செருப்பு

பொன்னிலா

"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றார் ஜெயலலிதா
”மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்” என்கிற டயலாக்கை விருமாண்டி படத்தில் பார்த்த போது. மனதுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. “அன்பை பழிங்கில் பதிந்திடுங்கள் காயங்களை தூசியில் எழுதிடுங்கள்” என்று சொல்கிற பார்சிலோனியப் பழமொழிதான் “ நடந்ததை மறப்பவன் மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்கிறான்” என்றும் சொல்கிறது. காயங்களை மறப்பதும். மன்னிப்பதும் பெரிய மனுஷத்தனம்தான். ஆனால் இந்த மனிப்பு, பழிவாங்குதல் எல்லாமே பெரும்பாலும் தனி மனித வெறுப்புகளுக்கு உதாரணமாகக் காட்டினால் நன்றாக இருக்கும். மன்னிக்கிறவனின் பண்புக்கு உகந்தவனாக பாதிப்பை ஏற்படுத்தியவனும் இருக்க வேண்டும். மன்னிப்பை வாங்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டு மீண்டும் அதே தவறைச் செய்தால் எப்படி இன்னொரு கன்னத்தையும் காட்ட முடியும்.

இந்தியத் துணைக் கண்டத்தில் பஞ்சாபை தங்களின் பூர்வீக நிலமாகக் கொண்ட சீக்கிய மக்கள் தேசீய இன உணர்வு மிக்கவர்கள். தங்களுக்கு ஆன்மீக விடுதலை அழிப்பதாக அவர்கள் நம்பும் சீக்கியத் தத்துவதின் மீதும் அதன் பிரத்தியேக அடையாளங்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். சுந்தந்திர போராடக் காலத்தில் சீக்கியர்கள் வெள்ளையர்களுக்கு எதிராக போராடி தனித்து நின்றார்கள். ஆனாலும் இந்தியாவின் பெரும்பான்மைவாத நோயான் இந்து மனோபாவம் சீக்கியர்களிடமும் பிரிவினையை உண்டாக்கியது. தனி நாடு கோரிக்கை என்பது (காலிஸ்தான் கோரிக்கை) அங்கிருந்தே துவங்குகிறது. இந்திராகாந்தி பிந்தரன்வாலேயையும் சீக்கிய போராளிக்குழுவையும் அரசியல் லாபத்திற்காக ஊதி வளர்த்தார். ஆனால் அவர்கள் காலிஸ்தான் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்த படியால் கடைசியில் ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை மூலம் பிந்தரப்வாலே உட்பட கிட்டத்தட்ட 1,000 சீக்கிய இளைஞர்கள் அவர்களின் புனிதத் தலத்திற்குள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதன் அடுத்த எதிர்வினையாக இந்திராகாந்தியின் மெய்பாதுகாவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து டில்லியில் அப்போதைய இளைஞர் காங்கிரஸ் தலைவர்களான ஜெகதீஷ்டைட்லர், சச்சன் குமார் தலைமையில் காங்கிரஸ் குண்டர்கள் சீக்கிய மக்களை படுகொலை செய்தார்கள். கிட்டத்தட்ட 3,000 சீக்கிய மக்கள் டில்லி வீதிகளில் வெட்டியும், தீயிட்டும், கொல்லப்பட்டார்கள். இந்தியா இது வரை கடந்து வந்த பாதைகள் நெடுகிலும் கலவரங்களையும் தாக்குதலையும் கடந்து வந்திருக்கிறது. ஆனால் முதன் ஒரு அரசே அதன் பிரதிநிகளே டில்லியில் வசித்த சீக்கிய மக்கள் குறித்த ஆவணங்களை கையில் வைத்துக் கொண்டு சீக்கிய மக்களை கொன்று குவித்தது அதுதான் முதன் முறை. 2002-ல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவரத்தில் மோடி கையாண்டது இதே பாணியைத்தான்.

உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சீக்கியப் படுகொலைகள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது இப்படி பதில் சொன்னார் ராஜீவ்காந்தி “ ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும்” மூன்றாயிரம் பேரின் படுகொலையை இவ்விதமாக நியாயப்படுத்தும் இனவெறியை அன்றைக்கு தட்டிக் கேட்கவோ அதைக் கண்டிக்கவோ சரியான எதிர்க்கட்சிகள் இல்லை. இடதுசாரிகள் உட்பட, வேறு சில கட்சிகள் மட்டுமே ராஜீவின் இந்த தடித்தனமான பேச்சைக் கண்டித்தனர். ராஜீவை நோக்கி பாராளுமன்றத்தில் கேள்வியை எழுப்பியது வைகோ. இன்றைக்கும் சீக்கிய அரசியல் சக்திகள் வைகோவை மரியாதையாகப் பார்ப்பது இதனால்தான்.

தொடர்ந்து சீக்கிய மக்கள் தங்கள் மீது காங்கிரஸ்காரர்களால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டு கிட்டத்தட்ட இருபத்தி நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நியாயம் கேட்டார்கள். ஜனநாயகத்தின் கதவுகளை தொடர்ந்து தட்டினார்கள். எப்போதெல்லாம் அவர்கள் நீதி கேட்டார்களோ அப்போதெல்லாம் அவர்கள் உதாசீனப்படுத்தப்பட்டார்கள். இழிவு படுத்தப்பட்டார்கள். இந்திராகாந்தி அவர்களின் படுகொலையைக் காரணம் காட்டி. 3,000 சீக்கியர்களின் கொலையை சமன் செய்தார்கள். அந்தப் படுகொலைகளுக்காக ஏகப்பட்ட நீதி விசாரணைக் கமிஷன்களை நியமித்தது இந்திய அரசு.அதில் நானாவதிக் கமிஷன் காங்கிரஸ்கட்சியின் ஜெகதீஷ்டைட்லரை கொலைகளில் பங்கு கொண்டவர் என்று அடையாளம் காட்டியது. ஆனால் டைட்லரோ ராஜீவ் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் டில்லி காங்கிரஸ் வட்டாரத்தில் கட்சியின் தலைமையில் இன்று வரை செல்வாக்கோடு வலம் வருகிறார். சமீபத்தில் சி,பி.ஐ டைட்டலருக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று அவரை சீக்கியப் படுகொலை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

இந்நிலையில்தான் உள்துறை அமைச்சரும் வேட்டி கட்டிய தமிழருமான ப.சிதம்பரம் டில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது பஞ்சாப் பத்திரிகையாளரான ஜ்ர்னைல்சிங் மூன்று முறை டைட்லர் விடுதலை குறித்து சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பினார். ஜர்னைல் சிங்கின் கேள்வியை சிதம்பரம் தட்டிக்கழித்தார், அல்லது முக்கியத்துவமில்லாத ஒன்றாக, இந்நேரத்திற்கு தொடர்பில்லாத ஒன்றாகப் பார்த்தார். வெறுப்படைந்த ஜ்ர்னைல் “உங்களுக்கு என் எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன்” என்று அவரது மேஜையில் விழும்படி தன் செருப்பை வீசினார். சிதம்பரமே அவரை மன்னித்து விடும்படி காவலர்களுக்குச் சொன்னார். ஜர்னைலும் தான் நடந்து கொண்ட விதம் குறித்து வருத்தம் தெரிவித்தார். பாக்தாத்தில் புஷ் மீது செருப்பு வீசீய அல் சையத்துக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.ஆனால் அதற்கு முன்பே அவர்கள் சையத்தின் விலாஎலும்பையும், கை எலும்பையும் முறித்து விட்டார்கள். ஆனால் ஊடகவியலாளர் சையத் இன்று அமெரிக்க எதிர்ப்பின் அரேபிய நாயகன்.

ஜர்னைல்சிங் இன்று பஞ்சாப் மக்களின் ஹிரோ. ஜர்னைலுக்கு பஞ்சாபில் ஏராமான பரிசுகள் குவிந்ததோடு தமிழகத்திலும் ஜர்னைலுக்கு சில லட்சங்கள் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.தொடர்ந்து மன்மோகன் சிங், அத்வானி, எடியூரப்பா, என தொடர்ந்து செருப்புகளும் பாதணிகளும் தலைவர்கள் மீது வீசப்படுகின்றன.வீசுகிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோபம். இனவெறிப்படுகொலை, வேலைவாய்ப்புகளை இழந்து நிற்பது, என பல காரணங்கள்.

ஆனால் சில இந்தியத் தலைவர்களால் சில மன்னிப்புகளும் கேட்கப்பட்டிருக்கிறது. 1975 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அவசரகாலக் கொடுமைகளுக்கு 1980ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா மன்னிப்புக் கேட்டார். 1984 ஆம் ஆண்டு நிடைபெற்ற சீக்கியர்கள் படுகொலை நிகழ்ச்சிக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார். பஞ்சாபியரான மன்மோகன் கேட்ட மன்னிப்பை சீக்கிய மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் சி.பி.ஐ டைட்லரை விடுவித்த பின்னர் ஜர்னைலின் எதிர்ப்புக்குப் பின்னர் காங்கிரஸ் அலுவலகங்களை பஞ்சாபில் கொழுத்தினர் சீக்கியமக்கள். டில்லியில் காங்கிரஸ் அலுவலகம் முற்றுகைக்குள்ளானது. பஞ்சாப் மீண்டும் எரியத்துவங்கி விடுமோ என்ற அச்சத்தில் சோனியா தன் வேட்பாளர் பட்டியலில் வைத்திருந்த டைட்லரையும், சச்சன்குமாரையும் நீக்கியது. தற்காலிகமாக சீக்கிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போல நடந்து கொள்கிறது காங்கிரஸ். காரணம் சீக்கியர்களின் இன்றைய அடையாளமாக இருக்கும் மன்மோகன் என்கிற முகம்தான் காரணம்.அதை இழப்பது காங்கிரஸ் பஞ்சாபில் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம்.

ஆனால் மன்னிப் கேட்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தும் இன்னும் உதாசீனப்படுத்தப் படும் இந்தியாவின் ஏராளமான மீறல்கள் இருந்தாலும் மிகப் பிரதானமாக இரண்டு நிகழ்வுகள் உண்டு. ஒன்று ஈழம். இன்னொன்று குஜராத். 2002-ல் நரேந்திரமோட்யின் தலைமையிலான பி.ஜே.பி அரசின் ஆதரவோடு 2,000- க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் குஜராத்தில் கொன்று குவிக்கப்பட்டார்கள். குற்றவாளிகளின் கொலை வெறியை நேரடி சாட்சியங்களாக தெஹல்கா இதழ் அம்பலப்படுத்தி அதை ஒரு கோரத்தின் சாட்சியமாக இந்திய மனச்சாட்சியின் முன் வைத்தும் இன்று வரை சிறுபான்மை மக்களை அழித்தொழித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. முன்னிலும் பார்க்க இந்துத்துவத்தின் முகமூடிகள் புதிய நம்பிக்கையோடு குஜராத்தில் வலம் வருகிறார்கள்.

கிட்டத்தட்ட நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு அங்கு பல்லாயிரம் மக்களை கொன்றொழித்து விட்டது. வன்னி மீதான கடந்த எட்டு மாதப் போரில் மட்டும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தியாவின் துணையோடு கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள். தென்னாசியாவில் தன் வல்லாரசாதிக்கப் போட்டிக்கு ஏதுவாக இலங்கையை காலனித்துவப்படுத்த நினைக்கும் இந்தியாவின் ஆக்ரமிப்புப் பசிக்கு இறையானவர்கள்தான் ஈழத் தமிழர்கள். இந்தியா இந்தப் போருக்கு பின்னால் இருக்கிறது என்று கேட்ட போதெல்லாம் மத்திய காங்கிரஸ் நிர்வாகிகள். தமிழ் மக்களை ஏளனம் செய்தார்கள். 14 பேர் தீக்குளித்து இறந்த பிறகு முத்துக்குமார் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் “ அவர்தான் மேல போயிட்டாரே” என்று ஏளனம் செய்கிறார். இந்த ஏளனங்களின் வலி ஜர்னைல் சிங்கிற்கும். பாக்தாத்தின் சையத்துக்கும்தான் தெரியும்.

ஈழத்தில் இந்திய அமைதிப்படையில் காலம், பின்னர் தற்காலம் என தொடர்ந்து ஈழத்தின் மீது தன் கோரக்கரங்களை பதித்திருக்கிறது இந்தியா. ”சார்க் விதிகளுக்கு உட்பட்டே நாங்கள் இலங்கைக்கு தொழில் நுட்ப உதவிகள் செய்கிறோம்” என்றார் ஜெயந்திநடராஜன்.ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வும் இழிவு படுத்தப்படுகிறது. மணிப்பூரில், நாகாலாந்தில், காஷ்மீரில், பஞ்சாபில், ஈழத்தில் என இவர்கள் நடந்து கொண்டதைப் போல நாளை நம்மிடமும் நடக்கலாம்.

சமீபத்தில் தமிழக முதல்வர் கலைஞரரிடம் ஒரு நிருபர் “ இலங்கைப் பிரச்சனையில் அடுத்த நடவடிக்கை என்ன? “ என்று கேட்டாராம். அதற்கு கலைஞர் இப்படிச் சொன்னாராம் “ அடுத்து காப்பி சாப்பிட்டுட்டு கிளம்புங்க” என்றாராம். அந்த நிருபர் வேதனையோடு வந்து சொன்னார். "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றார் ஜெயலலிதா. தேர்தல் பிரச்சாரம் துவங்கிய பிறகு அவரே ஈழம் அமைத்துக் கொடுப்பேன் என்கிறார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் துவங்கினார் கலைஞர் பின்னர் போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று முடித்துக் கொண்டார். “போர் நிறுத்தம் வந்து விட்டது என்கிறீர்களே? அங்கே தாக்குதல்கள் தொடருவதாகச் சொல்கிறார்களே?” என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு,“ மழைக்குப் பின்னரான தூரல்தான் அங்கே” என்றார்.

“ ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும்” என்று ராஜீவ்காந்தி சொன்னதற்கும், “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று ஜே சொன்னதற்கும், “ மழைக்குப் பின்னரான தூரல்தான் அங்கே” என்று கருணாநிதி சொன்னதற்கும் என்ன வேறுபாடுகளை நாம் காணமுடியும். நம் சமகாலத்தில் நாம் சந்திக்கும் இனப்படுகொலைகளைச் சகிக்கும் சமகால வாக்குமூலங்கள் அல்லவா?இவைகள்.

இவ்விதமான ஏளனங்கள் ஆபத்தை விளைவிக்காது என்றால் செருப்பு வீசுவதோடு நின்று விடும். கோபத்தை வெளிக்காட்ட ஒரு செருப்போடு முடிந்து போகிற எதிர்ப்பால் இந்திய இறையாண்மைக்கு எந்த ஊறும் நேரப்போவதில்லை. ஆனால் இந்த உதாசீனங்கள் எல்லா இன மக்கள் மீதும் தொடர்ந்து கொண்டிருந்தால் இந்த ஏளனவாதிகளே இந்திய இறையாண்மைக்கு உலை வைக்கிறார்கள் என்று அர்த்தம். பாதிக்கப்படும் மக்களின் ஜன்நாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் ஏன் இப்படி செருப்பெல்லாம் எடுக்கிறார்கள் மக்கள்.

ஈழத்தில் இந்தியா பெரும் தவறிழைத்து விட்டது. இலங்கையில் ரத்த ஆறு ஓடுவதை இந்தியா தடுக்க நினைத்திருந்தால் அதற்கு சில மணிநேரங்களே போதுமானது.இதோ ஈழத்தின் மீதான இந்திய மௌனம் குறித்து முன்னாள் இந்திய ராஜதந்திரி ராஜீவ் டோக்ரா இப்படிச் சொல்லியிருக்கிறார்.

“ இலங்கையில் நாள்தோறும் நடைபெறும் அடக்குமுறைகள் குறித்து எதையுமே பார்க்காதது போல, எதையுமே கேட்காதது போல அமெரிக்கா ஏன் நடிக்கிறது? இவ்வளவு நாட்களாக அமைதியாக இருக்கும்படி அதைத் தூண்டியது எது?அமெரிக்காவின் இந்த அக்கறையற்ற போக்குதான் ஐக்கிய நாடுகள் சபையின் செயலின்மைக்கும் காரணமாகும். அமெரிக்கா சைகை காட்டுமானால், ஐ.நா. கிளர்ந்தெழுந்து செயற்படும் என்பது உண்மைதான். அந்த ஒப்புதல் கிடைத்த உடனே, உலக ஆட்சிப்பணி அதிகாரிகள் மிகுந்த வேகத்துடன் செயற்படுவார்கள். அவர்கள் அதிகம்Œசாதிக்க முடியாவிட்டாலும் கூட, குற்றம் இழைக்கப்படும் நாட்டுக்குச் சென்று வருவார்கள், தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று வருவது, குறைந்தது உலகின் செய்தியையாவது அந்த நாட்டுக்குத் தெரிவிக்கும்.”

“மேலும், இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும்படி கைவிடப்பட்டனர். தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், மருத்துவ வசதிகள் இல்லாத நிலை, சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள், நாள்தோறும் பலர் மடிவது என்பதே அங்கு நெறிமுறையாகிவிட்டது.மனித உரிமை மீறல்களை உலகம் வகைப்படுத்துவதிலும் சாதி முறை இருக்கிறதோ என்று வியப்படைந்தால் அதுதான். இல்லாவிடில் பொஸ்னியா, கொசோவோ தொடர்பாக போர்க்கால நடவடிக்கை போன்ற செயற்பாட்டுக்கு உலகம் கிளர்ந்தெழுந்தது ஏன்? சேர்பியாவைப் பணிய வைப்பதற்காக அதன் மீது குண்டு வீசியது ஏன்? தமிழர்களின் இரத்தத்தை விடவும் வெள்ளையர்களின் இரத்தம் மதிப்பில் உயர்ந்ததோ? பின்னர் ஏன் உதவி கோரும் இலங்கைத் தமிழர்களின் கூக்குரல் உலகச சமுதாயத்தின் காதுகளில் விழவில்லை? இதில் இந்தியாவின் நிலை என்ன? நமக்கு பொறுப்பு இல்லையா?”

“ உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டும் இல்லை என்பதற்கு இத்தகைய மனிதர்களே வாழும் எடுத்துக்காட்டு. நமது உலகம் மற்றவர்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டு பரிவு காட்டாத உணர்ச்சியற்ற உலகம் என்பதற்கு இவர்களே சான்று. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு வரலாற்று வழிப்பட்ட உறவு. அதுவே பலவழிகளிலும் அவர்கள்பால் நம்மைப் பொறுப்புள்ளவர்கள் ஆக்குகிறது. அத்தகையதொரு பொறுப்புணர்வை நிறைவேற்றும் வகையில்தான் இராமர் இலங்கைக்குச் சென்றார்.வருந்தத்தக்க வகையில், இந்தியா அடிக்கடி அதன் சொந்த மக்களின் துன்பங்களைக் கண்டும் அசையாமல் இருந்து வருகிறது. இல்லாவிடில், உகண்டாவில் கொடுங்கோலன் இடி அமீனால் நமது மக்கள் ஒடுக்கப்பட்டபோது, நாம் அவர்களது உதவிக்குச் சென்றிருப்போம். பிஜித் தீவில் உள்ள இந்தியர்களுக்கு உதவி செய்திருப்போம். கரீபிய நாடுகளில் உள்ள இந்திய மரபுவழித் தமிழர்கள் இழிவுடன் நடத்தப்படுவதற்கு எதிராக உறுதியுடன் குரல் கொடுத்திருப்போம். அவர்களைப் போலவே, நமக்கு அண்டையில் உள்ள இலங்கைத் தமிழர்களையும் அவர்கள் விதிப்படி நடக்கட்டும் என்று கைவிட்டு விட்டோம்.” என்று கேள்வி எழுப்புகிற முன்னாள் ராஜதந்திரிகளுக்கு இந்த நாட்டில் என்ன முக்கியத்துவம் வழங்கப்படும் எனத் தெரியவில்லை.ஆனால் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்போடு பதில் சொல்ல முன்வரவேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். என்பதுதான் இந்தக் கட்டுரையில் நான் சொல்ல வந்த சேதி.

சரி, எதிர்ப்பையும் வெறுப்பையும் காட்ட நினைக்கும் ஒருவர் மீது ஏன் நாம் செருப்பை வீசுகிறோம். செருப்பு என்பது எப்படி இழிவான ஒன்றாக மாறியது. நால்வர்ண தர்மத்தின் அடிப்படையில் சாதியை வகுத்து நெற்றில் இருந்து கால்வரை வகை பிரித்து சாதிப் படிநிலையில் காலில் பிறந்தவன் தீண்டத்தகாதவன் என்பதால் காலுக்குக் கீழே அணியும் செருப்பும் இழிவான ஒன்றாக பொதுப்புத்தியின் தர்மத்தின் அடிப்படையில் ஏற்றப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். அதானால்தான் ஒருவரை வாழ்த்த பூவையும், தூற்ற செருப்பையும் வீசுகிறார்கள் என நினைக்கிறேன். நான் மிக காஸ்ட்லியான சப்பல்தான் இப்போது அணிகிறேன். எனது மென்மையான பாதங்களுக்கு அதுதான் உகந்தது என என் மனது நினைக்கிறது. ஆனால் பள்ளிக் காலத்தில் ஒரு லூனார்ஸ் ரப்பர் சப்பல் கூட இல்லாமல் சொறி மண்ணில் நிற்க ஒரு நிழல் தேடி ஓடிய கால்கள் என்னுடையது.
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5