ஏவாளின் ஆப்பிள் மணம் கொதித்தடங்கிய காமக்களைப்பில் வெற்றுத்தடயங்களென நிகழ்வுகளின் சேகரங்கள் வியர்வையேறிய அக்குளில் மாலையைச்சுருட்டிக்கொண்டு வேகமாக வீடு திரும்புகிறான் ஆதவன் பிறகு தேனீர் பா¢மாறப்படுகிறது எங்கள் இருவருக்கும் தனித்தனி கோப்பைகளில் ஒன்றேன ஆவிகள் கலந்தாலும் வெற்றுடல் கிடத்தியதைப்போலிருந்தது இரு கோப்பைகளும் பருக எத்தனித்த என்னை இருகரம் நீட்டி அழைப்பு விடுக்கிறாய் ஏவாளின் முதல் பிரதிநிதியாக புலன்களை மழுங்கடிக்கும் கந்தகப்பார்வையால் மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கிறது சபிக்கப்பட்ட கனியை ஈன்ற அப்பெருமரம் ஆவிகளிரண்டும் ஒன்றெனக்கலக்க வெற்றுடல் கிடத்தியதைப்போலிருந்தோம் கோப்பைகளின் பார்வைகளில் இப்பொது நாங்கள் இருவரும் ஆடை படர்ந்த தேனீயின் வாசனையைவிட அறை முழுவதும் கவிழ்கிறது எச்சில் ஈரம் காயாமலிருக்கும் ஏவாளின் ஆப்பிள் மணம் புலம்பெயர்தல் முற்றிய நிலவொளி முற்றத்தின் இருளை மெல்லக்கரைக்கிறது உள்ளங்கை நிலவொளியில் தன் நிழலைக்கண்டு தலையாட்டி அபினயிக்கிறது ஊர்க்கொடி ஒற்றைப்பனை வெள்ளிக்காசாய் வெற்றிலைகள் நிலவொளியில் பளபளக்க பந்தலுக்குக்கீழ் ஒரு கோடி நிலவுப்பதியங்கள் குளிர் காற்றின் தீண்டல் குளத்து நீரை அசைத்துப்பார்க்க கையணைப்பில் கிடந்த பொம்மை நிலவை நழுவவிட்ட்ட குழந்தையைப்போல மெல்லச்சிணுங்குகிறது குளம் ஆற்றின் கரைகளில் ஒதுங்கும் காய்ந்த இலைகளின் சரசரப்பில் பறவைக்குஞ்சுகளின் துயில் கலைய நிலவைக்காட்டி தாலாட்டு பாடுகிறது ஒரு தாய்ப்பறவை அடுக்குமாடி ஜன்னல் வழியாக என் கைகளைப்பற்றி புது சினேகம் வளர்க்கும் நிலவிடம் இப்பொதெல்லாம் அதிகம் தொடர்கிறது கிராமத்தில் தனிமையிலிருக்கும் அம்மாவின் வட்டமான அழகிய முகமும் அவளின் உள்ளங்கை குளுமையும் எனக்கான வானம் என்றோ நான் பார்த்து ரசித்த ஒவியத்தில் உள்ள மேகங்களை நகலெடுத்து கூடுதல் கவனத்துடன் வானத்தில் பதிக்கிறேன் ஆதவனைச்சுற்றிக்கொஞ்சம் அடிவானத்தில் கீற்றாகக்கொஞ்சம் விளிம்புகளில் வெள்ளி முலாம் பூசிய மேகங்கள் ஒன்றிரண்டு வானத்திற்கு அடர் நீலம் ஒழுங்கீனமான சிதைந்த மேகங்களை மீண்டும் மாற்றி அடுக்குகிறேன் எனக்கு பிடித்தவாறு அவைகள் கலையாவண்னம் இருக்க ஆங்காங்கே பாய்ச்சுகிறேன் மர ஆப்புகளை நாட்கள், மாதங்கள், வருடங்கள் என்றாக பறவைகள் பறக்காத வானம் உயிரற்றதாய் தோன்றியது எனக்கு உளுத்துப்போய் கீழே விழுந்த மர ஆப்புகளை விறகாக்கி தேனிர் தயாரிக்கும் என் மனைவியின் உயிர்பில்லாத சிரிப்பின் காரணம் இன்றெனக்கு புரிகிறது முதன் முதலாக