"சூழலியல் சந்தேகங்களுக்கு மட்டுமல்ல புராண ரீதியிலான சந்தேகங்களுக்கும் கூட அரசு பதில் சொல்ல வேண்டும்..."
தமிழ் மக்களின் நீண்ட கால கனவான சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து பிரச்சனை மேல் பிரச்சனை.
சேது கால்வாய் தோண்டும் இடத்தில் இருக்கும் ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது.அப்படி இடித்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று பிஜேபி உடபட இந்து அமைப்புகள் குரல் எழுப்பிக்கொண்டிருக்க,ராமர் பாலம் என்ற ஒன்றே அங்கு கிடையாது என்று சொல்லியிறுக்கிறார் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு.
முதலில் சேது கால்வாய் திட்டம் என்பது என்ன என்று பார்ப்போம்,
சென்னையிலிருந்து கிளம்பி தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய கப்பல் கூட இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு போய்தான் தூத்துக்குடிக்கு வர முடியும்,காரணம் பாக் நீரிணையும் மன்னார் வளைகுடாவும் சந்திக்கும் ராமேஸ்வரம் கடல் பகுதி கப்பல் செல்லக்கூடீய அளவுக்கு ஆழம் குறைவான பகுதி அதன் ஆழம் வெறும் 11 அடிதான்.ஆகவே பாக் நீரிணையும் மன்னார் வளைகுடாவும் இணையும் ஆழம் குறைந்த கடல் பகுதியை இரு கப்பல்கள் செல்லக்கூடீய அளவுக்கு 89 கிலோ மீட்டர் தூர அளவுக்கு 82.5 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு தூர் வாரி இரண்டு கப்பல்கள் செல்லும் அளவுக்கு 300 மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தும் திட்டம்தான் சேது கால்வாய் திட்டம்.இத்திட்டம் சாத்தியப்பட்டால் இது இரு வழிப்போக்குவரத்தாக அமையும்.கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாய் அளவிலான இந்த திட்டம் இந்தியாவின் பிரதான திட்டங்களில் ஒன்றாக கவனிக்கப்படுகிறது.அப்படி வெட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பகுதியில் இருப்பதுதான் ஆதாம் பாலம்.
அதைத்தான் இந்து அமைப்புகள் ராமர் பாலம் என்று சொல்லி போராடத்துவங்கியிருக்கிறார்கள்.
‘‘சேது கால்வாய் தோண்டப்படுகிற இடம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் கால்வாய் தோண்டுகிற இடத்தில் புவியியல் ரீதியால இயர்க்கையாக அமைந்த பவளப்பாறைகளைக் கொண்ட ஒரு நீண்ட சுவர் போல அல்லது பாலம் போன்ற ஒன்று இருக்கிறது இது மனிதனாலால் கட்டப்பட்டதல்ல.ஆனால் இதற்கு வெள்ளையர்கள்தான் ஆதாம் பாலம் என்று பெயரிட்டார்கள் அதாவது உலகின் முதல் மனிதனால் இந்த பாலம் கட்டப்பட்டதென்று இந்த பெயரை வைத்தார்கள்.வெள்ளையர்கள் வைத்த பெயர் எவளவு கற்பனையானதோ அவளவு கற்பனையானதுதான் ராமர் பாலம் என்பதும்.நானும் இந்த திட்டத்தை வரவேற்க முடியாத சூழலில் இருக்கிறேன்.காரணம் ஆதாம் பாலம் என்றழைக்கப்படுகிற அந்த குட்டி குட்டி திட்டுகளில் ஏராளமான கடல் வளத்தை பாதுகாக்கக்கூடீய அரிய பவளப்பாறைகள் நிறைந்திருக்கின்றன.தவிறவும் சேதுகால்வாய் தோணடப்பட்ட பிறகு அந்த பகுதியில் வாழும் அரிய வகை கடல் தாவரங்கள் உயிரினங்கள் திமிலங்கள் எல்லாம் அழிந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.ஒரு திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன்னால் அதனால் நன்மைகள் ஏற்படுமா என்பதை எல்லாம் தீர யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் சர்வதேச அளவில் பெயர் பெற்றிருக்கும் கொழும்புத்துறை முகத்தை தவிர்த்து தோண்டப்படுகிற இந்த கால்வாய் வழியாக தூத்துகுடிக்கோ சென்னைக்கோ சர்வதேச நாடுகளில் கப்பல்கள் வருமா என்பது பெருத்த சந்தேகமே’’என்கிறார் சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.
‘‘தோண்டப்படும் இந்த சேது கால்வாய்ப் பகுதியான மன்னார் வளைகுடாப்பகுதியை சுற்றி 21 சின்ன சின்ன தீவுகள் இருக்கின்றன.இவைகளை பவளத்தீவுகள் என்று அழைப்பார்கள்.இந்த சுற்று வட்டாரப்பகுதிகள் எல்லாமே உயிர் கோளப்பகுதிகள் அதாவது அரிய வகை உயிரினங்களை ஆண்டு தோறும் உற்பத்தி செய்யும் சீதோஷ்ண நிலை இந்த கடல் பகுதியில் அமைவதால் இனப்பெருக்க காலத்தில் இந்த பகுதிக்கு வந்து இனப்பெருக்கம் செய்து கடலையும் கடல் உயிரிகளையும் பெருக்கும் அரிய அனைத்து வகை உயிரினங்களும் உள்ள கடல் பகுதி இது என்று யுனெஸ்கோ அமைப்பே இந்த கடல் பகுதியை உலகின் மிக முக்கியமான இடங்களுள் ஒன்றாக இதை அறிவித்துள்ளது.தவிரவும் இந்தியாவின் முதல் தேசீய கடல் வளப் பூங்காவாக இந்திய அரசு 1989'வது ஆண்டு இந்த கடல் பகுதியை அறிவித்தது.அப்படி அறிவித்து ஆதாம் பாலம் என்றழைக்கப்படுகிற பவளப்பாறைகளை திருடிச்சென்று சிமெண்ட் கம்பெனிகளுக்கு மூலப்பொருளாக பயன் படுத்தியதையும் அரசு பெருமளவும் தடுத்தும் நிறுத்தியது.ஒரு காலத்தில் இந்த கடல் பகுதியை பாதுகாத்த இந்திய அரசே அந்த இடத்தை தோண்டி கடல் உயிரியத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது.இதில் இந்துப் பரிவாரங்கள் தன் பங்குக்கு இதை வைத்து அரசியல் நடத்த தீர்மானித்திருக்கின்றன.அதாவது புராணத்தின் பெயரால் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் மக்களிடம் அதை உண்மை என்று நம்பவைக்கும் முயர்ச்சியில் இந்து அமைப்புகள் இறங்கியிருக்கின்றன.அயோத்தியில் தொடங்கிய இத்தகைய புரட்டுகளை நாடு முழுவதும் விரிவாக்கி அரசியல் இலாபமடைய முயர்ச்சிக்கின்றன இந்து அமைப்புகள்’’என்கிறார் கிழக்கு கடற்கரை ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரான ராயன்.
இந்து அமைப்புகள் சொல்கிற ராமர் பாலம் என்கிற அந்த பவளப்பாறைகள் கொண்ட நீண்ட திட்டுகளை உடைக்காமல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவே முடியாது என்பதுதான் உண்மை.இந்து அமைப்புகளின் எதிர்ப்புக்கு முன்பே சூழலியல் ஆய்வாளர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.ஆனால் எதிர்ப்புக்கான காரணங்கள் வேறு வேறு.
‘‘இந்த திட்டத்தை செயல் படுத்துகிறவர்களிடம் எழுகிற சந்தேகங்களுக்கான விளக்கங்களே முதலில் இல்லை.தோண்டப்படுகிற அந்த இடத்தில் ராமர் பாலம் இல்லை என்பதுதான் உண்மை அதைத்தான் அரசும் சொல்கிறது.ஆனால் ராமர் பாலம் இல்லை என்றால் நீண்ட மதிலைப்போல இருக்கிற அது என்ன என்று சொல்ல வேண்டிய கடமை மத்திய கப்பல் போக்குவரத்துறைக்கு இருக்கிறது.ஆனால் டி.ஆர் பாலு அங்கு ராமர் பாலம் இல்லை என்று மட்டும் சொல்லிவிட்டுப் போகிறார்.அங்கு இருப்பது என்ன என்று சொன்னால் அவர் சர்வதேச அளவிலான சூழலியல் ஆர்வலர்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதுதான் உண்மை.அதோடு வெட்டப்படும் இந்த சேது கால்வாயை சூயஸ் கால்வாயோடும் பனமா கால்வாயோடும் ஒப்பிடுவதே தவறு வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆகிய இருகண்டங்களும் கடலால் பிரிவு படாமல் நிலப்பகுதியால் இணைக்கப்பட்டிருக்கிறது ஒரு கப்பல் வட அமெரிக்காவின் தென் கரையில் இருந்து வட கரைக்கு செல்ல வேண்டும் என்றால் தென் அமெரிக்காவை சுற்றித்தான் செல்ல வேண்டும் ,நேரமும் பணமும் இப்படி விரையமாவதை தடுக்க இரு கண்டங்களுக்குமிடையில் பனாமா பகுதியில் தரையைத்தோண்டி ஒரு கால்வாயை வெட்டினார்கள் அப்படி தரையில் வெட்டிய கால்வாய்க்கு பெயர்தான் பனாமா கால்வாய் அது போல மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்க சூயஸ் பகுதியில் தரையில் வெட்டிய கால்வாய்தான் சூயஸ் கால்வாய் ஆனால் சேது கால்வாய் தோண்டப்படுவது கடலில் இதிலிருந்தே அரசு இந்த திட்டத்தில் பல சந்தேகங்களை கிளப்பும் முகமாக நீண்ட மௌனத்தை கடை பிடிக்கிறது.சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குற்றச்சாடுகளுக்கு தெளிவான பதிலை ஆதார பூர்வமாக அளிக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது அதை இது வரை செய்ய வில்லை’’என்கிறார் சமூக சேவகரான அசுரன்.
சமுக ஆர்வலர்கள் எழுப்பும் பல்வேறு சந்தேகங்களை வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது சேது கால்வாய் திட்டம் பற்றி தான் எழுதியிருக்கும் நூலை படிக்க சொன்னார் அதில்‘‘நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டம்,1998'ல் சுற்றுச்சூழலை பாதிக்குமா என்பதை ஆராய்ந்து நாகபுரி நீரி நிறுவனம் அறிக்கையும் அழித்துள்ளது.அதே போன்று பல்லவன் போக்குவரத்து கல்ந்தாய்வு நிறுவனமும் இது குறித்து ஆய்வரிக்கையை வழங்கியுள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று அறிக்கைகள் சொல்லியுள்ளன.இன்றைக்கு மீனவர்களுக்கும்,சுற்றுச்சூழலுக்கு பாதகம் ஏற்படுமோ என்ற ஐய்யத்தை எழுப்பி உள்ளனர்.சுற்றுச்சுழலுக்கும் மீனவர்களுக்கும் எவ்வித பாதகமும் இல்லாமல் இத்திடத்தை நிறைவேற்ற வேண்டிய முயர்ச்சிகளை எடுக்கக்கூடீய அளவில்தான் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்பதை அறிய வேண்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு.ராமர் பாலம் என்றூ தேவையற்ற விஷயங்களில் குறை கண்டால் எந்த தேவையான வளர்ச்சித்திட்டங்களும் நடைமுறைக்கும்,செயலுக்கும் கொண்டு வர முடியாது என்பதையும் உணரவேண்டும்’’என்பதையும் உணர வேண்டும்’’என்று தனது சேது கால்வாய் பற்றிய நூலில் எழுதியிருக்கிறார் கே.எஸ் ராதகிருஷ்ணன்.
ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டி மக்களின் வரிப்பணத்தில் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்த எழுப்பபடும் அறிவியல் ரீதியிலான சூழலியல் சந்தேகங்களுக்கு மட்டுமல்ல புராண ரீதியிலான சந்தேகங்களுக்கும் கூட அரசு பதில் சொல்ல வேண்டும் ஏனென்றால் விஞ்ஞானத்தால் எழும் சந்தேகங்களை விட கடவுளின் பெயரால் எழும் சந்தேகங்கங்கள் ஆபத்தானவை.