Volver

Uma Shakthi

" இப்படம் ஏற்படுத்திய பாதிப்பு இக்கணம் வரை நீங்காமல் மனதிற்குள் ஏதோ செய்துகொண்டிருக்கிறது."
சில சமயம் வாழ்வின் சம்பவங்கள் விசித்திரமானவை. நாம் எதிர்ப்பார்ப்பது போல் பெரும்பாலும் இருக்காது வாழ்க்கை. குரூரங்கள் நம்ப முடியாத விதய்ங்கள், அவலங்கள் எல்லாம் சேர்ந்து இரு சகோதரிகளின் வாழ்வின் ஊடாக ஸ்பெயினில் வாழும் ஆறு பெண்களின் வாழ்க்கைச் சிக்கலை திரைப்படுத்துகிறார் பெட்ரோ அல்மதோவர் (Pedro Almodóvar).

லா மன்ச்சா எனும் கிராமம். கடுமையான பனிக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் தங்கள் பெற்றோரின் கல்லறைக்கு பல மைல்கள் பயணம் செய்து வந்து சேர்கிறார்கள் ராய்முண்டா (Pénelope Cruz) அவளின் டீன் ஏஜ் மகள் பெளலா (Yohana Cobo); மற்றும் தங்கை சோலெ (Lola Dueñas), அதன்பின் வயதான தங்கள் பெரியம்மாவை (அவர்களின் தாய் ஐரினின் அக்கா) சந்திக்கிறார்கள். ராய் தன் பதின்ம வயதில் இம்மூதாட்டியிடம் தான் வளர்ந்து வந்தாள். தள்ளாத வயதில் பெரியம்மா தனியாக வசிப்பதைப் பார்த்து மனம் உருகுகிறாள் ராய்முண்டா. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அம்மூதாட்டி இவர்களுடன் வர மறுத்துவிடுகிறாள், மேலும் தான் தனியாக இல்லை, தன்னுடன் ஐரின் இருக்கிறாள் என்கிறாள். இறந்து போன ஐரின் எப்படி இங்கிருக்க முடியும் பெரியம்மாவிற்கு சித்த பிரம்மை என நினைத்த ராய் அடுத்து தங்கள் குடும்பத்துக்கு நெருக்கமான அகஸ்டினாவை சந்திக்கிறாள். அகஸ்டி பெரியம்மாவிற்கு தினமும் ரொட்டி வாங்கித் தந்து இயன்ற வரை கவனித்துக் கொள்வதை அறிந்த சகோதரிகள் அவளுக்கு தங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவித்து விட்டுத் இனம் தெரியாத துக்கத்துடன் தங்கள் ஊருக்கு திரும்புகிறார்கள். காரை சோலெ ஓட்டுகிறாள்.

ராயின் கணவன் பேகோ பெரும் குடிகாரன், அவனுடைய அடாவடி குணத்தால் வேலையும் போய்விடுகிறது. இதைக் கேட்ட ராய் எரிச்சல் அடைகிறாள். குடிப்பதைக் குறைத்துக் கொண்டு வேறு வேலை தேடும்படி அறிவுருத்துகிறாள். அன்றைய இரவில் பயணக் களைப்பாலும் மன உளைச்சலிலும் ராய் சோர்வுற்றிருக்கிறாள். பேகோ அவளை அணுகியபோது மறுத்துவிட்டு தூங்கிப் போகிறாள். வழக்கம் போல் மறுநாள் வேலைக்கு சென்றுவிடுகிறாள் ராய். இரவு வீடு திரும்புகையில் கொட்டும் மழையில் நனைந்து நடுங்கியபடி பெளலா நிற்பதைப் பார்த்து என்ன விதயம் என்று கேட்கிறாள். சிறிது தயக்கத்திற்குப் பின் மகள் குடித்துவிட்டு தன் தந்தையே தன்னிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டதால் கையில் கிடைத்த கத்தியால் அவனைக் குத்திவிட்டேன் என்கிறாள். மேலும் அவன் நான் உன் உண்மை தந்தை இல்லை, இது ஒன்றும் தப்பு இல்லை என சொன்னதாகவும் சொல்கிறாள் பெளலா. நிலைமை புரிந்த ராய்முண்டா அழுகையினூடே தன் மகளை அணைத்து ஆறுதல் சொல்கிறாள். ‘நீ இதைச் செய்யவில்லை, நீ இது நடந்த போது இங்கில்லை, புரிந்ததா என்று வலுக்கட்டாயமாக அவளை வேறு அறைக்கு அனுப்பிவிட்டு பெரும் சிரமத்துடன் அப்பிணத்தை கம்பளியில் சுற்றி கட்டி வைக்கிறாள், ரத்தம் தேங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்கையில் காலிங் பெல் அடிக்கிறது. பதைபதைத்து யார் என கேட்கிறாள். பதில் வந்ததும் அந்த அறையை சாத்திவிட்டு வாசலுக்கு வருகிறாள். பக்கத்து வீட்டு மனிதர் சில நாள்கள் வேறு ஊருக்கும் செல்வதால், தன் ரெஸ்டாரண்ட் சாவியை இவளிடம் தந்து அடிக்கடி போய் பார்த்து வர முடியுமா என உதவி கேட்கிறார். மறுக்கலாம் என நினைத்தவள் முடிவை மாற்றி சரியென்று சாவியை வாங்கிக் கொள்கிறாள்.

மீண்டும் அறைக்கு வந்து விட்ட இடத்திலிருந்து சுத்தம் செய்கையில் மொபைல் அடிக்கிறது. சோலெ லைனில் வந்து தங்கள் பெரியம்மா இறந்த செய்தியை சொல்கிறாள். மிகவும் சங்கடமான மனத்துடன் நீ மட்டும் சாவிற்கு போய் வா, ஏன் எதற்கு என்று காரணம் கேட்காதே, நீ வந்ததும் சொல்கிறேன், அதோடு யார் கேட்டாலும் எனக்கு ஒரு சர்ஜரி நடந்திருக்கிறது என்று சொல்லிவிடு என தங்கையிடம் சொல்கிறாள். சோலெ குழப்பத்துடன் தனியே மறுபடியும் லா முன்சாவிற்கு போகிறாள்.

ராய் பிணத்தை காரில் போட்டு ரெஸ்டாரெண்டுக்கு எடுத்து வந்து அங்கிருக்கும் ஒரு குளிர்பதன மெஷினுக்குள் ஒளித்து வைக்கிறாள். அப்போது ஒருவன் அங்கு வருகிறான். இரவில் இக்கடை திறந்திருக்கிறது விசாரிக்கலாம் என்று வந்தேன் என்கிறான் அவ்விளைஞன். அவன் சினிமா படப்பிடிப்புக் குழுவுடன் வந்திருப்பவன். ஒரு வாரம் அவன் ஆள்கள் அங்கு ஷுட்டிங் நடத்தப் போவதால் தினமும் முப்பது பேருக்கு உணவு கிடைக்குமா என்கிறான். இவளும் ஒரு கணம் யோசித்துவிட்டு ஒப்புக்கொள்கிறாள். நாள்கள் வேகமாக ஓடுகிறது. அந்தப் பக்கம் காரியங்கள் முடிந்தபின் அகஸ்டினாவிடம் நன்றி தெரிவித்துவிட்டு சோலெ தன்னந்தனியே இரவில் கார் ஓட்டி வருகிறாள். அவளுக்கு பேய் பிசாசு பயம் உண்டு. வீட்டிற்கு அருகே கார் வந்ததும் நிம்மதியுடன் இறங்குகிறாள். அப்போது டிக்கியை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. திற மகளே நான் தான் உன் அம்மா’ என்கிறது குரல். பயத்துடன் திறந்துவிடுகிறாள் அவள் அம்மா ஐரினின் ஆவி அதிலிருந்து வெளியே வருகிறது. ‘சோலே மகளே, பயப்படாதே உன்னை ஒன்றும் செய்யமாட்டேன், சில நாள்கள் உன்னோடு தங்கிவிட்டு போய்விடுவேன்’ என்கிறாள் ஐரின்.

முதலில் பயந்தாலும் பேயானாலும் தன்னைப் பெற்ற தாய்தானே என்று தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள் சோலே. மகளுக்கு உதவியாக அந்த ப்யூட்டி பார்லரில் அவளுக்குத் துணையாக இருக்கிறாள் ஐரின். ஐரினிற்கும் ராய்முண்டாவிற்கும் அடர்ந்த பனி போல ஒரு இடைவெளி பல வருடங்களாக இருந்துவந்தது. அதன் காரணம் யாருக்கும் தெரியாது. தன் பிரிய மகளே தன்னிடம் பேசுவதில்லை என மனமுடைந்து இருக்கிறாள் பேய் என நம்பப்படும் ஐரின்.

அக்கா வரும்போதெல்லாம் தாயை ஒளித்துவைக்கிறாள் சோலே... கடைக்கு ராய் வரும்போதெல்லாம் மறைவிடத்திலிருந்து கண்களில் கண்ணீர்த் துளிர்க்க மகளைப் பார்ப்பாள். ராயிற்கும் தன் தாயின் நினைவுகளும் அவள் வாசனையும் அவ்வப்போது புலப்பட்டாலும் தன் அதீத கற்பனை என்று விட்டுவிடுவாள்.

பெரியம்மாவின் பெட்டியை எடுத்து வந்த விதயத்தை தன்னிடம் ஏன் சொல்லவில்லை என ராய் தங்கையிடம் சண்டை பிடிக்கிறாள். அது தன் அம்மா கொண்டு வந்தது, அம்மாவின் ஆவி எடுத்து வந்தது என அவள் சொன்னாலும் அதை நம்ப மறுக்கிறாள் ராய். கொஞ்ச நாள் மனத்தாங்கல்கள். அதன்பின் புரிதல்கள் என சகோதரிகள் வாழ்வு. சினிமாக்காரர்கள் கடைசி தினத்தன்று அந்த ரெஸ்டாரண்டில் பார்ட்டி வைக்கிறார்கள். ராய் தன் அம்மா தனக்கு கற்றுக் கொடுத்த பாடல் ஒன்றினை மிக உருக்கமாக பாடுகிறாள். சோலேயுடன் வந்திருந்த ஐரின் காரின் பின் சீட்டில் ஒளிந்து இதைக் கேட்டு அழுகிறாள்.

எப்படியோ பிணத்தை ஒரு பழைய ப்ரிட்ஜில் போட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களின் உதவியுடன் வாகனத்தில் ஏற்றி தோழி ஒருத்தியின் துணையுடன் காட்டுப் பிரதேசத்தில் குழி வெட்டி புதைக்கிறாள். சில நாள் கழித்து தன் அம்மா தன் தங்கையின் வீட்டில் ஒளிந்து வாழ்கிறாள் என கண்டுபிடிக்கிறாள் ராய். உணர்ச்சி பிரவாகங்கள் முடிந்த பின் பார்க் பென்சில் தாயும் மகளும் மனம் விட்டுப் பேசுகிறார்கள். கதையின் முக்கியமான சிக்கல் இக்கட்டதில் அவிழ்கிறது. பெளலா ராயின் மகள் மட்டுமல்ல சகோதரியும் கூட. தன் கணவனின் இந்த கேடுகெட்ட செயலை அறிந்த ஐரின் தன் மகளை அக்கொடிய அரக்கனிடமிருந்து காப்பாற்றி தன் அக்கா வீட்டிற்கு அனுப்பிவைக்கிறாள்.

அகஸ்டினாவின் அம்மாவிற்கும் ஐரினின் கணவனுக்கு வேறு உறவு இருந்திருக்கிறது. இதை கூட கண்டும் காணாமல் இருந்த ஐரின் வேலியே பயிரை மேய்ந்தது போல் அவனின் செயலால் நிம்மதியிழந்திருந்தாள். அகஸ்டியின் தாயும் தன் கணவனும் ஒன்றாக இருந்த ஒரு நாளில் அவ்வீட்டை தீயிட்டு கொளித்திவிட்டாள். ஊரார் ஐரினும் அவள் கணவனும் தான் இறந்துவிட்டார்கள் என நினைத்துக் கொண்டார்கள். அகஸ்டியின் தாய் அடிக்கடி காணாமல் போய்விடுவதால் அகஸ்டியைத் தவிர யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அவள் தன் தாய்க்கு என்ன நடந்தது என ஐரினுக்கு மட்டும்தான் தெரியும் என உறுதியாக நம்பியிருந்தாள். ஆனால் இறந்துபோய்விட்ட ஐரினிடம் எப்படி கேட்கமுடியும் என்று அவ்வப்போது ராயிடம் உன் அம்மா ஆவியாக இங்கு திரிந்து கொண்டிருக்கிறாளாம், எப்போதேனும் உன் கண்ணில் பட்டால் தயவு செய்து என் அம்மாவைப் பற்றிய விதயங்களைக் கேட்டுச் சொல் என கெஞ்சுவாள். ராய்க்கு சில சமயம் எரிச்சல் பற்றிக் கொண்டுவரும், ஆனாலும் கான்சர் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அகஸ்டியை கடிந்து கொள்ள முடியாமல் சரியென்று சொல்வாள்.

ஐரின் இறக்கவில்லை என்பது சகோதரிகள் மட்டும் பெளலாவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகிறது. அவர்கள் பெரியம்மாவின் ஊருக்கு கிளம்புகிறார்கள். வழியில் ஒரு காட்டில் இளைப்பாறுகையில் ஒரு மரத்தின் அருகே ராய் நிற்கிறாள். அதின் அருகில் தான் பேகோவை புதைத்துவிட்டு அடையாளத்திற்கு மரத்தில் இறந்த தேதியை செதுக்கிவைத்திருந்தாள். பெளலா அவளை கேள்வியுடன் பார்க்கவே ஆம் என்று தலையசைக்கிறாள். அனைவரும் பெரியமா வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் அகஸ்டி அவர்களைக் காண வருகிறாள். ஐரின் வழக்கம்போல ஒளிந்து கொள்கிறாள். அகஸ்டியின் நோயுற்ற நிலையைப் பார்த்து துயருற்ற ஐரின் அன்றிரவு அவள் வீட்டிற்கு சென்று அவளை கவனித்துக் கொள்ள ஆரம்பிக்கிறாள் என்பதுடன் கதை முடிகிறது.

இப்படம் ஏற்படுத்திய பாதிப்பு இக்கணம் வரை நீங்காமல் மனதிற்குள் ஏதோ செய்துகொண்டிருக்கிறது. உறவுகளின் கயமைத்தனங்களையும், நம்பிக்கை துரோகங்களையும், எல்லாவற்றையும் மீறி வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தினையும், அன்பின் ஆழங்களையும் ஆறு பெண்களின் வாழ்க்கையைச் சுற்றிய திரைக்கதையால் மிக நுட்பமான முடிச்சுக்களால் பின்னப்பிட்டு பின் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படும்போது நமக்கு அதிர்ச்சியும், ஆற்றாமையும், வாழ்வின் மீதான சலிப்பையும் கோபத்தையும், ஒரே சமயத்தில் ஏற்படுத்துகிறது.
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5