"மேடையிலே ஆடுது பொண்ணு. எடுக்க முடியில சிம்புவால ரன்னு .... "
(உலககோப்பை 20/20 கிரிக்கெட் மேட்ச் நடப்பதால் நமது சினிமா நட்சத்திரங்களும் கிரிக்கெட் டிவிளையாடுகின்றனர். பாரதிராஜா, விஜயராஜேந்தர் அம்பயராக, ரஜினி டீமில் விஜய், தனுஷ், வடிவேலுவும், கமல் டீமில் அஜித், சிம்பு, பிரகாஷ்ராஜ், விவேக் ஆகியோர் உள்ளனர்)
ரஜினி : (வேகமாகி பந்துபோடவரும் அஜித்திடம்) தம்பி நானா ஆடலை மேல அவன் ஆட சொல்றான் நான் ஆடறேன்.
அஜித் : (வந்த வேகத்தில் நிலைதடுமாறி விழுந்து) பார்முலா ஒன் கார் ரேஸ் மாதிரி , ஓடிவரும்போது ‘ப்ரேக்’ போடறீங்களே.. ஐயோ.. வயிறு பத்தி எரியுதே.
விவேக் : அழாதிங்க அஜித் பந்தைப் போடுங்க. (அஜித் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் மட்டும் எடுத்துவிட்டு நிற்கிறார் ரஜினி)
தனுஷ் : ஏன் மாமா நின்னுட்டிங்க?
ரஜினி : நான் ஒரு ரன் அடித்தா நூறு ரன் எடுத்த மாதிரி. (அடுத்து தனுஷ் அவுட்டாக - அம்பயரான பாரதிராஜாவிடம் கேட்க.)
பாததிராஜா : (தலைக்குமேல் கும்பிட்டு) என் இனிய தமிழ் மக்களே, கிராமத்து தெருக்களை பள்ளிக்கூடங்களாக படித்த...
வடிவேலு : ஆரம்பிச்டாருய்யா.. படிச்ச பள்ளிக்கூடம், குடிச்ச கஞ்சி, குத்தவெச்ச குடிசை வரைக்கு சொல்லாம விடமாட்டாரே..
பாரதிராஜா : தனுஷ் அவுட், என் தீர்ப்புக்கு என்ன பதிலடி வந்தாலும் தைரியமாக சந்திப்பேன். காரைக் குடியிலேர்ந்து கானாடு காத்தான் வரைக்கும் சினிமா மக்களைத் திரட்டி பேரணி போவேன். ஆர்பாட்டம் நடக்கும். (அவர் பேசிக்கொண்டிருப்பதை காதில் வாங்கிகொள்ளாமல் தனுஷ் வெளியேற, வடிவேலு வருகிறார்)
வடிவேலு : (பாரதிராஜாவிடம்) சார்.. மூனு நம்பர்... எனக்கு ராசியில்ல ஸ்டெம்ப்ல ரெண்டை எடுத்துடறீங்களா..?
பாரதிராஜா : என்.. இனிய தமிழ் மக்களே..
வடிவேலு : ஐயய்யோ.. மறுபடியும் முதல்ல இருந்தா.. இதுக்கு ஆடி தோத்துட்டே போகலாம்.
ரஜினி : (ஒரு பந்தை பவுன்ட்ரிக்கு அடித்துவிட்டு) டேய் தடிமாட்டு முண்டம். பவுன்ட்ரி அடிச்சா ரெண்டு பேரும் முட்டியில இடிக்கனும்ல.. நீ பாட்டுக்கு நிக்கறே..?
வடிவேலு : அதுக்கில்லப்ப... முப்பது வருஷமா முப்பதடி நீளத்துக்கு ஒரு பாம்பு அப்பப்ப கிரவுண்டுக்குள்ள வந்து போகுமாம்.
ரஜினி : (நடுக்கியபடி) பாம்பா..? (வடிவேல் தலையில் தட்டி) சனியனே சனியனே. அதை ஏண்டா இப்ப சொன்னே (அடுத்து ரஜினி பாம்பு பயத்தில் அவுட்டாகி வெளியேற, அடுத்து ஆட விஜய் வருகிறார் )
விவேக் : (தனக்குள்) அச்சச்சோ இந்த குருவி ரொம்ப டேஞ்சராக்கே. கோட்ஷாவையே பிரிச்சி மேஞ்ச ஆளாச்சே (என்றபடி அடிக்காத செல்லை எடுத்து) ஹலோ போன்டா மணியா? போன்டா வாங்கி வெச்சிருக்கியா இதோ வர்றேன். (ஆவர் பந்தை போட்டுவிட்டு ஓட, பிரகாஷ்ராஜ் பவுலிங் போடுகிறார்.
பிரகாஷ்ராஜ் : ஹாய்.. செல்லம்.. என்ன தோக்கடிக்க இது கபடியும் இல்ல, த்ரிஷாவும் இல்ல, ஒரே ஓவர்ல நீ அவுட். (அவர்போட்ட பந்தும் பவுன்ட்ரி ஆகிறது. கொத்துப் போன பிரகாஷ்ராஜ் கிரவுண்டில் அமர்ந்து தலையை கலைத்துக் கொண்டு அழ, சிலர் குண்டுக்கட்டக தூக்கிச் செல்கின்றனர் அடுத்து கமல் டீம் ஆடுகிறது.)
வடிவேலு : (சிம்புவிடம்) ஆமா உங்க அணி கேப்டன் கமலை எங்க காணோம்? (அப்போது விஜய ராஜேந்தர் கெட்டப்பில் இருக்கும் கமல் வேஷம் களைகிறார். அப்போது ஒரிஜினல் விஜயராஜேந்தரே வேகமாக ஓடிவருகிறார். தலையை கோதிவிட்டபடி)
ராஜேந்தர் : ஏய்..கிரிக்கெட்ல அடிச்சா சிக்ஸரு, டாஸ்மாக்குல அடிச்சா குவார்ட்டரு. ஆட்டாவுல போனா மீட்டரு.
வடிவேலு : (நெஞ்சல் அடித்துக்கொண்டு) ஐயோ.. எங்க இருந்துதான் புடிக்கறாங்களோ. தெரியலையே.. (பந்தை அடித்துவிட்டு சிம்பு ரன் எடுக்க ஓட, மேடையில் ஆடிக்கொண்டிருக்கும் நயன்தாராவைப் பார்த்துவிட்டு சிலையாய் நிற்க அவுட்டாகிறார்.
ராஜேந்தர் : மேடையிலே ஆடுது பொண்ணு. எடுக்க முடியில சிம்புவால ரன்னு (அடுத்து கமல் களமிறங்க எல்லா பந்தையும் சிக்ஸராக அடிக்க)
வடிவேலு : (முறைத்தபடி) ஆளவந்தான்.. போதும்.. இத்தோட நிப்பாட்டு. ஆஸ்கார் அவார்டு கிடைக்காத கோவத்தில கிரிக்கெட் பந்தை கிழிக்கக்கூடாது. நிறுத்து எல்லாத்தையும் நிறுத்து.
கமல் : (பேட்டை தலையில் போட்டுவிட்டு முட்டிபோட்டு அமர்ந்தபடி கதறுகிறார்) ஹா.. ஹா.. நிறுத்தச் சொல்லு - நெதர்லாந்து கொழந்தை டீமை கொத்து புராட்டா போடுற இந்தியாவை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன். இந்தியாவை தோரணம் போட்டுத் தொங்கவிடற சௌத் ஆப்ரிக்காவை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்.
வடிவேலு : ஏம்பா.. ‘நாயகன்’ பட டயலாக்கா சொல்றியே அது ரொம்ப பழசாத் தெரியுல..? ரீஸண்டா எதுவுமில்லியா..? (அப்போது தாடிவைத்த ஒருவர் வடிவேலுவிடம்)
வந்தவர் : சார்.. ரெண்டு டீமும் ரொம்ப சூப்பரா கிரிக்கெட் விளையாடுறீங்க. அப்படியே நீங்க எல்லோரும் எங்க நாட்டுல வந்து விளையாண்டா எங்க பாஸ் ரொம்ப சந்தோஷமா சன்மானம் கொருப்பாரு.
வடிவோலு : சன்மானமா..? எந்த நாடு..? யாரு உங்க பாஸ்.
வந்தவர் : நாடு பாகிஸ்தான். பாஸ் பின்லேடன் (என்றதும் வடிவேடு பேண்ட் நனைய நனைய.. உடனே அவர் ஸ்டெம்பைப் பிடிங்கிக் கொண்டு ஓட, அனைவரும் புரியாமல் பார்க்கின்றனர்.)