கே.ஆர்.எஸ் என்று பதிவுலகில், சமூக ஊடகவெளியில் பரவலாக அறியப்படும் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர், தமிழ் மொழியின் பால் நனிவளர் பெருங் காதல் ஆராது கொண்டவர்; மொழியின் தொன்மத்திலும் தொடர்ச்சியிலும், அறிவியல் பாதை சார்ந்த தமிழ் இயக்கத்திலும், பங்களிப்பு செய்து வரும் இளைஞர்;
தமிழின் நலங்கள், இலக்கிய அறிஞர்களின் அளவிலேயே நின்று விடாது, ஒவ்வோர் இல்லத்திலும் திகழ..
*தமிழில் இறைமை / தமிழில் குழந்தைப் பெயர்கள்,
*தமிழில் கலைச்சொல் / தமிழிசை பரவல்,
*தமிழின் அடிப்படை இலக்கணம்,
*தமிழியலில் கலந்துவிட்ட பிற மொழி / பிற மரபுகளின் மறைப்பு விலக்கல்,
*மெய்த்தமிழ் / சங்கத் தமிழ் அறிந்து அறிவித்தல்,
*தமிழில் வானியல் / அறிவியல் காதல் வளர்த்தல்..
என்று பல புலங்களில், தமிழ் மக்களோடு நேரடியாக இயங்கி வருபவர்!
வடார்க்காடு மாவட்ட மரபில் தோன்றி, தென் தமிழக / ஈழ மரபுகளில் ஆழ ஊன்றி, சிங்கை முதலான கீழை நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க கண்டங்களில் பரவலான பயணம் செய்து வருவதால், ஆங்காங்குள்ள மொழிமரபுகளைத் தமிழோடு ஒப்புநோக்கலும், மொழி வேர்ச்சொல் ஆய்தலும் இவர் நனி விருப்பம்.
தொழில்நுட்பம் பயின்று வங்கியியலில் பணியாற்றி வரினும், UC Berkeley-இல் தமிழியல் முனைவர் பட்டமும் பெற்று, பகுதி நேரப் பேராசியராகவும் வலம் வருபவர்.
தமிழ் மட்டுமன்றி வடமொழியும் (சம்ஸ்கிருதம்) பயின்றமையால், இரு வேறு மரபியல் நுனித்து வேறுபடுத்திக் காட்ட வல்லவர்; சாம வேதம் / சாந்தோக்ய உபநிடதப் பாடம் வல்லார்; சமணம், பெளத்தம், கிறித்துவம், இசுலாம் உள்ளடக்கிய தமிழின் பக்தி இலக்கியத்தை ஆழ வாசித்து, ஆழ்வார் அருளிச்செயலும், நாயன்மார் நற்றமிழ்த் தேவாரங்களும், இராமானுச மரபுகளும், திராவிட / தமிழ் இயக்க வரலாறும் நனி பயின்றவர்.
எது பயின்றிடினும், இயற்கையோடு இயைந்த வாழ்வான சங்கத் தமிழே இவரின் உளக் காதல்! உரையாசிரியர்கள் கடந்து மூலநூலின் நேரடியான வாசிப்பு விழையும் இவர், தொல்காப்பிய ஓதுவார்; அகம் சார் திருக்குறள் & புறம் சார் அறிவியல் - இவ்விரு நெறிகளே, வரும் தமிழ்த் தலைமுறையின் விடியல் என்பது இவர் துணிபு!
pans14 (verified owner) –
நான் எழுதும் முதல் book review
இந்நூலில், தமிழ்மேல் படிந்த அழுக்குகளை நமக்கு தெளிவாக சுட்டிக்காட்டி அதை அகற்றியும், அகற்றும் முறையையும் நமக்கு கற்றுத்தந்துள்ளார் திரு. கரச.
“இயற்கையை விட செயற்கைக்கு கவர்ச்சிக்கு உண்டு” இதனாலேயே சங்ககாலம் தொற்று இன்றுவரை நாம் செயற்கை மேல் கொண்ட மோகத்தை சுட்டிக்காட்டி அதை சரி செய்யும் முறையையும் நமக்கு தெரிவிக்கிறார்.
1000 பக்கங்களுக்கும் மேல் எழுதவேண்டியதை 250+ பக்கங்களில் கொண்டுவந்து என்போல் எளியவருக்கும் புரியும் வகையில் விவரித்துள்ளார்.
இந்நூலை கதை அல்லது புதினம்போல் படிக்காமல், வாரம் ஒரு படலமாக படித்து அதை நண்பர்களிடம் விவாதிக்கப்பட வேண்டிய நூல்.
“அறியப்படாத தமிழ்மொழி”ஐ படித்து முடிக்கும்போது இறுமாப்புடன் கொண்ட ஒரு மனநிறைவு கொண்டேன் . எழுத்தாளருக்கு நன்றி
இயற்கையின் வழித்தோன்றலான தமிழ் வாழ்க!