பாலம்மாள் – முதல் பெண் இதழாசிரியர்

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஆண்களின் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன.  பெண்களின் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பெண் விடுதலை குறித்த எழுத்துகளில் ஆண் சிந்தனையின் ஆதிக்கம் இருக்கிறது. கல்வி, திருமண வயது, கைம்பெண் மறுமணம் எனப் பெண் விடுதலை குறித்துப் பிரித்தானிய ஏகாதிபத்திய இந்தியாவில் நடைபெற்ற விவாதங்களில் தங்கள் நிலைப்பாட்டைப் பெண்கள் எடுத்துரைத்தனர். அவர்களில் வி. பாலம்மாள் குறிப்பிடத்தகுந்தவர். அவரது சிந்தனைகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.

100.00

1924 ஆகஸ்ட் மாதம் வி. பாலம்மாள் சிந்தாமணிப் பத்திரிகையைத் தொடங்கினார். இது ‘விவேகாச்ரமம், ஸலிவன்ரோட், மைலாப்பூர், சென்னை’ என்ற  முகவரியிலிருந்து வெளியானது. பெண் விடுதலை, தேச விடுதலை, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் போன்றவை சிந்தாமணியின் இலக்கு. பெண் விடுதலை குறித்து நடைபெற்ற விவாதத்தில் தன் கருத்தைத் தலையங்கமாகவும் கட்டுரையாகவும் வி. பாலம்மாள் சிந்தாமணியில் பதிவு செய்தார். படைப்புகளினூடாகத் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். பத்திராதிபர் குறிப்புகள் பகுதியில் பிற பத்திரிகைச் செய்திகளை வெளியிட்டு அதற்கு விமர்சனம் எழுதினார். அக்கால இதழ்களான ‘தாய்நாடு’, ‘குடியரசு’, ‘ஜஸ்டிஸ்’, ‘இந்து சாதனம்’, ‘பொதுஜன மித்திரன்’, ‘தாரூல் இஸ்லாம்’, ‘தேசோபகாரி’ போன்றவை சிந்தாமணியை ஆதரித்தன. இப்பத்திரிகைகள் முரண்பட்ட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தபோதிலும் அவை பெண் விடுதலையை ஆதரித்ததால் பெண்ணுக்கென வெளியான ‘சிந்தாமணி’யை வரவேற்றன. கொழும்பிலிருந்து வெளியான ‘தேசபக்தன்’ இதழ்  பாலம்மாளின் எழுத்துக் குறித்து, “…தமிழ் மாதரின் முன்னைய உன்னத நிலையை நாடி நம்மனோர் செய்யவேண்டிய சீர்திருத்தங்களையும் பொதுப்படையான வியாசங்களிலும் இனிய சிறு சிறு கற்பனைகளிலும் சரித்திரபூர்வமான கதைகளிலும் தெற்றென விளக்கியிருப்பது பெரிதும் மெச்சத் தக்கது” எனக் கூறியது.

முக்கிய ஆளுமைகளும் ‘சிந்தாமணி’யை ஆதரித்தனர். இப்பத்திரிகையைப் “பெண்களுக்கெனச் சிறப்பாக முழுப்பொறுப்பையும் ஏற்றுத் தென்னிந்தியப் பெண் ஒருவரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை’’ எனப்  பண்டிதை அசலாம்பிகை குறிப்பிட்டார். ‘சிந்தாமணி’யில் பெண்களைப் பற்றி ஆண்களும் எழுதினர். ஆண்களும் பெண்களும் எழுதிய பொதுவான கட்டுரைகளும் கதைகளும் வெளியாயின. ‘பாபிலோனின் பெண்கள்’, ’மார்க்கோபோலோவின் யாத்திரை’ போன்றவற்றைச் சான்றுகளாகக் குறிப்பிடலாம். அன்றைய காலங்களில் வெளியான பத்திரிகைகள், நூல்கள், மருந்து, உடுப்பு போன்ற விளம்பரங்கள் ‘சிந்தாமணி’யில் வெளியாயின. 1924 ஆகஸ்ட் முதல் 1930ஆம் ஆண்டு வரை உள்ள காலங்களில் இடையிடையே இப்பத்திரிகையின் சில பிரதிகள் கிடைத்தன. இவற்றில் பாலம்மாள் எழுதிய சிறுகதைகள் தவிர பிற கட்டுரை, தலையங்கம், கடிதங்கள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.

பாலம்மாளைப் புரிந்து கொள்வதற்கு இத்தொகுப்பு ஒரு முக்கிய ஆவணமாக விளங்கும். ஆனால் இது முழுமையானது அன்று. எழுத்துகள், படைப்புகள், மொழிபெயர்ப்புகள் என அனைத்தையும் மறுபதிப்புச் செய்வதன் வழி அவருடைய சிந்தனையை முழுமையாகக் காண இயலும்.

அட்டை வகை

காகித அட்டை

ISBN

978 – 93 – 886270 – 7- 8

Author

கோ. ரகுபதி

Publisher

தடாகம் பதிப்பகம்