The Wind Will Carry Us
Uma Shakthi
"மரணமும் அது குறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச் சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது."
”மரணமும் அது குறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச் சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது. யாரும் தாண்டிவிட விரும்பாத சுவரைப் போலவும்....” – த.அகிலன்
இயக்குநர் அப்பாஸ் க்யாரோஸ்டமியின் ‘The Wind Will Carry Us’ தலைப்பிற்கு ஏற்ற கவித்துவமான திரைப்படம். மிகப் பெரிய நிலப்பரப்பு, மணல் வெளிகள், மலை முகடுகள், டெஹ்ரனில் உள்ள சின்னஞ் சிறிய கிராமம், கயமையற்ற மனிதர்கள், பெருநகரங்களின் பாதிப்புகள் அதிகமில்லாத அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சூழல் என்ற எளிமையான கதையினுள் ஆழமான சில விதயங்களை விதைத்துள்ளார் அப்பாஸ்.
மரணப் படுக்கையில் இருக்கும் முதிய பெண்ணின் இறப்பிற்கு பிறகு நடைபெற இருக்கும் சாங்கியங்களை விரிவாக படம்பிடிக்க அம்மக்களின் வாழ்க்கைப் பற்றி ஆவணப் படம் எடுப்பதற்காக கிளம்புகிறான் பெஸார்ட். மரணம் தினசரியாக அங்கும் இங்கும் நடக்கும் காட்சிதான். ஆனால் அது வேதனையாகவும் தாங்கொண்ணா துயராகவும் உருமாறுவது ப்ரியமானவர்களின் மரணத்தின் போதுதான். மரணம் தொலைவில் நிகழ்ந்தால் அது செய்தி வெகு அருகில் நமக்கு உகந்தவர்களுக்கு நிகழ்ந்துவிட்டால் தாங்க ஏலாத துக்கம். சாங்கியங்கள் நிறைந்த அவ்விதமான மரணக் காட்சியை பதிவு செய்ய வெகு தூர கிராமத்திற்கு புறப்படுகிறான் பெஸார்ட். அவனுக்கு உதவி செய்வதற்கு ஒரு சிறுவன் நியமிக்கபடுகிறான். பெஸார்ட் எங்கு செல்வதானாலும் அவனுக்கு அச்சிறுவனின் உதவி மிகத் தேவை. மேடு பள்ளங்கள் தாண்டி குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று ஓரிடத்தில் அவனை தங்க வைக்கிறான் சிறுவன். மறுநாள் அவனுக்கு பரிட்சை எனவே மதியத்திற்கு மேல் வந்து அவனை அழைத்துச் செல்வதாய் வாக்குத் தந்துவிட்டு செல்கிறான்.
அம்மூதாட்டியின் இறப்பு வரையில் அவன் அங்கு காத்திருக்க வேண்டும். அந்த கிராமத்தாருடன் சில நாள்களில் ஒன்றிவிடுகிறான். அவன் பக்கத்து வீட்டில் பத்து குழந்தைக்கு தாயான ஒரு பெண்ணிடம் (பதினொன்றாவது வயிற்றில்) ஷேவ் செய்தவாறே அவளிடம் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய கேள்விகள் கேட்டு வம்பு பேசுவான். டீ கடை வைத்திருக்கும் பெண்ணும் அவள் கணவனும் போடும் வாய்ச்சண்டைகளை கவனித்தவாறு டீயை ரசித்துக் குடிப்பான். தன்னந்தனியாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு இளைஞன் மற்றும் தனக்கு தினமும் பால் கொண்டு வந்து விற்கும் சிறிய பெண் ஆகியவர்களை அன்றாடம் சந்திக்கிறான். அம்மக்களின் அன்பும், வெள்ளந்தியான குணமும் அவனைப் பெரிதும் ஈர்க்கிறது.
அடிக்கடி நகரத்திலிருக்கும் அவன் குடும்ப்பத்தாரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வருகையில் சிக்னல் கிடைக்காததால் செல்போனை எடுத்துக் கொண்டு ஓட்டமாக ஓடி வெட்ட வெளியில் போய் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் எப்போதும் பாதியில் லைன் கட்டாகிவிடும். இப்படி யாரோ ஒருத்தியின் மரணத்திற்கு தனக்கு துளியும் சம்பந்தமில்லாத கிராமத்தில் காத்திருப்பது அயற்சியாக இருப்பினும் அதை மீறி அவன் அங்கிருப்பவர்களுடன் நெருங்கிப் பழகுகிறான்.
கிணறு வெட்டிக் கொண்டிருக்கையில் மண் சரிவு ஏற்பட்டு அந்த இளைஞன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த பெஸார்ட் உடனடியாக மக்களிடம் இதை தெரிவித்து டாக்டரை எப்படியோ அழைத்து வரச் செய்கிறார். சாவின் மடியில் சென்றிருக்க வேண்டிய அவனின் உயிர் சரியான நேரத்தில் காப்பாற்றபடுகிறது.
எவ்வளவு நாள்தான் வேலையற்று அங்கிருப்பது. அம்மூதாட்டியோ கடைசி வரை(!) இறக்கவில்லை. Prefer the Present (இத்தருணத்தை – நிகழ் காலத்தை நேசி) என்ற டாக்டரின் சன்னமான குரலில் ஒலிக்கும் வசனத்துடன் படம் நிறைவடைகிறது. எதற்கு வந்தோமோ அது நடக்காவிட்டாலும் தன்னுடைய காமிராவில் சில புகைப்படங்களை பதிவு செய்து கொள்கிறான். ஆவணப் பட வேலை தோல்வியில் முடிந்தாலும் அந்த மக்களின் ப்ரியத்தை அடைந்திருக்கிறான் பெஸார்ட்.
இப்படத்தை சாதாரண தளத்திலிருந்து அசாதாரணத்திற்கு மாற்றியவை இரண்டு விதயங்கள் ஒன்று பரந்துபட்ட மனிதநேயம். மற்றொன்று ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’ எனும் பாரதியின் வரிகளை கண்முன் நிறுத்தும் அற்புத நிலக்காட்சிகள். வெட்ட வெளி, சமன் தரை, வான் வெளி, தொடுவானம், மரங்கள், மண் சாலைகள் என மிகத் துல்லியமாக இயற்கையின் அழகிய அம்சங்களை படம் பிடித்துள்ளார்கள். ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஒரேவிதமான லயத்தில் படம் நகர்கின்றது வெகு இயல்பு.
திரைப்படம் பார்த்ததும் நம்முடைய அழகிய கிராமங்கள் நினைவிற்கு வந்தன (சினிமா கிராமங்கள் அல்ல அசல் கிராமங்கள்) சென்னையை தாண்டியதும் எதிர்படும் சின்னஞ்சிறு கிராமங்கள், நாகர்கோவில், கன்யாகுமரி, திருநெல்வேலி, மற்றும் மதுரைப் பக்கத்தில் உள்ள வளம்மிக்க கிராமங்கள், தஞ்சையை ஒட்டிய வயல் வெளி சார்ந்த பச்சை பசுமையான கிராமங்கள், பயணத்தில் நொடிக் காட்சியாக கண்ணுக்குக் தென்படும் பெயர் தெரியாத கிராமங்கள் என்று எத்தனை கிராமங்கள் உள்ளது நம் பெருநகரங்களைச் சுற்றி, என்றேனும் நாம் அங்கே சென்று வசிக்க ஆசைப்பட்டிருக்கிறோமா? நகர வாழ்க்கை நம்மை பல அடிமைத்தனங்களுக்கு பழக்கி வைத்திருக்கும்போது நமக்கு கிராம வாழ்க்கை என்பதெல்லாம் கனவில் கூட வராமல் போகும் ஒன்றுதானே?