அவள் அப்படித்தான்
காலத்தின் நுண்ணிய மாற்றங்கள் திரையில் பதிவு செய்யப்படும் போது அது நிகரற்ற படைப்பாகிவிடுகிறது. 1978-ல் வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ தமிழ் சினிமா உலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் திரைப்படமாகும். இப்படம் உருவான காலகட்டத்தில் பெண்கள் மெல்ல தங்கள் ஓட்டுக்குள்ளிருந்து வெளிவரத் தொடங்கியிருந்தார்கள். வீடு மட்டுமே உலகம் என்றிருந்த பெண்களுக்கு சாலைகள், பேருந்துகள், அலுவலகங்கள், வேலைச் சூழல்கள் என வித்யாசமான ஒரு உலகின் கதவு திறக்கவாரம்பித்தது. டீச்சர் வேலைக்கு மட்டுமே சென்றுகொண்டிருந்த பெண்கள் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் தனக்கான வேலையை தேடத் தொடங்கினார்கள்.
வீட்டின் இதமான சூழலை விட்டு வெக்கை மிகுந்த புதிய பிரதேசம் அவர்களுக்கு கடினமாக இருந்தாலும் உவப்பானதாகவே இருந்தது. காலம் காலமாய் அடுப்பறையின் இருண்ட மூலைகளில் சிறைப்பட்டுக் கிடந்த அவர்களுக்கு தெள்ளந்தெளிவாய் வானம் வசப்பட்டதைக் கண்டு திகைத்தும் சற்று குழம்பியும் இருந்தார்கள். ஆனால் அப்போதும் அவர்களுக்கான சுதந்திரம் அளந்தே அளிக்கப்பட்டது. அலுவலகம் அதைவிட்டால் வீடு என குறுகிய வட்டத்துள்தான் சுழல அனுமதிக்கப்பட்டார்கள். ஆண்களால் அவர்களின் சட்டதிட்டங்களால் உருவான உலகில் பெண்கள் எப்போதும் அடக்கியாளப்படவேண்டியவள் என்ற பொதுக்கருத்துதான் பதிந்திருக்கிறது, பொருளாதார ரீதியாக குடும்பத்திற்கு உதவிகரமாக இருந்த போதினும் அவர்கள் இரண்டாம் பாலினமாகவே இன்றளவும் நடத்தப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட பெண்ணினம் தனதாக வேண்டிய சுதந்திரத்தின் வாசலை இன்னும் அடையவில்லை என்பது உண்மைதான். ஆனால் அக்கதவு வெகு அருகாமையில் தான் இருக்கிறது. இன்று பெண்கள் பல துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்க நினைத்ததைச் சாதிக்க, தன் காலில் தானே நிற்க, பொருளாதார விதயங்களில் தனித்துவத்துடன் முடிவுகள் எடுக்கவென பல மாற்றங்கள் அவர்களுக்குக் கிடைக்க காரணியாய் இருந்தது கடந்த தலைமுறையைச் செர்ந்த பெண்கள் போர்க்கொடியை சத்தமில்லாமல் தூக்கியதால்தான். நின்றால், நடந்தால், பேசினால் சிரித்தால் என்று குற்றம் சுமத்தப்பட்டே பழக்கப்படுத்தப் பட்ட பெண்கள் இன்று நீதிபதியாகவும், பைலட்டுக்களாகவும், விஞ்ஞானிகளாகவும் திகழ முடிந்ததற்கு பின்னனியில் நீண்ட வேதனையான சரித்திரம் ஆழமாக பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. சிறு துளி பெரு வெள்ளம் போல அவள் அப்படித்தான் பெண்களின் வலியை ஒரு தனிப் பெண்ணின் வாழ்வினூடே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படத்தில் மஞ்சுவாகவே வாழ்ந்திருப்பார் ஸ்ரீப்ரியா, மிகை உணர்வுள்ள பெண்ணாய் அற்புதமான பாத்திரத்தில் தன்னை வெகு ஆழமாய் பொருத்தி, உணர்ந்து நடித்திருப்பார். 'உறவுகள் தொடர்கதை' பாடலில் முகத்தில் அவர் மிதமான பாவங்கள், உடல் மொழி என அச்சூழலின் யதார்த்தத்தை அழகுற வெளிப்பட வைத்திருப்பார்.
கதையில் முக்கியமாக மூன்றே பாத்திரங்கள். கதைநாயகியின் பார்வையில் செல்வதால் முதலில் மஞ்சு – தாயின் கள்ளக் காதல், காதலித்தவனின் நம்பிக்கைத்துரோகம், மிகவும் நேசித்த மனிதனின் சுயரூபம் அறிந்தபின்னான ஏமாற்றம் என பலவிதயங்களில் ஆழமாக பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்தாய் எல்லா ஆண்களையும் வெறுப்பவளாகிவிடுகிறாள் மஞ்சு. ’ஐ ஹேட் ஹிப்போக்ரேஸி’ என்பவள். போலித்தனம், சுயநலம், ஆணாதிக்கம் இவற்றையெல்லாம் கண்டால் பொங்கியெழுவாள். அன்பைத் தேடி அனல் காற்றை சுவாசித்தபடியே பாலைவெளியில் கொடும் வலியுடன் அவள் நடந்துகொண்டிருக்கிறாள். அவளை அவளுக்காய் நேசிக்கும் ஒருவனை சந்திக்க நேரும்போது அதீதமான உணர்வுகளாலும் தேவையற்ற ஈகோவினாலும் அவனையும் இழக்கிறாள். மனதிற்கு மிக நெருக்கமான அம்மனிதனின் நேசம் கூட கடைசியில் அவளுக்கு நிலைக்கவில்லை. ஆனால் அதற்காக அவள் அங்கேயே தேங்கி விடுபவள் இல்லை, மஞ்சு தன்னை சரிசெய்துகொள்வாள்.
|