மொழி – கொரியன் இயக்குனர் – கிம் கி - டுக் நடிகர்கள் – ஜுங் வூ ஹா (ஜி-வு) / ஜி-யூவன் பார்க் (சி-ஹி) சி-ஹி (See- Hee) இளம்பெண். அவளுடைய காதலன் ஜி-வுவை (Ji-Hoo) உயிரை விட அதிகமாக நேசிப்பவள். அவளுடைய மிகை அன்பும் அதீதமான உணர்வழுத்தமும் ஜுவுவை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசையும் ஜிவிற்கு பல சமயங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஜி எதார்த்தமாக மற்ற பெண்களிடம் பேசினால் கூட சிஹி கோபக்காரியாகிவிடுவாள். ரெஸ்டாரெண்டில் சிஹிக்காக காத்திருக்கிறான் ஜி. அவள் வரத் தாமதமாகிறது. அங்கு பணிபுரியும் இளம் பெண்ணை அவன் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவாறே அவன் எதிரில் வந்து அமர்கிறாள் சிஹி. இதற்கிடையில் வாசலில் அவனுடைய காரை முன்னகர்த்தச் சொல்கிறார்கள். வெளியே செல்கிறான். இரண்டு இளம் பெண்கள் காரை நிறுத்த முடியாமல் தடுமாறவே, தன் காரை முன்னே எடுத்து உதவுகிறான். அவர்களிடம் அவன் சிரித்து பேசுவதையும், விசிட்டிங் கார்டை வாங்கிக் கொள்வதையும் கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்த சிஹிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. அவன் உள்ளே வந்ததும் ஏன் அவர்களிடம் இளித்துப் பேசினாய், எதற்கு கார்ட் வாங்கினாய் எனத் திட்டுகிறாள். சத்தமாக பேசாதே அவர்கள் காதில் விழுந்து விடப் போகிறது என கெஞ்சுகிறான் ஜி. அவள் அந்த கார்டை அவனிடமிருந்து பறித்து கிழித்துப் போட்டுவிட்டு நேராக அந்த இளம் பெண்களிடம் போய் என் காதலனிடம் எதற்கு கார்ட் கொடுத்தீர்கள் என அசிங்கமாக பேசுகிறாள். கார்ட் கொடுத்தவளுக்கும் கோபம் வரவே அவள் சிஹியைத் திட்டிகிறாள். ஜி அவளிடம் மன்னிப்புக் கேட்டு சிஹியை கிளம்ப்பச் சொல்கிறான். அரும்பாடுபட்டு அவளை காருக்கு அனுப்பிவிட்டு அந்தப் பெண்களிடம் மீண்டும் மன்னிப்புக் கேட்கிறான். கார்ட்டைக் கொடுத்தவள் உங்கள் மீது அவள் அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள். அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறாள், பொறாமையாக இருக்கிறது எனச் சொல்கிறாள். ஜிஹூவிற்கும் சிஹியின் மீது அளவற்ற காதல். அன்றிரவு அவளுடைய இருப்பிடத்திற்கு சென்று மன்னிப்புக் கேட்கிறான். அவளும் மனமிறங்கி அவனுடன் சமாதானமாகிறான். அன்பும் ஆவேசமுமான கூடலுக்குப் பின் சிஹி மறுபடியும் சண்டையை ஆரம்பிக்கிறாள். அந்தப் பெண் அழகாக இருந்தாள்தானே, என்னுடன் படுக்கும் போது அவளுடைய நினைவு உனக்கு வந்ததிருக்குமே எனக் கேட்டு அவனை வெறுப்படையச் செய்கிறாள். அவன் இல்லையென்று சொன்னதை அவள் நம்பவில்லை. மீண்டும் ஒரு முறை கூடலுக்கு அழைத்த சிஹி அந்தப் பெண்ணை நீ மனதில் நினைத்துக் கொள் பரவாயில்லை என்கிறாள் அவளுடைய விசித்திர மனப்போக்கை ஜியால் புரிந்து கொள்ள் முடியவில்லை. மூச்சிரைத்து போர்வைக்கடியில் படுத்திருக்கையில் அவளைத்தானே நினைத்தாய் என மீண்டும் கேட்கிறாள். நீதானே நினைக்கச் சொன்னாய் என எரிச்சலுடன் அவன் சொன்னதும் அப்ப நான் என்ன சொன்னாலும் செய்வாயா, பாவம் நீ என்ன செய்வாய் ஒரே முகம், ஒரே உடல், அதுதான் உனக்கு நான் அலுத்துப் போய்விட்டேன் என அழுது புலம்புகிறாள். ஜி எவ்வளவு முயன்றும் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை. இவ்வாறிருக்க ஒரு நாள் சிஹி திடீரென்று காணாமல் போய்விடுகிறாள். அவளை எல்லா இடத்திலும் தேடியலைகிறான் ஜி. அவளூடைய நெருங்கிய தோழியிடம் விசாரித்தும் அவளைப் பற்றி எந்த தகவலும் அவனுக்குக் கிடைக்கவில்லை. மிகவும் மனம் உடைந்த நிலையில் நன்பர்களுடன் குடிக்கிறான். நண்பர்கள் அவனிடம் தொல்லை விட்டதென்று நிம்மதியாக இரு என அறிவுறுத்துகிறார்கள். அவர்களுடன் டேடிங் வந்த பெண்ணுடன் அவனை அனுப்பி வைக்கிறார்கள். போதையில் இருக்கும் ஜி மன சஞ்சலத்துடன் நானும் மனிதன் தானே எனக்கும் உடல்பசி இருக்கத்தானே செய்யும் என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு அவளை அந்த ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்கிறான். இருவரும் பேசிக்கொண்டே உடைகளை களையும் போது ஜன்னல் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். ஹோட்டல் மேனேஜர் வந்து இங்கு படுக்கத்தான் அனுமதி தந்திருக்கிறோம் எதையும் உடைக்க இல்லை என்று சொல்லி அவர்களை வெளியே அனுப்புவிடுகிறார். தனிமையின் நடு ராத்திரி தெருவில் நடந்த ஜி அங்கிருந்த மரத்தின் மீது தன் ஆவேசத்தையெல்லாம் சேர்த்து காலால் உதைக்கிறான். அடுத்த சில தினங்களில் சிஹியின் தோழி ஜியை தன்னுடைய ஓவிய கண்காட்சிக்கு அழைக்கிறாள். அவன் அதை மிகவும் ரசித்து அவளை பாராட்டுகிறான். இருவரும் இரவு உணவு சேர்ந்து சாப்பிடுகையில் இருவருக்கும் ஒரே மாதிரியான சோகம் நடந்திருப்பதை அறிகிறார்கள். அவளின் காதலன் அவளை விட்டுப் போய்விட்டதாலும், இவனின் காதலி தொலைந்ததாலும் இருவரும் இணையலாமே என்று பேசுகிறார்கள். இரவு என்னுடனே தங்கிவிடு என அவள் சொல்லிவிட்டு ரெஸ்ரூம் செல்கிறாள். பாத்ரூமிலிருந்து திரும்பி வந்த அவள் முகம் கலக்கமாக இருக்கிறது. ஜியிடம் நெருக்கமாக பேசியவள் இப்போது நீ இன்னொரு நாள் வா என்கிறாள். ஆத்திரமடைந்த ஜி ஏன் இந்த திடீர் மாற்றம் எனக் கேட்கிறான். ஒன்றுமில்லை என்னை வீட்டில் இறக்கிவிட்டு போய்விடு உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்று சொல்லிவிடுகிறாள். குழப்பத்துடன் ஜி அவளை இறக்கிவிட்டு எரிச்சலுடன் திரும்புகிறான். கண்ணாடி உடைந்ததற்கும் தோழியின் மனமாற்றத்திற்கும் காரணம் காணாமல் போன சிஹியாக இருக்கலாம். சிஹியை மறக்க முடியாமல் துயரடைகிறான் ஜி. ஆனால் அவள் இல்லாத வாழ்க்கையை கடந்து தானே ஆகவேண்டும் என்ற நிலையும் அவனுக்குப் புரிகிறது. என்ன செய்வது என்ற குழப்பத்தில் கடற்கரைக்குச் செல்கிறான். படகில் ஏறி பக்கத்தில் இருக்கும் சிறிய தீவிற்கு செல்கிறான். சிற்பங்கள் நிறைந்து கிடக்கும் தனித் தீவு அது. மனம் போன போக்கில் நண்பர்களுடன் பொழுதைக் கழித்த அவனுக்கு புதிய தோழி ஒருத்திக் கிடைக்கிறாள். ஏனோ ஜிக்கு யாருடனும் ஒன்ற முடியவில்லை. சிஹியின் மீதுள்ள மெய்க்காதலே அதற்குக் காரணம். அவனால் எளிதில் அவளை மனதிலிருந்து விலக்க முடியவில்லை. அடுத்த முறை தனியாகவே அந்த தீவிற்கு கிளம்பிச் செல்கிறான். படகில் போய்க்கொண்டிருந்த போது தன் நேரேதிரே முகத்தில் திரை அணிந்து கவர்ச்சியாகத் தெரிந்த ஒரு பெண்ணின் மீது அவனுடைய பார்வை அடிக்கடி திரும்புகிறது. படகு நின்றதும் அவளைப் பின் தொடர்ந்து செல்கிறான். அவளும் போக்குக் காட்டிக் கொண்டே சென்று ஒரு கட்டத்தில் சங்காலான சிற்பத்தினுள் சென்று மறைந்துவிடுகிறாள். ஏமாற்றம் அடைந்த ஜி திரும்பி படகில் ஏறி தன் காரை கிளப்புகையில் அந்தப் பெண் நடந்துப் போவதைப் பார்த்து எங்கே விட வேண்டும் சொல் இறக்கி விடுகிறேன் என்கிறான். அவள் பதிலேதும் சொல்லாமல் வேகமாக அங்கிருந்து செல்கிறாள்.