Page last updated at Monday, September 29, 2009 at 10:17:28 PM IST
சந்திரனுக்கு பட்டா போடு !
கற்பனை: உத்தமபுத்திரன்.
இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ள / சேமிக்க :
:::சந்திரமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடித்த்தை கேள்விப்பட்ட நம் அரசியல்வாதிகள் அதிரடியாக களத்தில் இறங்குகின்றனர்:::
(அறிவாலயத்தில்)
கலைஞர் : ஸ்டாலின்... உடனடியா சந்திரன்ல நம்ம கட்சி பொதுக்குழுவை கூட்டுங்க. அப்படியே என் தலைமையில கவியரங்கத்துக்கும் ஏற்பாடு செய்ங்க....
ஸ்டாலின் : போன வாரம் தானேப்பா காஞ்சியில விழா நடத்தினோம்.. அதுக்குள்ள என்ன விசேஷம்?
கலைஞர் : அது போன வாரம்.. நான் சொல்லுரது இந்த வாரம். கவிதையும் ரெடியா இருக்கு... படிக்கிறேன் கேளு...
சந்திரனே.. சந்திரனே..
தண்ணீர் தந்த மந்திரனே – அங்கே
வள்ளுவன் வந்து வாய் கொப்பளித்தானோ !
முல்லைவேந்தன் முகம் கழுவினானோ ! – அல்லது அண்ணா
உன்னை கண்ணா பிண்ணா என்று திட்டியதால் வந்த கண்ணீரோ !
எப்படியிருக்கு?
ஸ்டாலின் : நல்லா தான் இருக்கு... ஆனா அதை விட முக்கியமான வேலை நெறைய இருக்கு.. என்ன விடுங்க..
கலைஞர் : வேலை வெட்டி இல்லாம இருக்கேன்னு சொல்லாம சொல்ற... அப்படித்தானே.. ம்ம்ம்... நானும் ஒரு முக்கியமான வேலை பார்க்கனும்... வர்ரேன்... !
ஸ்டாலின் : (பயத்துடன்) முக்கியமான வேலையா... தீவிரவாதிகள் சென்னையில குண்டு வைக்க போராங்களா... இல்ல ஆட்சி அம்பேல் ஆகப் போகுதா..? என்ன்னு சொல்லுங்க...
கலைஞர் : அதைவிட ரொம்ப முக்கியம்...
ஸ்டாலின் : ரொம்ப டென்ஷன் பன்றிங்க.. ப்லீஸ்... சொல்லுங்க..
கலைஞர் : எடுத்தவரைக்கம் ”எந்திரன்” படத்தை போட்டுக் காட்டுறேன் வாங்கன்னு ரஜினி கூப்பிட்டார்.. அங்கப்போறேன்..!
(என்றதும் ஸ்டாலின் தலையில் கைவைத்தபடி அமர்கிறார்)
(கொடநாடு எஸ்டேட்டில்)
ஜெயலலிதா : (கோபமுடன் ஜெயகுமாரிடம்) இங்க யாரும் வரக்கூடாதுன்னு சொன்னனே... எதுக்கு வந்தீங்க....
சரி சரி சொல்லுங்க...
ஜெயகுமார் : சந்திரன்ல தண்ணி கண்டுப்பிடிச்சது எங்க ஆட்சியிலதான்... அதனால சந்திர மண்டலம் எனக்கே சொந்தம்னு கலைஞர் சொல்றாரும்மா...
ஜெயலலிதா : (அதிர்ச்சியுடன்) அப்படியா விடக்கூடாது... சந்திரன்னா.. அது நம்ம எஸ்.எஸ்.சந்திரன் பேர்லதான் இருக்குன்னு அந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சிக்கு புரியும் படி சொல்லிடுவோம். சீக்கிரமா சந்திர மண்டலத்துக்கு பட்டா பாண்டு பத்திரம் ரெடி பண்ணுங்க...
ஓ. பன்னீர்செல்வம் : அழகிரி சண்டைக்கு வந்தார்னா...?
ஜெயலலிதா : வந்தா என்ன? எங்க ஆட்சியிலத்தான் சந்திர மண்டலத்தையே கண்டுபிடிச்சோம்னு புரோட்டாவை புரட்டி போடு..
அதமட்டுமில்லாம... வெங்காயத்தை உறிச்சா கண்ணுல தண்ணி வரும்னு ஆராய்ச்சி பண்ணி சொன்னதே நாங்கதான்னு சொல்லுவோம்.
ஜெயகுமார் : அம்மா .. உங்க புத்தி கத்தியைவிட ஷார்ப்புமா..
ஜெயலலிதா : அப்படியே பண்ணீர் தலைமையில தண்ணீர் போராட்டம் பண்ணுங்க !
சசிகலா : எல்லாம் சரி.. ஆனா எனக்கு ஒரு சின்ன ஆசை.. இந்த எஸ்டேட் போரடிக்குது. சந்திரன்ல ஒரு எஸ்டேட் கட்டி ரெஸ்ட் எடுக்க போலாமா..?
(என்றதும் பன்னீரும் ஜெயகுமாரும் “டக்” கென்று மறைந்த போகிறார்கள்)
(சாலிகிராமம் விஜயகாந்த் வீடு)
சுதீஸ் : மாமா....மாமா...மாமா....தண்ணி...
விஜயகாந்த் : (தூக்க கலக்கத்தில்) எடுத்துக்க .. எடுத்துக்க... ஆனா கண்ட்ரோலா குடி....
சுதீஸ் : ஐயோ ... அதில்ல மாமா...சந்திரன்ல தண்ணி இருக்காம்...
விஜயகாந்த் : காய்ச்சினதா... காய்ச்சாததா...?
(திடீரென்று எழுந்து உட்கார்ந்து பல்லை கடித்துக்கொண்டு கையை ஆட்டி சினிமா வசனம் போல்) ஏய் பாகிஸ்தான்காரா... ஒரு சொட்டு தண்ணி கூட இந்த கேப்டன் விட்டு கொடுக்க மாட்டான். மீரனா மரத்துல கட்டி வைச்சு தோலை உறிச்சுப்புடுவான்டா... ம்ம்ம்.... போகமாட்டே... (என்று விரலை துப்பாக்கி போல காட்டி.. டிஷ்யும்.. டிஷ்யும்.. என்று சவுண்ட் கொடுக்க.. பிரேமலதா ஓடி வருகிறார்)
பிரேமலதா : (கவலையடன்) ஜயோ என்னாச்சிங்க.... படம் எதுவும் இல்லாம போனதால இப்படித்தான் திடீர்னு எழுந்திருச்சி பாக்கிஸ்தானுக்கு எதிரா அறிக்கை விட ஆரம்பிச்சிடுரார்...
விஜயகாந்த் : (புரியாமல் விழுத்தபடி) ஆமா இப்ப நான் எங்கே இருக்கேன்.. சுதீஸ் நீ எப்ப வந்த... பண்ருட்டி எங்க..?
சுதீஸ் : பண்ருட்டி கடலுர் மாவட்டத்துல இருக்கு...
விஜயகாந்த் : இந்த நக்கல்தானே வேணாங்கிறது..
சுதீஸ் : சரி... அதை விடுங்க மாமா – சந்திர மண்டலத்துல தண்ணி இருக்காம் என்ன பண்ணலாம்..
விஜயகாந்த் : தமிழ்நாட்டுல தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க எங்களால் மட்டும் தான் முடியும்.. அதாவது சந்திரன்ல ஓட்டை போட்டு பைப்பை சொருகி நேரா உங்க வீட்டு அண்டா குண்டா சட்டி பானையிலயே விழுற மாதரி செய்வோம்.. ஆனா எப்படினு வெளியில சொல்ல மாட்டோம்...ஏன்னா அப்புரம் கலைஞர் அதை காப்பி அடிச்சி பம்பும் கையுமா நிப்பாரு..
பிரேமலதா : ஐயோ ராசா.... கண்டிப்பா அடுத்த முதல்வர் நீங்கதான்... எவ்வளவு சாதுர்யம் உங்களுக்கு..
விஜயகாந்த் : அப்புறம்.. பிரேமா.. மேக்கப் போட்டு ரொம்ப நாளாச்சி... கன்னமெல்லாம் அரிக்குது.. கையேல்லாம் நடுங்குது...
பிரேமலதா : அதுக்கு என்ன இப்போ..?
விஜயகாந்த் : என்ன வெச்சி ஒரு படம் எடேன்... ”சந்திரமண்டலத்துல தண்ணிராஜா” டைட்டில் நல்லாயிருக்கா...?
(”வர்ர நாலு வோட்டுக்கும் வேட்டு வைக்க ரெடியாயிட்டாருடா ...” என்று கூறியபடியே இருவரும் தலைதெறிக்க ஓடி மறைகின்றனர்)
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :
ADVERTISEMENT