"இந்தச் சண்டையில் இருதரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது."
முதலமைச்சர் கருணாநிதி தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், இலங்கை தமிழர்களுக்காக டெல்லியில் குரல் கொடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இரண்டு நாட்களுக்கு முன், சரணாகதி என்ற கசப்பான உண்மையை மென்மையாக கூறி தங்கள் துப்பாக்கிகளின் சப்தம் அடங்கிவிட்டதாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்த உலகத்திற்கு அறிவித்தது. அதே நாளில், இலங்கைப் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசும் தெரிவித்தது. இந்த இருதரப்பினரும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டதன் காரணமாக, இலங்கைத் தீவில் முப்பது ஆண்டுகளாக நடந்த போர் உண்மையிலேயே முடிந்துவிட்டது என்று கருதலாம்.
இந்தச் சண்டையில் இருதரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையேயான தொப்புள் கொடி உறவில், இலங்கைப் பிரச்சனைக்காக, முன்னாள் பிரதமரையும், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் இந்தியாவும் இழந்திருக்கிறது. இந்தப் போரின் முடிவு யாருக்கும் வெற்றியை அளிக்கவில்லை. இதன் மூலம் பெருமை அடித்துக் கொள்வதற்கான காரணங்கள் யாருக்கும் இல்லை.
மாறாக, மனப்பூர்வமாக ஆராய்ந்து பார்ப்பதற்குரிய நல்ல தருணம் இது. பரஸ்பர அவ நம்பிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியாயமான, வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் இது. நம்பிக்கையை வளர்க்க வேண்டிய தருணம் இது. முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது. அமைதியை ஏற்படுத்த வேண்டிய தருணம் இது.
விடுதலைக்குப் பிறகு இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டதாலும், தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டதாலும் இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாலோ அல்லது அதன் தலைவர்களை கொன்று விட்டதாலோ இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்களர்களைப்போல் வேரூன்றியிருக்கும் மிகப்பெரிய தமிழ்ச் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை அகற்றி விட முடியாது.
இந்த அடிப்படை உண்மையை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவின் தலைமையிலான இலங்கை அரசு உணர்ந்து, ஒடுக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் நியாயமான மனக்குறைகளை உடனடியாகக் களைய வேண்டும். இலங்கையில் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை அளிப்பதை உறுதி செய்யும் வகையில், தேவையான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும்.
தமிழர்கள் (வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்கள்) இஸ்லாமியர்கள் மற்றும் பிற குடியினத்தவர்கள் அனைவரும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும், சுய மரியாதையு டனும் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையெனில், நடந்த அதே வரலாறு மறுபடியும் நிகழும். அமைதியின்மை மற்றும் கட்டுக் கடங்காத கொலைகள் தொடரும்.
கடந்த 30 ஆண்டு காலப் போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து, வீடுகள் இல்லாமல், உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். லஞ்சம் தீர்க்கும் வகையில், ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் முடமாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு சமமான எண்ணிக்கையில் அப்பாவி இளம் குழந்தைகள் அனாதைகளாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அருவருக்கத்தக்க ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பசி, நோய், வறுமை, இல்லாமை ஆகியவை தான் அவர்கள் எங்கு நோக்கினும் தாண்டவமாடுகின்றன.
முப்பது ஆண்டு கால இடைவிடாத குண்டு மழை காரணமாக, தமிழ் பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகிவிட்டன. பல வருடங்களாக சாலைகள் போடப்படவில்லை. முறையான மருத்துவ வசதிகள் அந்தப் பகுதிகளில் இல்லை. மின்சாரம் இல்லை. தொலைபேசிகள் இல்லை. அதிகாரப்பூர்வமாக யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதால், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் இதர சர்வதேச நிவாரண அமைப்புகள் போர்ப் பகுதிகளுக்குள் நுழைய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
அங்குள்ள நிலைமையை முதலில் கண்டறிய, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போர்ப் பகுதிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக வாய் மூடப்பட்ட சர்வதேச ஊடகங்களை, ராணுவ உதவியுடன் சுற்றுப் பிரயாணம் அழைத்துச் செல்லாமல், சுதந்திரமாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும், போரினால் அழிக்கப்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கட்டுமானப் பணிகளை துவக்குவதிலும் இந்தியாவும் தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்கக்கூடாது. எங்களுக்கு ஆதரவான ஆட்சி மத்தியில் அமைக்கப்பட்டால், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக 10,000 கோடி ரூபாய் தொகுப்பை இந்திய அரசு வழங்க வலியுறுத்துவோம் என்று அ.இ.அ.தி.மு.க.வின் 15வது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தோம்.
மத்திய அரசின் அதிகாரப் பகிர்வில் அ.இ.அ.தி.மு.க இடம்பெறவில்லை என்றாலும், 1.5 கோடி தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில், இலங்கையில் மிகப்பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கான முயற்சிகளில் உடனடியாக இந்திய அரசு ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தன்னுடைய பல்வேறு குடும்ப உறுப்பினர்களுக்காக மத்திய அமைச்சர் பதவிகளை பெற வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், இலங்கைத் தமிழ் மக்களுக்காக டெல்லியில் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.