புதிய மொந்தை: புதிய கள்!
ஈஸ்வர்
“ஏழைகளின் டானிக் கள் என்று பெரியாரே கூறியுள்ளார். அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்” என்று தேர்தலுக்கு முன் தமிழக முதல்வர் கூறினார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த அன்று இரவே கோவை ஈரோடு பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தென்னந்தோப்புகளிலும் பனந்தோப்புகளிலும் போலீஸார் புகுந்து மரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த பாளைகளையும், பானைகளையும் எடுத்து வீசினார்கள். இரவோடு இரவாக விவசாயிகள் கைது செய்யப்பட்டார்கள்.
எல்லோருக்கும் சில கேள்விகள் இருக்கின்றன. ‘கள்’ என்ன போதைப் பொருளா? தமிழ்நாடு முழுவதும் தெருவுக்குத் தெரு பூத்துக் குலுங்கும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் சாராயத்தைவிட கள் போதை தரக் கூடியதா? டாஸ்மாக் கடைகளில் மட்டும் சாராயத்தை விற்க அனுமதி தரும் அரசாங்கம் கள்ளை ஏன் தடை செய்கிறது?
முதலில் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டது 1987-ம் ஆண்டு. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலம். அன்று முதல் இன்று வரை அந்தத் தடை இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறது. ஆக, கடந்த 22 ஆண்டுகளாக கள் விற்பனை செய்வதே இல்லையா? கள் குடிப்பவர்களே இல்லையா? என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது. தடை என்று விதித்தால் அதை மீறுவதுதானே இயல்பு!
கடந்த ஜனவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும் கள்ளுக்கு விதித்திருந்த தடையை மீறி, காவல்துறையின் கண்டிப்பையும் மீறி கள் விற்பனை பகிரங்கமாகத் தொடங்கியது. புதிதாக ஆரம்பிக்கும்போது சலுகை விலையில் கொடுக்க வேண்டுமல்லவா? ஒரு லிட்டர் கள் இருபது ரூபாய்தான். பல இடங்களில் சைட் டிஷ் இலவசமாகக் கொடுக்கப்பட்டதாம்.
தேர்தல் நேரத்தில் மக்கள் மனதில் இடம் பிடிக்க, குறிப்பாக பெண்களின் வாக்குகளைக் குறிவைத்து ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமாகப் பிரசாரம் செய்து வந்தார்கள். ‘கள் என்பது போதைப் பொருள். தடையை மீறி கள் இறக்குவது குற்றம்.’ ஒரு பக்கம் ‘மது உடலுக்குக் கேடு. மது பானங்களைக் குடிப்பதால் என்னென்ன பிரச்னைகள் வருகின்றன’ என்று ஒரு சிலர் மேடை போட்டு முழங்கிக் கொண்டிருந்தார்கள்.
கள் இறக்குவதை கடுமையாக எதிர்த்து வந்த காங்கிரஸும் மற்றும் பல கட்சிகளும் தேர்தல் நேரத்தில் விவசாயிகளின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கள் விஷயத்தைக் கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். பின்னர் ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கள் இறக்குவதற்கு சட்டப்படி அனுமதி அளிப்போம்’ என்றார்கள். அ.தி.மு.க. ஒரு படி மேலே போனது. பரமக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ‘கள் இறக்குவதற்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும். தேர்தலில் வெற்றி பெற்றால் கள் இறக்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்கித் தரப்படும்’ என்று தெளிவாகச் சொல்லப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகள்தானே! சொன்னபடி செய்ய வேண்டுமா என்ன?
‘கள்ளுக்குத் தடை விதிக்கும் இந்த அரசு டாஸ்மாக் கடைகளுக்குத் தடை விதிக்கட்டும். அதன் பிறகு கள்ளுக்குத் தடை விதிப்பதைப் பற்றி பேசட்டும்’ என்கிறார் கள் இறக்கும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி.
அவர் சொல்லும் சில விஷயங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை. ‘ஏழை மக்கள் சாப்பிடும் பழைய சோற்றில் 3.5 சதவிகிதம் ஆல்கஹால் உள்ளது. ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை எல்லோரும் தினசரி உணவில் உபயோகப்படுத்தும் தயிரில் ஆல்கஹால் உள்ளது. ஏன், டீ, காபியில் கூட ஆல்கஹால் உள்ளது’ என்கிறார் இவர்.
முதலில், கள்ளுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது? இது தெரிந்தால் அதற்குத் தகுந்தவாறு செயல்படலாம் என்பது கள் இறக்கும் இயக்கத்தினரின் ஆர்வம். கடந்த 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தக் கேள்விக்குப் பதில் தேடினார்கள். அவர்களுக்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா?
‘நாடு முழுவதும் கோடிக்கணக்கான தென்னை மரங்களும், பனை மரங்களும் இருக்கின்றன. அத்தனை மரங்களையும் கண்காணிக்க இயலாது என்பதால் கள் இறக்குவது தடை செய்யப்படுகிறது.’
எதற்காகத் தடை செய்யப்படுகிறது என்பதற்கு சரியான விளக்கம் இல்லை. விஷயம் தெரிந்தவர்கள், ‘கள் போதையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் கள்ளில் போதை தரக்கூடியவற்றைக் கலந்து விடுகிறார்கள். யார், எங்கு போதைப் பொருளைக் கலந்து விற்பனை செய்கிறார்கள் என்று கண்காணிப்பது முடியாது என்பதால் ஒட்டுமொத்தமாகக் கள் இறக்குவது தடை செய்யப்பட்டது’ என்று சொல்கிறார்கள்.
இந்தத் தடை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. கள்ளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லும் காங்கிரஸ்காரர்கள் காங்கிரஸ் ஆட்சி செய்யும் பிற மாநிலங்களில் தடை விதித்தார்களா? காந்தி பிறந்த மண் என்பதால் குஜராத் மாநிலத்தில் மட்டும் மதுவிலக்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏன் இந்தியா முழுவதும் அதைச் செயல்படுத்தக்கூடாது? அப்படிச் செயல்படுத்தினால் கள் இறக்குவதற்கும் தடை விதிக்கலாம். ஆனால் மஹாத்மா காந்தியே ஒரு முறை ‘புளிக்காத கள் சிறந்த உணவு’ என்று சொல்லியிருக்கிறார்.
கள் விற்பனை தொடங்கிவிட்டால் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும் என்கிறார்கள் ஒரு சாரார். தென்னையும் பனையும் வைத்திருக்கும் விவசாயிகளுக்குக் கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால், மற்ற விவசாயிகள் கள்ளைக் குடித்துவிட்டு படுத்துவிட்டால் நாடு என்னத்துக்கு ஆவது என்று ஒரு சாரார் கவலைப்படுகிறார்கள்.
இப்போதும் மட்டும் என்ன கள் கிடைப்பதில்லை என்று குடிக்காமலா இருக்கிறார்கள்? குடிப்பவர்கள் எப்போதும் குடித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். கள் கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ஏகப்பட்ட மதுபான வகைகள்!
இந்தியன் மேட் ஃபாரின் லிக்கர். இதுதான் இன்றைய டாஸ்மாக்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ‘சரக்கு’ தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கின்றன. ‘கோடிக்கணக்கான மரங்களைக் கண்காணிப்பதைவிட இந்த ஒற்றை இலக்க நிறுவனங்களைக் கண்காணிப்பது எளிது. ஆகவே கள் தடை செய்யப்பட்டது’ என்கிறார் ஒரு குடிமகன்.
அவரே கூடுதலாக இன்னொரு தகவலையும் சொன்னார். ‘கள் இறக்க அனுமதிப்பது குறித்து ஆராய ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறது தமிழக அரசு. வரும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே கள் இறக்குவது பற்றி ஒரு முடிவு தெரியும் பாருங்கள். தொண்டாமுத்தூர் இடைத் தேர்தல் வேற வருது. ஒரு முடிவெடுக்காமலா போயிடுவாங்க.’
அரசு முடிவெடுப்பதைத்தான் சொன்னார். அரசு இதற்கு ஒரு முடிவெடுக்காவிட்டால் மக்கள் இந்த இடைத் தேர்தலில் ஒரு முடிவெடுப்பார்கள் என்பதை சொல்லாமல் சொன்னார். சரி, அவர்கள் முடிவெடுப்பது இருக்கட்டும். உண்மையிலேயே கள் தடை செய்யப்பட வேண்டியதுதானா என்பது பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். “அட, நீங்க வேற... டாஸ்மாக்குக்கு வர்ற சரக்கெல்லாம் யார் தயார் செய்யறாங்கன்னு தெரிஞ்சா நீங்க இது போல பேச மாட்டீங்க” என்றார்.
‘சரக்கு’ தயார் செய்யும் நிறுவனங்கள் யாருடையவை என்று உங்களுக்காவது தெரியுமா?!