GIRL With a PEARL EARRING.
Uma Shakthi
"மனதை பிசையும் மென்சோகத்துடன் நிறைவடைந்து பார்வையாளரைத் திரைக்குள் இழுத்துச் செல்கிறது"
செராமிக் பெயிண்டரான தந்தையின் கண் பார்வை மங்கிவிட்ட நிலையில் குடும்பப் பொறுப்பு பதினேழு வயது க்ரீட்டின் (ஸ்கார்லெட் ஜொஹான்சன்) மேல் விழுகிறது. க்ரீட் மென்மையும் அமைதியும் சேர்ந்த அழகி. தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவுடையவள். திடீரென்று வாழ்க்கைச் சூழல் தன்னை கடைநிலைக்குத் தள்ளிய போதும் புன்சிரிப்புடனும் பொறுமையுடனும் அதை ஏற்றுக் கொண்டவள். புகழ் பெற்ற டச் ஓவியன் ஜோஹ்னஸ் வெர்மியரின் (காலின் ஃபிர்த்) வீட்டினரோடு தங்கி சமையல் மற்றும் இதர வேலைகள் செய்யும் பணிப்பெண்ணாகச் சேருகிறாள்.
புது சூழலில் மெளனத்தையே தனக்குரிய மொழியாக்கிக் கொள்கிறாள் க்ரீட். தலைமை வேலைக்காரி ஏவும் வேலைகளை எவ்வித முணுமுணுப்பின்றி சுறுசுறுப்புடன் செய்கிறாள். வெகு சீக்கிரம் அவ்வீட்டின் பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்கிறாள். வெர்மியரின் ஓவியக் கூடத்தை சுத்தப்படுத்தும் போது அவ்விடத்தால் பெரிதும் ஈர்க்கப்படுகிறாள் க்ரீட். மற்ற வேலைகளைவிட அந்த அறையை சுத்தப்படுத்தும் போது மேலதிக கவனத்துடன் செய்கிறாள். வண்ணங்களில் வசமிழக்கும் பெண்ணாக அவள் இருக்கிறாள். ஓவியக் கூடத்தில் இருக்கும் ஓவியங்களை ரசிக்கிறாள். வீட்டிலிருந்து கிளம்பும் போது தந்தை பரிசளித்த ஓவியத்தை தினமும் உறங்கப் போகும் முன் பார்த்துவிட்டுத் தான் தூங்குவாள். தன்னுடைய ரசனையும் ஈடுபாட்டையும் தனக்குள்ளேயே பொத்தி வைத்துப் பாதுகாக்கிறாள் க்ரீட்.
ஓவியக் கூடத்தில் க்ரீட் ஜன்னல் அழுக்குகளை ஈரத் துணியால் துடைத்துக் கொண்டிருக்கையில் வெர்மியர் அங்கு வருகிறான். அவனோ கலைரசிகன், மிகச் சிறந்த ஓவியன், அவளோ ஓவியமே உயிர் பெற்று வந்தது போன்ற பேரழகி. முதல் பார்வையிலேயே வீழ்கிறான். ‘நான் உன்னை வரைவேன். உன்னை முதன்முதலில் பார்த்த அதே கோலத்தில், பணிப்பெண்ணாக இல்லை பெண்ணே, நீயாக, நீ மட்டுமாக’ என மனதுள் நினைக்கிறான் வெர்மியர். அந்த இளமைப் பேரழகைக் கண்ணால் கண்டதும் அவன் கைகள் பரபரத்தன, அக்கணத்தை உறைய வைக்க அவளை உடனடியாக வரைந்து பார்க்க ஆசைப்பட்டு ‘அப்படியே நில், அசையாதே’ என்று சொல்லி அவளை முடிந்த வரையில் தன் மனக் கண்ணில் நிறைத்துக் கொள்கிறான் வெர்மியர்.
தன்னிடம் அதிக நேரம் க்ரீட்டை நிற்க வைத்துக் கொள்ள வீட்டு வேலை நேரம் போக மீதி நேரத்தில் தனக்கு உதவியாளராக இருக்கும்படி சொல்கிறான் வெர்மியர். வண்ணச் சேர்க்கையை மிகச் சிறப்பாக செய்யும் திறன் கொண்ட க்ரீட் சந்தோஷத்துடன் சம்மதிக்கிறாள். அதன்பின் சிறுகச் சிறுக அவர்களுக்குள் மன நெருக்கம் ஏற்படுகின்றது. பொறாமை பிடித்த தன் மனைவி காத்ரீனாவின் கண்களுக்குத் தப்பி வெர்மியர் க்ரீட்டிற்கு ஓவியத்தில் நுட்பமான வண்ணக் கலவைகளைக் கற்றுத் தருகிறான். அவர்கள் கரங்கள் அருகருகே இருந்தன, அவர்கள் இதயம் அதிவேகமாகத் துடித்துக் கொண்டிருக்கும் சத்தம் இருவருக்கும் நன்றாக கேட்கவே செய்தது, ஆனாலும் கட்டுப்பாட்டை இழக்காமல் உள்ளுக்குள் வரைந்த ஓவியமாய் அவர்களின் ப்ரியம் வளர்ந்து கொண்டிருந்தது.
வெர்மியரின் மாமியாருக்கு இவர்களின் விதயம் சந்தேகமாக இருந்தாலும், தன் மருமகன் க்ரீட்டினால் பரவசப்படுகிறான், அதனால் அவன் ஓவியம் மேலும் அழகியலுடன் விளங்கக் கூடும் என்று நினைக்கிறாள். இதற்கிடையில் வெர்மியர் குடும்பம் வழக்கமாக இறைச்சி வாங்கும் கடைக்காரனின் மகன் பீட்ட்ர் (சிலியன் மர்பி) க்ரீட்டின் மீது காதல் வசப்படுகிறான். முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத க்ரீட் அவனை தவிர்க்கவும் முடியாமல் காதலிக்கவும் இயலாமல் சங்கடப்படுகிறாள். அவள் மனம்தான் ஓவியனின் மீது காரணங்களும் நிபந்தனைகளுமின்றி வீழ்ந்துவிட்டதே. அவளுக்கே இனம் தெரியாத உணர்வொன்று இரவு பகலாக அவளைக் கொன்று தின்று கொண்டிருப்பதை தானே மெளன சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் வரண்டு போன இதயத்தின் வர்ண மழை வெர்மியராக இருந்த போதும் சொல்லப்படாத வார்த்தைகளின் துணையுடன் தன் காதலை ஒளித்து வைக்க கற்றுக் கொள்கிறாள். வெர்மியரின் முன் நிற்கும் சமயங்களின் காட்டிக் கொடுத்து விடும்படியான கண்களின் பார்வையை தாழ்த்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வாள் க்ரீட். அவனின் நிலையும் அதுவே என்று அவளறிவாள். ஆனாலும் அவன் ஆண், ஓவியன், தான் சாதாரண பெண் என தன்னிலையை நன்குணர்ந்து பீட்டரிடம் இயல்பாக பழக ஆரம்பிக்கிறாள்.
வெர்மியரின் ஓவியங்களை வாங்கியும் சந்தைப்படுத்தியும் உதவிக் கொண்டிருக்கும் குடும்ப நண்பன் வான் ரிஜூவன் (டாம் வில்கின்சன்) க்ரீட்டை பார்த்த நொடியில் மோக வசப்படுகிறான். அவளை தன் வீட்டு வேலைக்கு அனுப்பும்படி வெர்மியரிடம் கேட்கிறான். வெர்மியர் மறுக்கவே அவளை ஓவியமாக தீட்டியாவது தருமாறு பணிக்கிறான். வானிடமிருந்து க்ரீட்டை காப்பாற்றிய மாதிரியும் தன் மனதிற்கு உகந்தவளை வரைந்து பார்ப்பதிலும் என இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இதற்கு சம்மதிக்கிறான் வெர்மியர். ஒவியத்தை தன் கூடத்தில் ரகசியமாக ஆரம்பிக்கிறான் வெர்மியர். இதற்கிடையில் துணி காயப்போட்டுக் கொண்டிருந்த க்ரீட்டிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறான் வான். இதை மாடியிலிருந்து பார்த்த காத்ரீனா குரல் கொடுக்கவே வான் அவ்விடத்தை விட்டகல்கிறான்.
ஓவியம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அற்புத தருணங்களுமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது அவர்களிடன் காதலைப் போலவே. எவ்வளவு வரைந்தாலும் க்ரீடின் அழகை முழுவதும் வரைய முடியவில்லை வெர்மியரால். சிறு சிறு திருத்தங்களுடனும் மெருகேற்றலுடனும் தன் ஓவியப் பெண்ணை பட்டைத் தீட்டிக்கொண்டிருக்கிறான் அக்கலைஞன். மிக அருகில் இருந்த க்ரீட்டிடம் தன்னை இழக்காமல் இருக்க பெரும் பிரயத்தனங்கள் செய்கிறான். காதலையும் இருமலையும் மறைக்கவா முடியும். வீட்டின் எந்த மூலையில் அவள் இருந்தாலும் தொடரும் அவன் கண்பார்வையில் தளும்பி வழிகிறது அவனின் காதல். க்ரீட்டின் நிலை இன்னும் பரிதாபம், படிப்பில், வசதியில் மற்றும் வாழ்வின் நிலையில் என்று எல்லாவிதத்தில் கீழேயிருக்கும் அவளுக்கு வெர்மியருடன் காதலென்பது அதிசயக் கனவொன்றுதான். வரைந்த வரை ஓவியத்தை அடிக்கடி பார்வையிடும் க்ரீட் அவனிடம் ஒரு சமயம் கேட்கிறாள், ‘நீ எனக்குள் ஊடுருவி விட்டாயா?’
ஓவியம் மேலும் அழகுற க்ரீட் முத்தாலான காதணி அணிய வேண்டும் என்று ஆசைப்படுகிறான் வெர்மியர். தான் இன்னும் காது குத்திக் கொள்ளவே இல்லை என முதலில் மறுக்கும் க்ரீட் பிறகு சம்மதிக்கிறாள். தன் மனைவியின் விலை உயர்ந்த முத்துத் தொங்கட்டானை எடுத்து வருகிறான் வெர்மியர். ‘நீங்களே காது குத்தி இதை அணிவித்துவிடுங்கள்’ என்கிறாள் க்ரீட். தீயில் ஊசியை வாட்டி அவளின் மென்மையான காதில் துளையிடுகிறான் வெர்மியர். வலியில் துடித்த அவள் உதடு கடித்து வலி தாங்குகிறாள். கண்களிலிருந்து நீர் வழிகிறது. ஆனால் பொறுத்துக் கொண்டு அசையாமல் நிற்கிறாள். வெர்மியர் அவள் அழகில் பிரமித்துப் போய் செயலற்று ஒரு கணம் நிற்கிறான். உணர்வுகளின் அலை அந்த அறை முழுவதும் பொங்கிப் பிரவாகமாக ஓட ஆரம்பித்தாலும் எடுத்த காரியத்தை முடிக்கும் பழக்கமுள்ள perfectionist வெர்மியர் விட்ட இடத்திலிருந்து ஓவியத்தை தொடர்கிறான். காதணியை அழகாக வரைந்து ஓவியத்தை நிறைவு செய்கிறான்.
தன்னைத் தொட்ட ஓவியனின் ஸ்பரிசத்தின் தீவிரம் தாங்காமல் காதலன் பீட்டரிடம் ஓடோடி வருகிறாள் க்ரீட். அவன் என்ன ஏது என்று கேட்கவில்லை, ஆனால் துயருற்றிருந்த காதலியின் கண்ணீரை முத்தத்தால் சமன் செய்கிறான். க்ரீட்டும் அவனை ஆவேசமுடன் முத்தமிடுகிறாள். ‘போதும் க்ரீட், உனக்கு இந்த வேலை, இனி யாருக்கும் நீ பதில் சொல்லிக் கொண்டிருக்கத் வேண்டாம். என்னிடம் வந்துவிடு, என்னை திருமணம் செய்து கொள்’ என அன்புடன் கேட்கிறான் பீட்டர். பதிலேதும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து சேர்கிறாள் க்ரீட்.
இவர்களுக்கிடைய நடந்த விதயங்களை கேள்விப்பட்ட காத்ரீனா கொதித்தெழுகிறாள். தன் அம்மாவையும் திட்டித் தீர்க்கிறாள். எப்படி தன் காதணியை வேலைக்காரிக்கு தரலாம் என்று வேதனையுடன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து தன் வீட்டை விட்டுப் போகும்படி க்ரீட்டைப் பார்த்து சத்தம் போடுகிறாள். கணவனிடம் எங்கே அந்த ஓவியம் என்று வெறிபிடித்துக் கத்துகிறாள். அவன் பதிலேதும் சொல்லாமல் ஓவியத்தை திறந்து காண்பிக்கிறான். பேரழிலுடன் இருந்த அதைப் பார்த்ததும் பொறாமையுடன் அதை உடைக்க முனைகிறாள், ஆனால் வெர்மியர் அதைத் தடுக்கிறான். ஆற்றாமையுடன் அழுது புலம்பியவள் ‘படிப்பறிவு கூட இல்லாத ஒருத்தியுடன் எப்படி உன்னால் சகவாசம் வைத்துக் கொள்ள முடிகிறது’ என்று அவனை அழுகையுடன் திட்டித் தீர்க்கிறாள். அமைதியாக நின்றிருந்த க்ரீட்டை விரட்டிவிடுகிறாள். எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டு க்ரீட் அவ்விடத்தை விட்டுக் கிளம்புகிறாள். தலைமை வேலைக்காரி அவளுக்காக ஒரு பரிசை ஒப்படைக்கிறாள். அதைத் திறந்து பார்த்த க்ரீட் மென்சோகத்துடன் புன்னகைக்கிறாள்- அது முத்தாலான ஒரு ஜோடிக் காதணிகள்..
1665 ஆம் வருடம் ஹாலந்தில் நிகழ்வதான இத்திரைப்படம் ஒரு பீரியட் மூவி. வெர்மியர் எனும் நிஜ வாழ்க்கை ஓவியரின் வாழ்க்கை சம்பவங்களை கலைநயத்துடனும் புனைவுடனும் சேர்த்து அற்புதமாக படமாக்கியுள்ளார்கள். டைரக்டர் பீட்டர் வெப்பரின் முதல் படமான இது விருதுகளை அள்ளிக் குவித்தது. இப்படத்தின் சினிமாட்டோக்ராபி (எடியார்டோ செரா) மிகவும் அற்புதம். வெளிச்சமும், நிழலும், வண்ணக் களஞ்சியமாய் ஒவ்வொரு ப்ரேமும் ரசிக்கும் படியான மந்திரத் தன்மையுடன் அதீத அழகியலுடன் செல்லூலாய்டின் அசையும் ஓவியங்களாக அமைந்துள்ளது. பதினேழாம் நூற்றாண்டு ஹாலந்தில் நாம் வாழ்வது போன்ற பிரம்மையை ஏற்படுத்துகின்றது. இப்படத்திற்கு மற்றுமொரு சிறப்பு மென்மையான இசை (அலெக்ஸாண்ரே டெஸ்ப்ளாட்). சில காட்சிகளின் நீளத்தை சமன் செய்ய அற்புதமான இசை அயற்சியிலிருந்து காப்பாற்றி மனதை இளகச் செய்கின்றது.
95 நிமிடங்கள் நம்மை உறைய வைத்த இத்திரைப்படம் படைப்பாற்றலின் வலியையும் சிரமத்தையும் அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளின் ஆழங்களையும் அற்புதமாக காட்சிப்படுத்துகிறது. மனதை பிசையும் மென்சோகத்துடன் நிறைவடைந்து பார்வையாளரைத் திரைக்குள் இழுத்துச் சென்று காட்சிரீதியான இன்பங்களை அள்ளித் தந்த Girl With a Pearl Earring சந்தேகமின்றி விலை உயர்ந்த ஓர் நல்முத்து.