வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் !
மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee) அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயையும், அதைத் தொடர்ந்து அனைத்து மரபணு மாற்றப்பட்ட பயிர்களையும் சந்தையில் அறிமுகப்படுத்த வழி ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்று தொழில் நுட்பத்தை வேளாண்மையில் பயன்படு்த்துவதற்கு தொழில்நு்ட்ப நிபுணர்களில் ஒரு தரப்பினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் விரிவான விவாதங்கள் நடத்தப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உறுதி அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தை முழுமையாக புரிந்து கொள்ள மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை எளிமையாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
மரபணு என்றால் என்ன?
ஒரு உயிர் அதன் தன்மைகளை அடுத்த சந்ததிக்கு மாற்ற உதவும் அணுவை மரபணு (DNA) என்று சொல்கிறோம். இந்த மரபணுதான் தாய், தந்தையின் உருவ அமைப்புகளையும், குணாதிசயங்களையும் குழந்தைகளுக்கு கடத்துகிறது. இது மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்து உயிரிகளுக்கும் பொதுவானது.
இந்த மரபணுக்கள் குறித்த முழுமையான உண்மைகளை மனித இனம் இன்னும் கண்டறியவில்லை. ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாகவே மரபணுவை மாற்றி அமைக்கும் ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன.
மரபணு மாற்றம் (Genetic Engineering –or- Genetic Modification) என்றால் என்ன? அது எதற்காக?
மாங்கனிகளில் ஒட்டு மாங்கனி என்று ஒரு வகையை கேள்விப் பட்டிருக்கலாம். நல்ல ருசியுள்ள மா வகையையும், நல்ல விளைச்சல் தரக்கூடிய மா வகையையும் இணைக்கும் விதத்தை உயர்நிலைப்பள்ளியில் உயிரியல் பாடத்தில் படித்திருப்போம். இரு மரக்கிளைகளை விவசாயிகளே இணைத்து இந்த புதிய ரகங்களை உருவாக்கிவிடுவார்கள். இரண்டு நல்ல குணங்களையும் இணைத்து கிடைக்கும் பழத்தின் விதை புதிய வீரிய ரக மாமரத்தை உருவாக்கும். மனித முயற்சிகள் இன்றி இயற்கையிலேயே பல வீரிய ரக உயிரினங்கள் தோன்றியுள்ளன.
இதை புரிந்து கொள்ள உயிர்களின் தோற்றத்தை ஆய்வு செய்து விளக்கிய அறிவியல் மேதை சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு கொள்கையை படித்தால் முழுமையாக புரியும்.
ஆரோக்கியமான உயிரினங்களை உற்பத்தி செய்வதற்காகவே இயற்கையும், மனிதர்களும் இது போன்ற உத்திகளை கையாண்டுள்ளனர்.
மரபணு மாற்று தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் எதற்காக எதிர்க்கின்றனர்?
அறிவியலும், தொழில்நுட்பமும் மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு மிகவும் அவசியம் என்றாலும் அதை பயன்படுத்துவதில் சில அம்சங்களை கவனிக்கவேண்டும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. அறிவியலை வழிபடும் சில மேதைகள் அதன் எதிர்விளைவுகள் மற்றும் தீயவிளைவுகள் குறித்து சிந்திக்க மறந்து விடுவதாக – அல்லது – மறுத்துவிடுவதாக புகார்கள் கூறப்படுகிறது. அறிவியலும் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்று அறிவியல் மேதைகளிலேயே ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அறத்தை மறந்து பல அறிவியல் மேதைகள் செயல்படுவதால் மனித இனத்திற்கு பேரழிவுகள் ஏற்படுவதாகவும் இந்த தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இயற்கையிலும், இயற்கையை சீரழிக்காத மனித முயற்சிகளிலும் மரபணு மாற்றம் ஏற்படுவதில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் இயற்கைக்கு சவால் விடும் வகையில் நடக்கும் நிகழ்வுகளை இயற்கை ஏற்பதில்லை. அதற்கு உரிய எதிர்விளைவுகளை மனிதர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மனித முயற்சியில் குதிரையையும், கழுதையையும் இணைத்து ஒரு புதிய விலங்கு உருவாக்கப்பட்டது. அதன் பெயர்: கோவேறுக் கழுதை. இந்த விலங்கு கழுதையைப்போல் பொதியும் சுமக்கும், குதிரையைப்போல் வேகமாகவும் செல்லும். ஆனால் இந்த புதிய விலங்கு மற்ற விலங்குளைப்போல இயல்பாக இனப்பெருக்கம் செய்யாது. கோவேறுக்கழுதை தேவைப்படும் போதெல்லாம் குதிரையையும், கழுதையையும் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இந்த விலங்கால் மனிதனுக்கு தீமை எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் இந்த விலங்கை மனிதன் இன்னும் உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கவில்லை. ஆனால் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உட்கொண்ட விலங்குகளுக்கு பல்வேறு நலக்கேடுகள் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மரபணு மாற்றுக்கூறுகள் மற்ற உயிர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் குறித்து உரிய பாதுகாப்பு ஆய்வு(BIO-SAFETY TEST)களை மேற்கொள்ளாமல் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை வேளாண்மையில் பயன்படுத்தக்கூடாது என்று மரபணுமாற்றுத் தொழில்நுட்பவியல் நிபுணர்களிலேயே ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
|