Page last updated at
Wednesday May 26 , 2010 at 11:57:28 PM IST
‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ : திரைவிமர்சனம்
-
தடாகம் விமர்சன குழு
Thadagam Review !
வழக்கமாய் பெரியவர்கள் பார்த்து ரசித்த ஒரு இடத்துக்கு குழந்தைகளை கூட்டிச் சென்றால்... ‘செல்லம் நீ சுத்திப் பார்த்துவிட்டு வா... அப்பா இப்படி ஓரமா உட்கார்ந்திருக்கேன்’ என சொல்லி அனுப்புவது போல குழந்தைகளுக்கு ‘கிச்சு கிச்சு’ மூட்டுகிற படம் இரும்புகோட்டை முரட்டு சிங்கம்.
செக்யூரிட்டியாக லாரன்ஸ் வேலை பார்த்த நேரத்தில் வைரக்கல் திருடு போகிறது. பழி லாரன்ஸ் மீது விழ, காமெடி நீதிபதிகள் தூக்குதண்டனை தருகிறார்கள். தூக்கு மேடையிலிருந்து ஜெய்சங்கர்புரத்து மக்களில் சிலர் (மவுலி, இளவரசு, வையாபுரி) காப்பாற்றி, நமது வீரன் சிங்கம் இறக்கவில்லை, உயிருடன் இருக்கிறார் என்று இறந்த கௌபாய் சிங்கம் போன்ற தோற்றம் கொண்ட சிங்காரத்தை சிங்கமாக்கி, ஜெய்சங்கர்புரத்துக்கு கொண்டு சென்று மக்களை நம்ப வைக்க, துப்பாக்கி சுடவெல்லாம் கற்றுக் கொடுத்து, விதவிதமாய் ‘கப்ஸா’ விடுகிறார்கள்.
அப்புறம் படமென்றிருந்தால், வில்லன் இல்லாமலா. ஒற்றைக்கண் நாசர், அவரின் தளபதியாக உலக்கை, அவருக்கு அசிஸ்டெண்டாக அபாரமான லட்சுமிராய். அடிக்கடி ஜெய்சங்கர்புரத்துக்கு ‘லந்து’ கொடுக்க வரும் உலக்கையைப் பின்னி பெடலெடுப்பதோடு, சீட்டுக்கட்டில் மேஜிக்கும் காட்டுகிறார். இதற்கிடையே பத்மப்ரியாவோடு ரொமான்ஸ், டூயட் போடுகிறார் லாரன்ஸ்.
தனியாக செவ்விந்தியர்கள் குரூப், டேரா போட்டுக் கொண்டு வாழ, ஒரு கூடாரத்தை நாசரின் ஆட்கள் தீயிட்டுக் கொளுத்த, ராவோடு ராவாக (எம்.எஸ்.பாஸ்கர், செந்தில்) செவ்விந்திய ஆட்கள் ஜெ.புரத்து ஆட்கள்தான் தீவைத்தது என தவறாக புரிந்து கொண்டு, லாரன்ஸ், இளவரசு, வையாபுரி ஆகியோரை கடத்திக் கொண்டு போக, பாஸ்கரின் மகள் தும்பியுடன் (சந்தியா) காதல். அப்புறம் நட்டுவாங்கம் பாடி செவ்விந்தியர்களை மயக்குகிறார்.
இப்படி கடத்தல், வெடிகுண்டு, துப்பாக்கிசூடு என் ஆங்காங்கே இடைவேளை வரை சிரிப்பு பட்டாசு வெடிக்கிறது. அதன்பின் புதையலைத்தேடி மூன்று குரூப்பிலிருந்தும் ஆட்கள் ஒன்றாக கிளம்புகிறார்கள். அந்த குழுவில் லட்சுமிராயும் இருப்பதால் நூற்றி பதினெட்டு முறை இடுப்பைக் காட்ட வசதியாகப் போயிற்று. இறுதியில் லாரன்ஸ் கூடவே இருக்கும் இளவரசு, நாசரின் கைகூலியாக மாறுவது நல்ல கொண்டை ஊசி வளைவு அதாவது திருப்பம்.
படம் முழுக்க டயலாக்கில் நகைச்சுவை மிளிர்ந்தாலும், ‘அய்யய்யோ... அப்பப்பா’ என்று ஓங்கி சிரிக்க முடியாமல், தேமே என்று கிடக்கிறது தியேட்டர். கொடிய வில்லன்களின் குலவிளக்கு எனும் எஸ்.ஏ.அசோகன் கல்வெட்டு, நீதிதேவதை கையில் தராசுக்கு பதிலாக பால் அளக்கும் அலுமினிய குவளை ‘இரும்புக் கோட்டை உச்சியில் நின்று உச்சா போவேன்’ என்ற லாரன்சின் ‘பஞ்ச்’ டயலாக், குதிரையே குதிரைல போகுதுன்னு லட்சுமிராயைக் கமெண்ட் அடிப்பது, பாஸ்கரின் செவ்விந்திய மொழி, அதற்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர் என சிம்புதேவனின் அக்மார்க் ஹாஸ்ய முத்திரை. செட்டுகள் சூப்பர், அதற்கே நிறைய செலவு செலவானதால், ஜுனியர் ஆர்டிஸ்ட் பஞ்சம். ஒவ்வொரு புரத்திலும் இருபதுக்கு மேல் ஆட்கள் இல்லை.
ஒரே ஆறுதல் வழக்கம்போல, ஹீரோவின் ஒரே உதையில் வில்லன், காய்கறி மார்க்கெட், பஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், காலேஜ் எல்லாம் தாண்டிப்போய் விழவில்லை. ‘என்னைத் தொட்டா நெய்வேலி அணுமின் நிலையமே பத்திக்கும்டா’ போன்ற பஞ்ச் டயலாக் இல்லை. பத்துமூட்டை சிவப்பு சாயம் (ரத்தத்துக்கு) தேவைப்படவில்லை. அதற்காக பாராட்டலாம். இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் தட்டிப் பார்த்தால் தகரம் சவுண்ட்.
வெச்சகுறி எங்கேயோ போய் விழுந்துடுச்சி சிம்பு
- தடாகம் விமர்சன குழு
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :