கள கேக்காம இந்தியாவுல ஒரு விவசாயி நாத்து நட முடியாது, ஏர் ஓட்ட முடியாது. ஏன் வயக்காட்டை குத்தகைக்கு கூடி விட முடியாது. அதுக்கும் நீங்கதான் கையெழுத்து போடனும்.

அழகிரி : சரி, பேசிட்டு இருங்க வீட்ல குளிச்சிட்டு சாப்டுட்டு வந்துடறேன்.

தொண்டர் 1 : வீட்லயா? தலைவா இனிமே வீட்ல குளிச்சிட்டு, வீட்ல சாப்புடற வேலையெல்லாம் வேணாம். இப்போ நீங்க அமைச்சர் அதுவும் மத்திய அமைச்சர்.

அழகிரி : அதனால என்ன செய்யச் சொல்றீங்க...?

பிரமுகர் 1 : குளிக்க தனியா கடல் வாங்கித் தர்றோம் குறிங்க.

பிரமுகர் 2 : ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வாங்கித் தர்றோம் சாப்டுங்க...

தொண்டர் 1 : தீபாவளிக்கு பட்டாசு வேணுமா சொல்லுங்க சிவகாசியை வாங்கித் தர்றோம்.

பிரமுகர் 1 : அதுமட்டுமில்ல... விமானத்துல போறேன்னு சொன்னிங்கனா வானத்தையே வாடகைக்கு எடுத்துப்புடுவோம்.

கயல்விழி : அதெல்லாம் இருக்கட்டும்... ஸ்டாலின் சித்தப்பாவுக்கு துணை முதலமைச்சர் பதவிய தாத்தா கொடுத்திருக்கார் பாருங்க.

அழகிரி : அதுக்கென்ன இப்போ...?

துரை அழகிரி : எம்.பி. எலக்ஷன்ல நீங்க தோத்திருந்தா தாத்தா முதல்வர் பதவியவே உங்களுக்கு கொடுத்திருப்பார் கோட்டை விட்டுட்டிங்களேப்பா...

அழகிரி மனைவி : இப்ப மட்டும் என்ன... மத்தியில அமைச்சர் பதவியும், மாநிலத்துல முதல்வர் பதவியையும் சேர்த்து பார்த்துக்கிறேன்னு மாமனார்ட்ட கேளுங்க.

அழகிரி : கேட்டா அப்பா கொடுப்பாரா...?

கயல்விழி : அவரா கொடுப்பாரா... அப்படி எதைத்தான் கொடுத்தார்.. எப்பவும் போல நீங்கதான் கேட்கணும்.

பிரமுகர் 2 : அப்புறம் தலைவரே... ரொம்ப முக்கியமான விஷயம் இந்த பதவிய தக்க வெச்சிக்கணும்னா கலைஞர் மாதிரி இலவசங்களை அள்ளி விடனும்

அழகிரி : அதுக்கான ஐடியா என்கிட்ட நெறைய இருக்கு சொல்றேன் கேட்டுக்கங்க. ரேஷன்கார்டு ஒவ்வொன்னுக்கும் அஞ்சு கிலோ அரிசியும், ரெண்டு கிலோ யூரியாவும் இலவசம்.

தொண்டர்கள் : சூப்பரோ சூப்பர்... அப்புறம்...?

அழகிரி : பொங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ ரசாயன பாக்கெட் இலவசம்.

பிரமுகர்கள் : வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் அழகிரி.

தொண்டர்கள்: வாழ்க... வாழ்க....

பிரமுகர்கள் : அடுத்த ஐ.நா.சபை தலைவர் அண்ணன் அஞ்சாநெஞ்சன்,

தொண்டர்கள்: வாழ்க... வாழ்க...
அப்போது ஒரு தொண்டர் போதையில் தள்ளாடியபடி வருகிறார்

போதை தொண்டர் : தலைவா, நீங்க அமைச்சரா ஆன சந்தோஷத்துல வாசல்.. வாசல்ல வெச்சிக்கிட்டு வந்திருக்கேன் தலைவா...

அழகிரி : வாசல்லய்யா... என்ன சரவெடி வெச்சிட்டு வந்திருக்கியாபா...?

போதை தொண்டர் : பட்டாசெல்லாம் பழசு.. அதனால புதுசா இருக்கட்டுமேன்னு...

அழகிரி : (கோபமுடன்) அதான் என்னென்னு கேக்கிறேன் சொல்லித் தொலைய்யா...?

போதை தொண்டர் : வாசல்ல... ரெண்டு பெரிய வெடிகுண்டு வெச்சிட்டு வந்திருக்கேன்... இப்ப வெடிக்.... (என்றபடி போதையில் விழ) , வெடிகுண்டா என்று ஆளாளுக்கு அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5