ஓராண்டுக்கு முன் சுப்ரபாரதிமணியனைத் திருப்பூரில் பார்த்தேன். அவரைப் பார்த்த அவ்வெயிற்காலையில் சுகந்தியைப்பற்றி கேட்க வேண்டுமென்ற பரபரப்பு மனம்முழுவதும் ஓடியது. நேரடி அறிமுகமற்ற மனிதரிடம் எப்படிக் கேட்பதென்ற தயக்கம். ஒற்றை வரியில் கூட விசாரிக்காமல் வந்துவிட்டேன். அன்று தயக்கம் உடைத்து பேசியிருந்தால் சுகந்தியை சந்திக்கவோ அவரைப்பற்றி தோழிகளோடு பேசவோ வாய்ப்பாக அமைந்திருக்கும் என்ற எண்ணம் தற்போது குற்றஉணர்வாக எழுகிறது. பிப்ரவரி 13, 2009 காலை சுப்ரபாரதிமணியனிடமிருந்து சுகந்தியின் மறைவு குறித்து குறுஞ்செய்தி வந்தது.
2000-இல் கவிதைப் புத்தகங்களைத் தேடிப்படித்துக் கொண்டிருந்தேன். சொல்லாத சேதிகள், மீனாட்சி, திரிசடை, சுபத்ரா கவிதைகளோடு சுகந்தியின் கவிதை குறித்தும் அறிந்தேன். விடுதலை வேட்கையோடு எழுதியவர். பெண்ணின் இருப்பை சதா கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தவர். ஓயாத உள்ளத்தின் வெளிப்பாடு அவரது கவிதையெங்கும் விரவிக் கிடக்கிறது. கடந்த ஆண்டு கருத்தரங்க நிகழ்வொன்றிற்காக நான் வாசித்த பெண் கவிஞர்களின் தொகுப்புகளில் ஒன்றாக மீண்டெழுதலின் ரகசியத்தை வாசித்தேன். ஆழந்த அனுபவங்களின் வெளிப்பாட்டை அத்தொகுப்பு அளித்தது. “என் குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்தது யார்? நீள்கிறது நினைவின்மை ஏதோ ஒருவகையில் எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் இருந்தும்” என்ற வரிகள் நாள்தோறும் எத்தனை நிகழ்வுகளில் சிக்கிக்கிடக்கிறோம். யாரையும் அறிந்து கொள்ளும் ஆர்வமற்ற காலக் கத்தியின்முன் பலியாடாகிப்போன வாழ்வை அசைபோட வைத்தன. குழந்தை மனம் வேண்டும் எனக்கும் என்ற பாசாங்கற்ற மனதோடு குழந்தையாக வாழ்ந்திருக்கிறார்.
உதவி செய்ய ஆளில்லாமல், மாதந்திரத் தொல்லைகளில் சமைக்கும் சமையல் தேவையானது. எல்லோருக்கும் பெரும்பாலான பெண்களின் புலம்பல் இதுவாகத்தான் இருக்கிறது. இதை பகிரங்கமாக சொன்னாலும் அடைக்கப்பட்ட செவிகளும் உணரத்தலைபடாத சமூகமும் இருந்தால் மாற்றம் என்பது கேள்விக்குறிதானே? தீட்டு என்று பெண்ணை தள்ளிவைத்தாலும் மூன்று நாட்களுக்கு கணவன்களே பொங்கிப் போடுவதும் உண்டு. (சுப்பரபாரதிமணியனுக்கு விலக்களிக்கிறேன். தாயாய் இருந்து மனைவி மகள்களுக்கு சமைத்ததுப்போட்ட கரங்கள் என்பதால்) ஆரோக்கியமான மாற்றங்களை நம் பண்பாட்டுத் தளத்தில் கொண்டு வரவேண்டும்.
எனது தனிமையைப் போக்க
எவ்வழியும் கிடைக்க வில்லை
நானறிந்த சுற்றமும்
தோழிகளுடனான இருப்பும்
விலகலைக் கற்றுக்கொடுத்தது…
எனது நான் வீட்டின் இருண்ட மூலையில்
பதுங்கிக் கிடக்கிறது எலிகளோடு
என்ற மன நிலையில் தனக்குத்தானே தனிமையோடும் ஓயாத கேள்விகளோடும் வாழ்ந்திருக்கிறார். பிரசவம் குறித்த மகிழ்வைக் காட்டிலும் பாட்டியின் பொருளாதாரம் குறித்த கவலை உவகையை உடைத்துப் போடுகிறது.
வாழ்க்கை கவிதை பெண்களின் வாழ்க்கைக்காக ஏங்கும் சுகந்தியைக் காட்டுகிறது. பெண்களின் நிலையைப் பொறுக்க மாட்டாமல் மௌனமானேன் என்கிறார். ஓய்ந்து போன கால்கள் நடக்கின்றன. மெதுவாய் தலைகள் நிலத்தைப் பார்த்தபடி, நிமிரமுடியாமல் என்ற மன ஊசலாட்டத்துடனான சுகந்தியின் வாழ்க்கையில் அவரது மனம் பெண்களின் குடும்பப் பொறுப்பு, பொருளாதாரம் பெண்களை எதுவும் செய்ய விடாத பாரங்களைப் பதிவு செய்கிறது. மீளா உறக்கத்தில் பல ஆண்டு சிகிச்சைக்களில் முடங்கிக் கிடந்த சுகந்தி உடலை விட்டு விடுதலையாகியிருக்கிறார்.
மாலதி மைத்லி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி இணைந்து 28-02-09 அன்று அணங்கு சார்பில் சென்னை பெசன்ட் நகாpல் ஸ்பேசஸ் கல்சுரல் சென்டரில் கிருத்திகா, சுகந்தி இருவருக்குமான அஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பிரசன்னா ராமசாமியின் பங்களிப்போடு நடிகை ரோகிணி சிறுநிகழ்வை நடத்தினார். மௌனமும் கூர்ந்த பார்வையும் பயன்படுத்தப்பட்ட வரிகளும் நிகழ்வில் எடுப்பாயிருந்தது. இளம்பிறை, அசோகமித்திரன், அ.மங்கை, நடிகை ரேவதி, வெளிரங்கராஜன், அய்யப்பமாதவன், அஜயன்பாலா, நரன், மதுமிதா, நந்தமிழ் நங்கை, தமிழ்நதி, உமாசக்தி, கிருஷாங்கினி, முதலான பலரும் கலந்து கொண்டனர் .
சுகந்தியைப் பார்க்க நினைத்து அவரது அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டது வருத்தம் தான். மாலதி மைத்லி கூறியது போல சமகாலத்தில் வாழும் போதே அவர்களைப்பற்றி பேசத்தவறிவிடுகிற மனோபாவத்திலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் படைப்பாளியின் மனநிலை எப்போதும் ஓய்ந்து இளைப்பாறுவதில்லை.
எப்போதாவது விரியும் இதழில்
புன்னகை தோன்றி மறையுமுன்னே
சலனங்கள் என்னைப் பாதிக்கும்.
எல்லாவற்றையும் மீறியபடி
எனக்குள்நான்
அசைவற்றுப் பார்த்திருக்கிறேன்.
விட்டு விடுதலையாக
எனக்கமையாது போனது
என்வெளி.