In The Mood For Love.
Uma Shakthi
"படம் நெடுகிலும் அவ்வப்போது ஒலிக்கும் பாடல் ஒன்று அற்புதமாய் சூழலுக்கு ஏற்றவாறு பின்னனியில் ஒலிக்கின்றது."
சில திரைப்படங்கள் நடிகர்களுக்கானது, சில படங்கள் இசைக்கானது, கேமராவிற்கான சில திரைப்படங்கள் உள்ளன. சீன மொழிப் படமான “In the Mood for Love” முழுக்க முழுக்க இயக்குனருக்கான படம். வோங் கார் வாய் – (Wong Kar-Wai)யின் உழைப்பும் ரசனையும் அறிவார்ந்த அழகியலும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்பட்டு இத்திரைப்படத்தை மென்சோகக் திரைக்காவியமாக்குகிறது.
செள மோ-வான் (Chow Mo-Wan) எழுத்தாளன். சூ லி-சென் (Su Li-Zhen) ஷிப்பிங் கம்பெனியொன்றில் வேலை செய்யும் மணமான பெண். இருவரும் ஒரே நாளில் எதிர் எதிர் ப்ளாட்டில் குடியேறுகின்றார்கள். சாமான்களை இறக்கும்போது சூவின் பொருள்கள் செளவின் வீட்டிற்கு மாற்றிப் போவதும் அவனின் பொருள்கள் இவளிடம் வருவதுமாய் சிறிய குழப்பம் ஏற்படுகிறது. இருவரும் எரிச்சல் அடையாமல் பணிவுடன் அவர் அவர்க்கான பொருள்களை எடுத்துக் கொண்டு மற்றதை எதிர் வீட்டிற்கந் திருப்பி அனுப்புகிறார்கள். இப்படியாக தங்களுக்குள் அறிமுகம் ஆகிறார்கள்.
சிறு சிறு பேச்சுக்களில் ஆரம்பித்து இருவரும் ஸ்நேகமாகிறார்கள். செளவின் மனைவி பணி நிமித்தமாக வெளிநாடு போயிருக்கிறாள் அவன் தனிமையில் உணவிற்காக கஷ்டப்படுகிறான். சூ மிகவும் அன்பானவள் வேலையிலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் தன்மையாக இன்முகத்துடன் பழகுபவள். அவளுடைய கணவன் ஜப்பானுக்கு வேலையாய் போயிருந்தான். அவளும் தனிமை நெருப்பில் தகித்துக் கொண்டிருந்தாள். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் இவளின் கணவனும் அவளின் மனைவியும் கள்ளக் காதலர்கள் என்பதை கண்டு பிடிக்கிறார்கள். மிகவும் உடைந்து போன சூவிற்கு செள ஆறுதல் மொழிகள் சொல்கிறான்.
ஒரு மழை நாளில் தெருக்கோடியில் அவர்களின் உரையாடல் இவ்விதமாய் இருக்கிறது :
செள : நாம தனியா சுதந்திரமா இருக்கறப்ப நாம நினைச்சதை உடனடியா செயல்படுத்த முடிஞ்சுது. ஆனால் கல்யாணம்ங்கற ஒரு விஷயம் எல்லாத்தையும் மாத்திடுது. இரண்டு பேரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியதா போச்சு.
சூ : திருமண வாழ்க்கை இவ்வளவு சிக்கலானதா இருக்கும்னு நான் நினைச்சுக் கூட பாத்ததில்லை. தனியாளா இருக்கறப்ப நாம் செய்யற எந்த விஷயத்துக்கு நாம மட்டும் தான் பொறுப்பு. ஆனா கல்யாணம்னு ஒண்ணு முடிஞ்சிருச்சுன்னா நமக்குன்னு ஒரு தனி முடிவு இருக்குமா என்ன?
தவிர்க்க முடியாமல் இருவரும் ஒருவரின் மேல் மற்றவர் காந்தம் போல ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களின் அன்பு புரிதலாகி புரிதல் கனிந்து கிட்டத்தட்ட காதல் எனும் நிலைக்கு வந்து நிற்கிறது. வேட்கையும் விழைதலும் அச்சமும் துடிப்புமாய் அவர்களின் நாள்களும் பொழுதுகளும் அதீதமான உணர்வழுத்தங்களால் கடந்து போகிறது.
படம் நெடுகிலும் அவ்வப்போது ஒலிக்கும் பாடல் ஒன்று அற்புதமாய் சூழலுக்கு ஏற்றவாறு பின்னனியில் ஒலிக்கின்றது.
“பூ உதிர்வதைப் போல
நாள்கள் உதிர்ந்து போகின்றன
நிலவின் தீரா ஒளியினைப் போல..
பளபளக்கின்ற உறை பனியைப் போல
உன்னதமான இவ்வாழ்க்கை அழகானது
என் இனியவருடனான
இல்வாழ்க்கை சொர்க்கம்
திடீரென முளைத்த குழப்ப மேகங்களும்
அடர்பனியும் தனிமைத் தீவும்
மென்சோகமும்
எனை தின்று தீர்க்கிறதே
மரணத்தின் பள்ளத்தாக்கே
உன் வன்கரங்களுக்குள்
எக்கணம் திரும்ப வருவேன்
இந்த கொடும்பனி உடைந்து சிதறும்
காட்சியை எப்போது பார்ப்பேன்
மீண்டும் வெளிச்சக் கீற்று வாராதோ
அந்த பூவினுடையது போல
அந்த நிலவினுடையது போல”
செளவினுடைய தொடர் எழுத்துப் பணியில் பிரதியெடுத்துத் தந்து உதவுகிறாள். அவளின் இனிமையான குரலைக் கேட்க அலுவலக்கதிற்கு போன் செய்கிறான். இருவரும் ஒன்றாக உணவகத்திற்கு போகிறார்கள் தினமும் தெரு முக்கில் நின்று சில மணி நேரம் மனம் விட்டுப் பேசி விட்டு அடுத்தவர்கள் தங்களை ஒன்றாக பார்த்தால் என்ன நினைப்பார்களோ என பதைபதைத்து வீட்டிற்கு ஒருவர் சென்ற சிறிது நேரத்திற்குப் பின் மற்றவர் சென்று தங்கள் ஒழுக்கமான இருத்தலை உணர்த்துகிறார்கள். உண்மையில் அவர்களுக்கும் மெல்லிய நூலிழையாய் காதல் ஊடுருவி உயிரை வதைத்தெடுக்கிறது. அவனுக்கு உடல் நலம் குன்றியபோது இவள் சமைத்துத் தருகிறாள். அவன் நன்றி சொன்ன போது எதேச்சையாக அதிகம் சமைத்தேன் என்ற அழகான பொய்யை கூறுகிறாள்.
ஒருகட்டத்தில் தத்தம் இணைகள் எப்படி பேசியிருப்பார்கள் என்ன சொல்லில் ஆரம்பித்திருப்பார்கள் எப்படி நெருங்கியிருப்பார்கள் என தாங்களே அவர்களின் பாத்திரத்தை ஏற்று நடித்துப் பார்க்கிறார்கள்; தாள இயலாத துயருடன் சூ உடைந்து அழுகிறாள். அவளை தேற்றுகிறான் செள. அவர்களின் உடலும் இப்போது ஒருவரின் அருகாமை மற்றவர்க்கு மேலதிகமாக தேவைப்படுகிறது. டாக்ஸியில் வீடு திரும்புகையில் செள சூவின் கையின் மேல் நாசூக்காக தன் கையை அழுத்துகிறான். முதலில் அவன் கையை பொதித்துக் கொண்டவள் பின் மெதுவாய் விலக்குகிறாள். அவர்களுக்குள் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் அழகாய் நிகழ்கிறது. அன்பும் காதலும் கருணையும் கொண்ட அவ்விரு இதயங்கள் துரோகம் செய்வதை வெறுக்கின்றன. சூ சொல்கிறாள் ‘நாம் என்ன அவர்களைப் போலவா? என்கிறாள். மிகவும் செறிவான ஆழமான வார்த்தைகள். மொத்த கதையின் ஜீவனும் இதில் பொதிந்துள்ளது. பின் இருவரும் பிரிகிறார்கள். நண்பனின் அழைப்பிற்கு இணங்கி புதிய வேலையை ஏற்று அவன் ஹாங்காங்கிற்கு போகப் போவதாய் சொல்கிறான். தன்னுடன் வந்துவிடுமாறு சூவிடம் கேட்கிறான். அவள் தீர்மானமாக மறுத்துவிடுகிறாள். இருவரும் ஒன்றாக கழித்த முந்தைய இரவின் நினைவுகளைச் நெஞ்சம் முழுவதிலும் சுமந்து கொண்டு மன சஞ்சலத்துடன் புறப்படுகிறான் செள.
அடுத்த வருடம் சூ சிங்கபூருக்குச் செளவின் வீட்டிற்கு செல்கிறாள். ஆனால் அவன் அங்கு இல்லை, அவன் பணிபுரியும் இடத்திற்கு ஃபோன் செய்கிறாள் அவன் எடுத்ததும் ஏதும் பேசாமல் மெளனமாய் இருக்கிறாள். வீட்டிற்கு திரும்பிய செளவிற்கு இன்ப அதிர்ச்சி, லிப்ஸ்டிக் தடவிய சிகரெட் துண்டுகள் ஆஷ்ட்ரேயில் கிடப்பதைப் பார்க்கிறான். தன் ப்ரியமான காதலி தன்னை தேடி வந்திருக்கிறாள் என்பதை அறிந்து பரவசப்படுகிறான்.
மூன்று ஆண்டுகள் கழித்து தன்னுடைய பழைய ப்ளாட்டிற்கு வருகிறாள் சூ. வீட்டின் சொந்தக்காரி வெளிநாட்டிற்கு செல்லப் போவதாய் சொல்லியதும், சூ அந்த மொத்த ப்ளாட்டையே வாடகைக்கு எடுத்துக் கொள்கிறாள். சில நாள் கழித்து செள அவ்விடத்திற்கு வருகிறான். சூ எங்காவது தென்படுவாளா என்ற ஆசையுடன் பரிசுப்பொருளை கையில் வைத்துக்கொண்டு அவளைப் பற்றி விசாரிக்கிறான். பழைய குடித்தனக்காரர்கள் யாருமில்லை ஒரு பெண் தன் சின்னஞ்சிறு மகனுடன் வசிக்கிறாள், அந்தச் சுட்டிப் பையன் கொள்ளை அழகு என்கிறான் புதிதாய் வாடகைக்கு வந்திருந்த ஒருவன். சோகமான உணர்வுடன் அப்பரிசை அவனிடம் மறுக்க மறுக்க தந்துவிட்டு அங்கிருந்து செல்கிறான் செள். போவதற்கு முன் சூவின் வீட்டின் மூடிய கதவை ஒருமுறை பார்க்கிறான், பின் திரும்பிப் பார்க்காமல் செல்கிறான் அந்த தேவதை தன் மகனுடன் அங்குதான் இருக்கிறாள் என்பதை அறியாதவனாய்.
இக்கதையில் சொல்லப்படாத கதையொன்று தொக்கி நிற்கிறது. அதை நம் நினைவோடையில் நமக்கு பிடித்த வகையில் எழுதிக் கொள்ளலாம். செள கம்போடியாவில் இருக்கும் ஒரு பழமையான கட்டிடத்திற்கு செல்கிறான். அதன் சுவற்றில் சிறிய பொந்து இருக்கிறது. அங்கூர் வாட் எனப்படும் அந்த பொந்திற்குள் எத்தகைய ரகசியமானாலும் சொல்லிவிட்டு பின் அதை மூடி மறைத்துவிடலாம். மெல்லிய இசையின் பின்னனியில் செள கூறிய ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதுதானே? ரகசியங்கள் காப்பற்றபடவேண்டியவை..எனவே .......................................
மென்சோகக் கவிதையான இத்திரைப்படம் அழகியலுடனும் அற்புதமாகவும் பதிவாக்கப்பட்டிருக்கிறது. காட்சிரீதியாக ஒவ்வொரு சிறிய விதயத்திலும் மெனக்கிட்டிருக்கிறார்கள். மழையும் தனிமையும் பிரிவும் காதலும் காமமும் இருஜோடியின் உடல் மொழிகளிலும் கண் பார்வையிலும் அன்பின் பகிர்தல்களிலும் உணர்த்தப்படுகிறது.
In the Mood for Love ல் மெய்க்காதல் கணங்கள் அதியற்புதமாய் அதி உன்னதமாய் மனதிற்கு நெருக்கமாய் பதிந்துவிட்டது. காதல் தரும் உணர்வுகள் நம்மை பேரிசைச்சலுக்கும் பெரும் அமைதிக்குமிடையே இட்டுச் செல்லும். இத்திரைப்படம் காட்சியனுபவத்தின் மொத்த சுகத்தை அள்ளித் தருகின்றது.
விருதுகள்
2000ம் ஆண்டுக்கான கான்ஸ் விருது (Cannes Film Festival – Best Actor (Tony Leyung Chiu-Wan)
2001 ம் ஆண்டு Hong Kong Film Award
நடிகர்கள்
Chow Mo-wan (Tony Leung)
Su Li-zhen (Maggie Cheung)
இயக்குநர் – Wong Kar-Wai