இயற்கை வழி வேளாண்மை - ஓர் ஆய்வு

ஏங்கல்ஸ் ராஜா

"பழமான பின் காயாவது எது? என்ற விடுகதை தான் அது. விடை காண முயலுவோம்? "


மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் மட்டும் உணவளித்தால் போதாது, மண்ணுக்கும் உணவளிக்க வேண்டும் என்பதையும் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அதனால் தான் கோடை காலத்தில் பயிர்கள் எதையும் செய்யாமல் நிலத்தை தரிசாக போட்டார்கள். தரிசு போடப்பட்ட நிலத்தில் கொளுஞ்சி, கழுதைப்பூண்டு, நாய்வேளை, நல்லவேளை, அவுரி, மிளகாய் பூண்டு, தும்பை போன்ற இன்னும் ஏராளமான உரச்செடிகள் தானாகவே வளர்ந்து இலைகளை கொட்டி சூரிய ஒளி நேரடியாக மண்ணில் படாமல் பாதுகாத்து வந்ததோடு, வேர் மூலம் நுண்ணுயிர்களைப் பெருக்கியும் மண் வளத்தை பாதுகாத்தது. அடுத்த வருடத்திற்கு தன்னுடைய சந்ததியினர் வளர்ந்து நிற்பதற்கான தரமான விதைகளையும் அந்த மண்ணிலேயே உதிர்த்து விட்டு தன்னுயிரை மண்ணிற்கு கொடுத்து வந்தது நமது உரச்செடிகள்.

இந்த உரச்செடிகளின் இன்னொரு சிறப்பு என்னவென்றால்? இது உதிர்த்து விடும் விதைகள் அடுத்த 8 -10 மாதம் வரை நிகழும் மழை, வெள்ளம், வெயில், வறட்சி போன்றவற்றில் இருந்து தன்னை பாதுகாத்து கொண்டு கோடையில் கிடைக்கும் ஓரிரு மழையை முழுதுமாக பயன்படுத்திக் கொண்டு முளைத்து, வளர்ந்து முன் குறிப்பிட்ட முழு பயனையும் செய்து விட்டே மடியும். இன்னும் சொன்னால், இடைப்பட்ட காலத்தில் நெல் நடவுக்காக நடைபெறும் சேற்றில் கூட இதன் விதைகள் அழுகி போவதில்லை.

இவற்றை மடித்து உழவு செய்யும் போது வரப்பில் இருக்கும் மரங்களின் இலைகளை கழித்து வயலில் சேர்த்து விடுவார்கள். உரச்செடிகள் வளர்ந்து நிற்பதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், மண்புழு போன்ற சிற்றுயிரிகள் எல்லாம் தன்னுயிரை பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. செடிகள் உதிர்த்த இலைகளும், மடிந்த செடிகளும் நுண்ணுயிர்களுக்கு உணவாக மாறி நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு உதவி செய்தன. நுண்ணுயிர்கள் வாழ்ந்து வந்ததன் காரமாக மண் மிகுந்த வளமான நிலையில் இருந்து வந்தது.

நுண்ணுயிர்களின் அவசியம்?

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஒரு வேற்றுமை சொன்னால், விலங்குகள் சமைத்த உணவை உட்கொள்கின்றன. மனிதர்கள் சமைத்த உணவை மீண்டும் சமைத்து உட்கொள்கிறார்கள். இவர்களுக்கும் தாவரங்களுக்கும் ஒரு வேற்றுமை சொன்னால், தாவரங்கள் அனைத்தும் சமையல்காரர்கள், மனிதர்கள், விலங்குகள் எல்லாம் நுகர்வோர்கள். ஆம். அப்படித் தானே நடக்கிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கிழங்குகள், கொட்டைகள் அனைத்துமே சமைக்காமல் சாப்பிடக்கூடிய நிலையில் தான் தாவரங்களிடம் இருந்து கிடைக்கிறது. தாவரங்கள் இதனை சூரிய ஒளியிலிருந்து முன்னரே சமைத்தது தான் இந்த உணவுகள்.

இப்படி இந்த தாவரங்கள் சூரியனிலிருந்து உணவு தயாரிக்க வேண்டுமானால் அதற்கு நுண்ணுயிர்கள் மிக முக்கியமான ஒன்று. நுண்ணுயிர்கள் இல்லை என்றால் இது நிகழாது. தாவரங்கள் உணவு தயாரிக்க தேவையான தண்ணீர், அஞ்சரைப் பெட்டி சாமான்கள் அனைத்தையும் நுண்ணுயிர்கள் கரைத்து அதனை வேர் மூலமாக இலைக்கு (அடுப்புக்கு) அனுப்பி வைக்கிறது. இவைகளை சேர்த்துக்கொண்டு இலையில் சமையல் நடந்த பின் காயும், பழமும், கொட்டையும், கிழங்கும், தானியமும் கிடைக்கிறது.

மீன் செத்தா கருவாடு, அட நீ செத்தா வெறுங்கூடு என்று தமிழ் சினிமாவில் ஒரு பாடல் கேட்டதுண்டு. மீனை கிழித்து குடலை நீக்கி விட்டு உப்பு வைத்து காய வைக்கிறார்கள். அது கருவாடாக பல ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டு உணவாக உட்கொள்ளப்படுகிறது. ஆனால், தாத்தாவைப் புதைத்த இடத்தில் தோண்டி பார்த்தால் எலும்பு கூட இருப்பதில்லை. இது எப்படி? தாத்தா எங்கே போனார்? ஏன் செத்துப் போனதும் நாற்றமடிக்கிறார்? உடலெல்லாம் வீங்கிப் போகிறது? நீண்ட நேரம் வைத்திருந்தால் வெடித்தோ! அழுகியோ போய்விடுகிறார்? தாத்தா மட்டுமா? தக்காளி கூடத் தான் அழுகி போகிறது என்கிறீர்களா? ம்.. ஏன் தக்காளியும் அழுகிப் போகிறது? ஆனால், கொஞ்சம் உப்பைப் போட்டு காய வைத்து விட்டால் எந்த பொருளாக இருந்தாலும் அதனை அப்படியே வத்தலாக மாற்றி நீண்ட காலம் வைத்திருக்க முடிகிறது? இதற்கு நம்மாழ்வார் ஒரு கதை சொல்வார் - பழமான பின் காயாவது எது? என்ற விடுகதை தான் அது. விடை காண முயலுவோம்? அடுத்த தொடரில் விடை.

பச்சைப்புரட்சியின் விளைவுகள்

இந்தியாவில் இருக்கும் நெல் ரகங்களில் தானிய விளைச்சல் குறைவாக இருக்கிறது, அதிக வயதுடையதாக இருக்கிறது என்று சொல்லி குறைந்த வயதுடைய, அதிக தானிய விளைச்சல் தரக்கூடிய குட்டை ரக நெல்லை அறிமுகம் செய்தார்கள். அவர்கள் சொன்னது தப்பாமல் நடந்தது. ஆனால், அது நீடிக்கவில்லை. பூச்சியினாலும், பருவத்தினாலும் குட்டை ரகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆனாலும் விடா முயற்சி செய்து ஏறக்குறைய 20 ஆயிரம் நெல் ரகங்களை ஒட்டினார்கள், அதில் சுமார் 600 ரகம் பயன்பாட்டுக்கு வந்து இப்போது வெறும் 20 ரகங்கள் புழக்கத்தில் இருப்பதே பெரிது. அது போகட்டும் இந்த குட்டை ரகம் விவசாயிகளை என்ன செய்தது.

குட்டை ரகங்கள் - பாரம்பரிய ரகங்கள்

குட்டை ரகத்தில் நெல் விளைச்சல் 2 கிலோ என்றால் தீவனம் 1 கிலோ

பாரம்பரிய ரகத்தில் நெல் விளைச்சல் 1 கிலோ என்றால் தீவனம் 2 கிலோ



ஆக இரண்டையும் கூட்டிப் பார்த்தால் வருவது என்னவோ மூன்று கிலோ தான். ஆனால், இதற்கு தலை கால் புரியாமல் வெட்கம் கெட்ட ஜென்மங்கள் எதையோ சாதித்து விட்டதாக இவ்வளவு காலம் பீத்திக்கொண்டிருக்கின்றன.

நீங்கள் கேட்பது புரிகிறது. நெல் அதிகமாக விளைய தானே செய்கிறது. அது சாதனை இல்லையா என்று தானே!

இந்த சின்ன விஷயத்தை செய்து தான் மொத்த இந்தியாவையும் கடனாளியாகவும், விவசாயிகளையெல்லாம் மதிப்பற்றவர்களாகவும் மாற்றிவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு என்ன இதை செய்தால் என்ன கிடைக்கும் என்று நினைத்தார்களோ அதெல்லாம் கிடைத்திருக்கும். அதில் சந்தேகம் யாருக்கும் இருக்கப் போவதில்லை. இந்த ஒரு விஷயத்தை செய்ததன் மூலம் எத்தனையோ புதிய வெளிநாட்டு ஒப்பந்தங்களை நமது அரசியல் மேதாவிகள் செய்துள்ளார்கள். அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் யாருக்கு உதவின, அதனால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் என்ன நன்மைகள் நடந்தன என்பன பற்றி நாம் காரசாரமாக விவாதிக்க வேண்டிய கட்டத்தை எட்டி விட்டோம் என்பதை உணருகிறேன். தாத்தா கிட்ட கேக்க மறந்துட்டேன் ஏதாவது கழுதைக்கு ஓட்டுப் போட்டுயான்னு? கழுதை சின்னத்துல நின்னாங்களோ என்னவோ? இதுகளெல்லாம் ஒன்னு சேந்து கெட்டா என்னா நடக்கும்னு பாப்போம்.

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5