"மண்ணெண்ணெய் வாங்கும் நிலையில் இருப்பவர்கள் யாரும் மினரல் வாட்டர் குடிப்பதில்லை..."
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிட்டது. ஐ.மு.கூ. என்று சொல்வதை விட காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்டது என்பதுதான் விஷயம். ஆனால், எப்படி இவ்வளவு பெரிய வெற்றி என்றுதான் அவர்களே அசந்து போயிருக்கிறார்கள்.
இதுதான் சமயமென்று "காங்கிரஸுக்கென்று பார்முலா வைத்திருக்கிறோம். அதன்படிதான் அமைச்சர் பதவிகள் வழங்க முடியும்' என்றும் சொல்லப்பட்டது. எந்த நிபந்தனையும் இல்லாமல் காங்கிரஸுக்கு ஆதரவு தர பல கட்சிகள் தயாராகவே இருந்தன. ஆனாலும், தமிழகமும் மேற்கு வங்கமும் கேபினட் பதவி பெற பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தின. இறுதியில் தமிழகமும் மஹாராஷ்டிரமும் அதிக அளவிலான கேபினட் அமைச்சர்களைப் பெற்றுவிட்டது.
ஆனால், தற்போது பெறப்பட்ட கேபினட் அமைச்சர் பதவிக்குத் தாங்கள் தகுதியானவர்கள்தானா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அல்லது தங்கள் துறைக்குத் தாங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்ற தொலைநோக்காவது இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங் எவ்வளவோ முயன்றும் நிதியமைச்சர் பதவிக்கு மாண்டேக் சிங் அலுவாலியாவைக் கொண்டு வர முடியவில்லை. பொருளாதார வல்லுனராக இருக்கும் ஒருவர் அரசியலிலும் வல்லவராக இருக்க முடியுமா என்ற சந்தேகம் அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் பிரதமர் மன்மோகனுக்கும் அலுவாலியாவுக்குமான நெருக்கம் ஏற்கெனவே உலகறிந்தது. ஆக முக்கியமான ஒரு துறையைத் தூக்கி மீண்டும் பிரதமரின் நெருக்கமானவருக்குக் கொடுக்க காங்கிரஸ் விரும்பவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பலரும் அலுவாலியா நிதியமைச்சராவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
கடந்த ஆட்சியின் போது பிரதமர் இல்லாத நேரத்தில் பிரதமராகப் பொறுப்பு வகித்தவர் பிரணாப் முகர்ஜி. கட்னத ஆட்சியில் எந்தவிதப் பிரச்னையும் செய்யாமல் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு காங்கிரஸ் விசுவாசியாக இருந்த அவருக்கு ஏதேனும் ஒரு முக்கியமான பதவி வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை நினைத்திருந்ததும் ஒரு முக்கியமான காரணம். 198485 ஆண்டுகளில் இந்திராகாந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பதவி வகித்தவர் என்ற ஒரே காரணத்தைக் காட்டி பிரணாபுக்கு நிதியமைச்சர் பதவி தரப்பட்டிருக்கிறது.
இதே போலத்தான் முதலில் ஊழல் செய்தவர் என்று சொல்லப்பட்ட ஆ.ராசாவுக்கு மீண்டும் அதே துறையைக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ். ஆனால், டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி தருவதில் மட்டும் அவர்களுக்கு உடன்பாடில்லை.
"ஊழல் செய்வதாகக் குற்றச்சாட்டு வந்தபோதே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்தார்கள்?' என்று அப்பாவி வாக்காளர்கள் கேட்கிறார்கள். அவர்களால் அந்த அளவுக்குத்தான் கேள்வி கேட்க முடியும்.
காரணம் தங்கள் ஆட்சிக்கு ஆதரவு தரும் தி.மு.க. ஆதரவை விலக்கிக் கொண்டால் என்ன செய்வது என்று அப்போது அவர்கள் பேசாமல் இருந்துவிட்டார்கள். இப்போது தங்கள் கட்சிக்குக் கிடைத்த பெரும்பான்மையை கவனத்தில் கொண்டு எதற்கும் யோசிக்காமல் இவ்வளவுதான் தரமுடியும் என்று கண்டிஷன் போட்டார்கள். பின்னர் அதற்கும் ஒரு வழிவகை செய்து கொண்டார்கள். தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதுதான் அது. இங்கு நாங்கள் சீட்டு தருகிறோம். அங்கு எங்களுக்கு சீட்டு தாருங்கள். இதன் அடுத்த கட்டமாகத்தான் தமிழகத்தில் துணை முதல்வர் பதவிக்குத் தன் மகனைக் கொண்டு வந்தார் கலைஞர். ஆட்சியில் பங்கு என்று கேட்டவர்கள் நாளை முக்கியமான விவகாரங்களில் தலையிட்டால் என்ன செய்வது? ஆக, ஸ்டாலின் துணைமுதல்வரானார்.
அது சரி, வாய்ப்பு கிடைக்கும்போதுதானே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று காங்கிரஸ்காரர்கள் கேட்பதும் நியாயமாகத்தான் இருக்கிறது. ஆனால் மத்தியில் ஆட்சி அமைக்க மீண்டும் கிடைத்திருக்கும் வாய்ப்பை மன்மோகன் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போது அமைந்திருக்கும் அமைச்சரவையில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தவர் மேகாலயாவின் அகாத சங்மா என்ற 28 வயது இளம் பெண். அவருக்கு கிராமப் புற மேம்பாட்டுக்கான இணை அமைச்சராகப் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு இருக்கலாம். அதற்கும் சில காரணங்கள் உண்டு. அடுத்த சில வருடங்களில் ராகுல் காந்திக்குப் பதவி வழங்கப்பட்டால் யாரும் எதுவும் கேட்கக் கூடாது என்பது முக்கியமான காரணம்.
இதுவரை இல்லாத அளவு காங்கிரஸ் கட்சி கிராமங்களின் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும் என்று பொதுச் செயலாளரான ராகுல் காந்தி சொல்லி வந்திருக்கிறார். நகரங்களுக்கு ஈடாக கிராமங்களிலும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்பது புதிய அரசின் நோக்கம் என்று மன்மோகனும் தெரிவித்திருக்கிறார். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு அதிக அளவிலான இடங்கள் கிடைத்தது கிராமங்களால்தான். குடியரசுத் தலைவர் உரையில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மேலும் திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று ஓர் அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது.
மன்மோகன் சிங் அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ரேஷனில் மூன்று ரூபாய்க்கு கோதுமை வழங்குவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், சந்தையில் கோதுமையின் விலையைக் கட்டுப்படுத்தத் தவறினால் ஏழை மக்களின் பாடு திண்டாட்டமாகிவிடும்.
மன்மோகன் சிங் அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று பெட்ரோல் விலை, மற்றொன்று புதிய அரசின் முதல் பட்ஜெட். பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா ஆறு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். நிதியமைச்சர் பிரணாப், ஜூலை மாதம் பட்ஜெட் என்று தெரிவித்திருக்கிறார். இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
பிரணாப் முன்பு நிதியமைச்சராக இருந்தபோது வருமான வரி கணக்கிடப்பட்டது போன்ற முறை கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மற்றொரு விஷயம் தனி நபர் வருமான வரிவிலக்கு 2 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்று கணக்குத் தணிக்கை வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முரளி தியோரா வேறு ஒரு கணக்கில் இருக்கிறார். பெட்ரோலிய விலையை இனி தனியார் நிறுவனங்களே 15 நாளுக்கொரு முறை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற வகையில் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரப் போகிறார்களாம். அதாவது உலகச் சந்தையில் நாளுக்கு நாள் ஏறி இறங்கும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 15 நாளுக்கொரு முறை ஏற்ற இறக்கத்துக்குத் தகுந்தாற்போல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று முரளி தியோரா தரப்பு யோசித்திருக்கிறார்கள். நல்ல வேளையாக ஒரு கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். பேரல் விலை 75 டாலருக்குக் கீழ் இருந்தால் மட்டுமே தனியார் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்க முடியும்.
அதாவது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசம் ஒப்படைக்கத் தயாராக இருக்கிறது காங்கிரஸ் அரசு. இடதுசாரிகள் எதிர்ப்பால் கடந்த முறை மன்மோகன் சிங் அரசு பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க முடியாமல் திணறியது. இந்த முறை அந்தக் கூத்தும் அரங்கேறிவிடுமோ என்பதுதான் சாமானியனின் கவலை.
முரளி தியோரா சொன்ன ஒரு விஷயம்தான் இதனை உறுதிப்படுத்தூம் போலத் தெரிகிறது. அவர் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பே இதைச் சொன்னார். "உலகத்திலேயே மண்ணெண்ணெய் விலை ஒன்பது ரூபாய்க்கு வேறு எங்கும் கிடைப்பதில்லை. ஒரு லிட்டர் மினரல் வாட்டர் விலையை விட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை குறைவுதான்.''
மண்ணெண்ணெய் வாங்கும் நிலையில் இருப்பவர்கள் யாரும் மினரல் வாட்டர் குடிப்பதில்லை. மினரல் வாட்டர் வாங்கும் யாரும் மண்ணெண்ணெய் வாங்கிக் குடிக்கப் போகிறார்களா என்பதும் தெரியவில்லை.
இவ்வளவு அக்கறை கொண்ட அமைச்சர்களைத்தான் காங்கிரஸ் மீண்டும் பதவியில் அமர்த்தியிருக்கிறது என்பதை நினைக்கும்போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.