வாடிய முகத்துடன் நேற்றிரவு எனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான் கடவுள். பலநாள் சவரம் செய்யாத முகத்துடன் எச்சிலை விழுங்கியவாறு தயங்கியபடியே கேட்டான் "பசிக்கிறது உணவிருக்கிறதா?" டியூசன் சென்று வந்த களைப்பில் அசந்து உறங்கும் குழந்தைகளைப் பார்த்தவாறே தட்டில் சோற்றைப் போட்டாள் என் மனைவி. பட்டாடை உடுத்தி சந்தனம், ஜவ்வாது மணக்க பிரகாரம் சூழ்ந்தவன் அழுக்கு உடையோடும் கலைந்த தலையோடும் வீதிக்கு ஏன் வந்தான்? தண்ணீர் ஊற்றிய பழையச் சோற்றைப் பிசைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கடவுள். என்ன நடந்ததென்று காலையில் கேட்டுக்கொள்ளலாம் உறங்கச் சொல்லுங்கள் என்ற என் மனைவியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவாறு "உங்கள் குழந்தையின் பொம்மை ஒன்று கிடைக்குமா" எனக்கேட்டான். சின்ன மகளின் செல்லப்பூனைப் பொம்மையை அணைந்தவாறு வீதி கடக்கிறான் எனது குழந்தையாகிப் போன கடவுள்.
கடவுள் குறித்து நிறைய கவிதைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பொம்மையுடன் விளையாட நினைத்த கடவுள் என்ற ரசனை அழகான கற்பனை.கவிஞருக்கு வாழ்த்துகள்