Page last updated at
Wednesday May 26 2010 at 11:57:28 PM IST
சிரிப்பொலி மாநாடு
-
கற்பனை: உத்தமபுத்திரன்.
(செம்மொழி மாநாட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மாநாடு மேலும் சிறக்க இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தி கலகலப்பாக்கலாம். ஏதோ நம்மால் முடிந்தது)
கலைஞாயிர அரங்கம்
கலைஞர் கதை, வசனத்தில் உருவாகிவரும் திரைப்படமான ‘பெண்சிங்கம்’ ‘இளைஞன்’ ஆகிய இரண்டு படங்களில் இருநூற்றி ஐம்பதுநாள் ஓடும் படம் எதுவென்று சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் நடத்தலாம். தலைப்பை கேட்டதுமே தொண்டர்கள் ‘குபீர் குபீர்’ என்று சிரிப்பார்கள். அப்படியே சிரிக்கும்போது வயிற்றுவலி வந்தால் மருந்து மாத்திரை கொடுப்பதற்கு மாநாட்டில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யலாம்.
கிராமத்துப் போட்டிகள்
கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என்று மட்டும் இல்லாமல் கில்லி, கோலி, பம்பரம், அஞ்சாங்கல், பல்லாங்குழி என போட்டிகள் வைக்கலாம். நிகழ்ச்சி அமைப்பாளராக கனிமொழியை நியமிக்கலாம். கிராமங்களில் மட்டும் விளையாடி வந்த இப்போட்டிகளை மேடை ஏற்றிய பெருமை அவரை சேரும். இதுக்காக அரசு இருபது, முப்பது கோடிகள் திட்ட மதிப்பீட்டில் பணம் வழங்கலாம். பெரும்பாலான பெண்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
கொஞ்சல் மொழிக் கவிதை
கலைஞர் அதிகநேரம் கொஞ்சுவது கனிமொழி மகனையா? ஸ்டாலின் பேரனையா?. வாலி வைரமுத்து இருவரையும் கவிதைபாட ஏற்பாடு செய்யலாம். இப்படிப்பட்ட கவியரங்கம் செம்மொழி மாநாட்டில் அரங்கேற்றிய ஒப்பற்ற தலைவர் கலைஞர் என நாளைய வரலாறு தன் ஏட்டில் தானே பேனா எடுத்து எழுதிக்கொள்ளும். ‘கனிமொழி மகனுக்கு கலைஞர் முத்தமிட்டால்.. அது தமிழ்நாடே தந்த முத்தம்’ என்று வைரமுத்தும். ‘ஸ்டாலின் உனக்கு தாத்தா, கலைஞர் எங்களுக்கெல்லாம் ஆத்தா’ என்று வாலியும் கவிதையில் பின்னி பெடலெடுத்து விடுவார்கள்.
ஜெகத்ரட்சாயணம்
ஜெகத்ரட்சகனை மேடை ஏற்றிவிட்டு ஆயிரத்தொரு புகழ் வார்த்தைகளை கலைஞர் பற்றி மூச்சு விடாமல் பேச வேண்டும். அவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தால் ஆயிரமென்ன... இரண்டாயிரம், மூவாயிரம், நான்காயிரம் என கூடிக்கொண்டே இருக்கும். கட்சிக்காரர்களுக்கும் போரடிக்காது. உதாரணத்துக்கு... ‘பள்ளியில் சிலேட்டில் மட்டும் போட்டு வந்த முட்டையை... நிஜ முட்டையாக்கி குழந்தைகளின் தட்டில் போட வைத்தவர் தமிழ்த்தாய் கலைஞர்’. ‘டி.வி. கொடுத்த தென்னாட்டு ஒபாமா’. ‘ஒரு ரூபாய் அரிசி வழங்கிய ஒப்பற்ற ஒளவையார்’ என்று போட்டுத்தாக்குவார்.
முத்தமிழ் கொற்றவன்
கலைஞர் சினிமாவில் படைத்த சாதனைகளை விளக்கும் விதமாக உதயாநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி இருவரும் இணைந்து ஒரு ஆல்பம் தயாரித்து வெளியிடலாம். இதில் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, அஜித் ஆகியோர்களை ஆட வைக்கலாம். ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை மு.க.அழகிரியிடம் கொடுக்கலாம். அப்போதுதான் அஜித் போன்றவர்கள் முதல் ஆளாய் நிற்பார்கள். இந்த ஆட்டங்களுக்கு கலா மாஸ்டரையும், குஷ்புவையும் மார்க் போடச் சொல்லலாம். ஆல்பத்துக்கான தலைப்பை கலைஞரிடமே கேட்கலாம். ‘காலாட கையாட’ என அற்புதத் தலைப்பை சொல்வார்.
எதிரணிகள்
எதிரணி கட்சித் தலைவர்களுக்கும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அறிக்கை கேட்டு, அறிக்கையை செம்மொழி மலரில் வெளியிடலாம். ஒவ்வொரு தலைவர்களுக்குமான தலைப்பை துரைமுருகனிடம் கொடுக்கச் சொல்லலாம்.
கண்ணீரும், கம்பலையும் - தலைப்புக்கு வைகோ.
அனாதையாய் நிற்கிறோம் ஆதரிங்க - டாக்டர் ராமதாஸ்
சொல்லவும் விழுங்கவும் முடியல - தா. பாண்டியன்
நாலு சுவத்துக்குள் நல்லாட்சி - ஜெயலலிதா
நிக்கட்டுமா? போகட்டுமா? - விஜயகாந்த்
தலைப்புக்கேற்ற அறிக்கை கொடுக்காதவர்களை நாளைய சரித்திரம் மன்னிக்காது.
விகார மேடை
விவாத மேடை அல்லது காரியக் கமிட்டி என்று தலைப்பிட்டு, காங்கிரஸ் கட்சிலியிருந்து தங்கபாலு, இளங்கோவன், சிதம்பரம், வாசன் ஆகியோரை மேடையேற்றி விவாதிக்க வைக்கலாம். கொஞ்ச நேரத்தில் விவாத மேடை, விகார மேடையாகி ஆளாளுக்கு வேட்டி சட்டைகளைக் கிழித்துக்கொண்டு அடித்துக் கொள்வார்கள். கீழே அமர்ந்திருக்கும் தி.மு.க. தொண்டர்களுக்கு சிரிப்பாகவும், குஜாலாகவும் இருக்கும். பிறகு அவர்களை சமாதானம் செய்ய ராகுலை அழைத்து பேச வைக்கலாம்.
வாழ்க செம்மொழி! வளர்க கலைஞர்!!
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :