3 Iron

Uma Shakthi

"சாதரண கதையினூடே அற்புதமான மன எழுச்சியை அப்படம் தோற்றுவித்தது."


அழகியல், செய்நேர்த்தி, கதை சொல்லும் முறை, என எல்லாத் தளத்திலும் சிறப்பான படம் 3 ஐயர்ன் (3 Iron) என்னும் கொரியன் படம் . சாதரண கதையினூடே அற்புதமான மன எழுச்சியை அப்படம் தோற்றுவித்தது.

டி-சுக் அழகான இளைஞன். பகலில் தன் அதி நவீன பைக்கில் வீதி வீதியாக சென்று வீடுகளில் விளம்பர நோட்டீஸ்களை ஒட்டுவான், இரவில் அதே வீடுகளுக்கு சென்று கசக்கி எறியப்படாத நோட்டீஸ்ளின் மூலம் அவ்வீடு யாருமற்று இருக்கிறது என்று அறிந்து கொள்வான். அந்த இரவு அவ்வீடு அவன் வசம். வீட்டினுள் நுழைந்ததும் தொலைபேசியில் வீட்டின் உரிமையாளர் எங்கு சென்றிருக்கிறார் என்பதை வாய்ஸ் மெயில் மூலம் அறிந்து கொள்வான். அதன் பின் ஒவ்வொரு அறைக்குச் சென்று ஆராய்வான். அவ்வீட்டில் புகைப்படம் எதாவது மாட்டப்பட்டிருந்தால், அவன் தன் டிஜிட்டல் காமிராவில் தானும் அந்தப் புகைப்படமும் தெரியுமாறு போட்டோ எடுத்துக் கொள்வான். எப்போதும் அழகான குறு நகையொன்று அவன் முகத்தில் படர்ந்திருக்கும். பிறகு அங்கிருக்கும் அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்து அழுக்குப் போக துவைத்து அக்கறையுடன் உலர்த்துவான்.

கண்ணில் படும் பொருள்களை எடுத்துப் பார்க்கும் போது அது இயங்கவில்லை என்றால் உடனடியாக அதை சரி செய்வான். ஆனந்தமாக குளித்து, தானே சமைத்த உணவுகளை சாப்பிட்டு விட்டு ஹாலில் உள்ள சோபாவில் சரிந்து டீவி பார்ப்பான். வீட்டின் உரிமைக்காரர் வரும் சத்தம் கேட்டும் அடுத்த நொடி பரபரப்பாக கிளம்பி காணாமல் போய்விடுவான். பின் அடுத்த நாள், அடுத்த ஒரு வீடு. ஒரு நாள் அழகிய பெரிய தோட்ட வீட்டிற்கு வருகிறான். தன் வழமையான காரியங்களில் அவன் இயங்கிக் கொண்டிருக்கும் போது அவனறியாமல் ஒரு ஜோடிக் கண்கள் அவன் செய்கைகளை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அழகின் வடிவமான அப்பெண் தன் கணவனால் துன்புறுத்தப் பட்டு வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறாள். அவள் உதடு ரத்தம் தோய்ந்திருக்கிறது. சுவா-ஹ்வா முன்னால் மாடல் அழகி. வீட்டின் சுவற்றில் கால் மடித்து ஆடைகளின்றி உட்கார்ந்திருக்கும் அவளின் புகைப்படத்துடன் தன்னையும் சேர்த்து டீ-சுக் கேமாராவில் படம் பிடித்துக் கொள்கிறான். அவனின் ஒவ்வொரு செய்கையிலும் கவரப்பட்ட அவள் இவன் திருடனில்லை என்பதை உணர்கிறாள். அவளின் இருப்பை அவன் தூங்குவதற்காக கட்டிலுக்குப் போன பின் உணர்த்துகிறாள். அழுத்தமான முகபாவத்துடன் அவன் அறையை காலி செய்கிறான். வெகுநேரம் தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்த அவளின் கணவன் அப்போது மீண்டும் அழைக்கிறான். அவள் ஏதோ பதில் சொல்லுகிறாள். இவன் மெதுவாக நழுவுகிறான். அலைந்து திரியும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்திருக்கும் அவனுக்கு இருக்க ஒரு இடமில்லாமல் நடு ரோட்டில் நிற்கிறான், மனதின் அலைக்கழிப்பிற்கு இணங்கி மீண்டும் அவள் வீட்டிற்கே வருகிறான். அவள் திகைத்துப் போன நேரத்தில் கணவன் தன் பெரிய காரில் வீடு வந்து சேர்கிறான். வாசலில் இருக்கும் பைக்கை பார்த்தபடி உள் நுழைகிறான். அவள் சோபாவில் அமர்ந்திருக்கிறாள். முதலில் தன்மையாகவும் பிறகு பெரும் சத்ததுடனும் அவளிடம் வாதிடுகிறான். அவளை முரட்டுத்தனமாக கட்டிப்பிடித்து முத்தம் இடுகிறான். இதை ஜன்னல் வழியே பார்த்த டீ-சுக் கோபம் அடைகிறான். தன் இருப்பை உணர்த்த அங்கிருந்த கோல்ப் கட்டையால் சத்தமாக பந்தை எறிகிறான். இவனை யார் என்று கேட்டபடி வந்த கணவனை மூன்று கோல்ப் பந்துகளால் சரமாரியாக தாக்கிவிட்டு, பைக்கின் உறுமலாய் தன் அழைப்பை சுவாவிற்கு விடுக்கிறான். மறுபேச்சின்றி அவள் அவன் பைக்கில் ஏறுகிறாள்.

நிற்க. படம் இத்துடன் முடிகிறது என நினைக்க வேண்டாம். இனி தான் கதையே. அவர்க்ள் இருவருக்கும் வீடில்லை, வாசலில்லை. அவனுடைய வாழ்க்கை முறையை அவள் ஏற்றுக் கொள்கிறாள். இப்படத்தின் முக்கியமான ஒரு விதயம் லயம்...ஒரே சீரில் லயமாக ஒரு மிதக்கும் கவிதை போன்ற காட்சியமைப்புகள். வீடுகள் மரங்கள் சாலைகள், குளங்கள், தோட்டங்கள் என்று ஃப்ரேம் வழியே வழியும் பச்சைப் பசுமைக் காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதிற்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. படம் நெடுகிலும் மெளனம், இருவருக்குமிடையே உரையாடல்கள் இல்லை. மிகவும் காயப்பட்டு சிறகொடிந்து போயிருக்கும் அப் பெண் பறவைக்கும் தன் மென்சேவைகளால் ப்ரியனாகிறான் அவன். அவர்களின் ஈர்ப்பும் புரிதலும் வார்த்தைகள் கடந்தது. அவன் உடல் மொழியும் அவள் பேசும் கண்களும் கொள்ளை அழகு.

நாட்கள் கழிகிறது. ஒரு முறை பூட்டிய வீட்டில் பெரியவர் ஒருவரின் பிணத்தைக் கண்டு முதலில் அஞ்சினாலும் பிறகு அவ்விடத்தை சுத்தப்படுத்தி, அவரை அடக்கம் செய்துவிட்டு தூங்குகிறார்கள். அவ்வீட்டின் உரிமையாளன் பெரியவரின் மகன் திடீரென்று வந்துவிடவே இவர்கள் போலீஸில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிகாரியின் அத்தனைக் கேள்விகளுக்கும் மெளனம் மட்டுமே அவன் பதிலாகிறது. காணாமல் போனவர்களின் லிஸ்டில் அவள் புகைப்படம் இருந்தபடியால் அவள் கணவனுக்கு தகவல் அனுப்பி அவளை திருப்பி அனுப்புகிறார்கள்.

அவன் திருடன் இல்லை, அவன் சென்ற வீடுகளில் பொருள்கள் ஏதும் களவாடப்படவில்லை என்பது போலீஸுக்குத் தெரிகிறது. அவன் மேல் உள்ள எல்லா குற்றச்சாட்டுகளும் அர்த்தமற்றவை என்றும் தெரிகிறது. ஆனாலும் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த போலீஸ் இவனை அவளின் கணவனிடம் கோல்ப் பந்துக்களால் அடிவாங்க வைக்கிறான். அவனை காரில் ஏற்ற முயலும் போலீஸ்காரனை ஆத்திரத்துடன் திருப்பி அடிக்கவே அவன் மறுபடியும் சிறையில் அடைக்கப்படுகிறான்.

லாக்கப்பில் அவன் அவளுக்காகவும் அவள் அவனுக்காகவும் காத்திருக்கிறார்கள். சிறையிலிருந்து தப்பி விட அவன் அரிய மார்ஷல் ஆர்ட்டை கற்க ஆரம்பிக்கிறான். காவலாளியின் பின் நின்று நிழலாய் அவன் பின் அசைந்து அவனை மிகுந்த எரிச்சலுக்கு உட்படுத்துகிறான். இந்தப் பக்கம் கணவன் தன்னை கலவிக்கு அழைத்து இவள் மறுக்கவே அடித்த போது அவள் அவனைத் திருப்பி அடிக்கிறாள். எப்போதும் அவளின் கதவுகள் அவனுக்குக் கிடைத்தேயில்லை. அவன் மனது வெறுப்பால் ஆனது, சந்தேகத்தால் ஆனது, அப்பெரிய வீட்டின் உயிரற்ற பொம்மைப் பொலத்தான் அவளை நடத்தினான். ஆனால் அவளின் அவனோ அவளை அன்பின் எல்லைகள் வரை, முடிவில்லா பாதைகளின் வசீகரங்களில் அழைத்துச் சென்றவன். முக்கியமாக அவளை அவளாக இருக்க வைத்தவன். அவனிடம் வெகு ஆழமான பிரியமும், காதலும் மட்டுமே இருந்தது. அவள் மனது அவனால் தளும்பியது, மிக நெருக்கமான ஒரு கணத்தில் இருவரும் உடல் மொழியால் தங்கள் காதலை ஒருவர்க்கொருவர் உணர்த்தியிருந்தார்கள். தனிமையின் தீவிரத்தால் அவ்விதயங்கள் ஒன்றுடன் ஒன்று இணையும் நாளுக்காய் காத்துக் கிடந்தது.

கண்களின் பார்வைகளுக்குப் பின் ஒளிந்து கொள்ளும் வித்தையை கற்றுத் தேர்கிறான். அவனை யாராலும் பார்க்கமுடியவில்லை. பின்னால் தான் இருப்பான், திரும்பினால் திரும்பும் வேகத்தில் மின்னல் வேகத்தில் நகர்ந்து தேடுபவனின் உடலின் பின்னால் மறைந்து கொள்வான். அவன் அங்கு தான் இருக்கிறான், ஆனால் மற்றவர்களின் பார்வையின் கோணத்திலிருந்து தன்னை மறைத்துக் கொள்ளும் யுக்தியில் ஜெயித்து சிறையிலிருந்து தப்புகிறான்.

நேராக காதலியின் இருப்பிடம் வந்து சேர்கிறான். உள்ளுணர்வால் அவனை தெரிந்து கொள்கிறாள். கணவனிடம் முதல் முறையாக நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்கிறாள். ஆனால் கணவனைத் தாண்டி அவள் கண்ணுக்குத் தெரிபவன் இவன் தான். அவனின் இருப்பு அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். தீராத் தனிமையிலிருந்து தன்னை மீட்ட அவனுடன் அவள் மனம் லயிக்கிறாள்....

இப்படத்தின் காட்சிகளின் ஊடே கிடைக்கும் அனுபவம் வெகு அற்புதம். நம்மூரில் ‘கள்ளக் காதல்’ என்ற ஒரு வரியில் இதை தூக்கிப்போட்டுவிடுவார்கள். ஆனால் அப்பெண்ணில் மனவோட்டத்தையும் அவளின் கண்ணீரையும் ரணத்தையும் காலம் காலமாக பெண் படும் பாட்டையும், pபெண்ணின் உடலையும் மனதையும் கீறிப்பார்க்கும் ஆணின் புத்தியையும் இன்னும் பல விதயங்களையும் சொல்லாமல் சொல்லுகின்ற திரைக்கதை. இதற்கெல்லாம் நேர் எதிரான ஒரு வாழ்க்கை கதையின் நாயகனுக்கு. எதையும் ஜஸ்ட் லைக் தட் கடந்து போகும் இயல்புடையவன். எதிலும் தீவிர பற்றுக்கள் இல்லாதவன். தான் மிகவும் விரும்பும் கோல்ப் விளையாட்டில் கூட அவன் தீவிரமாக இறங்குபவனில்லை. அவ்வப்போது எழும் கோப உணர்ச்சியை தன் கோல்ப் ஸ்டிக்கில் பந்தை அடிப்பதன் மூலம் எறியப்பார்க்கிறான். அவன் அவளைப் புரிந்து கொள்கிறான். அவளை தன் தோழியாக காதலியாக எல்லாமுமாக பார்க்கிறான். இறுதியில் அவன் அவளில் கரைந்து மற்றவர்க் கண்களுக்கு காணாமலே போய்விடுகிறான். அவனுக்கு அவள் போதும். அவள் மட்டும் போதும்.

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5