KIKUJURO
Uma Shakthi
"இசை திரைப்படத்தை நிறைவு செய்வதோடல்லாமல் நம் மனதை நெகிழ்ச்சியால் நனையச் செய்கிறது."
1999ல் வெளியான கிகுஜுரோ எனும் ஜப்பானிய படத்தில் சிறுவன் ஒருனுக்கும் முதியவர் ஒருவருக்குமிடையில் நிகழும் அன்பான உறவின் ஆழத்தை அழகாக திரையாக்கப் படுத்தியுள்ளார்கள். இப்படம் பல விருதுகள் பெற்ற திரைப்படம்.
மாசோவ் பாட்டியிடம் வளரும் சிறுவன். அவனுக்குத் தன் பெற்றோரைப் பற்றி எவ்வித தகவலும் தெரியாது. தனிமையின் கொடூரக் கரங்கள் அச்சிறுவனின் பிள்ளை மனதில் வெறுமையை உறுவாக்குகிறது.
அவன் படிக்கும் பள்ளியில் தேர்வுகள் முடிந்து இறுதி நாள் வருகிறது. சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்து தனக்கு பிடித்தமான கால்பந்தை எடுத்துக் கொண்டு விளையாடச் செல்கிறான். ஆனால் விளையாட்டுப் பயிற்சியாளர் லீவ் நாட்களில் பயிற்சி கிடையாது நீ போய் உன் லீவை நன்றாக என்ஜாய் செய்துவிட்டு வா, எங்கேயாவது போய் ஜாலியாக விடுமுறையைக் கழிக்கும்படி சொல்லிவிட்டு போய்விடுகிரார். செல்வதற்கு எந்த இடமுமில்லாத அந்தச் சிறுவன் தனியாக செயலற்று நிற்கிறான்.
மனம் வெதும்பிய மாசோவ் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கிறான். பாட்டி வந்ததும் தன்னை எங்காவது அனுப்பும்படி நச்சரிக்கிறான். அவன் அப்பா இறந்துவிட்டார் என்றும் அம்மா இவனுக்காகவே வெளிநாட்டில் வேலை செய்து கஷ்டப்படுகிறாள் என்று சொல்லி அவனை எங்கும் அழைத்துப் போக யாரும் இல்லை என்று சொல்கிறாள். மாசோவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அடுத்த நாள் பாட்டி வேலைக்கு போனதும் கொஞ்சம் பணமும், தன் அம்மாவில் புகைப்படங்களையும் எடுத்து கொண்டு தன் பயணத்தை தொடங்குகிறான். அவன் அம்மாவின் முகவரியையும் மறக்காமல் எடுத்துக் கொள்கிறான் அச்சிறுவன்.
அவன் போன பாதையில் சொந்தக்காரர்களை சந்திக்கிறான். கணவனும் மனைவியுமான அவர்கள் இவன் எங்கு செல்கிறான் என்று பேச்சு கொடுத்து கண்டுபிடிக்கிறார்கள். அவன் முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்த அப்பெண் தன் கணவன் கிகுஜூரோவை அவனுக்காக துணைக்கு அனுப்புகிறாள். கிகு கிறுக்குத்தனங்களுக்குப் பெயர் போனவன். கொஞ்சம் முரட்டுத்தனமும் முன்கோபமும் வேறு கூடப்பிறந்த குணம்.
மாசோவிற்கு வேறு வழியில்லை, கிடைத்த கிகுஜூரோவை கைவிடாமல் அவனுடன் தன் நெடிய தேடல் பயணத்தை துவங்குகிறான். கொஞ்ச நேரத்தில் சைக்கிள் சுற்றும் போட்டி நடைபெறும் இடமொன்றை அவர்கள் அடைகிறார்கள். தங்களிடம் இருக்கின்ற மொத்த பணத்தையும் இழந்துவிடுகிறார்கள். பயணம் இப்படியாக பணத் தட்டுப்பாட்டில் தொடங்குகிறது. ஆனாலும் எதன் பொருட்டும் அவர்களின் பயணம் நிற்கவில்லை. சின்ன சின்ன விளையாட்டுகள், கோப தாபங்கள், சந்தோஷங்களுடன் அவர்களின் தேடல் தொடர்கிறது.
எல்லா பயணங்களும் முடிவிற்கு வந்துதானே தீரவேண்டும். அவர்கள் தேடிய விலாசம் கிடைக்கிரது. கிகுஜூரோவிற்கு அதிர்ச்சிதான் காத்திருக்கிறது, சிறுவன் மாசோவின் தாய் தனக்கான குடும்பத்தை அமைத்துக் கொண்டிருக்கிறாள். இந்நிலையில் அவனை அங்கு அழைத்துச் சென்றால் அவனால் இவ்விதயத்தை தாங்க ஏலாது என்று தவிக்கிறான். ஒருவாறு தேறி மாவோவிடம் அவன் தாய் வேறு விலாசத்திற்கு மாறி விட்டார் என்று வருத்தத்துடன் சொல்கிறான். மாசோ அழுகிறான். அவனை ஆறுதல்படுத்த கிகுஜூரோ ஒரு பொம்மை மணியை அவனிடம் தந்து அவன் அம்மா தன் மகன் தேடிவந்தால் அவனிடம் தர வேண்டும் என கொடுத்துள்ளார்கள் என்று சொல்லி தருகிரார். மேலும் அந்த மணியை அடித்தால் தேவதை உடனே வந்து அவனுக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் செய்யும் என்கிறான். ஒருவழியாக அழுகையை நிறுத்துகிறான் மாகசோ, இருவரும் வீடு திரும்ப முடிவெடுத்து பயணத்தை தொடர்கிரார்கள். கிகுஜூரோ பலவிதமான கிறுக்குத்தங்களை செய்து மாவோவின் மனம் கோணாதவாறு அவனுக்கு அவன் அம்மாவின் நினைவு ஏற்படாமல் இருக்கும்படி பிரயத்தனப்படுகிறான்.
இத்திரைப்படம் மனதினை நெகிழச் செய்யும் காட்சிகளினூடே, பயணத்தின் வலியையும், சந்தோஷத்தையும், இழப்பின் துயரையும் துல்லியமாக பதிவு செய்துள்ளது. இப்படத்தின் கிகுஜூரோவாக நடித்தவர் படத்தின் இயக்குநர் டகோஷி கிட்டானொ. குழந்தைகளின் மன உலகம் அவர்களின் சின்ன சின்ன சந்தோஷங்கள் இவற்றை திரைப்படமாக்க துணிவு வேண்டும். அதை அற்புதமாய் செய்துள்ளது இத்திரைப்படம். கவிதையாய் ஒவ்வொரு காட்சிக்கு டைட்டில் போட்டுள்ளார்கள். படத்தின் முடிவில் பொழியும் இசை திரைப்படத்தை நிறைவு செய்வதோடல்லாமல் நம் மனதை நெகிழ்ச்சியால் நனையச் செய்கிறது.
இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ள / சேமிக்க :
மற்ற உலக சினிமா விமர்சனங்கள் - உமா ஷக்தி
Volver
Original Sin
The Road Home
In the Mood For Love
3 Iron
Persona (பெர்சோனா)
GIRL With a PEARL EARRING.
Talk To Her.
The Brief Encounter.
The Wind Will Carry Us
Baran