The Brief Encounter.

Uma Shakthi

"ஜென்ம ஜென்மமாய் தொடரும் பெருங்காதல் காவியத்தின் சிறிய அத்யாயமாய் அவள் அக்காதலை நினைத்து மகிழ்கிறாள்."


மிகவும் மன நெருக்கடிக்கு வலிய ஆளாக விரும்பினோம் எனில் “The Brief Encounter” எனும் திரைப்படத்தை பார்க்கலாம். நாடக வடிவத்திலிருந்த இக்கதையை டேவீட் லீனின் 1945ல் திரைப்படமாக்கினார். சீலியா ஜான்ஸன் கதாநாயகி லாராவாக வாழ்ந்திருக்கிறார்.

காதல் என்பதன் மற்றொரு பெயர் வலி. அதுவும் மணமான பின் தோன்றும் காதல் மாறா வலி. இவ்வுணர்வு ஏன் வருகிறது? இது மனதின் மேலதிகத் தேவையா, உடலின் ஆதி விருப்பமா. இது போன்ற காதல்கள் வெறும் உடல் சார்ந்த விதயங்கள் மட்டுமே தானா? தங்களைப் பற்றி முன்பு கட்டமைக்கப்பட்ட அத்தனை பிம்பங்களும் ஒரே நொடியில் சரிந்து போய்விடும் எனத் தெரிந்தும் இத்தகைய extra marital affairs ஏற்படுத்துக் கொள்ள எது தூண்டுகோலாய் இருக்கிறது? The Brief Encounter மணமான பெண் ஒருத்திக்கும் அதே நிலையில் இருக்கும் ஆணொருவனுக்கும் இடையே நிகழும் உணர்ச்சிப் போராட்டமான கதை.

லாரா அன்பான கணவன் மற்றும் அழகான குழந்தைகளோடு திருப்தியாக வாழும் பெண். அவர்கள் நகரம் தாண்டிய ஒரு இடத்தில் வசிக்கிறார்கள். வியாழன் தோறும் நகரத்திற்கு கடைத்தெருக்கு வந்து வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்கிக் கொண்டு, வழமை போலவே தனக்குப் பிடித்த திரைப்படத்திற்கு சென்றுவிட்டு அந்தி சாயும் நேரத்தில் வீடு திரும்புவாள். தினமும் தான் வசிக்கும் புறநகர்பகுதியிலிருந்து பெருநகரத்திற்கு ரயிலில் வருவாள். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திரைப்படம் பார்த்துவிட்டு ரயில் நிலைய Refreshment Room ல் அலெக் ஹார்வி என்பவனைச் சந்திக்கிறாள். அலெக் டாக்டர். பேச்சி ஒரு புள்ளியில் தொடங்கி இருவரின் ரசனைகள், பழக்க வழக்கங்கள், விருப்பங்கள் யாவும் ஒத்திருக்கவே சிறிது நெருக்கமாகிறார்கள். அவன் மணமானவன் இரு குழந்தைகளின் தகப்பன் என்று தெரிந்து கொள்கிறாள் லாரா. அவளைப் பற்றியும் அவளின் குடும்ப விவகாரங்கள் பற்றியும் அவனும் அறிந்து கொள்கிறான். முதலாம் சந்திப்பு இனிதே முடிந்தது, ஆனால் முடிவில்லாக் காதலொன்றின் முதல் விதை அங்கேயே அந்நொடியே இருவருக்குள்ளும் வித்திடப்படுகின்றது. ஒருவரை ஒருவர் மீண்டும் பார்க்க பெரும் ஆவலோடு இருக்கிறார்கள்.

முதல் சந்திப்பிலேயே நிகழ்ந்திருக்க வேண்டிய காதல் அடுத்த சந்திப்பில் முகிழ்கிறது. மதியம் வந்த லாரா இரவு நெடுநேரம் வரை அவனுடன் இருக்கிறாள். தங்களைத் தவிர இன்னொரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இருவருமே மறந்துவிடுகிறார்கள். ஒன்றாக படகுப் பயணம் செல்கிறார்கள், திரைப்படத்திற்கு போகிறார்கள், காரில் ஏறி இஷ்டம் போல சுற்றி இவர்களின் காதல் நிமிடத்திற்கு நிமிடம் வலுவடைந்து கொண்டேயிருக்கிறது. அலெக்கிடம் செல்ல லாரா தன் கணவனிடம் ஏதேதோ பொய்களை மிகுந்த குற்றவுணர்வுடன் சொல்கிறாள். அவளுக்கு அது பெரும் வதையாக இருக்கின்றது. அவனையும் அவள் வெகுவாக நேசிக்கின்றவள். ஆனால் அலெக்கின் மீது ஏற்பட்டது உயிர்க்காதல். அவனைப் பார்க்காமல் பேசாமல் அவளால் ஒருபோதும் இருக்கமுடியாது. ஜென்ம ஜென்மமாய் தொடரும் பெருங்காதல் காவியத்தின் சிறிய அத்யாயமாய் அவள் அக்காதலை நினைத்து மகிழ்கிறாள். ஊர் உலகம் சாட்சியாக கைபிடித்த ஒருவனும் ஒருபுறமும் உயிரில் மட்டுமெ பெயரெழுதிய ப்ரியமான காதலன் மற்றொரு புறமும் இருந்து அவளை பெரும் அலைக்கழிப்பிற்கு ஆளாக்குகிறார்கள். கணவனிடம் விசுவாசமாய் இருந்து பழகிய அவளின் மென்மனம் கடிகாரத்தின் பெண்டுலம் போல அசைந்தாடிக் கொண்டு உயிர் வதை செய்கிறது. அலெக்கைப் இனி ஒருபோதும் சந்திப்பதில்லை என ஒவ்வொரு வியாழனும் அவள் தனக்குள் எடுக்கும் சத்திய பிரமானங்களை காதலெனும் பெரும் நெருப்பு பொசுக்கிவிடுகிறது.

ஒரு சந்திப்பில் அலெக்கின் கெஞ்சுதல்களை மதித்து அவனுடன் அவன் நண்பனின் வீட்டிற்கு செல்கிறாள் லாரா. இருவருக்குள்ளும் அலையலையாய் ஏதேதோ நிகழ்கிறது. காதலின் அதிதீவிர உணர்வில் சிக்கியிருந்த அவர்கள் திடுக்கிடும் விதமாக அங்கே வந்து சேர்கிறான் அலெக்கின் நண்பன். செயலற்ற அலெக் லாராவை அவசர அவசரமாய் பின்பக்க வழியாக அனுப்பிவிடுகிறான். லாரா மனப் பதட்டம் அடைகிறாள். இது தனக்குத் தேவையா என்று அவமானத்தில் துயறுகிறாள். என்ன செய்வது என்று தெரியாமல் வெற்றுச் சாலையில் கொட்டும் மழையில் ஓடுகிறாள். தனிமையான ஓரிடத்தில் நின்று சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள சிகரெட் பிடித்து அப்படியே சிலையாக அமர்ந்திருக்கிறாள். இனி ஒரு போதும் அலெக்கை சந்திக்கக் கூடாது இது மட்டுமே ஒருபோதும் இணையவே சாத்தியமற்ற உறவிற்கு தீர்வு என நினைக்கிறாள்.அவனிடம் இதுபற்றி பேசி இருவரும் கடும் மனப் போராட்டத்துடன் உறவு முறிக்கிறார்கள். அவனுடைய நினைப்பின் சூடு தாங்காமல் தவித்திருக்கும் இரவொன்றில் தற்கொலை செய்ய முயல்கிறாள் லாரா. ஆனால் அது தோல்வியில் முடிகிறது. தன் மனைவியின் மாற்றங்களை ஓரளவிற்கு அவதானித்திருந்த அவன் மீண்டு தன்னிடம் வந்ததற்கு நன்றி சொல்லி அவளை ஆரத் தழுவிக்கொள்கிறான்.

இத்திரைப்படம் வேறொரு நாட்டில் மற்றொரு கலாச்சாரத்தினரால் எடுக்கப்பட்டிருந்தாலும் உலகப் பொதுவுணர்வான காதலையும் காமத்தையும் உறவுச் சிக்கல்களையும் உளச் சிக்கல்களையும் பேசுவதால் பொதுத் தன்மையை எளிதாக அடைகிறது. லாரா போன்ற பெண்களை இப்போதெல்லாம் நாம் அன்றாட வாழ்வில் எளிதாக பார்க்கமுடிகிறது. என்ன வித்யாசம் எனில் அலெக்குகளை விட்டு விலகுவதில்லை. நிறைய ரயில் சார்ந்த காட்சிகள் மிகுந்த அழகுணர்வோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ரயிலை துரத்தி ஓடுவது, சப் வேயினுள் கனிந்த தருணம் ஒன்றில் இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொள்வது, பெரும் தவிப்புடன் அவனைப் பார்க்க ரயில் நிலையத்தில் காத்திருப்பது என அந்த ரயில் நிலையம் லாராவின் ஆன்மாவாகவே சித்தரிக்கப்படுகிறது.

பெண் என்பவள் யார்? தாயா? மனைவியா? காதலியா? காமக் கிழத்தியா? எதுவுமில்லாத அந்தர வானில் சுதந்திர ஜீவியா? பெண் என்பவள் சக உயிர். அவளின் அந்தரங்க ஆசாபாசாங்களை மதிக்கும் சமூகம் ஒருநாள் வரக்கூடும். அப்போது லாராவின் காதல்கள்கூட தன்னிறைவை அடையும்.

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5