இரண்டாம் உலகப் போரின் செய்தியுடன் ‘ஆஸ்திரேலியா’ திரைப்படம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கறுப்பினருக்கும் வெள்ளையருக்கும் பிறந்த குழந்தைகளை வெள்ளையர்கள் அவர்கள் சமூகத்தில் கலந்து புது இனமாகிவிடக்கூடாது என எண்ணி அத்தகையோரை கவர்ந்து தனியான இடங்களில் அவர்களை அடைத்து வைத்திருந்த காலகட்டம். ஜார்ஜ் எனும் பழங்குடியினரைச் சார்ந்த அரசன் தன்னுடைய பேரனாகிய சிறுவன் நல்லாவிற்கு தன்னுடைய நாட்டு மருத்துவத்தையும் மந்திர தந்திரங்களையும் சொல்லித் தருகிறார். வெள்ளையர் பிடித்துப் போக வந்தால் அவர்கள் கண்ணிலிருந்து தப்பி மாயமாய் ஒளிந்து கொள்ளும் வித்தைகளையும் சொல்லித் தந்திருக்கிறார். மேலும் தாத்தாவிடமிருந்து மீன் பிடிக்கவும் மாடுகளை திறமையுடன் மேய்த்து பராமரிக்கவும் கற்றுத் கற்றுக் கொள்கிறான். தன் மீது அசராத நம்பிக்கையுடைய சிறுவனாக அவனை உருவாக்கியிருக்கிறார் ஜார்ஜ். ஒரு நாள் நல்லா தாத்தாவிடம் இருக்கும் போது மந்தையில் ஏதோ குழப்பம் ஏற்பட தாத்தா அவனை நீருக்கடியில் உடன் மறையச் சொல்கிறார். அவனும் மாயமாகி நீரின் அடியில் செல்கிறான். அவனைத் தொடர்ந்து பின்னால் ஒரு அம்பினால் குத்திக் கொல்லப்பட்டிருந்த வெள்ளைக்காரன் ஒருவனின் பிணம் நீரினுள் வந்து விழுகிறது. வெள்ளைக்காரனைப் பிடிக்காத தன் தாத்தா கொன்றிருப்பார் என எண்ணுகிறான் நல்லா. இறந்தவனுடைய குதிரையைப் பார்த்து பிரியப்பட்டு அதனை அழைக்கிறான் நல்லா. அது அமைதியாக அவனிடம் வரவே, அதன் மீதேறி தன்னுடைய வாழ்விட்த்திற்கு விரைகிறான். ‘Faraway Downs’ என்ற எஸ்டேட்டில் தான் அவனுடைய தாய் வேலை செய்கிறாள். குதிரையிலிருந்து தாவி குதித்து வீட்டுக்கு அருகே வருகையில் தூரத்தில் ஏதோ ஒரு கார் வருவதைக் கண்டு தன்னைப் பிடித்து போக வந்திருப்பார்களோ என்று அச்சப்பட்டு ஓட்டமாய் ஓடி உயரமான தண்ணீர் தொட்டியினுள் ஒளிந்து கொள்கிறான். ஆனால் அவனை பிடிக்க வந்த கூட்டம் இல்லை அது, ட்ரோவர் என்பவனும் அவனுடன் லேடி சாரா ஆஷ்லே என்பவளும், அவர்களுடன் வேலையாளான ஒரு கலப்பினரும் வந்திருந்தார்கள். கதைசொல்லியான நல்லாவின் பார்வையிலிருந்து இவ்வளவு விஷயங்களும் காட்சிப்படுத்தப்படுகிறது. ’நான் அந்த வெள்ளைக்கார சீமாட்டியை முதலில் பார்த்தது அப்போதுதான், ஆனால் இந்தக் கதையின் துவக்கம் இதுவல்ல...வேறு இடத்திலிருந்து’என்று அவன் குரல் ஒலிக்கையில் லேடி சாரா ஆஷ்லே இங்கிலாந்தில் இருக்கும் தன் மாளிகையிலிருந்து அவசரமாய் புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவளை ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருக்கும் ”ஃபார் அவே டவுன்ஸ்” சொத்தை விற்க வேண்டாம் என்று அறுவுறுத்திக் கொண்டிருந்தார், எதையும் கேட்கும் மனநிலையில் இல்லாத சாரா தான் நினைத்ததை செய்து முடிக்கும் பெண். அடிக்கடி கணவன் வேலை என்று சொல்லி வேறு ஏதோ ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாக சந்தேகப்படுகிறாள். சொத்தை விற்கும் சாக்கில் அவன் என்னதான் செய்கிறான் என்பதை ஆராய அவள் முடிவெடுக்கிறாள். பணமும் படிப்பும் அதற்கேற்ற அதிகாரமும் அவள் வசம் இருக்கையில் நினைத்ததை முடிக்க தனியாக விமானத்தில் ஏறிச் செல்கிறாள். கடிதம் மூலம் அவள் கணவன் வரவேண்டாம் என்று செய்தி அனுப்பியும், பிடிவாதக்காரியான சாரா அதை அலட்சியப்படுத்தி கிளம்பிவிடவே, வேறு வழியில்லாத ஆஷ்லே அவளின் துணையாக ட்ரோவர் என்பவனை ஏற்பாடு செய்திருப்பதாக தொலைபேசியில் சொல்கிறான். டார்வின் எனும் இட்த்திற்கு ஒருவழியாக வந்து சேர்கிறாள் சாரா. அங்கு ஒரு பாரில் அடிதடியில் இறங்கி அந்த இட்த்தையே துவச்சம் செய்து கொண்டிருக்கிறான் ட்ரோவர். அதைக் கண்டுகொள்ளாமல் நேராக அந்த பாரினுள் நுழைந்த சாரா பார் பணியாளரிடம் தனக்கு ஒரு பியர் ஆர்டர் செய்கிறாள். பெண்களுக்கு அங்கே குடிக்க அனுமதி இல்லை என்கிறான் அவன். எரிச்சலுடன் அங்கிருந்து வெளியே செல்ல எத்தனிக்கையில் பார் வாசலில் அந்த சண்டை உக்கிரம் அடைகிறது. வெளியே வந்த சாராவின் பெட்டியை உடைத்து அதிலிருந்த துணிகளை தூக்கி எறிகிறான் ட்ரோவர். கத்திய சாராவை சண்டை முடிந்த்தும் அலட்சியமாக பார்க்கிறான். அவள் தான் சாரா என்பதை அறிந்தும் அதே அலட்சியத்துடன் இருக்கிறான் ட்ரோவர். அவன் ஒரு நாடோடி. தான் யாருக்கும் தலைவணங்காதவன், யாரும் எனக்கு எஜமான்ன் இல்லை, ஆஷ்லே சொல்லியிருப்பதால் சாராவை எஸ்டேட்டிற்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டிருப்பதாய் சொல்கிறான். அடுத்த நாளே ஒரு ஓட்டை ட்ரக்கில் சாராவை அழைத்துக் கொண்டு புறப்படுகிறான். வழியெங்கிலும் அவனுடைய அட்டகாச சிரிப்பையும் ஆரவாரத்தையும் டெண்ட் அடித்து தங்கும் இடங்களில் அவனுடைய முரட்டுப் பேச்சுகளை வேறு வழியின்றி சகித்துக் கொண்டு பயணம் செய்கிறாள் சாரா. ஒருவழியாய் அவர்கள் எஸ்டேட்டிற்கு வந்து சேர்கிறார்கள். அந்தக் காரைப் பார்த்துதான் ஓடி ஒளிந்திருக்கிறான் நல்லா. ட்ரோவரின் பேச்சுகளிலும் தன்னை பெரிதாக மதிக்காத எரிச்சலினாலும் காரிலிருந்து இறங்கியவுடன் விடுபட்ட உண்ர்வுடன் வீட்டினுள் வேகமாக செல்ல முயல்கிறாள் சாரா. அவளை ட்ரோவர் தடுக்கிறான், எதையும் கேட்காத இயல்பினளான சாரா வீட்டிற்குள் சென்றதும் மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளாகிறாள். அவளுடைய கணவனின் இறந்த உடல் மேஜையின் மீது கிட்த்தப்பட்டிருக்கிறது. துயருடன் அவன் உடலை அடக்கம் செய்துவிட்டு அந்த ஊரிலேயே இருந்து சொத்தை கார்னே எனும் பெரும் பணக்கார துரைக்கு விற்க முடிவெடுக்கிறாள். சாராவின் இட்த்தைத் தவிர அந்த பிரதேசம் முழுவதும் கார்னே குடும்பத்தார்க்கு சொந்தம். இதை அவர்களிடமே விற்று விட்டால் முழுமையாக இருக்கும் என நினைத்தாள் சாரா. அந்த இரவில் தனிமையில், பழக்கம் இல்லாத புது இட்த்தில் உறக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் சாரா. பறவையின் ஒலி போன்ற ஏதோ சத்தம் கேட்டு எழுந்து நிற்கையில் அங்கு படிக்கட்டின் அடியில் ஒரு உருவத்தைக் கண்டு அஞ்சுகிறாள். அது நல்லா. தன்னைப் பற்றி அவளிடம் சொல்லி தன் தாத்தா ஜார்ஜ் அவளின் வருகையைப் பற்றி முன்னரே தெரிவித்திருக்கிறார் என்கிறான். மேலும் ப்ளெட்ஜர் என்பவனின் உதவியுடன் கார்னே இவர்களின் மாட்டுக் கொட்டையில் கைவைக்கிறார்கள், நிறைய மாடுகளை கவர்ந்து விட்டார்கள் தடுக்க வந்த தங்களை பலமுறை துரத்தியடித்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறான். முதலில் இதை நம்ப மறுக்கிறாள் சாரா. ஆனால் அந்த அப்பாவி சிறுவனின் வெள்ளந்தியான பேச்சும் மாய வசீகரமான அவனின் குரலும், மிக்க் கூர்மையான அவன் விழிகளின் தீட்சண்யமும் முதல் பார்வையிலேயே அவனை அவளுக்கு பிடித்துவிடுகிறது. நீ மழை போன்றவள் என்று என் தாத்தா சொல்லியிருக்கிறார் என்கிறான் நல்லா. அவள் அமைதியாக புன்னகைக்கையில் நல்லாவின் அம்மா அங்கு ஓடோடி வந்து தன் மகனை போலீஸ் பார்வையிலிருந்து காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள். அப்போது கார் சத்தம் கேட்கவே தாயும் மகனும் ஓடிப் போய் தங்களின் மறைவிட்த்தில் ஒளிந்து கொள்கிறார்கள். சாராவின் கணவரின் ட்ரைவர் ப்ளெட்சர் தான் வந்திருந்தான் அடுத்த நாள் காலை சாரா சொத்து விற்பனை சம்பந்தமாக கிளம்பி கொண்டிருந்தாள். அங்கு வந்த ப்ளெட்ஜரைப் பார்த்து தன் எஸ்டேட்டில் நடக்கும் ஊழல்களைப் பற்றிக் கேட்கிறாள். அவன் அப்படி எதுவும் இல்லை என மழுப்புகிறான். சாரா நல்லா எல்லா விஷயத்தையும் தன்னிடம் சொல்லிவிட்ட்தாக அவள் சொல்கிறாள். நல்லா பயப்படாதே இங்கு வா என்று அழைக்கிறாள். முந்தைய இரவில் ப்ளெட்ஜர் நல்லாவின் வீட்டிற்கு அவன் சென்றிருந்தான். அவன் அம்மாவும் பாட்டியும் ப்ளெட்ஜரிடம் போ என்று அவர்கள் பாஷையில் சொல்கிறார்கள். நல்லா அவனுடைய மகன் தான். ஆனால் ஏனோ அவனுக்கு எப்போதோ வந்து விருந்தாளியைப் போல் தங்கிவிட்டுப் போகும் அவனை சுத்தமாக பிடிக்கவில்லை. இப்போது அவனைப் பற்றி சாராவிடம் வேறு சொல்லிவிட்ட்தால் இனி தன் நிலை என்னவாகும் என பயந்தபடி ப்ளெட்ஜரின் அருகில் செல்கிறான். அவன் நயமாக பேசி அவனை அருகில் வரவழைத்து அடித்துத் துவைக்கிறான். இதைப் பார்த்து மிகவும் கோப்ப்பட்ட சாரா நல்லாவை காப்பாற்றி ப்ளெட்ஜரை உடனடியாக வேலையை விட்டு தூக்கிவிடுகிறாள். 1500 மாடுகளை எப்படி நீ தனி ஆளாய் விற்கப்போகிறாய் அதையும் பார்த்துவிடுகிறேன் எனக் கறுவியபடி ப்ளெட்ஜர் அங்கிருந்து ஆத்திரத்துடன் செல்கிறான். அன்றிலிருந்து சாராவை அவர்கள் ‘மிஸஸ் பாஸ்’ என அழைக்கத் துவங்கினர். போலீஸ் ஒருவர் அவ்வீட்டுக்கு வருவதைப் பார்த்த நல்லாவும் அவன் தாயும் உயரமான அந்த நீர்த்தொட்டியில் வழக்கம் போல பதுங்கிக் கொள்கிறார்கள். போலீசுடன் வந்த ட்ரைவர் முகம் கழுவ அத்தொட்டியில் தண்ணீரை திறந்துவிடவே நீர் நிலை ஏறிக்கொண்டே வருகிறது. நீண்ட போராட்ட்த்திற்குப் பிறகு நல்லாவைக் காப்பாற்றிவிட்டு தன்னுயிரை விடுகிறாள் அந்த கறுப்பினத் தாய். மனம் உடைந்த நல்லாவை சாரா தேற்றுகிறாள். அவனுக்கு கதை சொல்லியும் பாட்டுப் பாடியும் தன்னால் இயன்ற வரை அந்த பிஞ்சின் மனதில் நம்பிக்கை ஊற்றை நிரப்புகிறாள் பிறப்பால் வெள்ளையராக இருந்தாலும் மனித நேயத்துடன் இருக்கும் அந்த அன்னை போன்றவள். பணப் பற்றாக்குறையினாலும், தன்னுடைய சொத்து இப்படி அநியாயமாக திருடப்பட்டுக்கொண்டிருப்பதை தவிர்க்க உடனடியாக அதை விற்க முடிவெடுக்கிறாள். தன்னிடம் உள்ள மாட்டுப் பண்ணையை விற்றால் நிலைமையை சமன் செய்ய முடியும் என அறிந்து காரியத்தில் இறங்குகிறாள். இதற்கெல்லாம் காரணமான கார்னேவின் மந்தை வேறு போட்டிக்கு விற்பனைக்கு வந்துள்ளது அதை முந்தவேண்டும் என்ற நிர்பந்தமும் கூடவே எழ என்ன செய்வது எனக் குழம்பித் தவிக்கிறாள். சரியான சமயத்தில் வந்து சேர்கிறான் ட்ரோவர். அவனைத் துணைக்கு அழைக்கிறாள் சாரா பரிசாக தன்னுடைய செல்லக் குதிரையை அவனுக்குத் தருவதாய் வாக்களிக்கிறாள் அவனும் சம்மதிக்கிறான். அடுத்த நாள் சாரா தன் சிறிய குழுவினருடன் புறப்படுகிறாள். புழுதி படர்ந்த அந்த நாளின் நெடும்பயணத்திற்கு ட்ரோவர், நல்லா மற்றும் ப்ளயன் எனும் கலப்பினருடன் அவர்கள் கிளம்பினார்கள். சொத்தை கைமாற்ற மட்டுமில்லாமல் தனக்கு முன்னால் கப்பலில் வந்திருக்கும் ஆர்மியிடம் சாரா மந்தையை விற்கப் போவதை அறிந்த சிற்றரசன் கார்னே ஆத்திரம் அடைகிறான். ப்ளெட்ஜரிடம் இதை எப்படியாவது தடுக்குமாறு சொல்கிறான். ப்ளெட்ஜர் சிரித்தபடி சம்மதிக்கிறான்.