"சுப்பிரமணியபுரம் பரமனுக்கு நிகழ்ந்த காதல் துரோகம் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்காது..."
ஒரு தகவல்:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 377ன்படி தண்டனைக்குரிய குற்றமாக ஓரினச் சேர்க்கை கருதப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டு காலத்தில் இங்கிலாந்தில் போடப்பட்ட இப்பழமையான சட்டம் அங்கு நடைமுறையில் இல்லை. [ சற்றுமுன் தான் அதற்கு தடை விதித்திருக்கிறது நீதிமன்றம் ]
ஒரு கேள்வி:
பெருத்த மார்பகமும் உடுக்கு இடையும் அகண்ட பிருஷ்டமும் விரி தொடையும் மயக்கும் விழியும் மறைந்து எப்போது திரண்ட புஜமும் மயிர் அடர்ந்த மார்பும் தொடையும் அடர்த்தியான மீசையும் ஆண்களுக்கு பிடித்தமான ஒன்றாக மாறிப்போனது? (இதையே பெண்களுக்காக திருப்பி வாசிக்கலாம்).
புராணப் புனைவுகளும் இதிகாச நினைவுகளும் சொல்லுவதைக் கொஞ்சம் புரட்டினால்.. ஓர் அசுரக் கட்டாயத்திற்காக சிவபெருமான் விஷ்ணுவுடன் இணைய நேரும்போது பெண்ணுரு எடுத்து இணைந்தாரே தவிர ஆணாக இல்லை. மகாபாரத போரில் பலியாகச் சம்மதித்த அரவாணின் கடைசி ஆசை நிறைவேறியதும் கிருஷ்ணரின் பெண்ணுடலில்தான். வரலாற்றில் பல மன்னர்கள் தங்கள் அந்தப்புரத்திற்கு காவலாக அரவாணிகளை நியமித்தனர். அவ்வப்போது தங்கள் இச்சை தீர்க்கவும் (மகாராணிக்கு மூன்று நாள் ஓய்வு) அவர்களை உபயோகித்ததார்கள் இதில் கவனிக்க வேண்டியது அரவாணிகள் பெண்மையாகத்தான் வெளிப்படுவார்களேத் தவிர ஆணாக அல்ல.
குறுந்தொகை கூறும் பெருந்தினையின் பொருந்தாக் காமத்தில் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணையோ ஆணையோ நேசிப்பதையும் உறவு கொள்வதையும் பிறன்மனை நோக்கி கள்ளக் காதல் புரிந்து கள்ள உறவு கொண்டு கள்ள தண்டனை பெறுவதைக் கூறுகிறதே தவிர இரு ஆண்கள் பொருந்துவதை பொருந்தாக்காகவும் குறிப்பிடவில்லை. இப்படி எவ்விடத்திலும் பரவலாய் பதிவு செய்யப்படாத ஓரினச் சேர்க்கையாளர்கள் திடீரென புதியதொரு இனமாய் முளைத்தது எப்படி? மூலம் எங்கோ மறைந்திருக்க இயற்கைக்குப் புறம்பான ஒன்றாகக் கருதி தன்பால் நேசிப்பவர்களை விளிம்பு நிலையில் ஒதுக்கி வைத்த சமூகத்தின் கட்டுகளை உடைப்பதற்காகத்தானே நம் காலத்திய தத்துவ மேதைகள் தங்களை ஓரினச் சேர்க்கையாளராக அறிவித்துக் கொண்டார்கள்? மாவீரன் அலெக்ஸாண்டர் ஏன் ஆண்களை விரும்பினான்? ஓவிய மேதை டாவின்சியின் விருப்பமாக ஆண் உடல் மாறியது எப்படி?
சாக்ரடீஸ், ஜீலியஸ் சீசர், மைக்கேல் ஏஞ்சலா, பைரன், ஆஸ்கர் வெயில்ட், எல்டன் ஜான் என எல்லோரும் வாழ்கைத் தத்துவ உண்மைகளை தன்னைப் போலவேயிருக்கும் சக ஆண் உடலில் பரிமாறிக் கொண்டது எப்படி? ஏன்? (சுப்பிரமணியபுரம் பரமனுக்கு நிகழ்ந்த காதல் துரோகம் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்காது என்று நம்புவோம்).
பொதுவாய் தாய் வயிற்றில் கரு உருவாகி முதல் எட்டு வாரங்களுக்கு ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. அதன் பின்பே ஜனன உறுப்புகள் தோன்றி ஆணாகவும் பெண்ணாகவும் பிரிந்து வளர்ந்து வெளியேறுகின்றன. வெகு அரிதான படைப்பாக ஆண் பெண் ஜனன உறுப்புகள் சேர்ந்தே தோன்றும் சில குழந்தைகள் பின்னாளில் அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளாக மாறுகிறார்கள் என்கிறது சமீபத்திய மருத்துவக் கண்டுபிடிப்பு. ஓர் ஆண் உடன் தன் உடல் சுரக்கும் அதிகமான பெண் ஹார்மோன்களினால் தன்னைப் பெண்ணாய் உணர்ந்து நாளடைவில் தன் ஆண் உறுப்பை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கி மன ரீதியான பெண்ணாய் தன்னை அலங்கரித்துக் கொள்கிறான். உலகம் இவனுக்கு திருநங்கையென பெயர் கட்டி மகிழ்கிறது. இவை கருவின் முதல் எட்டுவார பாலின நிலையின் மிச்சபடிமம் எனக்கொள்ளலாம். ஆக ஆண் இனம், பெண் இனம், அல்லாத மூன்றாம் பாலினம் பிறக்க சாத்தியமுள்ள இவ்வுலகில் எங்கிருந்து வந்தது ஓரினம்?
ஹோமோ செக்சுவில் எனப்படும் ஓரினச் சேர்க்கையாளன் ஒருவனுக்கு பிறக்கும் குழந்தை ஹோமோவாக வளர வாய்ப்பில்லை என்னும்போது இது கருவில் நிகழும் ஹார்மோன் குளறுபடியில்லையெனத் தீர்மானமாகிறது. ஓர் ஆண் வளர்ந்து வரும் காலக்கட்டங்களிலேயே ஹோமோவாக மாறுகிறான் என்றால் அது எந்த வயதில் நிகழ்கிறது? பத்து வயதிலா? பதினாறு வயதிலா? அப்படியும் ஏதோ ஒரு வயதில் இன்னொரு ஆண் மூலம் மட்டுமே நிகழும் அவ்விருப்பம் குறிப்பிட்ட அந்த ஆணுக்கு எங்கோ எப்படி ஏன் நிகழ்ந்தது எனும் கேள்வி பூதாகரமாய் நம்முன் நிற்கிறது. பதில் தெரியா மருத்துவ உலகம் மிகப்பெரும் புதிரென்று ஒதுங்கி நின்று விடுகிறது.
தொடர்ந்து பேசுவோம் ...