விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்...

கற்பனை : உத்தம புத்திரன்



(முதல்வர் கலைஞர் இருந்த வேலையெல்லாம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்துவிட்டு ‘ஹாயாய்’ கவிதை எழுதிக்கொண்டு இருந்வர், அதுவும் போரடிக்க என்ன செய்வது? சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சோம்பலில் நெளிந்து நெட்டி முறித்தபோது ஸ்டாலின் மகன் உதயநிதி உள்ளே வருகிறார்.)



உதயநிதி : என்ன தாத்தா ரொம்பவும் போரடிக்குதா..?

கலைஞர் : அலைகடல் ஆர்ப்பரிப்பை நிறுத்தும் வரை.. சூரியன் சுட்டெரிப்பை நிறுத்தும்வரை இவனுக்கேது ஓய்வு? ஆமாம் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

உதயநிதி : அடுத்து விஜய்-அஜித் ரெண்டு பேரையும் ஹீரோ-வில்லனா வெச்சி ஐநூத்தி அறுபது கோடியில ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன்.

கலைஞர் : இவ்வளவு சின்ன பட்ஜெட்லய்யா! நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆவது.. குறைந்தது ஆயிரம் கோடியாவது செலவு பண்ண வேண்டாமா?

உதயநிதி : பணம் பத்தியில்லை தாத்தா... படம் ரொம்ப ‘யூத்’ சப்ஜெக்ட், அதனால வசனம் எழுத நல்ல டயலாக் ரைட்டர் வேணும். நானும் தேடிக்கிட்டே இருக்கேன். யாரும் கெடைக்கல.

கலைஞர் : கையிலே உப்பை வைத்துக்கொண்டு போர்வெல் வாட்டருக்கு அலைவானேன்? இது புதுசா இருக்கில்ல.. பேசாம நானே வசனம் எழுதிடறனே.

உதயநிதி : ரொம்ப இளமையா, புதுசா பள்ளி-கல்லூரி பசங்களை தரத்தரன்னு தியேட்டருக்கு இழுத்துட்டு வர்ற மாதிரி இருக்கனும்.

கலைஞர் : அவ்வளவுதானே.. மா, பலா, வாழை எனும் முக்கனி சுவையும் இருக்கும்.

உதயநிதி : அதுக்காக ஜுஸ் போட்டு கைல கொடுத்துடாதீங்க (என சொல்லிவிட்டு உதயநிதி போனதும், அமைச்சர் துரைமுருகன், ஆற்வாடு வீராசாமி, டி.ஆர்.பாலு, வாலி, வைரமுத்து ஆகியோர் உள்ளே வருகின்றனர் வசனம் எழுதுவதற்கான விவாதம் தொடங்குகிறது.

துரைமுருகன் : தலைவா... முதல் சீனே அஜித்தும்-விஜய்யும் சவால் விட்டுக்கிறாங்க. நல்ல ‘பஞ்ச்’ டயலாக் வேணும்.

கலைஞர் : நான் அடிக்காத பஞ்சா.. விஜய் சொல்றார் கேட்டுக்கோ. சீறும் சிங்கத்தை கண்ட சிறுநரியே.. வேல் அம்பு கொண்டு பரணிபாடும் மறவர் கூட்டம்..

டீ.ஆர். பாலு : என்ன தலைவரே.. சிங்கம், சிறுத்தை, வரிக்குதிரைன்னு வண்டலூர் ஜு அயிட்டமா சொல்றீங்க.. புதுசா சொல்லுங்க..

கலைஞர் : உண்மையா சொல்றியா.. இல்ல மத்திய மந்திரி பதவி வாங்கித்தராத கடுப்புல பேசுறியா..? வைரமுத்து நீ எதாச்சும் சொல்லு.

வைரமுத்து : என் கண்ணில் நெருப்பு குழம்பு.. உன் கண்ணில் பருப்பு குழம்பு.. ஆணுக்குள் ஆறு லிட்டர் ரத்தம், உனக்கு

வீராசாமி : அட.. என்னப்பா இவரு.. குழம்பு, ரசம், மோர்ன்னுட்டு எதுவும் எனக்குப் பிடிக்கலை.

கலைஞர் : அப்போ நீதான் சொல்லேன்.

வீராசாமி : அஜித் சவால் விடுறார்.. நான் கரெண்ட் மாதிரி அப்பப்ப வந்துட்டுப் போவேன்.. ஆனா எலக்ஷன் நேரத்துல வருவேன் போகமாட்டேன்.

கலைஞர் : ஐயய்யோ.. வேணாம். மக்கள் மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்தி.. சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிற மாதிரி இருக்கு

வாலி : (தசாவதாரம் ‘கல்லை மட்டும் கண்டால்’ ஸ்டைலில்) அஜித் மட்டும் நின்றால் அடுத்தது தெரியாது, விஜயோ எந்தன் எதிரில் நிற்கவே முடியாது.

கலைஞர் : படத்துல மோதவிடறதை விட்டுட்டு நிஜத்துலயே ரெண்டு பேரும் சண்டை போட்டுகக தூண்டிவிடற மாதிரி இருக்கு.

டீ.ஆர். பாலு : அப்புறம் தலைவரே.. நயன்தாராவையும், அஜித்தும் டூயட் பாடறதுக்கு லீடு கொடுக்குற மாதிரி நல்ல மூடுல டயலாக் வைக்கனும்.

கலைஞர் : கேட்டுக்கோ.. அன்பே இந்த பூஞ்சோலையெங்கும் பூத்துக் குலுங்கும் அல்லி, அனிச்சை, ஆம்பல் மலர்களைக் காண என்னரு கருவண்டு விழிகளும்..

துரைமுருகன் : நல்லாத்தான் இருக்கு, ஆனாலும் பழைய தீஞ்ச வாடை வரதே.

கலைஞர் : (கடுப்புடன்) அட என்னங்கைய்யா.. எது சொன்னாலும் குறை சொல்லிக்கிட்டே இருக்கிங்க.. அடுத்த தமிழகத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருஷம்தான் இருக்கு. அதை மனசுல வெச்சிட்டு பேசுங்க.

வீராசாமி : சூப்பர்.. தலைவா.. இதுவரைக்கும் தமிழ்சினிமாவுல இப்படியொரு டயலாக்கை யாரும் எழுதினதில்ல. ஆம்பல்.. அனிச்சை.. அடடா.. அடடா.

டீ.ஆர். பாலு : இதே மாதிரி.. க்ளைமாக்ஸ்ல மோதிக்கிற வசனமும் எழுதிடுங்க..

துரைமுருகன் : அஜித் ஜோடியான நயன்தாராகிட்ட விஜய்யும், விஜய் ஜோடியான த்ரிஷாகிட்ட அஜித்தும் பேசணும்.

கலைஞர் : (குஷியுடன்) விஜய் பேசுறார்.. வட்டமிடும் கழுகே.. வாய் பிளந்து நிற்கும் ஓநாயே.. இன்னலை அனுபவிக்கும் எம் இன மக்கள் இலங்கையில்.. உனக்கிங்கே குளு குளு பங்களா.. நெடல்லி கனவு தலைமட்டமானதைப் புரிந்துகொள். அடுத்து நாற்பதுக்கு நாற்பது நாங்கள்தான்.

வாலி : (வைரமுத்துவிடம்) ஏம்பா தம்பி.. தலைவரை வசனம் எழுதச் சொன்ன யாருக்கோ அறிக்கை விடற மாதிரியில்ல இருக்கு..

வைரமுத்து : நமக்கெதுக்கு வம்பு. வழக்கம்போல வாழ்த்து ஜால்ராவை வாசிப்போம் கம்முனு இருங்க.

கலைஞர் : அப்படியே பாட்டு ஒண்ணும் தோணுது அதையும் சேர்த்துக்கங்க.

வைரமுத்து : (வாலியிடம்) அண்ணே தலைவர் எழுதப்போறது பாட்டில்ல நமக்கு வெக்கப்போற ஆப்பு.

பாலு : அடிச்சி தூள் கௌப்புங்க தலைவா..

கலைஞர் : (பாடியபடி) அதிமதுரமேனி சிலையோ? செப்பு குவளை ஒத்த இடையோ..? வஞ்சியின் ஆதாரம் அழியில் உதித்த சிற்பியோ..?

துரைமுருகன். : கொன்னுட்டீங்க தலைவா.. ஆமா.. இந்த பாட்டுக்கான விளக்கத்தை சப் டைட்லா போடப் போறோமா..?

வீராசாமி : யோப் சப் டைட்டில் போட்ட என்ன.. போடாட்டி என்ன அதான் முன்னாடியே சொல்லிட்டாரே எலக்ஷன் வருதுன்னு.

துரைமுருகன் : ஐயோ சாமி.. நல்ல வேளை காப்பாத்திட்டீங்க (கலைஞரிடம்) தலைவா இன்னும் நீங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களக்கு தலைவராகவும், சினிமா டயலாக் ரைட்டராகவுமேப் பொறக்கனும் (அப்போது கதவு திறந்துகொண்டு உதயநிதி வருகிறார்)

கலைஞர் : உதயா.. டயலாக் ரெடி, பாட்டு ரெடி.

உதயநிதி : எதுக்கு..?

கலைஞர் : நிதானப்பா.. சொன்னே. அஜித்-விஜய் படத்துக்கு வசனம் எழுத ஆளில்லாம அலைமோதறேன்னு அதுக்குத்தான் ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சி ரெடி பணிணினோம்.

உதயநிதி : சரியாப்போச்சி போங்க. படம் ஸ்டார்ட் பண்ணி பாதிபடமே முடியப்போவுது. அப்படின்னா பத்து நாளா யாரும் ரூமை விட்டு வெளியே வரவேயில்லையா..? (அனைவரும் அதிர்ந்து போய் ‘பத்து நாளா!’ என்றபடி திகைப்புடன் காலண்டரைப் பார்த்து வெளித்தபடி நிற்கின்றனர். )

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5