Raise the Red Lantern
Uma Shakthi
"கண்ணுக்குள் விழுந்த தூசி போல மனதை நெருடிய படியிருக்கிறார்கள் சோங்க்லியன் போன்ற பெண்கள்."
சைனா, 1991
நடிகர்கள் : கோங்க் லீ, காவொ க்யூஃபென்
இயக்குநர் : ஜாங் யூமொவ்
கேமரா : யாங் லூன் அண்ட் ஜாவோ ஃபிய்
Raise the Red Lantern பெண்களை உடலாக மட்டும் பார்க்கும் நிலையினையும், பெண் உரிமைக் குறித்த அரசியலை மிகவும் கலைநயத்துடனும் அழகியலோடும் சொல்லும் அற்புதமான சீன திரைப்படம். மிக நிதானமாக நகரும் காட்சிகள் மூலம், பெண்களின் அதீத வலியை மிகத் துல்லியமாக பதித்திருக்கிறார் இயக்குநர். பெண்ணின் மன உணர்வுகளை ஆழமாக பதிவு செய்திருக்கும் திரைப்படம் இது.
ஒரு பல்கலைக்கழக மாணவி, தன் குடும்பச் சூழல் காரணமாக ராஜகுடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு மனைவியாக அனுப்பப்படுகிறாள் தன்னந்தனியாக. அவள் அங்கே வந்திருப்பது முதல் மனைவியாக அல்ல. அந்த ராஜ குடும்பத் தலைவனின் நான்காவது மனைவியாக. மிக சோகமான கண்களுடன் அரண்மனைக்குள் கையில் பெட்டியுடன் காலடி எடுத்து வைக்கிறார் சோங்க்லியன் (கோங்க் லீ) இதற்கு முன் பல திரைப்படங்களில் (Zhu Dou, To Live) அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்த மிகச் சிறந்த நடிகை. இப்படத்திலும் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
அரண்மனைக்குள் நுழைந்ததும் ஏற்கனவே அங்கு அடைப்பட்டு கிடக்கும் மூன்று மூத்த மனைவிகள் இவளை பொறாமையுடன் பார்க்கிறார்கள். மிக அழகான புதியவள் எப்போதாவது தங்கள் அறைக்குள் நுழையும் கணவனை மயக்கி தன் அறையிலேயே வைத்துக் கொள்வாளோ என அஞ்சி ஒவ்வொருவரும் கணவன் அவள் அறைக்குள் செல்லாதவாறு தடுக்கும் முயற்சிகளை முதல் பார்வையிலேயே தொடங்கிவிடுவார்கள்.
அந்தக் குடும்பத்திற்கென்ற விசேஷமான பழக்கமொன்றை உருவாக்கி வைத்திருந்தார்கள். இன்னிசை முழங்க, எந்த மனைவியின் அறையின் வாசலின் நீண்ட நெடிய வராந்தாவில் சிவப்பு வண்ண விளக்குகள் ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டிற்குள் அந்த மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கு செல்வான். அன்றைய நாளில் சோங்கிலியன் புது மனைவியாதாலால் அவளின் அறைக்கு வெளியே ஜகத்ஜோதியாக சிவப்பு வண்ண விளக்குகள் ஏற்றப்படுகின்றன. நான்கைந்து பணியாட்கள் அவளை அமர வைத்து வெதுவெதுப்பான நீரில் காலை கழுவி விட்டபின், மூத்த பணிப்பெண் அவளின் மென்பாதங்களை மென்மையாக தட்டி மசாஜ் செய்து விடுகிறாள். முதலில் சோங்க்லியனுக்கு கூச்சமாக இருக்கிறது. இக்குடும்பத்தின் பழக்கம் இது என்று சொல்லி போகப்போக இது வேண்டுமென அவள் கெஞ்சுவாள் என பணிப்பெண் அவளை கிண்டல் செய்கிறாள். அதன் பின் அவளை புத்தாடை உடுத்தச் செய்து நகைகளால் அலங்கரித்த பின் வேலையாட்கள் விடைபெறுகிறார்கள். தனிமையில் விடப்பட்ட சோங்க்லியன் கணவனுக்காக காத்திருக்கிறாள். வீட்டின் உட்புறத்திலும், படுக்கையின் பக்கத்திலும் கூட சிவப்பு வண்ண குமிழ் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருப்பது அவளுக்கு இதெல்லாம் புதிதாகவும் அதே சமயம் எரிச்சலாகவும் இருக்கிறது. கணவன் ஒருவழியாக வந்து சேர்கிறான், அதிகம் பேசாமல் அவளை வேறு உடைக்கு மாறுமாறு கட்டளையிட்டு காத்திருக்கிறான். ஆனால் அதற்குள் பணியாள் ஒருவன் வாசலில் நின்று மாஸ்டரை அழைக்கவே என்னவென்று எரிச்சலுடன் கேட்கிறார், இரண்டாவது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவலைச் சொல்லி அவசரமாக அழைத்துவருமாறு அனுப்பினாள் என்கிறான். வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறான் அவன். சோங்க்கிலியன் ஏதும் சொல்ல வழியில்லாது மெளனத்தில் உறைந்து போகிறாள்.
தினம் தினம் மனைவியர் நால்வரும் அவரவர் அறைக்கு வெளியே தங்கள் குழந்தைகள் மற்றும் பணியாட்களுடன் நிற்க வேண்டும். சிறிய காத்திருப்பிற்குப் பின் ஆரவாரத்துடன் வரும் மாஸ்டர் ஒவ்வொருத்தியின் உடலையும், உடையையும் பார்வையிடுவார், அவருக்கு அன்றைய தினம் யார் மீது மையல் அதிகமாக இருக்கிறதோ தன் பார்வையை அவள் மீதே நிலைத்திருக்கவும், உடன் வந்த பணியாள் குறிப்பறிந்து அவள் பெயரை உரக்க அழைத்துவிட்டு, கையோடு கொண்டு வந்திருக்கும் சிவப்பு விளக்கை அம்மனைவியின் வீட்டு வாசலில் வைத்து விடுவான். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணிற்கு வழமை போலவே பாத பூஜைகள், மசாஜ் உபசாரங்கள், அடுத்த நாள் உணவின் மெனுவை தீர்மானிக்கும் அதிகாரங்கள் என பல செல்வாக்குகள் கிடைக்கும். மனைவியர் மூவரும் இதற்கெல்லாம் கிட்டத்தட்ட அடிமையாகி இருந்தனர். இரண்டாமவளுக்கும் மூன்றாவது பெண்ணிற்கும் இடையறாத போராட்டம் மறைமுகமாக நடந்துவருகையில் இளமையும் அழகும் படிப்பும் சேர்ந்த சோங்கிலியனைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.
சில நாட்களிலே அவளுடைய மூத்த அக்காக்கள் பற்றிய அவதானம் சோங்க்லியனுக்கு ஏற்படுகிறது. முதிய பெண்ணான முதல் மனைவியின் செல்வாக்கை யாரும் அசைத்துவிட முடியாதபடிக்கு ஆண் வாரிசு அவளுக்கு இருக்கிறது. நடுத்தர வயதில் இருக்கும் இரண்டாவது மனைவிக்கு ஒரே பெண், அவள் சோங்கிலியனிடம் இனிமையாக பேசி அவள் நட்பை விரும்புவது போல் நடந்து கொள்கிறாள். மூன்றாவது மனைவி முன்னாள் ஓபேரா பாடகி. அழகி, இளம் வயதுக்காரி, அவளுக்கும் ஆண் வாரிசு இருக்கிறது. கணவனை கைக்குள் வைக்கத் தெரிந்திருக்கும் காரிகை.
வேலையாட்கள் மட்டும் நடமாடிக்கொண்டிருக்கும் மிகப் பிரமாண்டமான மாளிகை சோங்கிலியனுக்கு பெரும் தனிமைக் கொண்டதாக தெரிகிறது. தன்னுடைய உலகம் சுருக்கப்பட்டதாக மன வேதனை அடைந்து அவ்வப்போது மொட்டை மாடிக்குச் சென்று உலவுவாள். அங்கு ஒரு அறை எப்போதும் பூட்டியே வைக்கப்பட்டிருப்பதை பார்க்கிறாள், ஆனால் அதைப்பற்றி எதுவும் கேட்கக் கூடாதென்றும் எதையும் ஆராயக் கூடாது எனவும் எச்சரிக்கப்படுகிறாள்.
கணவன் அக்குடும்ப வழக்கப்படி அவளுக்கு குற்றேவல் செய்வதற்கென்றே பிரத்யேகமாக இளம் வயது பணிப்பெண் ஒருத்தியை (யாங் லின்) நியமிக்கிறான். ஆனால் சோங்க்லியனுக்கு அவளை ஏனோ ஆரம்பித்திலிருந்தே பிடிக்கவில்லை. வெறுப்பும், தனிமையும், புரிபடாத மனிதர்களும் சூழ்ந்த இடமான அம்மாளிகை இருக்கையில் அதன் கண் கவர் அழகுகளும் வெளிச்சங்களும் ஒரு நாளும் அவள் கண்களில் பதிவதில்லை மாறாக தீராத அயர்ச்சியையும் இனம் தெரியாத அச்சத்தையும் தரும் இடமாகவே அம்மாளிகை அவளுக்கு பயமளிக்கிறது. போதாதற்கு மிகவும் அந்தரங்கமாக நிகழக்கூடிய கணவன் மனைவி உறவை அனைவர் அறிய வண்ண விளக்கை ஏற்றி கணவன் சிறுமைப்படுத்துவதாக நினைத்து மனம் குமைகிறாள். எதைப்பற்றி கேள்வி கேட்டாலும் தயவு தாட்சண்யமின்றி கணவனால் நிராகரிக்க்பட்டு அவளுக்கு எந்தவித உபசரிப்புகளும் இல்லாமல் தவிக்கும்படி அவன் செய்கிறான். நூதன முறையில் அவளை பழிவாங்க அவனால் முடிந்தது. எவ்வித அவமானங்களையும் ஏற்க அவள் சுயம் மறுத்தது. ஆனால் வேறுவழியின்றி சில முறை உடன்படுகிறாள். இறுதியில் கணவனை தக்க வைத்துக் கொள்ளவும், தன்னிடம் அதிக பிரியம் வைக்கும்படியும் மற்ற மனைவியர் நடத்தும் உடல் அரசியலை அவளும் ஒருவாறு பழகிக் கொண்டு தன்னை அதற்கும் தயார்படுத்திக் கொள்கிறாள்.
அகங்காரி போல் தோற்றமளித்த மூன்றாவது மனைவிதான் தனக்கெதிராய் இருக்கிறாள் என நினைத்துக் கொண்டிருந்த சோங்க்லியன் அவள் நல்லவள் என்பதை விரைவில் அறிந்து கொள்கிறாள். ஆனால் நல்லவள் போல வேடமிட்ட இரண்டாவது மனைவி உண்மையில் மிக கெட்ட எண்ணம் கொண்டவள், சிரிக்க சிரிக்க பேசி பல சூழ்ச்சிகளை செய்யக்கூடியவள் என்பதையும் தெரிந்து கொள்கிறாள். தானும் அவர்களுக்கு சவாலாக இருக்க வேண்டும் என முடிவு செய்து கணவனை மயக்க ஆரம்பிக்கிறாள். கர்ப்பவதியாகக் கூட நடித்து அனைவரையும் ஏமாற்றி அதில் சந்தோஷம் காண்கிறாள். ஆனால் தொடர்ந்து சூழ்ச்சி செய்யத் தெரியாதவளும், மனதளவில் அலைக்கழிக்கப்படுபவளாகவும் இருக்கும் சோங்கிலியனுக்கு ஒரு கட்டத்தில் எல்லாம் வெறுத்துவிடுகிறது. மாஸ்டரின் மூன்றாவது மனைவிக்கும் அம்மாளிகையில் அனுமதிக்கப்பட்ட ஒரே ஆணான டாக்டருக்கும் தொடர்பு இருப்பதை ஒரு நாள் எதேச்சையாக கண்டுபிடிக்கிறாள். அந்த குடும்பத்தின் பெண் அடிமைத்தனம் பிடிககாவிட்டாலும் தான் மதிக்கும் பெண் இப்படி சோரம் போவதை அவள் ரசிக்கவில்லை.
மூத்த மனைவியின் மகனான இளைஞன் அம்மாளிகைக்கு கல்லூரி விடுமுறைக்கு வீடு திரும்புகிறான். அழகனான அவனின் இருத்தலும் அற்புதமான அவனின் புல்லாங்குழல் இசையும் சோகம் கப்பியிருக்கும் சோங்க்லியனின் துயரமான மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. அவன் இவளுக்கு முன்னமே அறிமுகம் ஆகியிருக்கக் கூடும் என்பதாய் சில காட்சிகள் தோன்றவைக்கின்றன. பல விதயங்களை தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த சோங்க்லியன் ஆற்ற மாட்டாமள் தன் பிறந்த நாளன்று அளவுக்கு மீறி குடிக்கிறாள். அவன் அச்சமயம் அங்கு வரவே அவனிடம் முதலில் அன்பாக பேசி அதன்பின் கோபமாக அவனைத் திட்டி விரட்டுகிறாள். அவன் பரிசளித்தவற்றை தூக்கி எறிகிறாள். ஆசைகள் நிராசையாகும்போது பேரிழப்புகள் நெடிதுயர்ந்து பெருந்துன்பக் கடலில் வீழ்த்தும். நிராகரிக்கப்பட்ட உயிராக சோங்க்லியன் துடித்துக் கதறுகிறாள். தனிமையில் மேலும் குடித்து உளற ஆரம்பிக்கிறாள். மூன்றாவது மனைவி பற்றிய ரகசியத்தை பேச்சினிடையில் உளறி விடவே கொடியவளான இரண்டாவது மனைவி அதைக் கேட்டுவிடுகிறாள். கையும் களவுமாக மூன்றாவது மனைவியை கள்ளக்காதலுடன் பிடித்து மாஸ்டரிடம் ஒப்படைக்கிறாள். மிகக் கடுமையாக பனிப் பொழிந்து கொண்டிருக்கும் அந்த இரவில் கொடூரமான தண்டனை மூன்றாவது மனைவிக்கு வழங்கப்படுகிறது. இதை மறைந்திருந்து பார்த்த சோங்க்லியன் மனநிலை பாதிக்கப்படுகிறாள். குற்றவுணர்வு சிறுக சிறுக அவளை கொன்றொழிக்கிக்கும் வேளையில் அக்குடும்பத் தலைவன் சிறிதும் கலங்கவில்லை, அவளுக்காக வருந்துவார் யாருமில்லை, மாறாக ஐந்தாவதாக ஒரு புதுப்பெண்ணை அழைத்துவரப்படுகிறாள். சிவப்பு விளக்குகள் அவள் அறைக்கு வெளியே ஏற்றப்படுகின்றன......
பணமும் அதிகாரமும் இருக்கும் யாரும் யாரையும் அடிமைப்படுத்திவிடலாம், ஓரிடத்தில் அடைத்து வைக்கலாம், விருப்பங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உடன்பட மறுத்தால் கொலையும் செய்யலாம், தனி மனித சுதந்திரம் என்பதெல்லாம் அவ்வதிகாரத்தின் கீழ் மண்டியிட வேண்டிய நிலையில்தான் இருக்கும் என்பதை மிக நுண்ணிய அரசியலோடு திரைமொழியில் விளக்கியிருக்கிறது இத்திரைப்படம்.
அழகழகான வண்ணங்கள், பனி பொழிவுகள், இளம் காலைகள், நடுச் சாமம் என காலத்தை தன் கேமராவிற்குள் அழகாக பதிவு செய்திருக்கிறார்கள் யாங் மற்றும் ஜாவோ. ஒரே இடத்தில் நடைபெற்றாலும் ஓவியம் போன்று அலுக்காத காட்சிகளுடைய இத்திரைப்படத்தை நெடுநாள் மறக்க ஏலாது. கண்ணுக்குள் விழுந்த தூசி போல மனதை நெருடிய படியிருக்கிறார்கள் சோங்க்லியன் போன்ற பெண்கள்.
இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ள / சேமிக்க :
மற்ற உலக சினிமா விமர்சனங்கள் - உமா ஷக்தி
Volver
Original Sin
The Road Home
In the Mood For Love
3 Iron
Persona (பெர்சோனா)
GIRL With a PEARL EARRING.
Talk To Her.
The Brief Encounter.
The Wind Will Carry Us
Baran
KIKUJURO