Page last updated at 6/20/2010 11:10:36 AM IST

முதுவேனிற்காலம் - அய்யப்பமாதவன்



Thadagam.com - Mudhuvenirkaalam : Iyyappamadhavan
முதுவேனிற்காலம்

அன்றைய இரவில் சென்னையிலிருந்து 600 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த புயலுக்கு லைலா என்று பெயர் வைத்தனர்.
இதற்கு முன்பு இதே போலத்தான் பெண்ணின் பெயரையே வைத்திருந்தனர். இதற்கென்ன காரணமென்று விளங்கவில்லை. பெண் என்பவள் எப்போதும் ருத்ரதாண்டவம் ஆடுபவள்தானோ என்று பொருள்படுமோ. கல்யாணம் செய்து கொண்டவனைக் கேட்டால் சரியென்று தலையை ஆட்டுவான். அடுத்தநாள் கரையை சென்னைக்கும் ஆந்திராவுக்குமிடையே லைலா தன் ரெளத்திரத்தைத் தணித்துக்கொள்வாளென தொலைக்காட்சிகள் கூறிக்கொண்டிருந்தன.

இரவின் மீது மேகங்களெல்லாம் ஒன்றுடன் ஒன்று கட்டி உறவாடத் தொடங்கின. உறவுகளுக்குள் காதலின் கனம் கூடகூட அவற்றின் உடல்களெல்லாம் குருதியாயிருந்த நீரால் இறுக்கமாகிக்கொண்டிருந்தன. காமத்தின் உச்சம் முடிவடைகிற காலத்தில் நீராபிஷேகம் பூமியெங்கும். தனித்திருந்த என் உடலில் மழைநீரின் நிலம் கலந்த வாடை தவிரவும் வேறெதுவுமில்லை. இன்னொன்றின் மீது இயங்காத என் அங்கங்கள் அசையா மலை போல் கிடந்தன. காலம் தந்த அவலப் பரிசுடன் ஒவ்வொரு இரவும் உறங்கி விழிக்கிறேன் துணையற்ற மிருகம்போல.

புயல்கள் தோன்றி தோன்றி மறைகின்றன இப்பூமியில். ஆனாலும் நிரந்தரமாய் புயல்கள் வாழ்வில் வீடுகளில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. ஒவ்வொருவனுக்கு ஒவ்வொரு பெயரில் புயல். என் புயலின் பெயர் என்னவென்று அறிய ஆவலா. சொல்லிவிடுகிறேன் கொஞ்சம்பொறுத்து. அது எப்போதும் கரையைக் கடக்க முயற்சிப்பதில்லை. வீடு எப்போதும் புயலின் மூர்க்கத்தில் மூழ்கியேதான் கிடக்கிறது. அதில் நீந்திக்கொண்டிருக்க பிரம்ம பிரயத்தனப்படுகிறேன். அவ்வப்போது அந்த நீர் சுறா மீன்களுடன் தலைக்குள் ஏறி காயங்களை உற்பத்தி செய்தவண்ணமிருக்கிறது. அப்போது ஏற்படும் தலையின் கிறுகிறுப்பில் கவிதைகள் பொங்கி ஊற்றுகின்றன. இப்படித்தான் கவிஞனானேன் என்றால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட வீட்டினுள் பல்லிகள் திரிகின்றன முதலைகள்போல. அதைக்கண்டாலே அவளுக்கு பயம். அவற்றை அடித்துக் கொன்றுபோடும்படி வேறு நச்சரித்துக்கொண்டிருக்கிறாள். பல்லிகளுக்கு முன்பு கரப்பான்பூச்சிகள் நிறைய அவளை இரவுகளில் இம்சித்திருக்கின்றன. தூங்கிக்கொண்டிருக்கும்போதுதான் வெவஸ்தை கெட்ட கரப்பானகள் அவள் மீது பறந்துவிழும். கதறியெழும் அவள் அவற்றைக் கொன்று போட கழிவறை செருப்பை எடுத்துத் தருவாள். அதைக் குறிபார்த்து அடிக்கும் பணி அவ்வளவு சிரமமானது. பல்லைக் கடித்துக்கொண்டு தூக்கம் நிறைந்த கண்களுடன் சரியாய்க் குறி பார்த்து நொச்சென்று அடித்துவிடுவேன். அவற்றின் வெள்ளைத்திரவம் பளீரென்று தெறித்து தரையெல்லாம் பிசுபிசுத்துவிடும். அந்தப் பிசுபிசுப்பை நடைபாதை விரிப்பால் துடைக்கச் சொல்வாள். கரப்பானின் பூத உடலை கைகளால் அள்ளி எறியச் சொல்வாள். எல்லாம் செய்து விட்டு அந்நேரத்தில் குளியலறைக்குப் போய் கையை சவக்காரம்போட்டு கழுவவேண்டும். அதுவும் அவள் கண்டிப்புகளில் ஒன்று. கரப்பானைக் கொன்ற பாவத்துடன் போன தூக்கத்தை மீட்க முடியாமல் பாயில் புரள்வேன். அவள் கரப்பான் செத்த குஷியில் அய்ர்ந்து கனவுலகில் சஞ்சரித்திருப்பாள்.

ஏற்கனவே எலியொன்று வந்து துயரப்படுத்தியதை மறக்கவே முடியாது. அது மூஞ்சுறு என்ற எலி. வீட்டில் ஓட்டையைக் கண்டுபிடித்து குடித்தனம் செய்தது. அதன் உடல் அப்படியொரு துர்நாற்றத்துடனிருக்கும். போதாக்குறைக்கு அது ஒருவார காலம் என் குடும்பத்தில் படுபயங்கரப் புயலை கிளப்பியது. அதை ஒரு ஆண்பிள்ளையாய் அடித்துக் கொல்லத் தெரியாமல் படாத பாடுபட்டேன். அதைப் பற்றி ஒரு கதை எழுதினேன். ஆனந்தவிகடனுக்கு ஒளிப்பதிவாளர் செழியன் கேட்டுக்கொண்டதற்காய் நேரில் போய்க் கொடுத்துவந்தேன்.

அந்தக் கதை தேர்வாகியதாகச் சொன்னார்கள். ஓவியமெல்லாம்கூட வரைந்துவிட்டதாக செய்தி வந்தது. ஆனால் ஏனோ அந்தக் கதை அதில் வரவில்லை.

வராததின் மர்மத்தை இதுவரை அறியவில்லை. ஆனால் அதே ஓவியத்தை ஆனந்த விகடனில் என் கவிதைகள் வந்தபோது பயன்படுத்தினார்கள். ஒரு ஆயிரம் ரூபாய் கவிதைகளுக்காக அளித்தார்கள். அந்தக் தொகை கவிஞனுக்கு அவ்வளவு உதவியாக இருந்தது என்று சொல்லவேண்டும். ஆனந்தவிகடன் ஆசிரியர் சீனிவாசனிடம் சும்மாபோய் ஆயிரம் ரூபாய் பணம் கொடுங்கள் என்றால் தரமாட்டார். அதனால்தான் கவிதைகள் அனுப்பி பெற்றுக்கொண்டேன். அவருக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் இந்தத் தருணத்தில். எலி வந்ததால் ஒரு கதை கிடைத்தது. அதுவே கலைஞனின் நிம்மதியாய் வேறு ஆகியது.

எனக்கென்று ஒரு விசைப்பலகையை அளித்திருக்கிறாள். அந்த இடத்தில் என் அனைத்துப் பொருட்களையும் அடைத்துக்கொள்ளவேண்டும். மீறி வேறிடங்களில் மறந்தும் வைத்துவிட்டால் அதை தூக்கி என் விசைப்பலகையில் எறிந்துவிடுவாள். புத்தகங்கள் குவித்து வைத்திருக்கிறேன். ஒரு சாய்பாபா சிலை சின்னதாய் வைத்திருக்கிறேன். அவரின் மீது கொஞ்ச நாளாய் என்னையறியாத ஈர்ப்பு. கணினி வைத்திருக்கிறேன். அதில்தான் என் பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன. உலகத் திரைப்படங்கள் நிறைய வைத்துள்ளேன். பாடல்கள் வைத்துள்ளேன். மொசார்ட்டின் இசைத்தட்டுகள் பீத்தோவனின் இசைத்தட்டுகள் சீனாவின் மூங்கில் இசைகள் டிரேசி சாப்மெனின் பாடல்கள் ஈகில்ஸ் பாடல்கள் இளையராஜா ரகுமான் தமிழின் பழைய பாடல்கள் இப்படியே ஏகப்பட்ட வகையறாக்கள். இவற்றிற்கிடையே என் கவிதைகள் வேறு. அப்புறம் பேஸ் புக் பைத்தியமாகியுள்ளேன். வலையைத் திறந்து பைத்தியத்தை தீர்த்துக்கொள்ளுகிறேன்.

முதுகுத்தண்டு வலியுடன் முதுகை நேராய் வைத்து கணினியில் வேலை செய்கிறேன். கொஞ்சம் கடினம்தான். ஆனால் எழுதவேண்டுமே எழுத்தாளன் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டுமே என்ற விடாப்பிடியான எண்ணம் வேறு. மனைவி என்கிற புயல்வேறு. இரவும் பகலும் ஓயாத அலைகள், சிக்குண்ட கால்களுடன் என் தீர்ந்துவிடாத பயணத்தில் எவ்வளவோ புதிது புதிதாய் கனவுகளும் காட்சிகளும் தோன்றிய வண்ணமிருக்கின்றன. இந்நகரத்தில் பற்பல புயல்கள் அவ்வப்போது உருவாகிக்கொண்டிருக்கின்றன. லைலா பெட் அடுத்து என்னவோ என் வீட்டு புயல் எப்பொழுதுமே நிலைகொண்டுதான் இருக்கிறது. தாழ்வு நிலையிலேயே இயங்கியபடியே இருக்கும்.

அவள் அலுவலகம் சென்றுவிடும் சமயங்களில் புயல்காற்றின் வேகம் அடங்கிப்போயிருக்கும். நான் நிறையக் செயல்களை வெற்றிகரமாய் சுதந்திரமாய் செயல்படுத்துவேன். ஆனாலும் வீடு சம்பந்தமான சில பணிகளையும் செய்ய நேரிடும். அதாவது பாலை மறுபடி சூடு செய்வது அது கெட்டுப் போகாமலிருக்க. சாம்பார் மீதமிருந்தால் அதைச் சூடு செய்ய வேண்டும். சாப்பிட்ட பாத்திரங்களை நீர் பிடித்து கழுவப் போடவேண்டும். ஒரு முறை அப்படி பாத்திரங்களைப் போட்டதற்குதான் பயங்கரமாய்க் காய்ச்சியெடுத்துவிட்டாள். குழாயைத் திருகி பாத்திரங்களில் நீர் பிடித்தபோது அது தெறித்து வீட்டின் நாலா பக்கங்களிலும் ஈரமாகிவிட்டது. என் நேரமோ என்னவோ தெரியவில்லை அவள் வரும்வரை அது காயாமல் ஈரமாக காட்சியளித்தது சுவரெங்கும். தரையெங்கும் படர்ந்திருந்த நீர். இப்படி நசநசவென்று வீட்டை ஆக்கிவிட்டாயே என்று உச்சஸ்தாயில் கத்தித் தீர்த்துவிட்டாள். நான் கொஞ்சம் நேரம் மனம் நொந்துவிட்டு வேறு வழியில்லாமல் மறுபடி புயலிடம் சமரசம் செய்துகொண்டேன். இப்படியேதான் நானும் கட்டிக்கொண்ட புயலும் இருக்கிறோம் இந்த நகரத்தில். வாழ்க புயல் வளர்க அதன் கொள்கை.

அய்யப்பமாதவன்





வாசகர் கருத்துக்கள் :





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல்



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<