Talk To Her.

Uma Shakthi

"ஒரு சொல்லில், ஒரு சிறு புன்னகையில் ஒளிந்துகிடக்கிறது வாழ்வின் முடிச்சு."


சும்மா தொந்தரவு செய்யாதே நொய் நொய்ங்காதே...எப்பப்பாரு என்ன பேச்சு, அப்படி என்ன தான் பேசிப்பாங்களோ...பேச்சு பேச்சு யுக யுகமாக மனிதர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள், சில சமயம் உரக்கவும் பல சமயங்களில் உள்ளேயுமாக.

சப்தத்தை மொழியாக்கி பேசக் கற்றுக் கொள்ளத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஒருவர் மற்றவரிடம் தன்னை முழுவதிலுமாக வார்த்தைகளால் உணர்த்த முடிந்ததே இல்லை...அது மொழியின் போதாமையா அல்லது யாரும் யாரையும் முற்றிலும் புரிந்து கொள்ளவே முடியாத தன்மையினாலா? எதன் குறைபாடு என்பதை ஆராய்ச்சி ஒரு புறமிருக்க ‘Talk To Her’ திரைப்படத்தைப் பற்றி சற்று நேரம் ‘பேசலாம்’....

வாழ்க்கையில் நாம் பலரைச் சந்தித்திருக்கலாம். அதில் வெகு சிலரே நம்முடன் பேச்சுத் தொடர்பில் இருப்பார்கள். இரண்டொருவர் மட்டுமே இதயத்திற்கு வெகு நெருக்கமான நபராக இருப்பார். அவர்களை எந்தக் கணத்தில் எப்போது சந்திப்போம் என்பது விதி நமக்கு நிகழ்த்திக் காட்டும் மாபெரும் புதிர். நமக்குள் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்திய அவர் இத்தனை நாள் எங்கே எப்படியிருந்தார் நம் கண்ணில் அகப்படாமல் எவ்வாறு போனார் என்றெல்லாம் எண்ணி முடிப்பதற்குள் அவர் பிரிய நேர்கையில் நம் உள்ளம் எப்படி அனலாய் கொதிக்கும்? Talk To Her அப்படிப்பட்ட சந்திப்பையும் அதன் பின் உயிர் வலியைத் தரும் பிரிவொன்றையும் பதிவு செய்திருக்கும் பெத்ரோ அல்மதோவரின் படம். இரு ஜோடிகள் மூலம் வாழ்வாதாரத்தை முக்கிய விதயங்களை அலசித் தீர்த்திருக்கிறார் அல்மதோவ் எனும் ஸ்பானிய இயக்குனர்.

மேடை நாடகம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இரு பெண்கள் ஒரு ஆண். நடன அசைவுகளாக மிகவும் துன்பவியல் காட்சிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. மார்கோ (டாரியோ) எனும் பத்திரிகையாளன் /எழுத்தாளன் இதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு உருகி காட்சியின் லயிப்பில் கண்ணீர் வடித்தபடி சிலையாய் அமர்ந்திருக்கிறான். அவன் அருகில் கிட்டத்தட்ட அதே நிலையில் அமர்ந்திருந்த பெனிங்கோவிற்கு (ஜாவியர்) ஆச்சரியம், தன்னைப் போலவே மென்னுணர்வு கொண்ட மற்றொருவனைச் சந்தித்த சந்தோஷம் அவனுக்கு. ஆனால் பெனிங்கோ மார்கோவிடம் ஏதும் பேசத் துணியவில்லை.

பெனிங்கோ ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக (Male Nurse) பணிபுரிகிறான். கோமாவில் இருக்கும் அலிஸாவிற்கு பணிவிடைகள் செய்ய அவள் பணக்கார தந்தையிடம் இவ்வேலையை கேட்டு வாங்கி பெரும் விருப்பத்துடன் செய்து கொண்டிருக்கிறான். ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கும் அலிஸா (லியோனர் வாட்லிங்) விபத்தொன்றில் நினைவிழந்து நான்கு வருடங்களாகின்றன. அவள் தன்னிலைக்கு வரும் அறிகுறிகள் ஏதுமின்றி நாள்கள் வெகு நீளமாக நகர்கின்றது. சற்றும் அயராத அன்பின் காதலன் பெனிங்கோ அலிஸாவிற்காக அவளுக்கு பிடித்ததையெல்லாம் செய்கிறான். இசை, நடனம், நாடகம் என்று கலைகளில் தன் வாழ்வை தொலைத்திட முடிவு செய்திருந்த அஸிசா பேச்சின்றி செயலின்றி கேட்கும் திறனின்றி ஸ்வாசத்தின் மூலம் மட்டுமே தன் இருப்பை உறுதிசெய்து கொண்டிருந்த போதினும் அவளுக்காக அவளின் வாழ்க்கையையும் சேர்த்து வாழ்கிறான் பெனிங்கோ. தன் பிரியத்திற்கு உரியவளுக்காக தினம் நாடங்களைப் போய் பார்த்து அதன் கதையை உள்ளம் உருக அவளிடம் சொல்வான். தன் பக்கத்தில் உட்கார்ந்தவன் அழுதான் என்பது வரை அவனின் விவரிப்புக்கள் இருக்கும். மற்றொரு நர்ஸின் (மெடில்டா) உதவியுடன் அலிஸாவிற்கு ஸ்பான்ச் பாத் குடுப்பதிலிருந்து அவளின் உதிரப்போக்கிற்கு நாப்கின் மாற்றுவது வரை அவனுடைய பேரன்பின் செயல்பாடுகள் இருக்கும். இதையெல்லாம் செய்துகொண்டிருக்கும் போது அவளிடம் இடையறாது பேசிக் கொண்டேயிருப்பான்.பெனிங்கோவின் எதிர்ப்பார்ப்பு ஒன்றுமட்டும்தான்.... என்றாவது அலிஸா கண்விழிப்பாள், தனக்கான காதல் மொழிகளையும் அவள் கேட்பாள்.

பெனிங்கோ அலிஸாவின் மேல் காதல் வயப்பட்டது கவிதைத்தனமான ஓரு நிகழ்வு. பெனிங்கோ வசிக்கும் வீட்டின் நேர் எதிர்கட்டிடத்தில் அலிஸாவின் நடனப் பயிற்சி அரங்கம் இருந்தது. கண்ணாடி ஜன்னல் வழியாக பெனிங்கோ தினமும் அலிஸா அழகோவியமாக நடனமாடுவதை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பான். அவளின் நளினம், பெண்மையின் வசீகரம் எல்லாமும் பெனிங்கோவை பித்தேறிய நிலைக்குத் தள்ளியது. தாங்கொண்ணா காதல் கணத்தின் உச்சத்தில் ஒருநாள் அவளை பின் தொடர்ந்து எப்படியோ நட்பாக பேசி அவள் வீட்டைக் கண்டுபிடித்தான். பின்னொரு நாளில் மனநல மருத்துவராக இருக்கும் அவள் தந்தையிடம் பேசும் அளவிற்கு காதல் அவன் கண்ணைக் கட்டி இழுத்துச் சென்றது. மிகவும் தயக்கத்துடன் அலிஸாவின் அறைக்கு சென்று அவளின் ஹேர்க்ளிப்பை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்கிறான். குளித்துக் கொண்டிருந்தவள் வெறும் டவலுடன் வெளியே வந்து பெனிங்கோவைப் பார்த்து அதிர்ந்து போகிறாள். அவன் புன்சிரிப்புடன் மன்னிப்புக் கேட்டு அவ்விடத்தை விட்டகல்கிறான். அதன் பின் அவர்கள் சந்திக்கும் இடம் மருத்துவமனை.

நம்முடன் எப்போதும் இருப்பவர்களிடம் நாம் பல சமயம் அலட்சியமாகத் தான் நடந்து கொள்வோம், அவர்கள் மேல் அன்பில்லை என்று அர்த்தமில்லை. நமக்கு அவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியாது, வேலை பணம் என எதன் பின்னாவது அதி விரைவாக ஓடிக் கொண்டிருப்போம். அன்பை வெளிப்படுத்துவது எவ்வளவு எளிய செயல், ஒரு புன்னகையோ சிறு ஸ்பரிசமோ, ப்ரியமான பார்வையோ போதுமே? இதையெல்லாம் கூட செய்யாமல் நாம் நம்மிடமிருந்தே எப்படி அந்நியப்பட்டுப் போய்விடுகிறோம். அன்பான இதயங்களை இழந்து பின் எதை சாதித்துத்தான் என்ன? இக்கதையின் இரண்டாம் நாயகனான மார்கோ அவனின் புதிய காதலி லிதியாவிற்குள் இதுதான் நடந்தது. லிதியா (ரொஸாரியோ ப்லோர்ஸ்) பிரபலாமான காளை அடக்கும் வீராங்கனை (Bull Fighter). தன் காதலனும் சக bull fighter ஒருவனுடனுமான அவள் உறவு உடைந்து விடுகிறது. கண்ணீரின் விளிம்பில் நிற்கும் அவளின் சொல்லிற்காக மீடியா அவளை விரட்டிக் கொண்டிருக்கிறது. மார்கோவும் பரபரப்பான செய்திக்காக அவளைத் தொடர்ந்து வருகிறான். அவள் யாரிடமிருந்தோ தப்பிப்பதற்கு அவனிடம் லிப்ட் கேட்டு காரில் அவசரமாக ஏறிக்கொள்கிறாள். மார்கோ அவளை வீட்டில் இறக்கிவிட்டு காரை கிளப்ப எத்தனிக்கையில் லிதியாவின் அலறல் குரல் கேட்கிறது, அவன் காரிலிருந்து இறங்குவதற்குள் லிதியா பதட்டத்துடன் ஓடி வந்து காருக்குள் ஏறிக்கொள்கிறாள். தன் வீட்டின் சமையல் அறையினுள் பாம்பு இருக்கிறது மிகவும் பயமாக இருக்கின்றது என்கிறாள். அவன் வீட்டினுள் சென்று அப்பாம்பை அடித்துக் கொன்று, அவளின் கைப்பையை எடுத்துத் தருகிறான். அச்சத்தின் பிடியில் உறைந்து நடுங்கிக் கொண்டிருந்த அவளை அன்றிரவு ஹோட்டலில் தங்கவைக்கிறான். அவள் நன்றியுரைக்கையில் தானும் அவள் வெறுக்கத்தக்க நிருபன்தான் என்கிறான். அவள் பரவாயில்லை ஆனால் அதைப் பற்றி மட்டும் என்னிடம் பேசாதே என்கிறாள்.

அடுத்த நாள் அவளைச் சந்திக்க வந்த மார்க்கோ வீட்டிற்கு அழைத்துப் போகட்டுமா எனக் கேட்கிறான். பழைய ஞாபங்களை அலையடிக்கச் செய்யும் அந்த வீட்டிற்கு தன்னால் இனி ஒரு போதும் திரும்பிச் செல்லப் முடியாது என்கிறாள் லிதியா. அவள் விரும்பும் இடமான மாட்ரிட்டுக்கு அழைத்துச் செல்கிறான் மார்கோ. அவனுக்கு லிதியாவின் மென்சோகமும் பிடிவாதமும், பிடித்துப் போகிறது. ஆண்களுக்கு நிகராக போட்டிப் போட்டு காளை அடக்குதலை தன் தந்தைக்கு பிறகு அவரைவிட தீவிரமாகவும் வெற்றிக்கான வெறியுடனுடம் அவள் இயங்கிக் கொண்டிருப்பவள் என அறிகிறான். லிதியாவிடம் பல பதக்கங்கள் மெடல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை காளையை அடக்கும் முன் தன் கழுத்தில் இருக்கும் டாலரை முத்தமிட்டுத்தான் களத்தில் இறங்குவாள். மார்கோவுடன் மேட்ரிட் சென்றிருந்த அன்றைய போட்டியில் துரதிர்ஷ்டவசமாக வெறியேற்றப்பட்ட காளை அவளை முட்டி தூக்கியடித்து அவளை கிழித்தெறிகிறது. காளைக்கும் அவளுக்குமான தொடர்ச்சியான வன்மம் அன்றுடன் ஒரு முடிவிற்கு வருகிறது. ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்ட லிதியா உயிர் காப்பாற்றப்பட்டாலும் கோமாவில் விழுந்துவிட்டாள். பெனிங்கோவின் அலிஸா இருந்த அதே மருத்துவமனையில் மார்கோவின் லிதியா அனுமதிக்கப்பட்டாள். லிதியாவின் மீது ஏதோ ஒருவித ஈர்ப்பிருக்கவே அவளிடம் காதல் வசப்பட்டிருந்தான் மார்க்கோ. தன் பழைய காதலனைவிட மார்க்கோ நல்லவன், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன் என்பதைப் புரிந்துவைத்திருந்த லிதியா சரியான சந்தர்ப்பத்தில் காதலை வெளிப்படுத்த நினைத்திருந்தாள். ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் மீளாத் துயிலில் வீழ்கிறாள் லிதியா.

மருத்துவமனையில் தற்செயலாய் பெனிங்கோ மற்றும் மார்கோவில் நட்பு துளிர்க்கிறது. தங்கள் காதலிகளின் இமை திறப்பிற்காக காத்துக் கிடக்கும் ஒரு புள்ளியில் இருவரின் நட்பும் அடுத்த தளத்திற்கு நகர்கிறது. மார்கோ வேலை நிர்ப்பந்தகங்களால் வெகு நாள்கள் அந்த மருத்துவமனையில் இருக்க இயலாத நிலையில் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கிறான். லிதியாவின் பழைய காதலன் வந்து சேர்ந்ததும் தவிர்க்க இயலாமல் அவ்விடத்தை விட்டு செல்ல முடிவெடுக்கிறான் மார்கோ. இதற்கிடையில் அலிஸா கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை கண்டுபிடித்த தாதிகள் அதிர்ச்சியடைகிறார்கள். அவள் தந்தை வரவழைக்கப்படுகிறார். அவர் மருத்துவமனை நிர்வாகத்தை கடுமையாக சாடுகிறார். இறுதியில் குற்றவாளியென எல்லோரின் விரல்களும் சுட்டியது பெனிங்கோவை. சூழ்நிலைக் கைதியான அவன், சிறைக்குச் செல்கிறான். கசப்புணர்வுகளால் வீழ்த்தப்பட்ட மார்க்கோவும் இடம்பெயர்ந்து தன் ஊருக்கே சென்றுவிடுகிறான். எல்லா நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடைபெறுகிறது.

சில ஆண்டுகள் கழித்து மார்கோ செய்தித்தாளில் லிதியாவின் மரணச் செய்தியை வாசிக்கிறான். உடனடியாக மருத்துவமனைக்கு தொலைபேசுகிறான். காதலியின் இறப்பை உறுதி செய்ததும் நண்பன் பெனிங்கோவைப் பற்றி விசாரித்தான்.. பெனிங்கோ இன்னும் சிறையில் இருப்பதை அறிந்து அவனைப் பார்க்கப் புறப்பட்டான். வெகுநாள் கழித்து பெனிங்கோ மார்கோவைப் பார்த்ததும் மிகவும் நெகிழ்ந்து கரைகிறான். மார்கோவிடமும் பேச வார்த்தைகள் இல்லை. கண்ணாடி அறையினூடே சிறையின் பிடியில் இருக்கும் நண்பனின் துயரத்தைக் காண சகியாதவனாகிறான். மெல்லிய நூலிழையாக இருந்த அவர்களின் நட்பு வார்த்தைகள் எனும் பேராழியைக் கடந்து ஆழ்மனதிற்குள் வளர்ந்து மிக உன்னத நிலையை வந்தடைந்துள்ளது. ஆனாலும் சொற்களின் தேவைகள் மனிதர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, அலிஸா எப்படி இருக்கிறாள், அவளுக்கு குழந்தை பிறந்துவிட்டதா எல்லா விதயங்களையும் அறிந்து கொண்டு தன்னிடம் வந்து சொல்லுமாறு பெனிங்கோ கேட்டுக் கொள்கிறான்.

மார்கோவிற்கு சில அதிர்ச்சிகள் காத்திருந்தன. அலிஸா கோமாவிலிருந்து மீண்டெழுந்து மருத்துவமனையைவிட்டுச் சென்றுவிட்டிருந்தாள். அவள் குழந்தை இறந்தே பிறந்திருந்திருந்தாம். இச்செய்தியை உடனே பெனிங்கோவிடம் சொல்லத் துடிக்கிறான் மார்கோ, ஆனால் மருத்துவமனை அதிகாரி அவனிடம் இதை இப்போது சொல்லவேண்டாம், அப்படிச் செய்தால் இப்போதிருக்கும் நிலைமையில் பெனிங்கோவால் அலிஸாவிற்கு தொந்தரவு ஏற்படக்கூடும், அவன் சிறையிலிருந்து தப்புவதற்கு முயலலாம், தன்னை மிகவும் வருத்திக்கொள்வான், எனவே அலிஸாவும் குழந்தையும் இறந்துவிட்டது என்று சொல்லச் சொல்கிறான். இதை நடுங்கும் குரலில் மார்கோ பெனிங்கோவிடம் சொல்கிறான், பெரும் துயரில் தள்ளப்பட்ட பெனிங்கோ செய்வதறியாது அதிர்ந்து போகிறான். தன்னுடைய அத்தனை நம்பிக்கைகளும் பொய்த்துவிட்ட தருணத்தை அவனால் எளிதில் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மார்கோவிடம் தன் வீட்டுச் சாவியை கொடுத்து அங்கே தங்கும்படி சொல்கிறான். மார்கோவிற்கு உண்மை நாவின் விளிம்புவரை வந்துவிட்டது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அடுத்தமுறை சந்திக்கும் போது சொல்லிவிட முடிவு செய்து அவ்விடத்தை விட்டு கனத்த மனதுடன் அகல்கிறான்.

பெனிங்கோவின் வீட்டு ஜன்னலை தற்செயலாகத் திறந்த மார்கோ எதிர் வீட்டில் அலிஸா இருப்பதைப் பார்த்து அதிர்கிறான். அவள் காலுக்கு பயிற்சி தந்துகொண்டிருந்தாள் நடன ஆசிரியை. மார்க்கோ பெனிங்கோவிற்கான சந்தோஷ செய்தியை சொல்ல முடிவெடுத்து அன்றிரவு நிம்மதியாக உறங்கிப் போகிறான். விடிந்த பின் அவன் மொபைலில் ஒரு செய்தி அவனுக்குக் கிடைத்தது, தன் கடைசி பேச்சை பெனிங்கோ பேசியிருந்தான். போய்வருகிறேன் நண்பா என்று அதில் சொல்லியிருந்ததால் பதட்டத்துடன் சிறைச்சாலைக்கு விரைகிறான். அங்கு அவனுக்காகவே காத்திருந்த சிறை அதிகாரி அவனிடம் ஒரு கவரை தருகிறார். பெனின்கோவின் கடைசிக் கடிதமும் ஒரு ஹேர்க்ளிப்பும் அதில் இருந்தது. அன்பின் பரிசாக தன் வீட்டை மார்கோவின் பெயருக்கு எழுதித் தந்திருந்தான், தான் இருபதிற்கும் மேற்பட்ட மாத்திரைகளை விழுங்கப்போவதாக சொல்லி, அலிஸாவைத் தேடிப் போகிறேன், அவள் இல்லாத வாழ்வு சூனியம், இனி என் காத்திருத்தலுக்கு அர்த்தங்கள் இல்லை, மார்கோ செய்யக் கூடிய உதவி யாதெனில் தன் கல்லறையில் தன்னுடன் அலிஸாவின் ஹெர்க்ளிப்பையும் புகைப்படத்தையும் சேர்த்து புதைக்கவேண்டும் என விண்ணப்பித்திருந்தான். அழுகை முட்டிக் கொண்டுவர உடைந்து சிதறிய மார்கோ மழைத் தூறல் மிகுந்த அந்தக் குளிர்நாளில் பெனிங்கோவின் விருப்பியபடியே அலிஸாவின் ஹேர்க்ளிப்பையும் அவள் புகைப்படத்தையும் ஒரு பூங்கொத்தையும் அவனுடன் சேர்த்து புதைத்து அழுதபடி அங்கிருந்து வீட்டிற்கு செல்கிறான் மார்கோ.

பின்னொரு நாளில் மீண்டும் ஒரு நாடகம், இடைவேளை நேரத்தில் அலிஸாவும் அவள் நடன ஆசிரியையும் இருப்பதைப் பார்த்த மார்கோ திகைக்கிறான். எதுவும் பேசாமல் அவள் எதிரில் அமர்கிறான். நாடகம் நிகழ்ந்துகொண்டிருந்த போது உணர்ச்சி மேலிட அவன் கண்கள் கலங்குவதை அலிஸா பார்த்திருந்தாள். அந்த பரிச்சயத்தில் அவனைப் பார்த்து லேசாக முறுவல் பூக்கிறாள். பதிலுக்கு மார்கோவும் புன்னகைக்கிறான். அதற்குள் இடைவேளை நேரம் முடிந்து எல்லோரும் அரங்கிற்குள் வந்தமர்கிறார்கள். இருக்கையில் அமர்ந்ததும் அரங்கின் மெல்லிய வெளிச்சக் கோட்டைப் பின்பற்றி மார்கோவின் விழிகள் அலிஸாவைத் தேடுகிறது. அதே சமயம் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அலிஸாவின் விழிகள் மார்கோவைச் நேரடியாக சந்திக்கின்றன. நாடகம் முடிந்தபின் இணக்கமாக அவர்களுக்குள் ஒரு நட்போ காதலோ உருவாகலாம். அல்லது வழமையாக அவர்கள் பேசாமலேயே பிரிந்துவிடலாம். எல்லாம் ஒரு வார்த்தையில், ஒரு சொல்லில், ஒரு சிறு புன்னகையில் ஒளிந்துகிடக்கிறது வாழ்வின் முடிச்சு. நம் உள்ளம் அலறித் துடிக்கிறது “பேசிவிடு மார்கோ அவளிடம் உடனே பேசிவிடு....Talk to Her.”

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5