Page last updated at
Wednesday , May 26 2010 at 11:57:28 PM IST
நிலாவை வரைபவன் (கரிகாலன்) நாவலுக்கான விமர்சனம்.
-
அசதா.
எழுதப்பட்ட வரிகள் எப்போதுமே எழுதப்பட்டுக்கொண்டிருப்பவைதான்.
ஒரு மூன்றாம் உலக நாடாக வாழ்பரப்பின் எல்லா அடுக்குகளிலும் அளப்பரிய பல்தன்மை கொண்ட நாடாக இந்தியா இருந்த போதும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து உலகைப் புரட்டிப் போட்ட பல்வகையான சித்தாந்தங்களின் தொடர்ச்சியை தொடர்ந்து அவதானித்தும் உள்வாங்கியும் வந்த போதும், நமது இலக்கியப் புதுமைகள் மேற்கத்திய அல்லது இலத்தீனமெரிக்கப் பனுவல்களை மாதிரியாகக் கொண்டே உருவாக்கப்படுபவையாக இருக்கின்றன. அசலான முயற்சிகள் எனப்படுபவையும்கூட தமது புதுமைத் தன்மையின் கூறுகள் பலவற்றுக்கு மேற்சொன்ன மேலை இலக்கியங்களிலிருந்நே அடிப்படைகளைக் கடன் பெறிறிருக்கின்றன. பொதுவாகப் படைப்பிலக்கியம் முதல் விமர்சனச் செயல்பாடு வரை அதிகமும் நாம் மேற்கை பின்பற்றும் போக்கின் பின்னிருக்கும் காரணிகள் ஆய்வுக்குரியன. இந்தியத் துணைக்கண்டம் உலகில் செல்வாக்கு செலுத்துவதான, குறைந்த பட்சம் இந்திய இலக்கிய வெளியில் தனது இருப்பை அறியத் தருவதான, தத்துவ உருவாக்கங்களின் பிறப்பிடமாக தற்போது ஏன் இல்லை என்பதும் இதனோடு இணைந்து ஆராயப்படவேண்டியதாகும். இதற்குள் தொழில்படும் நமது காலனிய மனோபாவம் தனியே வைத்து ஆராயத் தகுந்தது.
சற்றேறக்குறைய ஒரு கால் நூற்றாண்டுக்கு முன் தமிழ்ச் சூழலில் மிகுந்த உற்சாகத்துடனும் சற்றே பிரமிப்புடனும் கைநீட்டி வரவேற்கப்பட்ட பின் நவீனத்துவம்-பின் நவீனத்துவப் புனைவெழுத்து- இன்று யதார்த்த கதையாடல்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விட்டது. ஆயினும் இன்றைய யதார்த்தப் புனைவெழுத்து அடைந்திருக்கும் துலக்கத்துக்கும் பிற வரேற்கத்தக்க பரிமாணங்களுக்கும் இந்தக் கால் நூற்றாண்டுகால பின் நவீனத்துவப் புனைவெழுத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியிருப்பதை நாம் மறுக்க முடியாது.
தமிழின் முதல் பின் நவீனத்துவ நாவல் எது, அப்படியொன்று எழுதப்பட்டிருக்கிறதா போன்ற கேள்விகள் பகடியின் பொருட்டு எழுப்பப்படுகின்றனவா அல்லது உண்மையிலேயே தீவிரத்தன்மையுடன் எழுப்பப்படுகின்றனவா என்ற ஐயம் இருக்கிறது. எப்படியாயினும் இக் கேள்விகள் இன்னும் தீர்க்கமான பதில்களைக் கண்டடையவில்லை என்ற என் புரிதலிலிருந்து இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.
‘மூன்றாம் உலகத் தமிழ்ப் புதினத்தின் ஒரு வகை மாதிரி’ என்ற ரமேஷ் பிரேதனின் பின்னட்டைக் குறிப்புடன் வெளிவந்திருக்கும் கரிகாலனின் ‘நிலாவை வரைபவன்’ நாவல் குறியீட்டுப் பின்புலத்தில், அ-நேர்க்கோட்டுப் பாணியில் அனேகமும் கவிதையாயும் கவிதைக்கு நெருக்கமாயும் அமைந்த மொழியைக் கொண்டு இயங்கும் ஒரு கொலாஜ் கதையாடல். பொருந்தாமை என்பது நாவலின் சரடாக இருக்கிறது. சமூகம், குடும்பம், பள்ளிக் கூடம், அரசாங்கம் போன்ற அமைப்புகளோடு பொருந்த இயலாமையின் துக்கத்தில் நாவலின் கதாபாத்திரங்கள் உழன்றபடியே உள்ளனர். கரிகாலன் படைத்துக் காட்டும் உலகில் சமூகத்தோடு பொருந்தமுடியாதவனும் கவித்துவ மனம் படைத்தவனுமான எக்ஸ், ஒருபால் உறவாளர்களும்,இன்டெலக்ச்சுவல்களுமான ஸ்டெல்லாவும் அவள் தோழியும், பள்ளியை வெறுத்து எப்போதும் தனக்கான கற்பனை உலகைச் சிருஷ்டித்து வாழும் சிறுவன் முகுந்த், இளம்பெண் நிலா, இசை மற்றும் அவளது கணவன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களோடு பயணிக்கும் வாசகன் இவர்களுள் தன்னைக் காணும் தருணங்கள் உண்டு. எண்கோண நகராயிருந்து, பண்ணிருகோண நகராகிப் பின் மேலும் மேலும் சீர்கெடும் ஒரு நகரினைக் குறியீடாகக் கொண்டு தமிழக அரசியல், மக்கள் வாழ்வு, குறிப்பாக ஆள்பவரின் நலனை முன்னிறுத்தியதான சாதிய அரசியல் ஆகியனவும் நுட்பமாக சித்தரிக்கப்படுகின்றன.
பின்நவீனத்துவக் கதை கூறலின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகக் கூறப்படும் ‘சுருங்கக் கூறல்’(MINIMALISM) குறைவான வார்த்தைகளில் கூறல் என்பது மட்டுமல்லாது பாத்திரங்களை பிரத்தியேகத் தன்மையற்ற பொதுவினராய்ப் படைத்தல் மற்றும் விரிவான விவரணைகள் தகவல்களைத் தவிர்த்தல் என்பதுமாகும். இதன்வழி வாசக மனதில் கதை மாந்தரும் கதைக் களனும் வளர்த்தெடுக்கப்பட வகையேற்படும். ‘நிலாவை வரைபவன்’ இவ்வகையில் ஒரு Minimalist நாவலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
நாவலின் சிறப்பான தருணங்கள் அதன் யதார்த்த விவரிப்புகளில் இருப்பதையும் மறுக்க முடியாது. குழந்தையுடன் வரும் பெண்ணுடன் உறவுகொள்ள விழைகையில் இன்னொரு பக்கத்தில் அக்குழந்தை இயல்பாக முலையருந்துவது, வீட்டைவிட்டுப் போய்விட்ட மனைவி எங்கோ இருக்கிறாள் என தொலைபேசியில் செய்தி வருவது அதைத் தொடர்ந்த கணவனின் ஆசுவாசம் ஆகியன நாவலில்
முக்கிய தருணங்கள்.
வழக்கமாகக் கரிகாலனது கவிதைகளில் காணும் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் அதன் மக்கள் குறித்த அக்கறையும் விசனமும் இதில் சற்றே விரிந்தவொரு தளத்தில் முன் வைக்கப்படுகின்றன. கவிதைகளில் முன்னோக்கிய ஒரு பாய்ச்சலைத் தரும் கவித்துவ மொழி புனைவில் பிரச்சினைகளின் தீவிரத்தை மட்டுப்படுத்திவிடுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
கதை மாந்தர்களின் வாழ்வனுபவங்கள், மன நெருக்கடிகள் போன்றவை நாவலின் அதீத மொழி மற்றும் கதை கூறலில் விரைவு என்பதான பதற்றம் ஆகியவற்றால் தம்மீதான மீள்விசாரணைக்கும் விரிவுக்கும் இடமற்று சுருங்கிவிடுகின்றன. இவ்வாறு,ஒரு விரிந்த கதையனுபவமாக மாற வேண்டிய இப்புனைவு தனது எல்லைகளை குறுக்கிக் கொள்வதாகப்படுகிறது. குறியீடு, அ-நேர்க்கோட்டுத் தன்மை, சுருங்கக் கூறல் போன்ற பின் நவீனத்துவக் கூறுகள் நாவலில் இடம் பெற்றும் வடிவ ரீதியான ஒரு ஒற்றைத் தன்மை நாவலுக்கு அமைந்து விடுவது ஒரே மாதிரியான மொழிப் பயன்பாட்டின் காரணமாயிருக்கலாம். எனினும் நாவல் வாசகனை அவனது அனுபவ வெளிக்கு உள்ளும் வெளியிலுமாக கேள்விகளின் தொலைவில் நிற்கவைப்பதிலும் அவனுள் சமன் குலைவினை உருவாக்குவதிலும் தனது இருப்பை நியாயப்படுத்திக் கொள்கிறது.
‘தமிழில் நீண்ட மரபுடைய தத்துவ ஆய்வு நவீனத்தளத்தில் முறையாக விவாதிக்கப்படவில்லை. முடிவுகள் மட்டுமே இங்கு வைக்கப்படுகின்றன. அவற்றை கண்டடையும் வழிகள் மறைக்கப்படுகின்றன. இதனால் தமிழ் பின்நவீனத்துவம் என்பது இன்னும் ஆய்ந்தறிய வேண்டிய நிலையிலேயே உள்ளது.
தமிழ்ப் பின்நவீனத்துவம் பற்றி ஆய்வு செய்யும் யாருக்கும், தமிழ் வரலாறு, தமிழின் மாற்று வரலாறு, தமிழ் உப மரபுகள், மாற்றுச் சிந்தனைகள், இலக்கியப் பன்மை மரபுகள் பற்றிய அடிப்படையான மரபும், அக்கறையும் தேவை. தமிழிலக்கியத்தையும், இலக்கிய கோட்பாடுகளையும், தமிழிலுள்ள ஆயிரக்கணக்கான கதையாடல் வடிவங்களையும் முழுமையான நுண் வாசிப்பிலும், மறுவாசிப்பிலும் அணுகிய பிறகே, தமிழில் பின்நவீனத்துவம் பற்றியும் தமிழ்ப் பின்நவீனத்துவம் பற்றியும் நாம் பேச முடியும்.’
-ரமேஷ்-பிரேம். பேச்சு - மறுபேச்சு (பின்நவீனத்துவம் நோக்கி).
ரமேஷ்-பிரேமின் இக்கூற்றை முன் வைத்து நான் துவக்கத்தில் எழுப்பிய பின்நவீனத்துவ நாவல் பற்றிய கேள்விக்கு விடை காண முற்படலாம் என நினைக்கிறேன். இவ் விடைகாணும் முயற்சியில் கரிகாலனின் நிலாவை வரைபவன் செய்திருக்கும் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்று.
(மே 8, 2010 அன்று சேலத்தில் நடந்த ‘சொற்கப்பல்’ கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை-சிறு திருத்தங்களுடன்.)
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :