'சீக்கிரமா கிளம்புடா...! எட்டரை மணி ராமஜெயத்தை புடிச்சாதான் ஒரு பத்து பத்தரைக்காவது ஊர் போய் சேர முடியும். எப்பவும் கூட்டமா இருக்கிற பஸ்சு. இன்னிக்கு ஆடி பதினெட்டு வேறஇ சொல்லவே வேணாம். பஸ்சு மேலெல்லாம் ஜனங்க ஒக்காந்துனு வரும்' என மோகனை அவசரப்படுத்தினான் குமார்.
மோகனும் குமாரும் அவசர அவசரமாக திருவண்ணாமலை பேருந்து நிலையம் சென்று ராமஜெயம் பேருந்து பிடித்து இருவர் அமரும் இருக்கையாகத் தேடினர். பின்னிருக்கைக்கு முன்னிருக்கை காலியாக இருக்கவே 'அப்பாடா !' என்று பெருமூச்சு விட்டபடி சன்னலோரம் மோகனும் அவனுக்குப் பக்கத்தில் குமாரும் அமர்ந்து கொண்டனர்.
'என்னடா பெரிசா கூட்டம் அலைமோதும்னு அவசரப்படுத்தின இங்க பார்த்தா நமக்கு ஒக்காரதுக்கு இடம் கிடைச்சிடுச்சி' என்றான் மோகன்.
'ஆமாண்டா இன்னிக்கி நெறய ஸ்பெஷல் பஸ் விட்டிருக்காங்க பாத்தியா நாம உள்ள வரும்போதுதான் ஒரு பஸ்சு கிளம்பிச்சி இதுக்குப் பின்னாடி எத்தன பஸ்சு இருக்குது பாத்தியா?'
'என்னதா இருந்தாலும் நீ சொன்ன அளவுக்கு ஒன்னும் கூட்டம் நிரம்பி வழியில'.
'பொறு ! பொறு !! இப்பதான பஸ்சு கிளம்புது.போகிற வழியில கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் ஏறும். பிறகு செங்கம் வந்திடுச்சினா பஸ்சுல மூச்சு விடக்கூட முடியாது' என்றான் குமார்.
'டிக்கட்...டிக்கட்... என்று வந்த நடத்துனரிடம் 'ரெண்டு நீப்பத்துறை' என்று ஜம்பது ரூபாயை நீட்டினான் மோகன்.
' ஆறுரூபா சில்லற இருந்தா கொடு' என்றார் நடத்துனர். ஆறுரூபாய் சில்லறை கொடுத்து இருபது ரூபாயை பெற்றுக் கொண்டான் மோகன்.
பேருந்து வழக்கத்திற்கு மாறான வேகத்துடன் வழியில் இருந்த முக்கிய நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கத்திற்கு வருவதற்குள் பாதிபேர் நின்றுகொண்டு வந்தனர்.
பேருந்து செங்கத்தை அடைந்து பத்து நிமிடம் நின்ற நேரத்தில் பேருந்தின் மீது வரை பயணிகள் அமர்;ந்திருக்க மெல்ல நகர்ந்து நீப்பத்துறை நோக்கி பேருந்து.
குமாரும் மோகனும் அமர்ந்துகொண்டு செங்கத்தில் வாங்கிய மக்காச்சோளத்தை கொறித்தவாறே ஜனங்களையும் அந்த வழியில் வருகிற ஊர்களையும் வேடிக்கைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.
காற்றுகூட புகமுடியாத அளவு கூட்டத்தில் நடத்துனர் நுழைந்து நெருக்கித் தள்ளியவாறே டிக்கட்டை வசூலித்துக்கொண்டு இருந்தார்.
'இந்தா ரெண்டு நீப்பத்துறை' என்று இருபது ரூபாயை நடத்துனரிடம் நீட்டினாள் அந்த பெண்மணி.
'யார் யாரும்மா ரெண்டு பேரு'
'நானும் இதோ இருக்குதே எம் பொண்ணும்'
'அப்ப அது கையில இருக்குதே புள்ள அதுக்கு யாரு டிக்கட் வாங்குவா?... இன்னும் அஞ்சு ரூபாய எடு' என்று அவசரப்படுத்தினார் நடத்துனர்.
'மூனு வயசு புள்ளைக்குக் கூட டிக்கட் வாங்குனுமாமே! இது என்னாடி அநியாயமா இருக்குது'
'ஏம்மா உங்கூட காலையிலயே ரோதனையா போச்சே! ரெண்டரை வயசுக்கே டிக்கட் வாங்கனும.; அர டிக்கட்டுதா சீக்கிரம் காச எடு'
' அதா சொலையாட்டம் இருபது ரூபா கொடுத்தனே அப்பற என்ன காச கேக்கிற'
'ஏம்மா இன்னிக்கு ஒரு டிக்கட்டு பத்து ரூபா. ரெண்டரை டிக்கட்டு இருபத்தஞ்சு ரூபா ஆவுது. இன்னும் அஞ்ச எடு' என்று விரட்டினர்ர்.
'இதுல இது வேறயா..? நிக்கறதுக்கே எடத்தக்காணோம்.? காச மட்டும் ஏத்திக் கேளுங்க' என்று பொருமினாள்.
'ஆமா.. நீ மட்டுந்தா குடுக்குறியா.? இன்னிக்கு அப்படித்தா. கம்முனு வாம்மா..' என்று ஒரு வழியாக நடத்துனர் அந்த இடத்தை விட்டு அகன்றதும் மேலும் பொரிந்து தள்ளினாள்.
' இவனுங்க சம்பாதிக்கறதுக்கு நல்ல நாள் பொல்லநாள் வந்துட்டா போதும் இவனுங்க இஸ்டத்தக்கும் ஏத்திடுவானுங்க பச்ச புள்ளக்கு போயி அர டிக்கட்டு வாங்கறா. இந்த காசெல்லா எங்க கொண்டுனு போயி வைப்பானுங்களோ? அந்த சென்னம்மா தா இவனுங்களுக்கு கூலி கொடுக்கனும்' என்று அடுக்கிக் கொண்டே போனவளை மகள் அமைதி படுத்தினாள்.
'நீ வேற ஏம்மா இப்படி இம்ச பண்ற. இவன கூட்யாந்துட்டு நா நிக்க வைக்க கூட முடியாம தவிக்கிற. நீ வேற கத்திக்கினே வர்றே' என்றாள் மகள்.
அப்பெண் படும் சிரமத்தைப் பார்த்த குமார் அந்தப் பையனை வாங்கி தன் மடி மீது அமர்த்திக் கொண்டது சற்று ஆறுதலாக இருந்தது அப்பெண்ணுக்கு.
சிறிது தூரம் சென்ற பிறகு பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டு மேலே இருந்த பயணிகளிடம் டிக்கட் வசூலித்துக் கொண்டிருந்தார் நடத்துனர்.
ஒரு வழியாக டிக்கட் வசூலெல்லாம் முடிந்து பேருந்து மெல்ல கிளம்பியது. இப்பொழுது அந்த பெண்மணியின் பார்வை தன்னுடைய பேரனை பார்த்துக் கொண்டே வந்தது.
பேரனோடு கூடவே மோகனையும் குமாரையும் பார்த்த அப்பெண்ணிற்கு நிச்சயம் தன் மகன் செல்வத்தின் ஞாபகம் வந்திருக்க வேண்டும்.
'ஏம்மா சாமி கும்பிட்டிட்டு நாளைக்கே நான் ஊருக்கு கிளம்பற. நீயும் வந்தினா நல்லாயிருக்கும். அடுத்த வாரம் நடக்கற நம்ப காமாட்சி சித்தியோட மக பரிமளாவின் மஞ்சாத்தண்ணியயும் பாத்துட்டு வந்துடுவே' என்றாள்.
'அய்யய்யோ..! அந்த ஊருக்கா...! நா செத்தாலும் வரமாட்டேன்டி. அப்படியே மஞ்சாத்தண்ணிக்கு வந்தாலும் வரிசய செஞ்சிட்டு இப்படியே நா ஊருக்குக் கௌம்பிடுவே. அந்த ஓடுகாலிப் பைய இருக்கிற தெச கூட எந்தல திரும்பாதடி' என்றாள் ஆவேசமாக.
'ஏம்மா! நா எத்தனை தடவ சொல்லறது. அவ ஒன்னும் ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கல நாந்தா அவனுக்குத் தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணத்த நடத்தி வெச்சேன்னு. திரும்பத் திரும்ப அவன திட்றயே உனக்கு இன்னும் அவம்மேல கோவம் போவலியா' என்றாள்.
' எப்படிடி அவ மேல கோவ வரமா இருக்கும்?'. ஆம்பள புள்ள இல்லாத எங்குறைய இந்த சென்னம்மாவா பாத்து எனக்கு ஒரு புள்ளய காட்டுனா. அவன தூக்கி வளத்து ஆளாக்கி படிக்க கூட வெச்சேன். படிப்பு வரலனு அப்படியேவா விடடுட்டேன்? உங்கப்பா பரம்பரையா செஞ்ச மரத்தொழில கத்துக்க வெச்சனே. உங்க அப்பா போன பின்னாடி என்னை ஒக்கார வெச்சு சோறு போடுவான்னு நெனச்சிருந்தேன். நாய கூட்டி நடுவீட்டுல ஒக்கார வெச்சாலும் அது புத்திய காட்டுங்கிற மாதிரி அவ புத்திய காட்டிட்டானேனடி.
'ஏம்மா திரும்பத் திரும்ப அதையே சொல்ற. எல்லோரும் உன்னையே பாக்கறாங்க'(என்றாள் மெதுவாக) நம்ம செல்வத்துக்கு உம்மேல இன்ன வரைக்கும் பாசமும் பயமும் தான் செஞ்சது தப்புனு தெரிஞ்சுதான் உனக்குப் பயந்துகிட்டுஇ இன்னும் உங்கிட்ட வராமஇ உன்ன பாக்காம இருக்கான். எத்தன நாள் எங்கிட்ட அழுது பொலம்பியிருக்கா தெரியுமா உனக்கு?' என்றாள்.
'நா பெத்த புள்ளயா இருந்தா இப்படி ஒரு காரியம் என்ன கேக்காம பண்ணியிருக்குமா?' பெறாத புள்ளாயா இருந்தாலும் நா அவன பெத்த புள்ளக்கும் மேலதானடி வளர்த்தேன். உன்ன நம்பி நாலு காசு சம்பாதிக்கட்டுமேனுதானடி உன்கூட ஆவடிக்கு அனுப்பி வெச்சேன். ஏம் புத்திய நா எங்க போயி சொல்ல? இப்பவே கொள்ளி போட்ட மாதிரி இப்படி பண்ணிட்டானே. நா ஊர்ல இருக்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியலயே! எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருக்கிறியே சென்னம்மா உனக்கு நா என்ன கொற வெச்சே? வருசத்துக்கு ஒரு பொங்க கொடுக்கறனே. நா என்ன பாவஞ் செஞ்சே? என்ன மட்டும் ஏ இப்படி சோதிக்கிறனு தெரியலயே ஆத்தா?
'நா நேத்து ஊருக்கு வர்றதுக்கு முன்னால கூட செல்வத்துக்கிட்ட பேசுனே. ஊருக்குப் போகலாம் வாடா அம்மா திட்டும் அடிக்கும் வாங்கிக்க நா சமாதானப்படுத்துறேனு. உ மேல அது உசரயே வெச்சிக்கினு இருக்குது நீ வந்தினா அதுக்கு கோவமெல்லா போயிடுமுன்னு சொல்லிப்பார்த்துட்டேன். ஆனா அவ உனக்கு பயந்துகிட்டு வரமாட்றான். நீ தான் கல்யாணத்தக் கூட பாக்கலியே! இப்ப தாலிய பிரிச்சி கோத்துட்டு செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சிட்டு வந்துடுவ வாம்மா எங்கூடவே ஊருக்கு'
'எல்லாத்தயு செய்யதானே நீ இருக்குற! நீ இருக்குற தைரியத்துலதான்டி அவ இப்படி எல்லாம் என்ன மதிக்காம அந்த ஈனச்சிறுக்கியப் போயி கல்யாணம் பண்ணி இருக்கா. அநாதையா கிடந்த அவனுக்கு எல்லா செஞ்ச நா நம்ம சாதி சனத்துலயே ஒரு பொண்ண பாத்து கட்டி வெச்சி இருக்க மாட்டேனா? கண்ணுக்கு அழகா எங்கூடவே குடும்ப நடத்துவா. என்ன ஒக்காற வெச்சி சோறு போடுவான்னு கனவெல்லாங் கண்டேனடி எங்கனவுல மண்ணள்ளி போட்டுட்டானடி'
'அதெல்லாம் ஒன்னுமில்லமா! வந்த எடத்துல அவன் மனசுக்குப் புடிச்ச மாதிரி ஒரு பொண்ணோட பழகிட்டான் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும் தெரிஞ்சி போயி உங்கிட்டயும் சொன்னேன். நீ ஒத்துக்க மாட்டே அவன தல முழுகிடுறேன்னுட்ட. நா என்ன பண்ணுவே? அவங்களா ஒடிப் போறதுக்கு முன்னாடி நானே முன்ன நின்னு வடபழனி முருகன் கோயில்ல கல்யாணத்த நடத்தி வெச்சேன். இல்லன்னா பிரச்சனை பெரிசா ஆகியிருக்கும். அந்த ஊர பத்தி உனக்கு என்ன தெரியும்? நா என்ன நம்ம ஊரிலயா இருக்கே? அவங்ககிட்ட சண்ட போட.. இல்ல சமாதானம் பேச..!
'எல்லாத்தயும் நடத்தி வெச்சிட்ட. இனிமே எங்கிட்ட எதுக்கு வரப்போறான்? இன்னும் கொஞ்சங் காலம் நா இப்படியே இருந்திடறேன் அவங்க நல்லாயிருக்கட்டும';.
'நீ மட்டும் ஏம்மா ஊர்ல தனியா வயசான காலத்துல அல்லாடிகிட்டு இருக்கனும். நானும் எத்தனை வருஷமா கூப்பிடறேன். எங்கக்கூடவே பட்டணத்துல வந்து இருந்துடுனு. அப்படி என்னதான் இருக்குதோ இந்த ஊர்ல ? எடத்த உட்டு நகரமாட்டேங்கறியே. இப்ப அவனுக்குனு வீட வாடiகைக்கு பிடிச்சி தனியா குடுத்தனம் நடத்த ஏற்பாடு பண்ணியிருக்கிறேன். நம்மள விட்டா அவனுக்கு வேற யாரு இருக்காங்க? அவ இப்பதா நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கிறான். நீ மட்டும் அங்க வந்தினா கொஞ்ச நாள்ல உங்கோவ தாவமெல்லாம் போயிடும். உன்ன கடைசி வரைக்கும் ஒக்கார வெச்சி சோறு போடுவாம்மா. எங்கூடவே ஊருக்கு வந்துடும்மா'
'போயும்...போயும்.... அவளோட கையால என்ன சோறு வாங்கித்தின்ன சொல்றியா? இதுக்குத்தானா நா அவன வளத்து ஆளாக்கின? நம்ம சாதிசனம் எல்லாம் என்ன பாத்து காறித் துப்பாதா? அதுக்கு நா நாண்டுகிட்டு செத்துடலாம்.'
'மேல்பட்டு எல்லாம் எறங்கு' என்று நடத்துனர் விசிலை ஊதினார். விசில் ஊதுவதுமாக... ஊதி அடங்குவதுமாக... பேருந்து ஒடிக் கொண்டே இருந்தது.