இயற்கை வழி வேளாண்மை

ஏங்கல்ஸ் ராஜா

"50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சுவை இப்போது இல்லாமல் போனதற்கு என்ன காரணம் ..."


இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த கத்தரிக்காயை ஒரு நண்பரிடம் கொடுத்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த நண்பரை பார்க்க நேர்ந்த போது அவர் சொன்னார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு கத்தரிக்காயை நான் இப்போது தான் சுவைத்தேன். அவர் சொன்னது எனக்கு வியப்பளிக்கவில்லை. காரணம் இதற்கு முன்னர் பலர் சொல்லிக்; நான் கேட்டது தான். ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சுவை இப்போது இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்பது பற்றிய தகவல்களையும் சேகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது நம்மாழ்வார் போன்றவர்களிடன் பேசிய போது தான் உண்மைக் காரணங்களை கண்டறிய முடிந்தது. இந்த காரணங்களை நான் ஏற்றுக்கொண்டதைப் போலவே நம்மாழ்வரையும் எனது குருவாக ஏற்றுக்கொண்டேன்.

கம்மங்கூழ், கேழ்வரகு அடை, பாசிப்பயறு புட்டு, உளுந்து களி, காராமணி சுண்டல், சர்க்கரை எள், தினை, சானை, காடைக்கன்னி, மாப்பிள்ளைச்சம்பா அரிசி, கல்லுருண்டை நெல் போன்ற உணவுகளை கலந்து காலை, மாலை என தினமும் உணவில் சேர்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள் என்பதை எனது தாத்தா பாட்டியிடமும், வயது முதிர்ந்த நண்பர்களிடம் நான் கேட்ட நினைவு இப்போது வருகிறது. பலாப்பழம், மாம்பழம், கொய்யா, சீதா, பரங்கி பழம் என இன்னும் பல, இப்படி உணவிலும் கூட பன்மயம் நிறைந்த நமது முன்னோர்கள் வாழ்வை நாம் எப்படி இழந்தோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளாமல் இன்றைய தலைமுறையினர் என் தாத்தா ஐயனார் சிலை மாதிரி இருப்பார் தெரியுமா? என்று பெருமை அடித்துக் கொள்ளுகிறார்கள். நான் ஏன் அப்படி இல்லை? அதற்கு காரணம் என்ன என்ற உண்மைகளை தேட முயலுகிறார்கள். என் பாட்டி சொல்லிக் கேட்டு இருக்கிறேன், நான் வெள்ளாமை செஞ்சப்ப 100 குழிக்கு (33 சென்ட்- தஞ்சாவூர் பகுதியில் நில அளவை குழியில் குறிப்பிடுகிறார்கள்) 24 மூட்டை (60 கிலோ மூட்டை)அறுத்து கொட்டி இருக்கேன். கதிரை அடிச்சா வாச கொள்ளாம நெல் மலை மாதிரி குவிஞ்சு கெடக்கும். நான் பொம்பளையா செஞ்ச வெள்ளாமையைக் கூட இப்ப உங்களால செய்ய முடியல.

என் பாட்டி சொல்லும் அளவு விளைச்சலை இப்போது எடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. என் நினைவில் இருக்கும் இன்னொரு விஷயம் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ வீட்டில் இருக்கும் வைக்கோல் போரை வைத்து தான் முடிவு செய்வார்கள். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏக்கருக்கு 1000 கிலோவில் இருந்து 1500 கிலோ வரை தான் நெல்லில் விளைச்சலை எடுக்கிறார்கள். விளைச்சல் மட்டும் குறையவில்லை, சுவையும் இல்லாமல் போனது, உடலில் வலுவும் இல்லாமல் போனது தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. என் பாட்டி ராணுவ வீரனைப் போல இன்றும் இருப்பது உலகில் என்னை மிகவும் கவரும் என்று. இது மாதிரியெல்லாம் நடக்க என்ன காரணம்? அது எப்படி நிகழ்ந்தது? என்ற ஆய்வுகளை பலர் தங்கள் பார்வையிலிருந்து பல காரணங்களை கூறுகிறார்கள். உழவனின் மகனாகிய நான் கூறும் காரணங்களை அடுத்த வரிகளில் கொடுக்கவிருக்கிறேன்.

நான் எனது 10 வயசு வரை என் பாட்டியிடம் வளர்ந்தேன். தாத்தா 30 மாடுகள் வரை வச்சிருந்தார். சாயுங்காலம் ஆனதும் மாடு மேய்க்கும் ஆள் மாடுகளை வீட்டுக்கு ஓட்டி வருவார். வீட்டிலிருக்கும் ஆண், பெண் குழந்தைகள் என எல்லோருமா சேர்ந்து மாடுகள பிடிச்சு கட்டி, வைக்கோல் அள்ளி போடுவோம். இது நடந்து முடிய ஒரு மணி நேரம் வரை ஆகும். இதில் உழவு மாடு 3 ஜோடி, வண்டி மாடு 2 ஜோடி, பசு மாடு 2 எனவும் மீதமெல்லாம் கன்னுக் குட்டியாகவும், கறவை முடிந்ச மாடாகவும் இருக்கும். சாயுங்காலம் மாடு கட்டியவும் இரவு உணவு முடிந்த விளையாடித் திரிவோம். பக்கத்து வீட்டு சின்னப் பிள்ளைகள் எல்லாம் ஒன்னாச் சேந்து தான் விளையாடுவோம். நிலா வெளிச்சத்துல விளையாடிய அந்த நொண்டி கோடும், தண்ணிக் கோடும் இன்னும் நெனப்புல இருக்கு.

ஆடி மாசம் வந்ததும் எல்லாரும் அவங்க அவங்க வயலுக்கு எரு அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. எங்க வீட்டுலயும் அப்படித்தான். எல்லாரும் ஒரே நேரத்;தில் எரு அடிக்குற வேலையை முடிச்சுடுவாங்க. எரு அடிச்சு இருக்குற வயலுல எல்லாம் சிறுவர்கள் ஆளுக்கொரு கம்பு வைத்துக்கொண்டு எரி கம்பு விளையாடுவோம். இது வருடம் தோறும் நடக்கும் ஒரு பருவ கால விளையாட்டு. (எரி கம்பு – கையில் ஒரு கம்பு இருக்கும் விளையாட தாமதமாக வரும் நபர் துரத்த வேண்டும், மற்றவர்கள் கையில் இருக்கும் கம்பை வயலில் கிடக்கும் சாணியில் வைத்துக் கொண்டு நின்றால் தப்பிக்கலாம். இல்லைனா துரத்துர ஆள் தொட்டுவிடுவான் தொடப்பட்ட நபர் துரத்த ஆரம்பிக்க வேண்டும்) எரு அடிப்பது தாமதம் ஆனா, தண்ணி வந்துடும் வயலெல்லாம் தண்ணி பாய்ஞ்சு வண்டி போகாது. எரு அடிக்காத வயலுல நடுற நடவு நல்லா வெளையாதுனு எல்லாருக்கும் தெரியும். அது மாதிரி ஆத்துல வர்ற மொத தண்ணிய பாய்ச்சுறதுல தான் போட்டி நடக்கும். காரணம், ஆத்துல இருக்குற கால்நடை கழிவு, மனித கழிவு எல்லாமா சேர்ந்து நல்ல எருவான தண்ணியா வரும். அதிகமான எரு தண்ணியில வந்துடும் அதுக்குத் தான் அத்தன போட்டி. அத கங்கெலுவு தண்ணியின்னு சொல்லுவாங்க.

காலைல 5 மணிக்கெல்லாம் வண்டி பூட்டி, உழவு மாட்டை வண்டிக்குப் பின்னால் கட்டி விட்டு கலப்பை மற்ற சாமான்களையெல்லாம் வண்டியில் ஏத்திக்கிட்டு வயலுக்கு போவாங்க. சொந்தக் காரர்களும், கூட்டாளிகளும் வந்து உழுவார்கள், வரப்பு வெட்டுவார்கள், அதுக்குப் பதிலா எங்க தாத்தா, மாமா எல்லாம் போய் அவங்களுக்கு வேலை செஞ்சு கொடுப்பாங்க. காலை சாப்பாடு கொண்டு போவது என் வேலை. அவங்கலெல்லாம் சாப்பாடுக்கு வரப்புல உக்காரும் போது நான் வண்டி மாடு பூட்டுன ஏரை ஓட்டி மகிழ்வேன்.

10 மணிக்கெல்லாம் உழவை முடிச்சுக்கிட்டு பறிச்ச நாத்தையெல்லாம் கட்டை வண்டியில ஏத்திக்கிட்டு வயல் வயலா கொண்டு போய் வெளம்புவோம் (விசுருவோம்). அப்படி வெளம்பும் போது கையில் நாத்து முடியைக் கொடுத்து விட்டால் பெண்களெல்லாம் வட்டமாக நின்று கைது செய்து விடுவார்கள் பணம் கொடுத்தால் தான் விடுவார்கள். அதை சாமி காசு என்று சொல்லுவாங்க. பெண்களெல்லாம் சேர்ந்து சாயுங்காலம் வரை கிராமிய பாட்டெல்லாம் பாடிக்கிட்டே நாத்து நடுவாங்க. வயல்ல இருக்குற ஏந் தாத்தா நெருக்கி நடுங்க, நெறைய பயிரை வைங்கனு கத்திக்கிட்டே இருப்பார். சில நேரத்துல என்னையும் கத்த சொல்லி வையிவாரு. நான் வெக்கப்பட்டுகிட்டே கத்துவேன்.

இதுக்கு அப்பறம் களை எடுக்குற வேலை நடக்கும். ரெண்டு தடைவ களை எடுப்பாங்க கதிர் வந்துடும். அறுவடை நடக்குற நேரந்தான் ரொம்ப குஷியான நாட்கள். அது பொங்கலுக்கு முன்னாடி நடக்கும். கதிரை அறுத்து வயல்லயே மேடான ஒரு இடத்துல களம் செதுக்கி அதுலயே கதிரு கட்டையல்லாம் போட்டு கதிரு அடிப்பாங்க. வைக்கோலையும் பக்கத்துலயே போரா போடுவாங்க. சாங்காலம் ஆனதும் கூலி போடுற நேரம் தாத்தா, பாட்டி எல்லாம் வந்துடுவாங்க. கூலி போட்டதுக்கு அப்பறமும் பேரம் பேசி டீ செலவுக்குனு நெல்லு கேட்டு வாங்குவாங்க.

கதிரு அடிச்சு முடிச்சப்பறம் ஒரு வாரம் கழிச்சு ராத்திரியில வைக்கோல் அடிப்பாங்க (பினையல்) சிறுவர்கள் பினையல் ஓட்ட பெரியவர்கள் எல்லாம் வைக்கோலை உதருவாங்க. உதருன வைக்கோலை ஏத்திக்கிட்டு வீட்டுக்குப் போவாங்க. காலைல எல்லாத்தையும் பெரிய வைக்கோல் போரா போடுவாங்க. வைக்கோல் போர் போடுறனக்கி சாம்பார் பொறியல் எல்லாம் வச்சு சந்தோஷமா கொண்டாடுவாங்க. (தினமும் மீன், கருவாடு, கறி தின்று பழகியவர்கள் சாம்பாரை விசேஷமான உணவாக நினைக்கிறார்கள் இன்றும் கூட). ஒரு வருடத்துக்கு தேவையான தீவனம் அத்தனையும் ஒரே முறையில் வந்துடாது.

கதிரு அறுக்குறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி உளுந்து, பாசிப்பயிறு ரெண்டையும் சேத்து வெதச்சு விடுவாங்க. அடுத்த மூனு மாசத்துல அத அறுவடை செஞ்சு கொடியை எல்லாம் மாட்டுக்காக போர் போட்டு வைப்பாங்க. நிலக்கடலை போடுற வசதி உள்ளவர்கள் அதோடு உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு எல்லாம் போடுவாங்க. அதையும் போர் போட்டு கால்நடைகளுக்குத் தீவனமாக போடுவாங்க. கால்நடைகளுக்கு இது மிகவும் சிறந்த தீவனம். ஆடு, மாடுகள் எல்லாம் இதைத் தின்னா கொளுக்கட்டை மாதிரி இருக்கும்னு சொல்லுவாங்க. புதிசா மாடு பழக்குற வேலையை இப்ப தான் செய்வாங்க. இப்படி மகிழ்ச்சியான நினைவுகள்?

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5