உலக சிட்டுக்குருவிகள் நாள் கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது. தகவல் சுனாமி வீசும் இந்தக் காலத்தில், சிட்டுக்குருவிகளும் ஓரமாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று சிட்டுக்குருவிகளைக் காப்பாற்றும் விழிப்புணர்வுச் செய்திகளை எல்லோருக்கும் பரப்பிவிட்டுத் திருப்தியடைந்துவிடுகிறோம். ஆனால், சிட்டுக்குருவிகள் நாள் உருவான பூர்வாசிரமக் கதை ரொம்பவே சிக்கலாக இருக்கிறது. அது முன்வைக்கும் கோரிக்கையும் அறிவியலுக்கு எதிரானதாக இருக்கிறது. எப்போதுமே கவனம் பெற வேண்டிய முக்கியமான விஷயங்கள், தேவையற்ற விஷயங்களால் கவனச்சிதறலுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்ற வாதம், சிட்டுக்குருவிகள் நாள் கொண்டாட்டத்தில் உண்மையாகியுள்ளது.
எது அழிவின் விளிம்பில்?
சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வலியுறுத்தும் ‘உலகச் சிட்டுக்குருவிகள் நாள்’ 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டுவருகிறது. உண்மையில் சிட்டுக்குருவிகள் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டனவா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. ஆனால், வேங்கைப் புலிகள் 2,300, யானைகள் 30,000, சிறுத்தைகள் 7,700 உள்ளன. ஆனால், லட்சத்துக்குக் குறையாத சிட்டுக்குருவிகள் இந்தியாவில் இருக்கும் நிலையில்தான் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற குரல் ஆர்ப்பாட்டமாக ஒலிக்கிறது.
அறிவியல்பூர்வமாக எந்த ஓர் உயிரினமும் அழிவின் விளிம்புக்குத் (Endangered) தள்ளப்பட்டுள்ளது என்ற வரையறைக்கும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. நெருக்கடிகள் மிகுந்த சென்னை நகருக்குள் இன்னும் பல இடங்களில் சிட்டுக்குருவிகள் உயிர் பிழைத்திருப்பதே, அவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படவில்லை என்பதற்கு அத்தாட்சி.
திசைதிருப்பல்
சிட்டுக்குருவிகள் மீதான அக்கறை பெருகுவதால் என்ன பிரச்சினை? சுற்றுச்சூழல் கரிசனம் பரவலாவது நல்லதுதானே என்று கேட்கலாம். அங்கேதான் பிரச்சினையே. நாட்டில் இதுவரை கணக்கிடப்படாலும், ஆராயப்படாமலும் கணக்கற்ற உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அவற்றின் மீது மக்கள் அக்கறையும் பெரிதாகத் திரும்பவில்லை. காட்டுயிர்கள், காடுகள் பாதுகாப்பு, ஆராய்ச்சிக்கு அரசும் உரிய நிதியை ஒதுக்குவதில்லை.
இந்தப் பின்னணியில் சிட்டுக்குருவிகள் மீதான அக்கறையை என்பது மேம்போக்கான சுற்றுச்சூழல் கரிசனத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது. நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை. மனிதர்களே நூற்றுக்கணக்கான நோய்கள், நெருக்கடிகளுடன் நகரங்களில் வாழும்போது, சிறு பறவையான சிட்டுக்குருவி மட்டும் எப்படி உயிர்த்திருக்க முடியும்? ஆனால், இயற்கை சீர்குலைக்கப்படாத பகுதிகளில், இயற்கை கொஞ்சமாவது ஒட்டியிருக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இன்னமும் வாழவே செய்கின்றன.
எப்படி வந்தது?
சிட்டுக்குருவிகள் நாளோடு சேர்ந்து, தவறாகப் பிரசாரம் செய்யப்பட்ட இன்னொரு விஷயம்: செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்ற கருத்து. இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் இந்தக் காரணத்தை நிரூபிக்கவில்லை. இந்தக் காரணத்தை பிரபலப்படுத்தியவர் முகமது திலாவர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த இவர், ஒரு பறவை ஆர்வலர். 2010-ம் ஆண்டில் தனது பிறந்தநாளை ‘உலகச் சிட்டுக்குருவிகள் நாள்’ என்ற பெயரில் இவரே பிரபலப்படுத்த ஆரம்பித்தார். அதுதான் இன்றைக்கு நாடெங்கும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
எங்கே வந்து சேர்ந்திருக்கிறோம்?
அழிவின் விளிம்புக்கு உண்மையிலேயே தள்ளப்படாத ஒரு நகர்ப்புறப் பறவையான சிட்டுக்குருவி வேறிடத்துக்கு நகர்ந்தது தொடர்பாக மக்கள், அரசின் கவனம் வலிந்து திருப்பப்படுவதால், மற்ற உயிரினங்கள்-பறவைகள் மீதான கவனம் திசைதிருப்பப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. இதே காரணத்தைச் சொல்லி வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பொருளாதார நிதியுதவிகளும்கூட திசைதிருப்பப்படலாம். இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டியிருக்கிறது.
இந்தியப் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வது, பாதுகாப்பது, பிரபலப்படுத்துவதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த இந்தியாவின் ‘பறவை மனிதர்’ சாலிம் அலியின் பிறந்த நாளை, எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி ஆண்டுதோறும் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், யாரோ ஒரு ஆர்வலரின் பிறந்தநாள், இல்லாத ஒரு காரணத்துக்காக பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. இதுதான் நாம் வந்தடைந்துவிட்ட மோசமான புள்ளி.
Reviews
There are no reviews yet.