படர்ந்த வானக் கொடிகளில் அங்கிங்கெங்குமாயும் கட்டியிருக்கும் மேகக் கூடுகள் தகர்க்கப்பட்டுத் தெறிக்கும் தேன்துளிகள் கலைந்த கூடுகள் காத்துக் கிடந்த மின்னற் தேனீக்கள் தீப்பற்றி அலறுகின்றன சிதறிய மழைத்துளிகளுக்காய்! மனிதா நீ கூட்டுக்குள் ஓடுகிறாய் வீதிகளில் சிக்கிவிட்டால் வேறுஇடம் தேடுகிறாய் - கூடடையா மரமொண்டாக் குருவிகள் கண்டதில்லையோ நீ? அழகுமழை அமுதமழை பொழிகையிலே! சிறுகச் சிறுகச் சேர்த்த நீராவித் துளிகளால் நெய்த கருமேகப்பட்டு வானம் விரும்பியுடுத்தும் ஆடை உனக்காகத் தானே உயிர் தளிர்க்கத் தானே தாகமெடுக்கும் போதெல்லாம் தன்மானம் இழந்து உன்னுயிர் காக்கிறது - மனமிலையோ உனக்கு ஏன் வெறிமுகங் காட்டுகிறாய் நீ அதற்கு? பூக்களும் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளும் இங்கில்லையாயின் மழைக்கென்ன வேலையிங்கு? உன் விரோதிகள் மட்டுமே வாழும் ஊருக்கு நீ மட்டும் தனியாகப் போவாயா? தாயும் தாரமும் முத்தமிட்டு ஓய்ந்து போவார்கள் ஒருமுறை பெய்யும் மழையில் எத்தனை முத்தங்கள் பெற்றாயென எண்ணிச் சொல்ல முடியுமோ உன்னால்? வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் போதுமென்றாலும் போதாதென்றாலும் எதிர்பார்ப்புகள் சிறிதுமற்ற அன்பைப் பொழிவதில் மழைக்கு நிகர் மழையே! அசந்து உறங்கிய தருணங்களில் பெய்தோய்த மழையை எண்ணிப் பெருந்துயரப் படுவேன் நான் பெரும்பாக்கியம் இழந்தாயென எள்ளிநகையாடுமென் வீட்டுப் பூந்தொட்டிகள் - தெருக்களைக் கேட்டுத் திரிவேன் எவ்வளவு நேரம் குளித்தீர்களென அடுத்த மழை பெய்யுவரை காதலியின் காதுமடல் வருடுங் கணங்களில் சிலிர்த்திடுந் தேகங்கள் உணர்ந்தாயோ நீ எனக்குத் தெரியாது மழைத்துளிகள் முட்ட வரும்போது விலகும் பூக்களைப் பார் மீறியும் தொட்டுவிட்டால் செல்லமாய்ச் சிணுங்கும் ஓசைகள் கேட்டுப்பார் மரங்களும் செடிகளும் மலைகளும் மலர்களும் தேக்குமழை காரணங்கொண்டே - ஊடல் முடிந்த பின்னும் சிறுகூடல் கொண்டாடும் அவைகளைப் பார்த்தறியா உன் கண்கள் இரு கற்கள் காற்றோடு கலவி கொண்டு மேகமகள் முனுமுனுக்கும் நுண்ணோசை கேட்டதுண்டோ நீ? - கேட்கும் மற்றவைகள் அர்த்தமற்ற சத்தங்கள் மழையில் நனையின் முளைத்து விடுவேனோவென்று நீ பார்க்கிறாய் அப்படி நனைந்தேனும் உனக்குள் மறுபடியும் மனிதம் முளைக்காதோ என்று நான் பார்க்கிறேன்!