Page last updated at Friday, April 09, 2009 at 11:57:28 PM IST

புவன இசை [ வெயில் ] - நூல் விமர்சனம் - அய்யப்பமாதவன்




      Thadagam : Sorkappal - Bhuvana Isai ; Book review by Iyyappamadhavan
Sorkappal

மதுவின்றி வாழுதல்
சாத்தியமா என்றிருந்தேன்
அருந்தியோ மாதங்களாயிற்று
இடைப்பட்ட நாட்களில்
கவிதைகளை
எழுதியவண்ணமிருந்தேன்
குருதியில் கசக்கி பிழிந்த கஞ்சா
விரவிக்கொண்டிருந்தது
இதயமோ
ஆனந்தக் கூத்தாடியது.


ரத்தத்தைத் திணற வைக்கும் மதுவைவிடவும் கவிதை என்னும் வஸ்து இன்னும் கர்ணகொடூரமானது, உங்களை ஆக்கிரமித்ததென்றால் மலைக்காட்டின் அட்டைபோல பிடித்துக்கொள்ளும். அதன் பித்து உங்களை ஒரு சித்தனைப்போல் ஆக்கும். நீங்கள் மனதுக்குள் கெட்டிப்பிடித்த சடை அடர்ந்த நீள் தாடி வளர்த்து கவக்கோலத்தில் நிலைக்கவேண்டியதுதான். அப்போது தேனடை உடைத்துப் பருகும் காட்டுத்தேனின் சுவையென நாவூறுமே அது போன்ற தீர்ந்துவிடாத போதையில் மிதப்பீர்கள். அங்கு ஒரு மாபெரும் ஊஞ்சல் தென்படும். அது ஆட ஆட கற்பனை பை திறந்து சொற்கள் கூதிர்கால மரத்தின் இலையென உதிரத் தொடங்கும். சருகுகளின் சொற்றொடர்களில் சரசரக்கும் ஒரு கவிதை. அதை காணக்கிடைக்காத பவளமென ஊருக்கு அறிவிப்பீர்கள்.

அப்புறம் கவிதைப் பற்றியே ஒரு ஜப்பான் ஸென் கவிதையொன்று

என் கவிதைகளைச் கவிதைகள்
என்று யார் சொன்னது
என் கவிதைகள் கவிதைகள்
அல்ல
என் கவிதைகள்
கவிதைகள் அல்ல
என்று தெரிந்துவிட்டதனால்
நாம் அனைவரும் சேர்ந்து
பேசத் தொடங்கலாம்
கவிதைகள் பற்றி...


என்ற ட்டயகு ரியோக்கன் கவிதையுடன் இந்த புவன இசையைப் பற்றி பேசத் தொடங்கலாம்.

நீலப்புல்வெளியில் மிளிர்கிறது
சூலில் இறந்த கடவுகளின் பளிங்குக் கல்லறை.


என்ற என்னை மையல்கொள்ளச் செய்த வரிகளுடன் வெயிலைப் பார்ப்போம். பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். அது எவ்வாறு உங்களைச் சுட்டெரிக்கிறதென்பதை. அதேபோல் இந்தக் கவிதை வெய்யிலும் என்னை வெம்மையில் தள்ளிவிட்டுத்தான் போனது. என்ன செய்ய. சூடான வரிகளும் குளிர்ந்த வரிகளும் விரசமான வரிகளும் காமமான வரிகளும் புணர்ந்த வரிகளும் இந்தத் தொகுப்பில் நிறையக் காணக்கிடைக்கின்றன. எப்படி அதன் தன்மை இருப்பினும் கவிதையாகும் பட்சத்தில் நாம் அதை அவ்வாறு விளிக்கவேண்டியதில்லை என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

ஒவ்வொரு கவிஞனும் இன்னொரு கவிஞனைப்போல் எழுதுவதில்லை. அண்டம் பகிரண்டம் முழுக்க.அது அப்படித்தான் இருக்கவேண்டுமென்பது யாருடைய நியதியோ தெரியாது என் அறிவுக்கு எட்டிய வரை, நீங்கள் மாற்றுக்கருத்து வைத்திருக்கலாம். வெயிலைப் போல் கவிதைகள் எழுதுபவனை யாரையும் நான் பார்த்ததில்லை. அதேபோல் இங்கு கவிஞர் கண்டராதித்தன் போல் கவிஞர் விசுவநாதன் கணேசனைப் போல் வேறு யாரும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை.அவன் அவனுக்கென்று ஒரு மொழி ஒரு நடை. அதுதான் கவிஞனின் அடையாளமும்கூட என்றே நான் சொல்லுவேன்.

இங்கு குறைப்பட்டுக்கொள்ளும் விசயமென்னவெனில் கவிதைகள் பற்றி விமர்சிக்க திறனாய்வு செய்ய ஒரு நாதியும் கிடையாது. அது ஒரு காலமிருந்தது. கா.நா.சு. இருந்தார். தி.க.சி இருக்கிறார்.சி.சு.செல்லப்பா இருந்தார். சுந்தரராமசாமி இருந்தார். வெங்கட் சாமிநாதன் இருந்தார். அவருக்கு வயதாகிவிட்டது. இந்திரன் இருந்தார். அவர் அவ்வளவாகவே கவிதைகள் குறித்து எழுதுவதில்லை இப்போழுதெல்லாம்.

ஆனால் இதற்குமேல் ஒரு கூட்டம் இலக்கியத்தில் ஒன்றுண்டு. அவர்களுக்கு இங்கு எழுதுபவர்களெல்லாம் கவிஞர்களேயில்லை. துக்கடா கவிஞர்கள் சில்லறைக் கவிஞர்கள் நேப்கின் கவிஞர்கள் என்று அவர்கள் அங்கு எழுதும் கவிஞர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். படிக்காமல் குடித்துவிட்டு கவிதையென்று எழுதிக்கொள்கிறார்கள். அனுபவமின்மையின் காரணமாக அவர்கள் அதனை கவிதைகளாக கருதுவதில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

குறிப்பாக ஜெயமோகன் கவிதை குறித்து அவ்வப்போது எதாவது தன் அறிவுக்கெட்டிய வார்த்தைகளை கவிஞர்களின் மீது சூடாக உமிழ்வார். நமக்கெல்லாம் யாரைப் பிடிக்காதோ அவர்களையெல்லாம் கவிஞர்கள் என்று அறிக்கை விடுவார். எஸ்.ராமகிருஷ்ணன் நிறைய நல்ல கவிஞர்கள் இங்க கொட்டிக்கிடக்கிறார்கள் வெளியில் தெரியாமல் என்ற விசனத்துடன் நிதர்சனத்துடன் கூறியிருக்கிறார். அது வரவேற்கக்கூடியது.

அறிவுஜீவி கூட்டமொன்று இங்கு உண்டு. அவர்கள் கண்களுக்கெல்லாம் நாம் தெரிவதேயில்லை அவர்கள் முன் நின்றாலும். அவர்கள் பேசிக்கொள்வதாலும் ஆர்தர் ரைம்போ, பாப்லோ நெரூடா, ழாக் ப்ரௌவர், டி.எஸ்.எலியட், எஸ்.ரா. பவுண்ட், சில்வியாப்ளாத் இன்னும் நிறைய . அதை மொழி பெயர்ப்பார்கள் . இங்குள்ளவர்களுக்கு அறிவுரை மட்டும் வழங்குவார்கள் ஆனால் நம்மைப் பற்றி பேசுவதைப் பற்றி மட்டும் அவ்வளவு கௌரவக்குறைச்சலாக நினைப்பார்கள். அவர்களெல்லாம் நமக்கும் ஒரு பொருட்டல்ல . அவர்கள் சொல்லித்தான் நாம் கவிஞர்கள் என்றெல்லாம் ஒன்றுமில்லை. எது கவிதை என்று சொல்லத் தெரிந்தவனுக்கு யாரும் ஒரு பொருட்டல்ல. அவர்களை நாம் ஒதுக்கிவிடுவோம் என்பதை சாசுவதாமச் சொல்லிக்கொள்ள விழைகிறேன். உணர்ச்சிவேகத்தில் வெயிலை விட்டுவிட்டேன். வெயிலுக்குள் கொஞ்சம் செல்வோம்.

கோடையில் வெயிலைப் படித்தேன், தாளாத வெட்கை. இரு நாட்களில் வெயிலோடு போய் வெயிலாகவே மாறிவிட்டேன். ஆனால் வெயிலின் கவிதைகளை இவ்வளவு குறுகிய இடைவெளிகளில் படித்து முடித்துவிடுவதென்பது பிரம்ம பிரயத்தனம்தான், அவ்வளவு படிமங்களை ஒரு வரிவிடாமல் அடுக்கிச் செல்கிறார். ஒன்றைப் படித்து ஆசுவாசமடையும் பொழுது நமக்கு வெவ்வேறு கற்பனைகள் கிளைவிடுகின்றன. கிளைகளில் இலைகள் பிறகு பூக்கள் பறவைகள் அப்புறம் கவிஞனாயிருக்கும்பட்சத்தில் ஒரு கவிதையை எழுதி திருப்தியடைய வேண்டியுள்ளது. இப்படித்தான் இளம்பிராயத்திலிருக்கும் கவிஞனுள் நடைபயின்று எத்தனிப்பதாகிறது. ஒரு சிறு புத்தகத்தில் எத்தணை எத்தணை பொதிந்த அனுபவங்கள். ஒரு ஆலமரத்தைப் பற்றி அப்புறம் அம்மாவைப்பற்றி நீர்க்குமிழி பற்றி சுடலைமாடன் பற்றி பேச்சி பற்றி இப்படி எண்ணற்ற உறவுகளுடன் தீர்க்கமாய் எழுதியவண்ணமிருக்கிறார்.

அவருக்கென்றொரு மொழி கைவந்திருக்கிறது. எந்தக் கவிஞனைப் போன்றுமில்லை, ஆனால் ஏதோ படித்ததின் பாதிப்பில் இருப்பதாக தெரிகிறது. உண்மையில் என் பார்வைக்கு அப்படித் தோன்றுகிறதா என்று தெரியவில்லை, இல்லை மொழியின் இறுக்கத்தை எங்கிருந்தோ கற்றுக்கொண்டிருக்கிறாரா என்பதையும் அறுதியிட்டுச் சொல்லமுடியல்லை. ஒருவேளை அவர் மொழியின் பாவனை அதுவாகத்தான் இருக்கக் கூடுமோ என்னவோ அறியேன்.

இன்னும் கொஞ்சம் இளகியதாக இருக்கவேண்டுமென்று சொல்லவில்லை. இருந்தால் இன்னும் நான்றாக இருக்குமோ என்றும் சொல்லவில்லை. ஆனால் கவிதையின் நடையில் மிடுக்கு இருக்குமளவுக்கு புரிதல் மேலோங்கவில்லையோ எனவும் அபிப்ராயப்படுகிறேன்.

நிறைய கிறித்துவ பின்னணியுள்ள கவிதைகளும் எழுதியிருக்கிறார். உயிர்தெழுதல் போன்றவற்றைச் சொல்லலாம். பைபிள் தொடர்பான வார்த்தை அமைப்புகளும் கவிதைகளில் காணக் கிடைக்கிறது என்று சொல்லவேண்டும். அதுபோல் எழுதுவதென்பது அவ்வளவு எளிதானுமல்ல. அவருக்கு அதன் பாதிப்பு அதிகம் இருக்கிறது. அநாயசமாக எழுதுகிறார்.

சில கவிதைகள் வெறும் காட்சிகளாக மட்டுமே தங்கிப் போயிருக்கிறார், அது உணர்ச்சி வேகத்தியும் எழும் ஆபத்துதான் எனினும் அதை வெளியிடுமுன் கவிதையாய் மாறியிருக்கிறதா என்பதையும் அறிந்து கொண்டு செயல்படவேண்டுமென்பது என் தேட்டம். அவ்வாறு கவிதைகளாய் பரிமளிக்காத போது அதை ஆயாசத்துடன் தூக்கியெறிதிருக்கலாம்மென்பதும் என் தேட்டம்.

அதிக அளவில் திகட்ட திகட்டப் படிமங்களைக் கையாண்டிருப்பதால் கவிஞனை குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. திகட்ட திகட்டப் எழுதினால்தான் கவிஞன் என்று இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்று நினைப்பு அவசியமற்றது. ஆகையால் வெயில் படிமங்களின் களைப்பு தீர்ந்து வெளியேறினால் கவிதையின் ஓட்டத்தில் தெளிந்த நீரோடைகள் உருவாகுமென்பது என் தீர்மானம் . கவிஞனுக்கு எதையும் சொல்லித்தரவோ கற்றுத்தரவோ அறிவுரை வழங்கவோ ஆசிர்வதிக்கவோ நான் முயலவில்லை. முயற்சிக்கவில்லை. அவருக்கான விமர்சனமாக மட்டுமே இதைப் போன்ற வாக்கியங்களை அவர் முன் வைக்கிறேன். அவ்வளவே.

கவிதையென்பது தங்கம் மாதிரி. அதை புடம் போட்டுக்கொண்டிருக்க வேண்டும், தேய்த்து அழித்து உருக்கி வெவ்வேறு வடிவங்களை வடிவமைத்துப் பார்ப்பதின்மூலம் ஒருவேளை அதன் அழகு தெய்வீகமாகலாம். ஆகுமென்பது என் நிதர்சனம். நீங்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதில் எனக்கு எவ்வித அக்கறையும் அவசியமுமில்லை. அவ்வாறாக வெயிலும் முற்படவேண்டும் முனையவேண்டும் என்பதும் என் வாக்கு வாதமல்ல. அவர் கவிதைகளைப் படித்தேன், அதில் நிறைகுறைகளைப் பார்த்தோ குறைகளை சரிசெய்துகொள்ளவேண்டுமென்றோ கூட அபிப்ராயப்படவில்லை. நல்ல கற்பனை வளம் மிகுந்த கவிஞன் வெயில். அவரிடம் சில விசயங்களை இவ்வாறுதான் சொல்ல தீராத ஏக்கம் கொள்கிறேன். அவரிடம் ஒரு சொல்லொன்றைக் கொடுத்தால் ஒரு கவிதையை எழுதிவிடுவான் என்ற நம்பிக்கையை இந்த புவன இசை அளித்துள்ளதென்றால் அது மிகையாகாது, இருப்பினும் சிற்சில கனிகளில் புளிப்புமிருகிறதென்பதை புரிந்து கொள்வானெனில் அவருடைய காடுகளில் அணில்களும் பறவைகளும் தங்கள் இனத்தை அவரிடமிருந்தே பெருக்கிக் கொண்டிருக்குமென்பதில் துளியும் சந்தேகங்களில்லை, யாரும் எழுத முயற்சிக்காத வடிவ உத்திகளும் சொல் முறை உத்திகளும் உட்பொருள் உத்திகளும் புதிதாகத் தெரிகின்றன ஒரு சில கவிதைகளில், அது அவ்வாறாக பயணித்தபோது ஏதோ ஒன்று என் குசலத்தைப் பறித்துப்போய்விடுகிறது. அது சொற்சேர்க்கை என்றும் எடுத்துக்கொள்ளலாம் என்னளவில், உங்களுக்கு எப்படி என்று நீங்கள் படித்துப்பார்த்துக்கொள்ளலாம். எனக்கு பட்டத்தை எழுதுகிறேன். சொல்கிறேன், இது ஒருவரின் கவிதைகள் பற்றிய விமர்சனமே தவிர இது அவரின் மீதான காழ்ப்போ வெறுப்போ விருப்பமோ காதலோ இல்லை என்பதை இங்கு தெளிவுபடப் பதிவுசெய்கிறேன். அவர் ஒரு காலத்தில் மனம் ஒப்பி எழுதியவை. அதைப்பற்றிய ஆணித்தரமான பார்வைகளை முன்வைக்க ஒருபோதும் விழையமாட்டேன். அது கூடாதென்றும் கருதுபவன் நான். அது யாருடைய நூலாகயிருப்பினும். அவருக்கு சரி என்று பட்டதை எழுதியிருக்கிறார். அதன்மீதான ஒரு வாசிப்பின் சிற்சில அபிமானங்களே தவிர இது ஆவணப்படுத்தபட வேண்டிய விடயங்களல்ல. அடுத்தடுத்தான அவரது கவிதைகள் எனக்கு வாசிக்க கிடைக்குமெனில் அது எனக்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்வேன். இதேபோல் என் வியவகரமான சொற்றொடர்களை அவருக்கு பரிசளிப்பேன்.

வாழ்த்துகளுடன்
அய்யப்பமாதவன்







வாசகர் கருத்துக்கள் :





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல்



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<